முஸ்லிமே! காலம் வேண்டுவது என்ன?
இஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே ஆகும். அது தீனுல் இஸ்லாம் என்ற வகையில் மனித குல வரலாற்றின் ஒவ்வொரு நபிமார்களோடும் தொடர்பு பட்டதும், இறுதி நபியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொடர்ந்து இறுதி நாள்வரை இந்தப் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இப்படி தீன் என்பது ஒரே அடிப்படையில் இருந்தாலும் ‘ஷரீஆ’ என்பது ஒவ்வொரு நபிக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது. யுக முடிவு வரை இனி பின்பற்றத்தக்க ‘ஷரீஆ’வாக நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ‘ஷரீஆ’வே இருக்கும் என்பது முஸ்லீம்களின் தெளிவான அகீதா.
இகாமதுத் தீன் (தீனை நிலைநாட்டுதல்) என்பது இந்த ஷரீஆ எவ்வித தங்கு தடையும் இன்றி பிரயோகிக்கவும், அமுல் படுத்தவும் கூடிய ஒரு ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். ஆனால் அந்த ஆட்சியின் வடிவம், உருவாக்கம், அதை நோக்கிய செயற்பாடு என்பதும் இந்த ஷரீஆ வரையறுத்த பாதை ஊடாகவே அமைய வேண்டும்.
ஏதாவது ஒரு ஆட்சியில் இஸ்லாமிய ஷரீஆவின் அதிகமான பகுதிகள் பின்பற்றப் பட்டாலும் அது இஸ்லாமிய ஆட்சியாக கருத முடியாது. விடயம் இப்படி இருக்க சிலர் நினைக்கிறார்கள், இஸ்லாத்தின் மேலாதிக்கம், அதன் அரசியல் அதிகாரம், அல்லது இகாமதுத் தீன் என்ற விடயம் திட்டமிட்டு நகர வேண்டிய ஒரு இலக்கு அல்ல என்றும், வெறுமனே ஆன்மீக ஒழுக்கக் கோவைகள் என சில விடயங்களையும், சில அடிப்படையான இபாதத்துகளை கிராமமாக கூட்டாகவும், தனியாகவும் பேணி வரும் நிலையில் இறைவனால் வழங்கப்படும் ஒரு எதேச்சையான வெகுமதியே அரசியல் அதிகாரம் என்பதாக கருதி வருகிறார்கள் .(இன்னும் சிலர் அரசியல் என்பது இஸ்லாத்தில் இல்லை என்று கூட கூறுகிறார்கள்!) இது மிகத் தவறான ஒரு முடிவு ஆகும்.
சிந்தனை வீழ்ச்சி காரணமாக முஸ்லீம் தன்னை சூழ்ந்துள்ள இத்தகு நிலைப்பாட்டின் மூலமே, குஃப்ரிய அதிகார வடிவத்தையும் (குஃப்ரிய தீன்), அதன் சட்ட திட்டங்களையும் (குஃப்ரிய ஷரீஆ) அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் இடைக்காலத்தில் பின்பற்ற முடியும் என தவறாக கருதிக் கொண்டிருக்கின்றான்.
இந்த தவறான அளவுகோல் இஸ்லாமிய அரசியல் மற்றும் அதற்கான போராட்டம் என்பவற்றில் இருந்து முஸ்லிமை தெளிவாகவே திசைதிருப்பியுள்ளது. இறைவனை வணங்குதல் என்பதன் இஸ்லாம் கூறும் அர்த்தம் அந்த இறைவனுக்காக வாழ்தல் அவனுக்காக மரணித்தல் எனும் அரசியலையே ஆகும். இந்த வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட அவனது சகல அசைவுகளையுமே இபாதத் என்ற நிலையில் இஸ்லாம் கணிக்கிறது. இன்னும் அந்த இபாதவை இப்படித்தான் செய்ய வேண்டும் என ஷரீஆ மூலம் வரையறுக்கிறது .
உண்மையில் இபாதத் என்ற விடயம் ஒரு முஸ்லிமுடைய குறிப்பிட்ட சில செயல்களோடு முற்றுப் பெறுவதல்ல. அதன் தேவை, வடிவம், என்பன இடம் காலம், சூழ்நிலை என்பவற்றை பொறுத்து வேறுபடுவதோடு, நன்மையை எவுதல், தீமையை தடுத்தல் என்ற தீர்க்கமான இலக்கு நோக்கி காணப்படும். அதற்காக (நன்மையையும் தீமையையும் தெளிவாக வரையறுக்கும்) இஸ்லாத்தை நிலைநாட்டுதல் என அதன் அடிப்படையான முதற்கட்டம் நிறைவுபெற அத்தகு தூய்மையான அதிகாரத்தை பாதுகாத்தல் மற்றும் அதனூடாக அல்லாஹ்வின் பூமியை நன்மையான அடிப்படையில் வளப்படுத்தல் என்ற மிகப்பாரிய பணியின் ஊடாக இபாதத் முற்றுப் பெறாமல் நகர்ந்து கொண்டே இருக்கும்.
இத்தகு யதார்த்தத்தின் ஊடாகவே, இத்தகு போராட்டத்தின் ஊடாகவே முஸ்லீம் என்ற சொல்லின் அர்த்தம் நிரூபிக்கப்படுகின்றது. எனவே முஸ்லிமின் வாழ்க்கை இபாதத் மூலம் (இறைவனுக்கு முற்றாக கீழ் படிதல்) கிலாஃபத் (இறை பிரதிநிதித்துவ ஆட்சி) ஊடாக இமாரத் (பூமியை வளப்படுத்தல்) வரை தொடரக் கூடியதும், ஒரு முஸ்லிமின் பௌதீக அசைவுகளை முற்றாக கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்க அரசியல் ஆகும்.
இந்தவகையில் இஸ்லாத்தை ஒரு ஆற்றல் மிக்க சித்தாந்தமாக அறிமுகப் படுத்தல், அடையாளப்படுத்தல் ,என ஒரு அரசியல் பார்வை கொண்ட விடயமாக வெளிப்படுத்த வேண்டிய கட்டாய கடமை முஸ்லிமுக்கு இருக்கின்றது .
இபாதத் என்ற சொல்லின் அர்த்தத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அரசியலை அவன் பிரதிநிதியாக நின்று இறை மறுப்பு அதிகாரங்களுக்கு சவாலாக அறிமுகப்படுத்தும் ,அடையாளப்படுத்தும் அரசியல் வாதியாக தனது இயலுமையிலும் ,இயலாமையிலும் வாழ்வதே உண்மை முஸ்லிமின் முன்மாதிரி அடையாளமாகும்.
காலத்தின் தேவையை புரிந்து கொள்ளாமல் திட்டவட்டமற்ற விடயங்களில் வரும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தி பகை உணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விவாத அரங்குகளை ஏற்படுத்துவதும், அழிவுச் சத்தியம் (முபாஹலா) வரை விடயத்தை கொண்டுவரும் பிரச்சார ஒழுங்குகளுக்கு முஸ்லீம் உம்மத்தை பழக்கப்படுத்துவதும், அதில் வரும் உள் வீட்டு குழப்பங்களுக்கு!! குப்ரிய சட்டத்திடமும், அதன் அரசியலிடமும் தஞ்சம் புகுவதும், ஆளுக்கொரு பள்ளி கட்டி புனித ஜும்மா பயானையும் சகோதர சதையை மார்க்கத்தின் பெயரில் பச்சையாக தின்னும் நிலையில் நடாத்துவதும், சுன்னாஹ் காட்டித் தராத விவேகமற்ற செயல்களாகும் .
முஸ்லீம்களாகிய நாம் எமக்குள் எம்மை சில உசூல் விடயங்களுக்காக வேறுபடுத்தி பிரிந்து போவது, எம்மிடமிருந்து இஸ்லாத்தை அழிக்கவும், அது முடியாத போது எம்மையே அழிக்கவும் தயாராக உள்ள குப்ரிய பொது எதிரிக்கு உதவுமே தவிர இஸ்லாத்தை நிலைநாட்ட உதவவே உதவாது. காலத்தின் சரியான தவ்வாவை கற்றுக்கொள்ள ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மக்கா வாழ்வை இன்று உதாரணப் படுத்தலாம். அதற்கு ஒப்பான வாழ்வுச் சூழல் தான் இன்றுள்ளது.
source: http://khaibarthalam.blogspot.in/2014/01/blog-post_116.html#more