மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் ஒன்று திரளுவோம்
உரசும் உண்மைகள்
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லிம்கள் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை. ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும், கட்சிகளும், இயக்கங்களும் அதிகமாகிவிட்டன.
தலித் இனங்களின் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும்.
இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர்.
ஆனால் முஸ்லிம்களாகிய நாமோ மாறுபட்ட இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை சிலரைத் தவிர மற்றவர்கள் மறந்தே போனோம்.
இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும், துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்!
மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும்.
-இபுராஹீம் அன்சாரி