வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் உண்டு. அது எந்த நேரமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உண்டு. அவற்றில்…
முதலாவது ஹதீஸ்:
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள (துஆ ஏற்கப்படும்) அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அ(ந்த அரிய நேரமான)து, இமாம் அமர்வதற்கும் (ஜுமூஆ) தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும். (அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1546)
இதில் இமாம் அமர்தல் என்பது மிம்பரில் அமர்வதைக் குறிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இமாம் மிம்பரில் சொற்பொழிவாற்ற துவங்கினால் முடியும் வரை அந்த உரையைக் கேட்க மட்டும் தான் செய்ய வேண்டும். நன்மையான விஷயங்களைக் கூட பேசக் கூடாது. அமர்தல் என்பது தொழுகையில் அமரும் இருப்பைத் தான் குறிக்கும், தொழுகையில் அமரும் நிலையில் துஆ செய்ய அனுமதி உண்டு, அதாவது, அத்தஹியாத்து, ஸலவாத்து ஓதிய பின் ஸலாம் கொடுக்கும் வரை துஆ கேட்க வேண்டும், அந்த நேரத்தில் துஆ கேட்பதை நாம் செயல்படுத்த வேண்டும். பொதுவாகவே தொழுகையின் ஸஜ்தாவில் கேட்கும் துஆ, ஏற்கப்பட அதிகம் தகுதி உள்ளது என்பதால் அதையும் தவற விடக் கூடாது, வழமை போல் அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது ஹதீஸ்:
“ஜுமுஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 886)
வெள்ளிக்கிழமையில் நாம் கேட்கும் அனைத்து துஆவும் ஏற்கப்படும் ஒரு நேரம் சம்பந்தமாக ஜுமுஆ தொழுகையில் துஆ கேட்பது போல் அன்றைய தினத்தின் அஸருக்குப் பின் கடைசி நேரத்தில் (மஃரிப் பாங்கு சொல்வதற்கு முன்) துஆ கேட்பதைச் செயல்படுத்த வேண்டும். அந்த நேரம் சம்பந்தமாக இரு அறிவிப்புகள் வந்துள்ளதால் இரண்டையும் செயல்படுத்துவதன் மூலம் அதை அடையலாம்.