முஸ்லிம்கள் திருமணம்: தேவை மனமாற்றம்!
“ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்தவேண்டும்” என்பது பழமொழி. இப்பொழுது ஆயிரம் பேர் முன்னிலையில் அரசிற்குப் பயந்து திருமணம் நடத்தப்படுகிறது. காரணம் சட்டம் தான்.
“பருவ வயதை அடைந்து விட்டால் திருமணம் செய்து வைத்துவிடுவது” முஸ்லிம்களின் வழக்கம். தற்பொழுது பெண்ணுக்கு 19 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியானால்தான் திருமணம் செய்து வைக்கமுடியும் என்கிறது சட்டம். ஆனால் பருவமடைந்து விட்டால் திருமணத்திற்குரிய தகுதியை ஆணும், பெண்ணும் அடைந்துவிடுகின்றனர் என்கிறது அறிவியல்.
பாலஸ்தீனத்தில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருக்கும். எங்கே, எப்போது, எப்பொழுது குண்டுவெடிக்கும், இஸ்ரேல் ஆக்ரமிப்புப் படைகள் எப்போது தாக்குவார்கள் என்ற பயம் பாலஸ்தீன மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆண்களைக் குறிப்பாக சிறுவர்களைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குப் பயந்து, 12 வயது பெண்ணுக்குக்கூட அவள் பருவ வயதை அடைந்துவிட்டால் திருமணம் முடித்துவிடுவார்கள்.
இதே போன்ற திருமணங்கள் காஷ்மீரிலும் நடத்தப்படுகிறது. தற்பொழுது திருமண வயது சட்டம் எல்லோருக்கும் பொதுவாக்கி சட்டமாக்கப்பட்டுவிட்டதால், தமக்குப் பிடிக்காதவர்கள் வீட்டில் இதுபோன்ற திருமணங்கள் நடக்கும்போது பழிவாங்குவதற்காக அதனைப் பயன்படுத்தும் கொடுமையும் நடக்கிறது. மேலும் இதனால் பெற்றோர்களுக்குச் சிறைதண்டனையும் வழங்கப்படுகிறது.
மாமியாரையோ அல்லது மாமனாரையோ பிடிக்காவிட்டால் எப்படி பொய்யாக வரதட்சணை வழக்கு போடப்படுகிறதோ அதுபோல எதிரிகள் திருணத்தடையை ஏற்படுத்த இச்சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள். திருமணத்திற்கு நாள் குறித்து திருமணம் மேடையில் இருக்கும்போது யாரோ செய்கின்ற 1ரூபாய் காயின்போனுக்காக காவல்துறை வரிந்து கட்டி திருமணத்தைத் தட்டி நிறுத்துகிறது.
அதே வேளையில் படித்துக்கொண்டிருக்கும் பெண் இன ஈர்ப்பால் காதல் வயப்பட்டால் அவர்களைக் கண்காணிக்கவோ அல்லது அப்பெண் வேறு யாருடன் ஓடிப்போனாலோ பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் புகார் கொடுத்தால் அம்மனுவைக் காவல்துறையினர் வாங்குவதில்லை. ஆனால், நடிகையின் நாய்க்குட்டி காணாமல் போனால்கூட, தினசரிகளில் பக்கம் பக்கமாக செய்திகளை வெளியிடுகின்றன.
இதற்குப் பயந்து பள்ளிவாசலில் நடக்கும் திருணமத்தில் பெண் 14 வயது பூர்த்தியானால் கூட 19 வயது அடைந்த பெண் என்றே திருமண பதிவேட்டில் பொய்யாக கூறி திருமணம் முடிக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பெண்ணின் பாஸ்போர்ட் முதலான பல வித அரசாங்க ஆவணங்களில் பாதிப்பு ஏற்படும் என்பதை ஜமாஅத் அமைப்பினரும் பெண்வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அப்போதைய தேவை முடிந்தால் போதுமென்ற எண்ணத்தில் இத்தகைய தவறான வேலையைச் செய்கின்றனர்.
முஸ்லிம்களிடத்தில் வெறுப்புக்குரியதான ‘தலாக்’கை ஒருவர் எஸ்.எம்.எஸ்.மூலமோ அல்லது பதிவுத்தபாலில் அனுப்பி பெண்ணை தலாக் செய்து விட்டேன் என்றால் அதை மட்டும் காவல்துறையினர் “இது முஸ்லிம் சம்பந்தப்பட்டது. நாங்கள் தலையிட முடியாது” என விலகிக்கொள்கின்றனர். இதில் விலகிக்கொள்கிறவர்கள் திருமண விசயத்தில் விலகிக்கொள்ளாதது மர்மமாக உள்ளது.
எத்தனை சட்டங்கள் வந்தாலும், இஸ்லாமிய சட்டத்திற்குள் பயணிப்பதையே முஸ்லிம்கள் விரும்புவார்கள்; அவ்வழியினையே தேர்வு செய்வார்கள். இதனை அரசு உணர்ந்து, அதற்கேற்ப பக்குவமான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு!
– வைகை அனிஷ், +91 9715-795795
source: http://www.inneram.com/article/readers/3136-muslims-marriage.html