முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டை இழிவு செய்யும் CB-CID போலீஸ் – எக்ஸ்பிரஸ் நாளிதழ் கண்டனம்!
அ.மார்க்ஸ்
கிச்சான் புகாரி மற்றும் சிலர் மீது சி.பி.சி.ஐ.டி போலீஸ், மேலப்பாளையம் முதலான இடங்களில் வெடி மருந்துகள், பணம் முதலானவற்றைக் கைப்பற்றியது தொடர்பாக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு அவர்கள் மீதான குற்றங்கள் உண்மை என நிறுவப்பட்டால் அவர்கள் உரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க இயலாது. பிரச்சினை அதுவல்ல.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக் குறிப்பில்தான் பிரச்சினையே.
இப்படியான ஒரு வெறுப்பும் கருத்தாக்கமும் காவல்துறைக்கு இருந்தால் அவர்களின் விசாரணை எந்த அளவிற்கு நடு நிலையாக இருக்க இயலும் என்கிற அய்யம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
வெடி மருந்துகளும், வசூலிக்கப்பட்ட நிதியும், “ஜிகாத் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காகப்” பயன்படுத்தப் பட்டுள்ளதாகக் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆங்கில, தமிழ் இரண்டு வடிவங்களிலும் அவ்வாறே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
“ஜிகாத்” என்பது இஸ்லாமிய மதக் கோட்பாடுகளில் ஒன்று. இதன் ஆழமான பொருள்களைப் பலரும் விளக்கியுள்ளனர். ஏ.ஜி நூரானி ஒரு நூலே எழுதியுள்ளார். இஸ்லாமியப் புனித நூற்களில் இச் சொல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என நானும் எனது “நான் புரிந்து கொண்ட நபிகள்” நூலில் ஓர் அத்தியாயம் எழுதியுள்ளேன்.
எனினும் இன்று உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகள் “ஜிகாத்” என்பதைப் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது நடுநிலையாளர்கள், மனித உரிமைப் போராளிகள், அறிவுஜீவிகள் எல்லோராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் “காவி பயங்கர வாதம்” என்று கூறியதற்காக மூத்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம். ஷிண்டே ஆகியோர் பரவலாகக் கண்டிக்கப்பட்டதும், ஷிண்டே மன்னிப்புக் கூற நேர்ந்ததையும் நாம் அறிவோம்.
இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இப்படியான முஸ்லிம் வெறுப்புச் சொல்லாடல் ஒன்றைக் குற்றப்பத்திரிக்கை தொடர்பாகப் பயன்படுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இப்படியான ஒரு வெறுப்பும் கருத்தாக்கமும் காவல்துறைக்கு இருந்தால் அவர்களின் விசாரணை எந்த அளவிற்கு நடு நிலையாக இருக்க இயலும் என்கிற அய்யம் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. கிச்சான் புகாரியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டபோது கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
சி.பி.சி.ஐ.டி காவல்துறை மன்னிப்புக் கோரி உரிய திருத்தம் வெளியிட வேண்டும்.
இதனைக் கவனப்படுத்திக் கண்டனம் தெரிவித்துள்ள ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழையும் இதழாளர் சந்தோஷையும் பாராட்டுவோம்.
–அ.மார்க்ஸ்
கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சுட்டி: