சுன்னத்தை ஹயாத்தாக்குவோம் (1)
ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத்(இறந்தவருக்கு) தொழுகை நடத்த உரிமை படைத்துள்ளனர்.
அவர்களாக விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் தொழுகை நடத்தலாம். நான் தான் தொழுகை நடத்துவேன் என்று வாரிசுகள் உரிமை கோரினால் அதை யாரும் மறுக்கவும், தடுக்கவும் முடியாது.
‘எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக – தலைவனாக ஆகாதே!’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் 1079, 1078)
இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், மக்களிடம் நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி மேடைக்கு மேடை புகழ்பாடும் ஆலிம்களே இந்த அழகிய சுன்னத்தை நடைமுறைப்படுத்த தடையாக இருப்பதே!
இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு வழங்கியிருக்கும் உரிமையை இவர்களே பரித்துக்கொள்வது எந்த வகையிலும் நியாயமல்ல.
தொழ வைக்கத் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் ஆலிம்கள் தொழ வைத்துக்கொள்ளட்டும். தொழ வைக்கத்தெரிந்த ஒருவருடைய குடும்பத்தாரின் ஜனாஸாவை அக்குடும்பத்தார்கள் முன்னின்று தொழ வைப்பதற்கு அனுமதி கோரும்போது அவர்களுக்கு அனுமதி வழங்குவதுதான் முறை.
நிர்வாகிகளை இதில் குற்றம் சொல்லி ஆலிம்கள் தப்பிக்க முடியாது. நிர்வாகிகளுக்கு மார்க்கம் தெரியாத பட்சத்தில் ஆலிம்கள் தான் அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்லி விளக்க வேண்டும்.
இப்படி ஒரு அனுமதி இருப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்குக்காரணமும் அவர்களாகவே இருக்கிறார்கள். ஊர்வம்பையெல்லாம் பயானாக பொழியும் இவர்கள் இந்த சுன்னத்தைப்பற்றி மக்களிடம் இனியாவது எடுத்துச்சொல்லி இந்த சுன்னத்தை உயிர்ப்பிப்பார்களா…?!
வாருங்கள் சுன்னத்தை ஹயாத்தாகுவோம்.
-எம்.ஏ.முஹம்மது அலீ
www.nidur.info