முஸ்லிம்களுடன் சகோதரத்துவம் பேணிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களைப் பிரித்துப்போடும் முயற்சியில் இஸ்ரேலிய அதிபர்!
இஸ்ரேலில் இருக்கும் நசரேத்தில் பெரும்பான்மையாக வசிப்பது முஸ்லிம்கள். பெரும்பான்மை என்றால் மூன்றில் இரண்டு சதவீதப் பெரும்பான்மை. இதற்கு அடுத்தபடியாக வருபவர்கள் கிறிஸ்தவர்கள். இங்கே மயிலாப்பூரிலோ மயிலாடு துறையிலோ திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த காலத்தில் அங்கே இயேசுநாதர் பிறந்து வளர்ந்ததாகக் கிறிஸ்தவர்கள் சொல்லுவார்கள்.
அது இப்போது பிரச்சினை இல்லை. நசரேத்தை இஸ்ரேலின் அரேபியத் தலைநகரம் என்றே உலகம் சொல்லும். அந்தளவு முஸ்லிம் பெரும்பான்மை இருக்கிற இந்த ஊரில், முஸ்லிம்களுடன் வரையறுக்கப்பட்ட சகோதரத்துவம் பேணிக்கொண்டிருக்கும் கிறிஸ் தவர்களைப் பிரித்துப்போடும் முயற்சியில் இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாஹு இறங்கியிருக்கிறார்.
படித்து முடிக்கும் நசரேத் நகரத்து கிறிஸ்தவ இளைஞர்களே, உங்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் தன் கதவுகளைத் திறந்து வைக்கிறது. வாருங்கள், வந்து தேச சேவை செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் சகல சம்பத்துகளும் சித்திக்க நான் பொறுப்பு.
ராணுவம் வேண்டாமா? அதிரடியாகத் தீவிரவாதக் குழுக்கள் தொடங்கி ஆட்டம் போட விருப்பமா? தாராளமாகச் செய்யலாம். உங்கள் அக்கம்பக்கத்து எதிரிகளை நீங்களே அழித்தொழிக்க என் பரிபூரண ஆசீர்வாதம் உண்டு. ஏற்கெனவே களத்தில் இருக்கும் கிறிஸ்தவ தீவிரவாதக் குழுக்களுக்கு வேண்டிய சகாயங்கள் ரகசியமாகச் செய்து தரப்படும்.
நசரேத் எப்படிப்பட்ட புண்ணிய க்ஷேத்திரம்! எம்பெருமான் இயேசு நாதரே இங்குதான் அவதரித்திருக்கிறார். எனவே, ஊரைவிட்டுப் போன உங்கள் உறவுக் காரர்களைத் திரும்பவரச் சொல்லுங்கள். நசரேத் மண்ணின் மைந்தர்களான கிறிஸ்தவர்கள் யாவரும் அங்கே வீடு கட்டிக் குடியேறலாம். அவர்கள் தொழில் தொடங்க, உத்தியோகம் தேடிக்கொள்ள, இன்னபிற சௌகரியங்களை ஒழுங்காகச் செய்துதரச் சொல்லி உள்ளூர் ஆட்சியாளர்களிடம் சொல்லி வைக்கிறேன். யாராவது இது என் நிலம், இங்கே நீ எப்படி வீடு கட்டலாம் என்று கேட்டால் ஒரு குரல் கொடுங்கள். ராணுவம் ஓடி வந்து உதவும்.
அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி என்று நசரேத்வாசிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக, பல வருஷம் முன்னதாகவே ஊர்க்காரர்கள் கூடிப் பேசி இஸ்ரேலிய ராணுவத்தில் எக்காலத்திலும் சேருவதில்லை என்று அவர்கள் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள்.
பக்கத்து தேசங்களோடுதான் சண்டை என்றாலும் சக இனத்த வரையல்லவா தாக்க வேண்டும்? எதற்கு வம்பு? நசரேத் நகரத்து கிறிஸ்தவர்கள் ராணுவத்தில் சேரமாட்டார்கள். இது பழைய ஏற்பாடு. இப்போது இந்த ஏற்பாட்டைத்தான் திருத்தி எழுத அழைப்பு விடுக்கிறார் பெஞ்சமின் நெதன்யாஹு.
தவிரவும் இஸ்ரேலின் இதர நகரங்கள் மெல்ல மெல்ல விரிவடைந்து கொண்டே இருக்க, நசரேத்தின் கதவுகளை மட்டும் கவனமாக இழுத்துப் பூட்டியிருக்கிறது அரசாங்கம். நகர விருத்தி என்பது கிடையாது. இருக்கிற இடம் மட்டும்தான். இங்கே மெல்ல மெல்ல இனி கிறிஸ்தவர்களுக்கு மரியாதை கூடும்.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் அவர்களின் வேலை வாய்ப்புகள் மெல்ல மெல்லக் குறைக்கப்பட்டு பிறகு பறிக்கப்படும். இன்றைக்கு சகோதரத்துவக் குரல் எழுப்பினாலும் நாளைக்கு கிறிஸ்தவர்கள் யதார்த்தம் புரிந்து, அரசு கொடுக்கும் சலுகைகளை ஏற்கத் தொடங்குவார்கள். அவர்கள் ஆதிக்கம் மேலோங்கும். அது நசரேத் முஸ்லிம்களைப் படிப்படியாக ஓரம் தள்ளும்.
பாலஸ்தீன பிரச்சினையின் அடுத்த பெரும் பூகம்பம் நசரேத்தில் இப்போது மையம் கொண்டிருக்கிறது.
– தி இந்து