சுத்திகரிப்புச் சோதனை!
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?
படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?
சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?
கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?
நாடி நரம்புகள்
நாடுமின்பம் போதை
நரக நெருப்பெண்ணி
நீங்கிச் செல்வதுண்டா?
தீப்புண்ணை மிஞ்சிவிடும்
தீஞ்சொற்கள் சொல்லி
நல்லோரை வதைக்காமல்
நாவடக்கி நவின்றதுண்டா?
வாய்க்கு ருசியாக
வயிற்றுக்குப் பசிக்கும்
நோய்க்குப் பயந்து
நிதானமா யுண்டீரா?
நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?
வாகன நிறுத்தங்களோ
வாழ்க்கையின் விருத்தங்களோ
எல்லைக் குறிக்கப்பட்டால்
மட்டுமே ஒழுங்கிருக்கும்
குறித்தாயிற்றா?
கூட்டத்தோடு கூட்டமெனில்
கூடிப்போகிறது மனிதம்
ஒற்றையாய் உமது
உண்மை நிலை என்ன?
நினைவிருக்கட்டும்!
படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!
கவிதை: சகோதரர் ஷப்பீர்
source: http://satyamargam.com/articles/arts/2081-evaluate-yourself.html