முதல் மனிதர்,இறுதித்தூதரின் பொருட்டால் வஸீலா தேடினார்களா?
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் வஸீலாத் தேடினார்கள் என்று கூறப்படும் ஹதீஸைப் பற்றி….
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள் என்று சொல்லப்படும் இந்த ஹதீஸ் நபிகளைப் பற்றி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது.
சுவர்க்கத்தில் பிசகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘இறைவா! முஹம்மதின் பொருட்டால் அவரின் உரிமையைக் கொண்டு ஆணையிட்டுக் கேட்கிறேன். நீ என் குற்றங்களை மன்னித்தருள்’ என்றார்களாம்.
இதற்கு இறைவன் ‘ஆதமே! (நான் முஹம்மதைப் படைப்பதற்கு முன்னரே) நீர் அவரை எப்படி அறிந்து கொண்டாய்’ என்று கேட்டான்.
அதற்கு ‘இறைவா! நீ என்னை உன் கரத்தால் படைத்து உன்னிடமிருந்து எனக்கு உயிரை ஊதியபோது நான் தலையை உயர்த்திப் பார்த்தேன். அர்ஷின் தூண்களில் ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். ஆதலால் சிருஷ்டிகளுள் உனக்கு மிகவும் விருப்பமான ஒருவரின் நாமத்தையன்றி வேறொன்றையும் உன் பெயருடன் இணைத்துக் கொள்ள மாட்டாய் என்று அறிந்தேன்’ என ஆதம் பதிலளித்தாராம்.
அதற்கு இறைவன் ‘ஆதமே! நீர் மெய்யுரைத்தீர். திட்டமாக சிருஷ்டிகளில் அவர் மிகவும் விரும்பத்தக்கவரே. எனவே நீர் அவரின் பொருட்டால் கேளும். நான் மன்னித்து விடுகிறேன். அன்றி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லையென்றால் நான் உம்மைப் படைத்திருக்க மாட்டேன்’ எனக் கூறினான்.
இந்த ஹதீஸை ஹாக்கிம் தமது ‘முஸ்தத்ரக்’ எனும் நூலில் பதிவு செய்திருக்கிறார். தாம் இதனை ஸஹீஹான ஹதீஸ் என நினைப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது அவர்களின் பெயர் பட்டியலில் அப்துல் ரஹ்மான் பின் ஜய்த் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமான ஒரு அறிவிப்பாளர் என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் (முஹத்திஸின்களின்) கருத்தாகும். ஹாக்கிம் என்பவரால் அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ் நிராகரிக்கப்பட வேண்டியதுதான் என்பதை பின்னர் தருகின்ற விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இமாம்களான அஹ்மத் பின் ஹன்பல், அபூ ஸர்ஆ, அபூ ஹாத்திம், நஸயி, தார் குத்னி போன்ற ஹதீஸ் அறிஞர்களில் பெரும்பாலோர் அப்துர்ரஹ்மானை ஒரு பலவீனமான அறிவிப்பாளராகவே கணித்துள்ளனர். அபூ ஹாத்திம் பின் ஹிப்பான் என்பவர் அப்துர்ரஹ்மானைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘இவர் தம்மை அறியாமலே ஹதீஸ்களை மாற்றியும், திருப்பியும் கூறிக் கொண்டிருந்தார். ஆதலால் அவரால் அறிவிக்கப்படும் ஹதீஸ்களை ஒதுக்கி விடுவதே சிறந்தது’ என்றார்.
ஹாக்கிம் இதை ஸஹீஹ் என்று கூறியிருப்பது கவனிக்கப்பட மாட்டாது. ஏனென்றால் ஹாக்கிம் ஸஹீஹ் எனக்கூறிய இதைப்போன்ற பல ஹதீஸ்களுக்கு ஹதீஸ் தொகுப்பாளர்கள் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அறிஞர்களிடத்தில் பொய்யானது, புனையப்பட்டது என்றெல்லாம் நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்களை ஹாக்கிம் ஸஹீஹ் என்று கூறியிருக்கிறார். அறிஞர் பைஹகீ, இப்னுல் ஜவ்ஸீ மற்றும் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.
ஈஸா நபியின் போதனைகளை கூறப்பட்டுள்ள ஸர்பிப்னு ஸர்மலாவின் ஹதீஸை ஹாக்கிம் ஸஹீஹ் என்று கூறியுள்ளார். ஆனால் அது பொய்யானது என்று அறிஞர்கள் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். புனையப்பட்ட ஹதீஸ் என்று அறிஞர்களால் தீர்ப்பு வழங்கப்பட்ட எத்தனையோ ஹதீஸ்களை ஸஹீஹானவை என ஹாக்கிம் தமது முஸ்தத்ரக் என்ற நூலில் கூறியிருக்கிறார். இதன் காரணத்தினால் மேற்கோள் காட்டுவதற்காக அறிஞர்கள் ஹாக்கிமின் ஸஹீஹான ஹதீஸ்களை எடுத்து கொள்ள மாட்டார்கள். அவற்றின் மீது ஆதரவு வைக்கவும் மாட்டார்கள்.
ஆனால் ஹாக்கிம் ஸஹீஹாக்கிய எல்லா ஹதீஸ்களைப் பற்றியும் இப்படிச் சொல்வதற்கில்லை. அவர் ஸஹீஹாக்கிய ஹதீஸ்களில் மிகுதியானவையும் அவருடைய அபிப்பிராயத்திற்கொப்ப ஸஹீஹானவைதாம். இருப்பினும் இவர் ஸஹீஹ் என்று கூறும் ஹதீஸ்களில் ஏராளம் தவறுகள் இருக்கின்றன. ஹதீஸ்களை (தஸ்ஹீஹ்) ஸஹீஹாக்கும் அறிஞர்களுக்கு மத்தியில் ஹாக்கிமுடைய தஸ்ஹீஹைப் போல பலம் குன்றிய ஒரு தஸ்ஹீஹைக் காண முடியாது.
ஹதீஸ்களை ஸஹீஹாக்கும் துறையில் அபூஹாதம் பின் ஹிப்பான் தலைசிறந்து விளங்கினார்கள். இமாம்களான திர்மிதி, தாரகுத்னி, இப்னுகுஸைமா, இப்னு மன்தா போன்றவர்களெல்லாம் ஹதீஸ்களைத் துருவி ஆராய்ந்து அவை ஸஹீஹ் என்று தீர்ப்பு வழங்கும் கலையில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் ஹாக்கிம் இப்படிப்பட்டவர் அல்லர். இது விஷயத்தில் இமாம் முஸ்லிம் மிகவும் நுணுக்கமுள்ளவர்கள். ஹதீஸ்களை ஸஹீஹாக்கும் துறையில் இமாம் முஸ்லிமை எவராலும் வெல்ல முடியாது.
அடுத்தாற்போல் இமாம் புகாரியை நெருங்க இமாம் முஸ்லிமுக்கு இயலாது. ஸஹீஹான ஹதீஸ்களை அறிவிப்பதில் இமாம் புகாரியின் ஸஹீஹ் புகாரிக்கு நிகரான ஒரு தூய்மையான, நுணுக்கமான தொகுப்பே இல்லை. ‘ஹதீஸ் துறையில் இமாம் புகாரியைப்போல அறிவாற்றல் படைத்த ஒருவரை அல்லாஹ் படைக்கவில்லை. ஹதீஸ் கலையில் இமாம் புகாரி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஈடு செய்ய எவருமில்லை. இமாம் புகாரி அவர்கள் பழுதான ஹதீஸ்கள் யாவை, நேர்மையான ஹதீஸ்கள் யாவை என்பன பற்றி மிகவும் விளக்கமுள்ளவர்களாக திகழ்ந்தார்கள்’ என இமாம் திர்மிதி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எனவே ஹதீஸ்களை ஸஹீஹாக்குவதில் இமாம் புகாரியுடன் அபிப்பிராய பேதம் கொள்ள எவரும் முற்படவில்லை. முற்பட்டால் கூட இமாம் புகாரியின் அபிப்பிராயமே மிகைத்து நிற்கும். எதிராளி வாய்மூட வேண்டியது நேரிடும். இது விஷயத்தில் இமாம் முஸ்லிமும் இமாம் புகாரியை போன்றவர்களல்லர். இமாம் முஸ்லிம் ஸஹீஹாக்கி வெளிப்படுத்திய ஹதீஸ்களில் அபிப்பிராய பேதங்கள் சொல்லப்பட்டுள்ளன. சிற்சில நேரங்களில் அபிப்பிராய பேதங்கள் சொன்னவர்களின் கூற்றில் நேர்மையைக் காணலாம்.
உதாரணத்திற்கு சூரிய கிரகணத் தொழுகை விளக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். அத்தொழுகையை நபியவர்கள் மூன்று ருகூவுகளைக் கொண்டு தொழுதார்கள் என்றும், நான்கு ருகூவுகளாகத் தொழுதார்கள் என்றும் இமாம் முஸ்லிமின் ரிவாயத்தில் அறிவிக்கப்படுகிறது. மற்றொரு அறிவிப்பில் இரண்டு ரக்அத்தாகத் தொழுதார்கள் என்று வருகிறது. உண்மையில் நபியவர்கள் இஅரண்டு ரக்அத்தைத் தவிர தொழவில்லை. நபியவர்கள் மகன் இப்ராஹீம் இறந்த அன்று ஒரே தடவைதான் சூரிய கிரகணத் தொழுகை தொழுதிருக்கிறார்கள் என்று இமாம் ஷாபிஈ அவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படியானால் நான்கு ருகூவு செய்தார்கள் என்ற ரிவாயத் (அறிவித்தல்) எப்படி சரியாக இருக்க முடியும். இருமுறை கிரகணமேற்பட்டதா? இல்லையே! இரு இப்ராஹீம்கள் பெருமானாருக்குப் புதல்வர்களாக இருந்தார்களா? அதுவுமில்லையே. அப்படியானால் இரு ருகூவுகள் செய்தார்கள் என்பதுதான் சரியான அறிவிப்பாகும். இதுவே இமாம் புகாரியின் அறிவித்தலுமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இப்ராஹீம் மாதத்தின் பத்தாம் நாள் இறந்தார்கள் என்று கூறுபவரும் பொய்யுரைப்பவரேயாவார்.
எனவே ஹதீஸ்களை ஸஹீஹாக்கும் விஷயத்தில் இமாம் புகாரியுடன் கருத்து வேற்றுமைகளைச் சொல்ல எவரேனும் துணிந்தால் இமாம் புகாரியினுடைய அபிப்பிராயமே ஆதாரங்களுடன் மிகைத்து நிற்கும்.
இன்னுமோர் உதாரணத்தைப் பார்ப்போம். இறைவன் சனிக்கிழமையன்று மண்ணைப் படைத்தான் என ஹதீஸில் இமாம் முஸ்லிம் ரிவாயத் செய்திருக்கிறார்கள். இது விஷயத்தில் இமாம் புகாரியும், அறிஞர் யஹ்யா பின் மயீனும், மற்றும் பலரும் வேறுமாதிரியாகக் கூறி இமாம் முஸ்லிம் கூறியதற்கொப்ப நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்க முடியாது என்றும் சொல்லித் தர்க்கம் செய்திருக்கிறார்கள். இவர்களின் இவ்வாதத்தில்தான் உண்மையைக் காண முடிகிறது.ஏனெனில் இவர்களுடன் சான்றுகள் இருப்பதைக் காண்கின்றோம்.
திருமறை, நபிமொழி, ஸஹாபாக்களின் ஏகமனதான சொற்கள் அனைத்துமே அல்லாஹ் பூமிகளையும், வானங்களையும் ஆறு நாட்களில் படைத்தான் என்றும், இறுதியாக நபி ஆதமை வெள்ளிக்கிழமை அன்று படைத்தான் என்றும் உறுதி படுத்துகின்றனர். மேலும் சிருஷ்டித்தல் எனும் செயலை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தான். இதை போன்ற சான்றுகளால் சிருஷ்டித்தலின் முறைகளை விளக்கமாக நிரூபிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழனையன்று இறைவன் மண்ணைப் படைத்தான் என்றுள்ள இமாம் முஸ்லிமின் ரிவாயத் சரியாக இருக்க முடியுமா? முடியாது. எனவே இமாம் முஸ்லிம், இமாம் புகாரியைப் போன்றவர்களல்லர் என்று கூறினோம். முஸ்லிம் ஸஹீஹாக்கி வெளியிட்ட பல ஹதீஸ்களில் அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் அபிப்பிராயங்கள் கூறியவர்களின் ஆதாரங்களில் உண்மையைக் காண முடியும்.
ஆனால் இமாம் முஸ்லிம், இமாம் புகாரி ஆகிய இருவரது தொகுப்புகளில் உள்ள மிகுதியான உரைகளும் ஹதீஸ் அறிஞர்களின் ஒப்புதலைப் பெற்றவை. எல்லோரும் அதை ஏற்றிருக்கிறார்கள். அவற்றை நபிகள் கூறியதாக நிச்சயம் அவர்கள் அறிந்தும் இருக்கிறார்கள். இவற்றுள் யாருக்கும் அபிப்பிராயம் சொல்வதற்கு இடமில்லை. இது விஷயத்தில் அதிகமான விளக்கம் வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளன. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய மேற்கூறிய ஹதீஸை வேறு சில அறிஞர்களும் அறிவிப்பாளர்களின் பெயர்கள் (இஸ்னாத்) இல்லாமல் கூறியுள்ளனர். மற்றும் சிலர் சில பல இடங்களில் கூட்டியும் அறிவித்திருக்கிறார்கள். ‘ என் குற்றங்களை மன்னித்து விடு!’ என்பதற்கு பதிலாக ‘என் தவ்பாவை ஏற்றுக்கொள்!’ என்று கூறினார்களாம். ‘நீர் எப்படி முஹம்மதை அறிந்து கொண்டீர்?’ என்று அல்லாஹ் கேட்டதற்கு ‘ சுவனலோகத்தில் எல்லா இடங்களிலும் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன்’ என்றும் வேறு சில மாற்றங்களுடன் இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய தன்மைக்குரிய ஹதீஸ்கள் அவசியம் ஒதுக்கப்பட வேண்டும். ஷரீஅத்தின் விதிகள் இம்மாதிரி உரைகளால் அமைக்கப்பட மாட்டாது.
இது அறிஞர்கள் வழங்கும் தீர்ப்பு. ஏனெனில் மேற்குறிப்பிட்ட ஹதீஸ் யூத- கிறிஸ்தவ நூல்களிலிருந்து அறிவிக்கப்படும் பழைய சில கட்டுக்கதை (இஸ்ராயிலியாத்) களுக்கு ஒத்த சம்பவம் போல் இருக்கிறது. இதனால் நம் இஸ்லாமிய மார்க்க சட்டங்கள் ஏதும் விதியாகவில்லை. இத்தகைய சம்பவங்களை நபியவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸ்கள் வாயிலாக கிடைத்தால் மட்டுமே அவை ஏற்கப்படும். பழங்கால செய்திகளையும், வேதம் அருளப்பட்ட சமூகங்களான யூத-கிறிஸ்தவ சமூகத்தாரின் கதைகள் பற்றியெல்லாம் கஃபுல் அஹ்பார், வஹ்ப் பின் முனப்பிஹ் போன்றோர் வாயிலாக கிடைத்தால் கூட அவற்றை தீனுல் இஸ்லாமில் எடுத்து செயல்படுவதற்கும், ஆதாரமாக ஏற்றுக் கொள்வதற்கும் அனுமதியில்லை. இப்படி இருக்கும்போது நம்பத்தகாதவர்கள் வழியாக கிடைத்த ஏதாவது நம்மிடம் கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
எனவேதான் இஸ்ஹாக் பின் பிஷர் போன்றவர்கள் கூறுகின்ற பழங்காலப் பொய்க் கட்டுகதை (இஸ்ராயீலிய்யாத்) களுக்கு மேற்படி ஹதீஸை ஒப்பிட்டோம். முன்னர் தோன்றிய நபிமார்களைப்பற்றிக் கூறப்பட்ட சம்பவங்கள் மெய்யாக இருக்குமாயின் அவை அவர்களது ஷரீஅத்திற்குப் பொருத்தமாக இருக்கலாம். முன் நபிமார்களின் ஷரீஅத்திலுள்ள சட்டங்களை எடுத்து இஸ்லாமிய ஷரீஅத்தில் செயல்படுத்தப்பட்டால் அவை ஆகுமா, இல்லையா என்பது அறிஞர்களுக்கு இடையில் எழுந்த பிரபலமான ஒரு பிரச்சனையாகும். இது விஷயத்தில் அறிஞர்கள் ‘நம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு ஒருவகையான பாதிப்பும், மாற்றங்களும் ஏற்படாவிட்டால் முந்தைய நபிமார்களின் ஷரீஅத் சட்டங்களை எடுத்து செயல்படுவது ஆகுமானது என்று குறிப்பிடுகிறார்கள். இதுவே மிகுதியான அறிஞர்கள் குறிப்பிடும் அபிப்பிராயமாகும். இந்த அனுமதிக்கு அடிப்படையாக நம் நபிகளுடைய ஹதீஸிலிருந்தோ அல்லது வேறு ஏதேனும் வழிகளில் ஆதாரப்பூர்வமாக முன்னோர்களின் ஷரீஅத்தில் இடம் பெற்றிருந்த சட்டம் என்றோ நிரூபிக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இன்னுமொரு ஹதீஸையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹதீஸ் மூஸா பின் அப்துர்ரஹ்மான் அல்-ஸன்ஆனி அறிவிக்கிறார்கள். ‘குர்ஆனை மனனம் செய்து, மற்றும் கல்வியையும் பலதரப்பட்ட அறிவுகளையும் மறக்க விடாமல் பேணிப்பாதுகாத்து வைக்க வேண்டும் என்று எவராகிலும் விரும்பினால் சுத்தமான ஒரு பாத்திரத்தில் அல்லது பளிங்குத்தட்டில் குங்குமமும், தேனும், மழைநீரும் கலந்து மையாக்கி, எழுதி, அதைக் கலக்கி, மூன்று நாள் நோன்பு நோற்று, நோன்பு திறக்கும்போது அதைப் பருகி, கீழ்வரும் துஆவைக் கொண்டு ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் பிரார்த்திக்கவும்: ‘இறைவா! நீயே பிரார்த்திக்கப்படுகிறவன். உன்னைப்போல் பிரார்த்திக்கப்படுகிறவன் எவருமில்லை. அப்படி யாரும் பிரார்த்திக்கப் படவும் மாட்டார்கள். இதைப் பொருட்டாக வைத்தும், உன் நபிமார்களான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும், நபிமார்களான இப்ராஹீம், மூஸா, ஈஸா அலைஹிஸ்ஸலாம் இவர்களின் உரிமைகளையும், பாத்தியதைகளையும் பொருட்டாக வைத்து அவற்றைக் கொண்டு கேட்கிறேன்’ என்று கூறி கடைசி ஹதீஸ் வரையிலும் மூஸா பின் அப்துர்ரஹ்மான் அல்-ஸன்ஆனி சொல்லி முடித்தார்.
இனி இந்த மூஸா பின் அப்துர்ரஹ்மான் அல்-ஸன்ஆனி ஹதீஸ் தொகுப்பாளர்கள் பட்டியலில் எப்படி மதிக்கப்படுகிறார் என்பதை ஆராய்வோமானால் அவர் முழுப் பொய்யராக இருக்கிறார் என்பதைத் தெரிய முடியும். இவர் விஷயத்தில் அறிஞர் அபூ அஹ்மத் பின் அதீ ‘வெறுக்கத்தக்கவர்’ என்று கூறியுள்ளார். அபூ ஹாதம் பின் ஹிப்பான் இவரைப்பற்றி ‘பித்தலாட்டக்காரர், ஹதீஸ்களைப் பொய்யாக இட்டுக்கட்டிச் சொல்கிறவர்’ என்று சொல்லி மேலும் கூறுகிறார்: ‘இவர் முகாதில், கல்பீ போன்றவர்களின் சொற்களிலிருந்து விஷயங்களைத் திரட்டி தப்ஸீரில் ஒரு நூலைப் புனைந்துவிட்டு பின்னர் அதை இப்னு அப்பாஸைப்பற்றி இப்னு ஜுரைஜ் கூறியதாகச் சுமத்தியிருக்கிறார். அன்றி இதே ஹதீஸ் மூஸா பின் இப்ராஹீம் அல்-மர்வஸீ வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. இவரைப்பற்றி யஹ்யா பின் மயீன் ‘பொய்யர்’ என்று கூறியிருக்கிறார்.
தாரகுத்னி இவரைப்பற்றி ‘ஒதுக்கப்பட வேண்டியவர்’ என்று கூறியிருக்கிறார். சொல்லையும், பொருளையும், மாற்றியும், திருப்பியும் அறிவிக்கின்ற ராவிகளும் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறுகிறார்கள்.* இவையனைத்தும் இருள் சூழ்ந்த பெயர்ப் பட்டியல்களாக இருப்பதனால் இவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களைக் கொண்டு மார்க்க சம்பந்தமான தீர்ப்புகள் ஏதும் விதிக்கப்பட மாட்டாது. பிற்காலத்தில் தோன்றிய ஹதீஸ் தொகுப்பாளர்கள் சிலர் ஸஹீஹ் என்றும், ளயீஃப் என்றும் ஹதீஸ்களின் தரத்தை எடைப்போட்டுப் பார்க்காமல் சில ஹதீஸ்களை பளாயில்களுடைய (சிறப்புகளுடைய) தலைப்பில் ரிவாயத் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டார்கள். தாம் அதிகமான ஹதீஸ்களை ரிவாயத் செய்திருப்பதாக விளங்கப்பட வேண்டுமென்பதுதான் இவர்களின் இலட்சியமே தவிர அவை இஸ்லாமியச் சட்டங்களைப் புலப்படுத்துகின்ற நபியவர்களின் பொன்மொழிகளாக அமைய வேண்டும் என்பது இவர்களின் இலட்சியமாக இருக்கவில்லை.
நேரங்களின் சிறப்பு, ஆட்களின் சிறப்பு, வழிபாட்டின் சிறப்பு, ஸஹாபாக்களின் சிறப்பு, குலஃபாக்களின் சிறப்பு என்றெல்லாம் பளாயில்கள் விஷயத்தில் ஹதீஸ்கள் தொகுத்த பல்வேறு ஆசிரியர்கள் இந்த மாதிரியைக் கையாண்டிருக்கிறார்கள். இவர்கள் தொகுத்த ஹதீஸ்கள் பல்வேறு தராதரமுடையவை. இவற்றில் ஸஹீஹான ஹதீஸ்களுமிருக்கும். ஹஸ, ளயீஃப், மவ்ளூஃ என்ற பற்பல தரத்திலுள்ள ஹதீஸ்களும் இருக்கும்.
அபுஷைகுல் இஸ்பஹானி ‘அமல்களின் சிறப்பு’ (பளாயிலுள் அஃமால்) என்ற தலைப்பில் ஹதீஸ்களைத் தொகுத்திருக்கிறார். கைஸமத் பின் ஸுலைமான் ‘ஸஹாபக்களின் சிறப்பிலும், அபூ நயீமுல் இஸ்பஹானி குலஃபாக்களின் சிறப்பிலும், அபுல்லைஸ் அல்-ஸமர்கந்தி, அப்துல் அஸீஸுல் கன்னானி, அபூ அலிய்யுல் பன்னா போன்ற ஷைகுமார்கள் ஏராளாம் ஹதீஸ்களைத் திரட்டியிருக்கிறார்கள். ஹதீஸ் துறையில் இவர்களுக்குப் போதிய ஞானமிருந்தும் தாம் கேட்ட ஹதீஸ்களை பொதுவாக அறிவித்து விடுகிறார்கள். அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை பிறர் தெரிய வேண்டுமென்பதே இவர்களின் இலட்சியம் அன்றி அவை மார்க்கத் தீர்ப்புகளுக்கு ஆதாரமாக்கப்பட வேண்டுமென்பது இவர்களின் இலட்சியமாக இருந்ததில்லை. ஆதலால் ஹதீஸ்களை அலசி, ஆராய்ந்து பாராமல் முன்கரான ஹதீஸ் என்றும், (வெறுக்கப்பட்ட ஹதீஸ்) பலவீனமான ஹதீஸ் (ளயீஃப்) புதுமையான ஹதீஸ் (கரீப்) என்று பாகுபடுத்தாமல் விபரமின்றிக் கூறிவிடுகின்றனர்.
ஆனால் ஹதீஸ் தொகுப்பாளர்களில் நேர்மையானவர்கள் என்று அறியப்பட்ட இமாம்களான மாலிக் பின் அனஸ், ஷாஃபிஈ, அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி மேலும் இமாம் புகாரி, அலீ பின் முதைனி, அபூதாவூத், தபரீ, இப்னு குஸைமா, அபூ ஸர்ஆ, ஷுஃபத்திப்னுல் ஹஜ்ஜாஜ், யஹ்யா பின் ஸயீத் அல்-கத்தான், அப்துர்ரஹ்மான் பின் அல்-மஹ்தீ, ஸுஃப்யான் பின் உயைனா, வகீஃ, இப்னுல் ஜர்ராஹ், அப்துல்லாஹ் இப்னுல் முபாரக், அபூஹாதிம், தாவூத் பின் அலீ இப்னுல் முன்திர் போன்ற அறிஞர்கள், ஹதீஸ் ஆராய்ச்சியாளர்கள் தாம் திரட்டிய ஹதீஸ்களைக் கொண்டு இஸ்லாமிய மார்க்க விதிகளை வெளியாக்குவதை இலட்சியமாக வைத்து திரட்டியிருப்பதனால், அவற்றில் ஸஹீஹானவை யாவை, ளயீஃபானவை யாவை, அறிவிப்பாளர்களில் நம்பத்தகுந்தவர்கள் யாவர், புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் யாவர் என நுணுக்கமாக ஆரய்ந்து ஹதீஸ்களைத் திரட்ட முற்பட்டனர். அது விஷயத்தில் பெரும் சிரமங்களையும், பலவாறான கஷ்டங்களையும் சுமந்து கொண்டார்கள். இவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களில் சந்தேகமே இல்லை.
இவற்றை நாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் பெருமானாரையும், பொதுவான சிருஷ்டிகளையும் பொருட்டாக வைத்து, அவர்களைக் கொண்டு ஆணையிட்டு வஸீலா தேடலாம் என அனுமதி வழங்கியவர்களில் ஒருவர் கூட தமது இந்த வாதத்திற்கு நபிகளோடு சேர்க்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களில் ஒன்றைக்கூட ஆதாரம் காட்ட முடியவில்லை. இதுபற்றி அறிஞர்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இது விஷயத்தில் சான்றாக எடுத்துக் கூறப்பட்ட ஹதீஸ்கள் அனைத்துமே பெருமானார் மீது வேண்டுமென்றே பொய்யாகப் புனைந்து சொல்லப்பட்ட ஹதீஸ்களாகவோ அல்லது நபியவர்கள் கூறியது என்று தவறுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களாகவோ அல்லது முன்னோர்களின் பலவீனமான வரலாறுகளாகவோ தான் இருக்குமே தவிர அவை நேர்மையான ஹதீஸ்களாக இருக்க முடியாது. சில வேளை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களிடமிருந்து கேட்கப்பட்ட பலவீனமான சொற்களாகவும் இருப்பதைக் காணலாம்.
உதாரணமாக கீழ்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம். ‘அப்துல்லாஹ் பின் ஸுபைரும், முஸ்அப் பின் ஸுபைரும், அப்துல்லாஹ் பின் உமரும், அப்துல் மலிக் பின் மர்வானும் ஒன்று சேர்ந்து கஃபாவின் அருகில் நின்று கொண்டு ‘ருக்னுல் யமானி’யை இருகப் பிடித்தவண்ணம் ஒவ்வொருவரும் தத்தம் தேவைகளை அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்களாம். இதனால் அல்லாஹ் தன் விசாலமான அருள் மாரியிலிருந்து அருள்பாலிப்பான் என்றும் தமக்குள் பேசிக் கொண்டார்களாம். ஒருவர் அப்துல்லாஹ் பின் ஸுபைரை நோக்கி ‘எழுந்து பிரார்த்தியும். நீர்தான் ஹிஜ்ராவுக்குப் பிறகு இஸ்லாத்தில் தோன்றிய முதல் குழந்தையாயிற்றே’ என்றார்.
அதைக் கேட்டதும் அவர் எழுந்து நின்று ‘ருக்னுல் யமானி’யை இருகப் பிடித்தவாறு ‘இறைவா! நீ மகத்துவமிக்கவன். பயங்கரமான எல்லா நிலைகளிலும் உன் மீது ஆதரவு வைக்கப்படுகிறது. உன் திருமுகத்தின் பெருமையால், அதன் மதிப்பால், உன் அர்ஷின் கண்ணியத்தால், அதன் மகத்துவத்தால், உன் நபியின் பொருட்டால், அவர்களின் மரியாதையைக் கொண்டும், மதிப்பைக் கொண்டும் நான் உன்னிடம் கெஞ்சி வேண்டுகிறேன். இந்த ஹிஜாஸ் மாகாணத்தின் அதிகாரமும், அதன் ஆட்சிப் பொறுப்பும் என்மீது ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் என்னை மௌத்தாக்கி விடாதே!’ என்று பிரார்த்தித்து விட்டு அமர்ந்தார்களாம்.
இரண்டாவதாக முஸ்அப் பின் ஸுபைர் எழுந்து ‘ருக்னும் யமானி’யைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ‘அல்லாஹ்வே! நீ அனைத்து படைப்பினங்களின் இரட்சகன். அவையனைத்தும் உன் பக்கம் மீளக்கூடியவை. அனைத்துக் காரியங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்ற உன் ஆற்றலின் பொருட்டால் பிரார்த்திக்கிறேன். இராக்கின் ஆட்சி பீடத்தை எனக்கு நீ அருள் புரிந்து ஹுஸைனின் மகள் ஸுஹைனாவை எனக்கு நீ திருமணம் செய்து தரும்வரையில் என்னை நீ மௌத்தாக்கி விடாதே!’ என்று கூறிப் பிரார்த்தித்தார்களாம்.
பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் எழுந்து நின்று ‘ருக்னுல் யமானி’யைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ‘ஏழு வானங்களுடையவும், வறட்சியால் வாடிய பிறகு புற்பூண்டுகளை முளைப்பிக்கும் பூமியையுடையவும் இரட்சகனே! உன்னுடைய ஏவல்களுக்கு இணங்கிய நல்லடியார்கள் எந்த ஒன்றைக் கொண்டு உன்னிடம் பிரார்த்தித்தார்களோ அதைக் கொண்டு நானும் பிரார்த்திக்கிறேன். உன்னுடைய சிருஷ்டிகள் மீதுள்ள உன் உரிமைகளையும், பாத்தியதைகளையும் முன்னிறுத்திக் கேட்கிறேன். உன் அர்ஷை சுற்றி வரும் மலக்குகளின் பொருட்டாலும் உன்னிடம் கேட்கிறேன்’ என்று கூறி துஆவின் கடைசி வரையிலும் பிரார்த்தித்தார்கள்.
ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் பற்றிய இந்த சம்பவத்தை இப்னு அபித்துன்யா என்பவர் தமது முஜாபுத் துஆ என்ற நூலில் இஸ்மாயில் பின் அப்பானுல் கனவி வழியாகக் கிடைத்தது என்று கூறியிருக்கிறார். இந்த இஸ்மாயில் என்பவரின் நிலைமையை நாம் ஆராய்ந்தால் இவர் பொய்யுரைப்பவர் எனத் தெரிந்து கொள்ளலாம். இவரைப்பற்றி இமாம்களான புகாரி, முஸ்லிம், தாரகுத்னி, அபூ ஸர்ஆ போன்றவர்களெல்லாம் ‘ஒதுக்கப்பட்டவர்’ என்று கூறியிருக்கிறார்கள். அபூ ஹாதிம் இந்த இஸ்மாயிலைப் ‘பொய்யன்’ என்று கூறியுள்ளார். ‘நம்பத்தகுந்த நாணயமானவர்கள் மீது இட்டுக்கட்டுகிறவர்’ இப்னு ஹிப்பான் கூறியிருக்கிறார். ‘இவரின் அறிவித்தலுக்கொப்ப ஹதீஸ்களை நான் எழுதிக் கொண்டே இருந்தேன். ஆனால் புனையப்பட்ட மவ்ளூஃ ஆன ஹதீஸ்களை இவரின் ரிவாயத்துகளில் பெற்றுக் கொள்ளப்பட்டதினால் இவரின் ஹதீஸ்களை ரிவாயத் செய்வதைத் தவிர்த்து விட்டேன்’ என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் பற்பல குற்றங்களை இவர் விஷயத்தில் கூறியிருக்கின்றனர்.
மேலும் இந்த ஹதீஸின் கருத்திலும், அமைப்பிலும், அதில் இடம் பெற்றவர்களின் பெயர்களிலும், அவர்கள் பிரார்த்தித்த துஆக்களிலும் வேறு சில அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. அந்த ஹதீஸ்களில் இவர்கள் ஹிஜ்ர் பக்கம் ஒன்று சேர்ந்தார்களென்றும், அப்துல்லாஹ் பின் ஜுபைர் ஆட்சி பீடத்திற்கு ஆசைப்பட்டார்கள் என்றும், உர்வா பின் ஜுபைர் தம்மை விட்டு கல்வி பறிக்கப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டார்களென்றும், முஸ்அப் பின் உமர் இராக்கின் தலைமைப் பதவியையும், தல்ஹாவின் மகள் ஆயிஷாவையும், ஹுஸைனின் மகள் ஸுஹைனாவையும் சேர்த்து மனைவியாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றும் காணப்படுகிறது. அப்துல்லாஹ் பின் உமர் அல்லாஹ் வின் மன்னிப்பை விரும்பினாரென்றும் அதை அறிவிக்கின்ற ராவி குறிப்பிடுகின்றார். மேலும் அதை அறிவிக்கின்ற ராவி, மேலும் இப்னு உமர் மன்னிப்பைப் பெற்றார்களென்றும், ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைப் பெற்றுக் கொண்டார்களென்றும் குறிப்பிடுகிறார். ஆம்! சிருஷ்டிகளில் யாரையும் எடுத்துரைத்து அவர்களின் பொருட்டால் இங்கே கேட்கப்படவில்லை. எனவே இந்த இஸ்னாத் முன்னர் கூறப்பட்ட இஸ்னாதை விட நன்றாக இருப்பதாக அஹ்லுல் இல்ம் (அறிஞர் உலகம்) ஏக மனதாக ஏற்றுக் கொள்கிறது.
சிலர் தாம் கனவில் கண்ட கதைகளை மனிதரைக் கொண்டு வஸீலா தேடுவதற்குரிய ஆதாரமாக கொள்கிறார்கள். கனவில் இன்னாரைப் பொருட்டாகக் கொண்டு வைத்துப் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்டுள்ளதாம். இத்தகைய கனவுகளும், கதைகளும் மார்க்க அனுஷ்டானங்களுக்குச் சான்றாக அமைய முடியுமா? அனைத்து அறிஞர்களின் ஏகமனதான அபிப்பிராயப்படி மார்க்கச் சட்டங்களை விதிக்க கனவுகளும், கதைகளும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. துஆக்களைச் சேர்த்து புத்தகங்களை எழுதியவர்கள் இத்தகைய சம்பவங்களை ஏராளம் சேர்த்துள்ளார்கள். கீழே காணும் ஒரு சம்பவத்தைப் பற்றி அது ஸலஃபுஸ்ஸாலிஹீன்களிடையே நடைபெற்றதாக இப்னு அபித்துன்யா தமது முஜாபுத் துஆ என்ற நூலில் அறிவிக்கிறார்.
ஒரு மனிதர் அப்துல் மலிக் பின் ஸயீதிடம் வந்தபோது அவரின் வயிற்றை அப்துல் மலிக் சோதித்துப் பார்த்து தீராத நோய் ஒன்று அம்மனிதரைப் பீடித்திருப்பதாகக் கூறினார். அது என்ன நோய் என்று அம்மனிதர் அப்துல் மலிக்கிடம் வினவ அதற்கு அவர், துபைலா (வயிற்றினுல் உண்டாகும் கொப்புளங்கள்) என பதிலுரைத்தார்.
இதைச் செவியுற்ற அம்மனிதர் திரும்பி விட்டார். பிறகு வருத்தத்துடன் அல்லாஹ்! அல்லாஹ்! என்று கீழ்வருமாறு பிரார்த்தித்தார். ‘என் இறைவன் ஏகன். எதையும் நான் அவனுக்கு இணை வைக்க மாட்டேன். இறைவா! உன் நபியின் பொருட்டால் நான் உன் பக்கம் முன்னோக்குகிறேன். அவர் நபிய்யுர் ரஹ்மத் என்னும் அருள் நபி. அல்லாஹ்வின் ஸலாத்தும், ஸலாமும் அவர் மீது உண்டாகட்டும்! முஹம்மதே! உங்களைப் பொருட்டாக வைத்து உங்களின் இரட்சகன்பால் நான் முகம் திருப்புகிறேன். எனவே எனது இரட்சகன் எனது நோயிலிருந்து எனக்கு அருள் பாலிக்கட்டும்’.
அதன் பின்னர் அப்துல் மலிக் அவரது வயிற்றைத் தடவிப் பார்த்து விட்டு, ‘நீர் குணமடைந்து விட்டீர். இப்பொழுது உமக்கு எந்த நோயுமில்லை’ என்றாராம்.
இதுபோன்ற துஆக்களை வைத்து ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் பிரார்த்தித்து இருக்கிறார்களாம். மேலும் நபியைக் கொண்டு பிரார்த்திப்பதை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அனுமதித்திருப்பதாக ‘மன்ஸக்குல் மிர்வதி’ என்ற நூலில் நகல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இமாம் அஹ்மதைத் தவிர உள்ள மற்ற அறிஞர்கள் இப்படிப்பட்ட துஆக்கள் கேட்பதை விலக்கியிருக்கிறார்கள்.
உதவித் தேடிப் பிரார்த்திப்பவர்களின் இலட்சியம் நபியை ஈமான் கொண்டு, அவர்களை நேசித்து, அவர்களுக்கு வழிபட்டு நடப்பதை பொருட்டாக வைத்துக் கேட்பதாக இருப்பின் இமாம் அஹ்மதைப் பற்றி நகல் செய்தது சரியாக இருக்கலாம். ஆனால் நபியை பொருட்டாக வைத்துக் கேட்பதுதான் அவர்களுடைய இலட்சியமாக இருப்பின் அங்குதான் அபிப்பிராயப் பேதங்கள் கூறப்படும். அப்பொழுது திருகுர்ஆன், ஹதீஸ் இவற்றின் வெளிச்சத்தில் ஆராய்ந்து அதற்குரிய தீர்ப்புக்கு வர வேண்டும்.
துஆ இறைஞ்சிய பின்னர் பிரார்த்தித்தவனுக்கு அவனுடைய தேவைகள் நிறைவேறின என்பதனால் அதை ஷரீஅத் அனுமதித்த துஆ என்றோ, சிருஷ்டிகளைக் கொண்டு வஸீலா தேடியதினால்தான் கிடைத்தது என்றோ சொல்ல முடியாது. எத்தனை எத்தனையோ மக்கள் நட்சத்திரங்களையும், மற்றபிறவற்றையும் அழைத்து பிரார்த்திக்கின்றனர். கிறிஸ்தவ கோயில்களைக் கொண்டும், மேலும் சாமிகளைக் கூப்பிட்டும் பிரார்த்திக்கின்றனர். கப்றுகள், பிம்பங்கள், சமாதிகள் இவற்றின் அருகில் நின்று பிரார்த்தித்தால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று நம்பிக்கை வைத்து சொல்கின்றனர். அங்கே சென்று ஏதேதோ கேட்டுப் பிரார்த்திக்கின்றனர்.
சில நேரங்களில் இவர்களின் தேட்டங்கள் கிடைத்து விடுகின்றன. எனவே தம் தேவைகள் நிறைவேற்றப்பட்டதினாலோ, தாம் கேட்டது கிடைத்து விட்டதனாலோ மேற்கூறப்பட்ட துஆக்கள் போன்றவை ஷரீ அத்தில் அனுமதிக்கப்படும் என்பது அவசியமில்லை. ஏனெனில் அதனால் பல்வேறு கெடுதிகள் விளைகின்றன. இஸலாமிய ஷரீஅத்தின் விதிவிலக்குகளில் மனித சமூகத்தின் நன்மைகள் கவனிக்கப்படுகின்றன. வெளிப்படையில் அவை நன்மை தருவதென்று விளங்கப்படாவிட்டாலும் சரியே.
உதாரணமாக ஷரீஅத்தில் விலக்கப்பட்டவற்றைக் கவனிப்போமானால் ஷிர்க் (இணை வைத்தல்), மது அருந்துதல், சூதாடல், அசிங்கமான வெறுக்கத்தக்க செய்கைகளைப் புரிதல், அக்கிரமங்கள் செய்தல் போன்ற விலக்கப்பட்ட செய்கைகளை புரிகின்றவனுக்கு நிச்சயமாக அவற்றினால் ஒருசில பலன்கள் கிடைக்கலாம். தீமைகளோ அதிகம். எனவே இச்செய்கைகளால் விளையும் தீமைகளையும், கெடுதல்களையும் கவனிக்கும்போது அவற்றிலுள்ள பயன்களை விட தீமைகளே அதிகமாக இருப்பதைக் காணலாம். இதை வைத்துத்தான் அல்லாஹ்வும், ரஸூலும் அவற்றை விலக்கி ஹராம் என்று விதித்திருக்கிறார்கள். இவை அனைத்தும் விலக்கல்களின் விதிகள்.
ஏவல் விதிகளைப் பொறுத்தவரையிலும் அப்படித்தான். இபாதத்துகள், ஜிஹாத், தம் சொந்த பொருளிலிருந்து ஜகாத் கொடுத்தல், பிற, தான-தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளைப் பார்த்தால் அவற்றிலும் சில கஷ்டங்களும் சிரமங்களும் இருக்க முடியும். ஆனால் அவற்றால் விளையும் நற்பயன்களின் பொருத்தத்தை முன்வைத்து அல்லாஹ் அவற்றை கடமையாக்கி தன் அடியார்கள் மீது விதித்திருக்கின்றான்.
இதுவே மார்க்க விதிவிலக்கின் தத்துவங்களாகும். மக்கள் அவசியம் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷரீஅத்தில் வாஜிப் என்றோ, சுன்னத் என்றோ, முஸ்தஹப் என்றோ ஒரு செயல் சட்டமாக்கப்பட வேண்டுமானால் அதை விதிக்கப்படுவதற்கு உரிய ஆதாரம் என்னவென்பதை ஷரீஅத் நிரூபித்துக் காட்டட்டும். வழிபாடுகள், வணக்கங்கள் அனைத்துமே வாஜிப், முஸ்தஹப் என்ற இரு விதிகளுக்குட்பட்டு இருக்கின்றன. இவ்விரு விதிகளுக்கும் அப்பாற்ப்பட்ட எதுவும் வணக்கமாகாது. பிரார்த்தனைகள் வணக்க வழிபாடுகளில் உட்பட்டு இருக்கின்றன. எனவே எதை வைத்துப் பிரார்த்திக்கப்படுகிறதோ அது மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனையாக இருத்தல் வேண்டும்
சுருங்கக்கூறின் சில ஸலஃபுஸ்ஸாலிஹீன்களும், சில அறிஞர்களும் சிருஷ்டிகளும் பெருமானார் (ஸல்) அவர்களை மட்டும் முன்னிறுத்தி பிரார்த்திப்பதை அனுமதித்திருக்கின்றனர். இவர்கள் கூட வேறு சிருஷ்டிகளைக் கொண்டு கேட்பதை (அவர்கள் நபிமார்களாகட்டும், மலக்குகள், ஸாலிஹீன்கள், கண் பார்வைக்கு அப்பாற்ப்பட்டவர்கள், இறந்து போன படைப்பினங்களின் எத்தனை பெரியவனாக இருப்பினும் சரியே. இவற்றையெல்லம் முன்னிறுத்தித் தம் தேவைகளை முறையிடுவதற்கு) இவ்வகுப்பினர் அனுமதிக்கவில்லை. ஆனால் மற்ற இமாம்களும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இதர ஸலஃபுஸ்ஸாலிஹீன்களும் செய்யாத ஒன்றை இவர்கள் அனுமதித்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டும்.
source: http://islamkural.com/home/?p=4186#more-4186