உழைத்து ஏன் களைத்துப் போக வேண்டும்?
”ஈமான் கொண்டவர்களே! (அமைதி தருகின்ற) இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்﹐ ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்லாதீர்கள்﹐ அவன் உங்களது பகிரங்க விரோதியாவான்.” (2:208)
ஸூரதுல் பகராவின் இந்த வசனத்தில் இஸ்லாம் என்பதை ‘சில்ம்’ எனும் மற்றுமொரு பதத்தினால் அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான். இஸ்லாம் அமைதியானது என்பதனை அழுத்திச் சொல்கிறது அந்தப் பிரயோகம்.
இரண்டு வகையான அமைதிகளை உலகிலும் இன்னும் இரண்டு வகையான அமைதிகளை மறுமையிலும் வழங்க வந்த மார்க்கமே இஸ்லாம் ஆகும்.
உலகில் இஸ்லாம் வழங்கும் அமைதிகளாவன:
உள்ளத்தில் அமைதி : உள்ளம் சார்ந்த தீமைகள் அனைத்தையும் அகற்றி மனித உள்ளத்தை நன்மைகளால் நிறைத்து விடுவதனூடாக இஸ்லாம் இந்த உள அமைதியை ஏற்படுத்துகின்றது.
உலகின் அமைதி : அநீதிகள், அக்கிரமங்கள், குற்றங்கள், தீமைகள் என்பவற்றை முடியுமானவரை குறைத்து நன்மைகள் வாழும் ஒரு இடமாக உலகை மாற்றுவதன் மூலம் இஸ்லாம் உலக அமைதியைத் தோற்றுவிக்கின்றது.
இந்த இரண்டு வகையான அமைதிகளையும் உலகில் அடையப் பெற்றவர்கள் அல்லது அடைவதற்கான பாதையில் இறுதிவரை உழைத்தவர்களுக்கு இன்னும் இரண்டு அமைதிகளை அல்லாஹ் மறுமையில் வழங்குகிறான்.
அமைதியான உள்ளமொன்றை உலகில் அடையப் பெற்றவர்கள் மறுமையில் அமைதியின் மொத்த வடிவமான அல்லாஹ்வை சுவனத்தில் நேரடியாக தமது கண்களால் அள்ளிப்பருகி கண்டுகளிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அந்த இறை தரிசனத்தில் சுவனத்தையே மறந்து போகுமளவு அவர்களது உள்ளங்கள் பேருவகை கொள்ளும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வர்ணித்துள்ளார்கள். நெருக்கடிமிக்க உலகில் தமது உள்ளத்தை நெருக்கடிகளுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆட்படாது அமைதிகாத்தவர்களுக்கு மறுமையின் இந்தப் பாக்கியம் கிடைக்கின்றது.
அதேபோன்று அநீதிகளையும் தீமைகளையும் அகற்றி அமைதி வாழுமிடமாக இவ்வுலகை மாற்றியமைத்தவர்கள் அல்லது மாற்றியமைக்கும் பாதையில் உழைத்தவர்களுக்கு மறுமையின் அமைதி இல்லமாகிய சுவனத்தை அல்லாஹ் வழங்குகின்றான். பூவுலகை சமைத்தவர்களுக்கு அல்லாஹ் தனது கரங்களால் சமைத்து வழங்கும் பரிசுதான் அமைதி மிக்க சுவனமாகும்.
இவ்வாறு உலகிலும் மறுமையிலும் அமைதிகளை அள்ளி வழங்க வந்த மார்க்கமே இஸ்லாமாகும். இஸ்லாத்தின் சிறிய, பெரிய எந்த விடயமாக இருந்தாலும் சரி இந்த அமைதிகளை இலக்காகக் கொள்ளாத ஒரு அம்சமேனும் அதில் இருப்பதை நீங்கள் காண முடியாது.
ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்கள், இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள்﹐ அடிப்படைகள், விதிகள் போன்றவையாக இருக்கலாம்
அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக விதிக்கப்பட்ட தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ், அவற்றின் சுன்னத்துகள், துஆ குர்ஆன் ஓதல், தஸ்பீஹ், திக்ர் போன்ற வணக்கங்களாக இருக்கலாம்.
இஸ்லாம் போதிக்கின்ற உண்மை, வாய்மை, நேர்மை, பணிவு, விட்டுக் கொடுத்தல்﹐ மன்னித்தல், பிறர் நலம் பேணல், தாராள மனப்பான்மை போன்ற பண்பாடுகளாக இருக்கலாம்
பொருளீட்டல், செலவு செய்தல், சொத்துப் பங்கீடு, உரிமைகள், கடமைகள், உறவுகள், பிரிவுகள், திருமணம், குடும்ப வாழ்க்கை, குற்றங்கள், தண்டனைகள் போன்ற அன்றாட வாழ்க்கையோடு தொடர்பான முஆமலாத் ஆக இருக்கலாம். உலகில் நன்மைகளை வாழவைப்பதற்கும் தீமைகளை அழித்தொழிப்பதற்கும் மேற்கொள்ளப்படுகின்ற தஃவாப் பணிகள், போராட்டங்கள் போன்றனவாக இருக்கலாம்.
அனைத்தையும் மேற்கூறப்பட்ட அமைதிகளை இலக்காகக் கொண்டே இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கின்றது.
ஒரு மனிதன் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுகிறான் என்பதன் பொருள் அவன் தன்னை ஒரு முழுமையான அமைதிக்குள் நுழைத்து விடுகிறான் என்பதே.
ஆக, ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் வழிகாட்டலுக் கேற்ப எந்த ஒன்றைச் செய்தாலும் அவன் அதனூடாக இந்த அமைதிகளை நோக்கி சிறிதேனும் நகர்ந்திருக்க வேண்டும். இந்த உலகிலிருந்து அவன் விடைபெறுகின்ற போது அவன் வாழ்ந்த இஸ்லாமிய வாழ்வு அவனது உள்ளத்திலும் அவன் வாழ்ந்த உலகத்திலும், அமைதி, சந்தோஷம், ஆர்வம்﹐ உற்சாகம், திருப்தி என்பவற்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இத்தகைய அமைதிகளை உலகில் ஏற்படுத்துபவர்களுக்கும்﹐ தமது வாழ்வில் அவற்றைக் கண்டவர்களுக்கும்தான் மறுமையின் அமைதிகளும்﹐ சந்தோஷங்களும் காத்திருக்கின்றன என்பதை குர்ஆன் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.
”அமைதியடைந்த ஆன்மாவே, உனது இரட்சகனை நீ பொருந்திக் கொண்ட நிலையிலும் உனது இரட்சகன் உன்னைப் பொருந்திக் கொண்ட நிலையிலும் நீ அவனை நோக்கி மீள்வாயாக! எனது நல்லடியார்களோடு எனது சுவனத்தில் நுழைந்து கொள்வாயாக!” (89: 27-30)
அமைதி கண்ட ஆன்மாவுக்குத் தான் அமைதிமிக்க சுவனம். இந்த உண்மையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிக் கூறினார்கள்
”மகத்துவமிக்க நற்கூலிகள், மகத்தான சோதனைகளுடனே இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமூகத்தை நேசித்தால் (மகத்துவமிக்க நற் கூலிகளைக் கொடுப்பதற்காக) அவர்களை சோதிப்பான். (சோதனைகளைத் தாண்டி அப்பால் செல்லும் போது) யார் திருப்தியுறுகின்றார்களோ அவர்களுக்கு (மறுமையிலும்) திருப்தியுண்டு﹐ யார் (சோதனை களைத் தாண்டும்போது) எரிச்சலும் கோபமுறு கின்றார்களோ அவர்களுக்கு (மறுமையில்) எரிச்சலும் கோபமும் உண்டு.”
இந்த நபிமொழி தெளிவாக ஒரு உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. வாழ்க்கையின் மேடு பள்ளங்கள், சோதனைகள், போராட்டங்கள், இழப்புகள் அனைத்தையும் தாண்டிச் செல்லும் ஒருவர் எரிச்சல்﹐ கோபம்﹐ வெறுப்பு﹐ குரோதம்﹐ பகைமை﹐ முரண்பாடு﹐ கவலை﹐ சோகம்﹐ பயம் போன்றவற்றை தனது நெஞ்சங்களில் சுமந்து கொள்ளாது இருக்க வேண்டும். ஒவ்வொரு சோதனையையும் போராட்டத்தையும் தாண்டும் போது தனது உள்ளம் அமைதி﹐ சந்தோஷம்﹐ திருப்தி﹐ உற்சாகம் என்பவற்றைப் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மறுமை வெற்றியும்﹐ நிலையான அமைதியும் நிச்சயமாகின்றன.
அவ்வாறாயின் நாம் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்கின்ற ஒவ்வொரு செயலும் எமது உள்ளத்திற்கு அமைதியைத் தருவதாக இருக்க வேண்டு மல்லவா?
அதுமட்டுமல்ல, எமது நடத்தைகள், நடவடிக்கைகள், நாம் மேற்கொள்ளும் நற்கிரியைகள்﹐ பணிகள்﹐ நாம் வாழும் வாழ்க்கை என்பவற்றின் மூலமாக எமது சூழலிலும் அமைதி உருவாக வேண்டும். அதாவது நன்மைகள் வளர்ந்து… தீமைகள் குறைந்து… பண்பட்ட ஒரு சூழல் எமது வாழ்க்கை முறையால் உருப்பெற வேண்டும்.
ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிவோரின் கரங்களால் உலகின் அச்சமிக்க சூழலை மாற்றி அமைதி மிக்க சூழலை ஏற்படுத்தித் தருவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறானல்லவா? (அத்தியாயம் 24:55 இல்) அவ்வாறாயின் உள்ளத்திலும் உலகத்திலும் அமைதி என்ற இந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். மாறாக எமது அனைத்து முயற்சிகளுக்கும் பின்னால் இந்த இரண்டு அமைதிகளும் உலகில் கானல் நீராகிவிடுகின்றன என்றால் நாம் எவ்வாறு மறுமையின் அமைதிகளை அடைந்து கொள்ள முடியும்?
தஃவாக் களத்தில் இந்த உண்மை பற்றி நாம் சிந்தித்ததுண்டா? அல்லது இலக்குகளை நாம் அடைந்தாலும், அடையாவிட்டாலும், சில பல நற்பணி களைச் செய்து விட்டுப் போவோம் என்று நாம் கருதுகின்றோமா? அல்லது இந்த இலக்குகளை மறந்து பலம், வளம், செல்வாக்கு போன்ற இலக்குகளை மார்க்கத்தின் மூலமாக நாம் பெற முயற்சிக்கின்றோமா? அல்லது உள அமைதி, உலக அமைதி என்ற இஸ்லாத்தின் இலக்குகளைச் சின்னாபின்னப்படுத்தி விட்டு எங்களது பணிகளால் அமைதியையே கானல் நீராக்கிவிட நாம் முயற் சிக்கின்றாேமா? களத்தில் நாம் காணுகின்ற யதார்த்தம் என்ன? என்பது பற்றி தாஇகள் ஆழமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
களத்தில் சாதகமான நிலைமைகள் இல்லாமலில்லை. இஸ்லாம் பல தனி மனிதர்களின் உள்ளங்களில் அமைதியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி யிருக்கின்றது. ஒரு சில குடும்பங்களில் அந்த அமைதியையும் சந்தோஷத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
எனினும், இந்த விளைவுகள் விதி விலக்காக இருக்கின்றன என்பதே உண்மை. பலர் இஸ்லாமியப் பணிகளில் ஈடுபட்டிருந்தும் கூட அவர்களால் அவர்களது உள்ளங்களுக்கோ அவர் களது குடும்பங்களுக்கோ﹐ அவர்கள் வாழும் சூழலுக்கோ அமைதியை வழங்க முடியவில்லை. இன்னும் சிலர் இஸ்லாமியப் பணிகளிலும் பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு இறுதியில் அவநம்பிக்கை﹐ அதிருப்திகள்﹐ கவலைகள்﹐ வெறுப்புகள்﹐ ஆதங்கங்கள் போன்றவற்றை சுமந்தவண்ணம் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்﹐ சிலர் இந்தப் பணிக்கு முழுக்குப் போட்டு விட்டு ஒதுங்கியும் வாழ்கிறார்கள்.
உலகிலும் மறுமையிலும் அமைதிகளை வழங்க வந்த அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை﹐ அமைதி கெட்டு விடும் என்று கூறி வளரவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களும் சமூகத்தில் ஏராளம். காரணம் அவர்களுக்கு மார்க்கம் அவ்வாறுதான் காண்பிக்கப்பட்டிருக்கின்றது. உள்ளத்திலும் உலகத்திலும் அமைதியை ஏற்படுத்துகின்ற மார்க்கமாக இஸ்லாம் அவர்களுக்கு காண்பிக்கப்படவில்லை. அடையாளங்களும் தோற்றங்களும் சடங்கு, சம்பிரதாயங்களும், மூதாதை யர்களின் வழிவந்த மரபுகளுமாகத்தான் மார்க்கம் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய சடங்கு, சம்பிரதாயங்கள் வலுவிழந்து﹐ செயலிழந்து போய்விடுமோ என்ற பயத்தின் காரணமாக உள்ளத்திற்கும் உலகத்திற்கும் அமைதி தர வந்த மார்க்கத்தை வரவிடாது அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தை இவ்வாறு உற்று நோக்கும் போது ஒவ்வொருவரும் தாம் இஸ்லாம் என்று கருதிய சில வேலைகளை செய்வதில் கவனம் செலுத்துகின்றார்களே தவிர﹐ இஸ்லாம் விரும்பிய இலக்கு களை (அமைதிகளை) அவற்றினூடாக அடையும் நோக்கம் கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அல்லது அவ் விலக்குகளை விட வேலைகளைச் செய்வதில்தான் அவர்களது ஈடுபாடும் ஆர்வமும் மிகைத்துவிடுகின்ற நிலை ஏற்படுகின்றது.
உதாரணமாக ‘ஸலாம்’ கூறும் இஸ்லாமியப் பண்பாட்டை எடுத்துக் கொள்ளலாம். சாந்தி﹐ சமாதானம்﹐ அமைதி அனைத்தும் தனது சகோத ரனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கூறப்படும் இஸ்லாமிய முகமன்தான் ‘அஸ்ஸலாமு அலைக்கும்.’ இந்த ஸலாமை ஒருவருக்கு கூறிவிட்டு அவரது அமைதியைக் கெடுக்கும் வேலைகளில் மற்றவர் ஈடுபடுகிறார் எனின் அவர் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வார்த்தையை உச்சரிப்பதில்தான் கவனம் செலுத்துகிறாரே தவிர அதன் நோக்கத்தை அல்லது இலக்கை அடைந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன் அவர் செயல்படவில்லை.
சமூகத்தில் நற்பணி செய்து நன்மையை வளர்த்து உள்ளத்திலும் உலகத்திலும் அமைதியை ஏற்படுத்த விரும்பும் தாஇகள் பலர் நன்மைகளை வளர்ப்பதற்குக் கையாளும் பிழையான அணுகுமுறைகள் காரணமாக குரோதத்தையும், வெறுப்பையும்﹐ பகைமையையும் வளர்த்து அமைதியைக் கெடுத்து விடுகின்றனர். இவர்களது பார்வையில் பிரசார முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றனவேயன்றி அவற்றினால் அடையப் பெறும் இலக்குகள் முக்கியமானவைகளாக இல்லை. அமைதிகள் கெட்டால் என்ன? நாம் நமது வேலைகளை செய்துவிட வேண்டும் என்பதில்தான் இவர்கள் கவனம் செலுத்து கின்றனர்.
இவ்வாறு இலக்கையும் குறிக்கோளையும் மறந்து ஒரு சில வேலைகளைச் செய்துவிட வேண்டும் என்பதில் மாத்திரம் கவனம் செலுத்துகின்ற காரணத்தினால், நாம் எமது நேரத்தையும், சிரமத்தையும், செல்வத்தையும் வீணாக்கி விடுகிறாேம். உலகிலும் அமைதி இழந்து மறுமையிலும் அமைதி கெட்டுவிடும் ஆபத்துதான் இதனால் எற்படுகின்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
‘திக்ர்’ உள்ளத்திற்கு அமைதி தரும் ஒரு ‘இபாதத்’ ஆகும். அதனை வலியுறுத்தி குத்பா உரை நிகழ்த்தும் ஒருவர்﹐ மற்றும் சிலரை மனதில் வைத்துக் கொண்டு அவர்களுக்கெதிராக ஆவேசத்தை வெளிப்படுத்தி பொரிந்து தள்ளுகிறார். பார்த்தால் அவரது உள்ளத்தில் அமைதி இல்லை போலிருக்கிறது.
அடுத்தவர் மீது வெறுப்பும் குரோதமும் கொண்ட உள்ளம் திக்ர்﹐ தஸ்பீஹ்﹐ தொழுகை﹐நோன்பு மூலம் அமைதி காண முடியுமா? இலக்கை மறந்த இத்தகைய வேலைகள்தான் காலப்போக்கில் உயிரோட்டமில்லாத சடங்கு சம்பிரதாயங்களாக மாறி மனிதர்களைத் தவறான வழியில் இட்டுச் செல்கின்றன. மறுமையிலும் அவைகள் நிரந்தர அமைதியை மனிதனுக்குப் பெற்றுத் தருவதில்லை.
ஆக நாம் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளினூடாகவும் எமது வார்த்தை﹐ வாழ்க்கை﹐ நடத்தை என்பவற்றினூடாகவும் உலக மறுமை இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் எப்போதும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும். தவறினால்…
”அன்றைய தினம் சில முகங்கள் அச்சமுற்றிருக்கும்﹐ கடுமையாக உழைத்துக் களைத்துப் போயிருக்கும், சூடேறிக் கொதிக்கும் நரகில் அவை நுழைந்து கொள்ளும்.” (88:2-4)
என்று அல்லாஹ் எச்சரிக்கின்றானே அந்த ஆபத்தை எதிர் கொள்ள நேரிடலாம். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
அதற்கு மாற்றமாக…
”அன்றைய தினம் சில முகங்கள் பொலிவுடன் காணப்படும். தமது முயற்சிகள் குறித்து திருப்தியுற்ற நிலையில் இருக்கும்…” (88:8-9) என்று அல்லாஹ் நற்செய்தி கூறுகின்றானே﹐ அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
அவ்வாறாயின் இலக்குகளை மறந்து பணியாற்றலாமா? வீணாக உழைத்து ஏன் களைத்துப் போக வேண்டும்? திருப்தி﹐ சந்தோஷம்﹐ அமைதி என்ற இலக்குகளை உலகிலும் மறுமையிலும் அடைவதற்கு அல்லாஹ் என்ன வழிகளைக் காட்டியுள்ளானோ அவற்றை நன்கு விளங்கி செயற்பட்டு வெற்றி காணவல்லவா நாம் முயற்சிக்க வேண்டும்?
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/