உயிர் ஒன்று; பாலினம் ஐந்து
[ஆண்-ஆண், பெண்-பெண் ஓரினச் சேர்க்கை என்பது விபரீதம்தான். மேல் நாடுகளில் இத்தகைய ஓரினச் சேர்கையாளர்கள், இரட்டைத் தன்மையாளர் மற்றும் இடைபட்ட பாலியல் சார்ந்தோர் சேர்த்து ஆராய்ச்சி நடக்கிறது. மொழி, மத, இனச் சிறுபான்மைச் சமுதாயம் மாதிரி “லெஸ்பியன்-கே-பைசெக்சுவல்-டரான்ஸ்ஜெண்டர்’ சமுதாயம். ஆங்கிலச் சுருக்கம்-“எல்.ஜி.பி.டி.’
அமெரிக்காவில் இந்த சமுதாயத்தினர் 90 லட்சம் பேர். அந்நாட்டு ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 3.2 சதவீதம். ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் 190 லட்சமாம். அதிலும் 256 லட்சம் பேருக்கு அத்தகைய ஓரின உறவில் விருப்பம் அதிகமாம்.
இதையே இன்று இந்தியாவிலும் பிரதி எடுத்துக்கொண்டு வீதிகளில் இறங்கி விட்டோம். ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமாம். கேட்டால் வளர்ந்த நாடுகளான “அமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்’ என்று கோஷம் எழுப்புகிறார்கள்.
திருமணத்தைப் பொருத்தவரை, பெற்றோர் விரும்பி நடத்தி வைக்கும் சம்பிரதாயத் திருமணங்கள், விரும்பாமலே நடக்கும் சச்சரவுத் திருமணங்கள், பெரியவர்கள் அறியாமலே நடக்கும் கள்ளத் திருமணங்கள் – இப்படி பல ரகம்.
திருமணம் செய்யாமலே கூடி வாழ்வதற்கு இந்தியாவில் சிலர் முதலில் சட்டத்திருத்தம் கேட்டார்கள். இன்றைக்கு சம்பிரதாயமாக திருமணமே செய்ய இயலாதவர்கள் தாங்கள் செய்து வரும் நடத்தைக்கு அரசு அங்கீகாரம் கோருகிறார்கள்.]
உயிர் ஒன்று; பாலினம் ஐந்து
பெண்பால், ஒன்றன் பால், பலர் பால், பலவின் பால் என்று இலக்கணம் கற்றுத் தருவார்கள். சிலருக்கு லோக்பால், பெண் பத்திரிகையாளர் விவாகாரத்தின் அருண் தேஜ்பால், நேர்மையான அதிகாரி துர்கா சக்தி நாக்பால், நஷ்டஈடு கிடைக்காத அப்பாவி போபால் என நாற்பால் மட்டுமே ஞாபகத்திற்கு வரும். தமிழ்ப்பால் அறிந்தவர்க்கோ என்றைக்குமே முப்பால்தான்.
அரசுப் படிவங்களிலும் விண்ணப்பதாரர் ஆணா / பெண்ணா என்று மட்டும் வினவுகிறார்கள். உள்ளபடியே, மனித இனத்தில் இருபால் மட்டுமே இல்லை. இனப்பெருக்கத்திற்குத் தேவையான புற உறுப்புகள், கருப் பை, கர்ப்பப் பை, விந்துப் பை, உள்சுரப்புகள், பால் சுரப்புகள் போன்றவற்றின் இயற்கையான இடமாற்றக் குளறுபடிகளால் உயிரியல் ரீதியில் பாலினம் ஐந்து வகை.
இனவிருத்திக்கு முழுமையான பெண், முழுமையான ஆண். இவற்றுக்கு இடையில் அரை ஆண் – அரவாணி. பெண்பாலுக்கும் அரவாணிக்கும் இடைப்பட்டவர் திருநங்கை. ஆண்பாலுக்கும் அரவாணிக்கும் இடையில் அரவான். இன விருத்திக் குறைபாடு கொண்டோரில் – ஆண்மை அற்றவர், தாய்மை அற்றவர் என்ற உட்பிரிவும் இருக்கின்றதே. ஆனாலும் உடலியல் ரீதியில் இருபால் என்ற பேதம் மட்டுமே பிரதானம்.
இலக்கணத்தில் வந்தான்-போனாள் என்கிற மாதிரி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பாலினத்திற்கு வினை விகுதிகள் தனியே கிடையாது. உடலியங்கியல் ரீதியில் ஒருவருக்கு கையில் ஆறு விரல் முளைத்தால், அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஆண்டவன் செய்த குற்றம். இயற்கையின் மரபணுக் கோளாறு. கையே இல்லாமல் சூம்பிப் பிறப்பதும் உண்டு. அது டி.என்.ஏ. செய்த குற்றம்.
ஆரோக்கியமான இனவிருத்திக்கு ஆண்-பெண் இருபாலரும் திருமண உறவுகளில் சட்டபூர்வமாக இணைகின்றனர். இதற்கு உடன்படாதவர்கள் தவறு அல்லது குற்றம் செய்பவர்களே. என்றாலும் ஏதோ ஒரு வகை உடற்குறை கொண்டவர்கள் மாதிரி வாழ்வதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஓரினச் சேர்க்கை அவர்தம் வாழ்வு உரிமை என்பது அபத்தம். அது ஏனைய பாலினத்தவர்களையும் ஏன், சமுதாயத்தையே பாலியல் வியாதிகளுக்கு ஆட்படுத்தும்.
இன்றைய சமூகத்தில் கட்டுப்பாட்டுடன் கூடிய கூட்டுக் குடும்பங்கள் என்பது இல்லை. இன்றைக்ககு, கணவன் – மனைவி இருவரும் கூடி வாழ்வதே கூட்டுக் குடும்பம் (“ஜாயின்ட் ஃபேமிலி’) என்ற அளவில் வந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத்துறை அலுவலகங்களிலும், திரைத்துறையிலும் “விடுதலைக் காதல்’ ஒரு பக்கம் கசிந்து உருகி நடக்கிறது. அதாவது விவாகரத்து.
தகாத பழக்க வழக்கங்கள் கொண்ட பெற்றோரின் பண்புகள் அவரவர் எச்சத்தால் காணப்படும். முன்பெல்லாம்,குழந்தைகளின் தாய்அல்லது தந்தை இவர்களில் யாராவது ஒருவரின் பெற்றோராவது அந்தக் குடும்பத்தில் உடன் இருப்பார்கள். பேரன், பேத்தியைப் பராமரிப்பதில் தாத்தா – பாட்டியின் பங்கு குறைந்தபட்சம் 25 சதவீதமாவது இருக்கும். பெற்றோரின் பங்களிப்பு 75 சதம்.
குடும்பச் சூழலில் வளரும் குழந்தை, அனாதை இல்லத்தில் வளர்க்கப்படும் ஒரு “ஆரோக்கியமான’ குழந்தையைவிட நல்ல வளர்ச்சி காண்கிறது. தவழ்தல், அமர்தல், நடை பயிலுதல், இறுக்கிப் பிடித்தல், புலனறிவு, பேச்சு, மொழித்திறன், சமூகவயம் ஆகிய எட்டு நிலைகளில் வளர்ச்சிக் கட்டங்கள் உள்ளன. பேராசிரியர் டாக்டர் எச்.சி. தியோடர் தொகுத்த “ஒரு குழந்தையின் வாழ்வில் முதல் 365 நாள்கள்’ என்ற ஜெர்மன் ஆய்வு காட்டும் உண்மை இது.
தமிழ் சினிமாவில், “ஓடிப் போய் கல்யாணம் தான் பண்ணிக்கிடலாம்’ என்று ஒரு சாரார். “கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப் போகலாம்’ என்று இன்னொரு சாரார். அதிலும் “பிள்ளை குட்டி பெத்துக் கிட்டு ஓடிப் போகலாமா’ என்று வேறு ஒரு கும்பல். “ஓடிப் போய் பிள்ளை குட்டி பெத்துக்கலாமா’ என்று மற்றொரு கும்பல்.
இவர்கள் ஓடிப் போவது எங்கே? எங்கு இருந்து? பூகோள ரீதியியல், அயலூர், அண்டை மாநிலம் அல்லது அயல்நாட்டிற்கு ஓடுவதாகக் கொள்வோம். ஓட நினைப்பது வளர்த்துவிட்ட வீட்டை விட்டுத்தான். பெற்றோர், சுற்றத்தார், உற்றார் உறவுமுறைகளை விட்டுத்தான்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பேரன் பேத்திகளுக்கு இங்கு வந்து நம்மூர் தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது வண்டலூருக்கு அழைத்து வந்த உணர்வே ஏற்படும். இப்படி எதிர்காலக் குழந்தைகளுக்கும் மனநிலை பாதிப்பு உண்டாகும்.
காம ரசம் சொட்டச் சொட்ட “காதல் பத்திக்கிச்சு’ என்று சினிமாவில் பாட்டு எழுதுகிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை காதல் காட்சிகளில் நடிக்க வைக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதற்காக எதையெதையோ காட்டுவதில் உடந்தை ஆக இருந்தவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். தங்கள் பிள்ளைகளின் காதல் விவகாரத்தில் மட்டும் இவர்கள் வாலில் தீப்பற்றிக் கொள்கிறதே. ஊரார் வீட்டுப் பிள்ளைகளின் பிஞ்சு மனங்களில் நஞ்சு விதைக்கப்படுமே என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
திரைப்படக் காதல் திருமணங்கள் போல் சமுதாயத்திலும் அரங்கேறி ஆயிற்று. விவாதங்களும் சூடேறி வருகின்றன. இதில் பெரும்பாலோர் கலப்புத் திருமணத்தையும், உடல் உறுப்புத் திருமணத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
அது மட்டும் அல்ல, பொதுவான காதல் திருமணம் பற்றி எத்தனையோ வழக்குகள் நடக்கின்றன. “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே’ என்று சொன்ன பாரதியாரை சகட்டுமேனிக்கு வக்காலத்துக்கு இழுக்கிறார்கள். அவரது வாக்குமூலத்தினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
“காதலினால் கலவி உண்டு. அதனால் கவலை தீரும்’ என்று சொன்னது இளைஞர்களுக்கு அல்ல. தொடர்ந்து, “காதலினால் கவிதை உண்டாகும்’ என்கிறார். கானம் உண்டாகும். சிற்பம் முதலான கலைகள் உண்டாகும். ஆதலினால் காதல் செய்வீர் என்கிறார் பாரதி. அதுவே தலைமை இன்பம் என்பார். அவர் சொன்ன காதல் தளம் வேறு.
அடுத்த வரிகளில் “காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்; கவலைபோ(கு)ம், அதனாலே மரணம் பொய்யாம்’ என்றார். அவர் காதலிக்கச் சொன்னவர்கள் பட்டியலைப் பாருங்கள். ஆதிசக்தி, அயன்வாணி, திருமகள். அத்துடன் விட்டாரா என்றால் இல்லை. இறுதி வரிகளில், “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர். கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்’ என்கிறார். திருமணத்திற்குப் பிறகு துணையாளிடம் உண்டாகும் காதல் பற்றிய உயர்ந்த தளம். இப்படிக் கூறிய கவிஞனை நம்மவர்கள் கொச்சையாக மேற்கோள் காட்டுவானேன்?
“காதலிலே விடுதலை என்று ஆங்கோர் கொள்கை, கடுகி வளர்ந்திடும் என்பார் யூரோப்பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்; பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே, பிரியம் வந்தால் கலந்து, அன்பு பிரிந்துவிட்டால் வேதனை ஒன்று இல்லாதே பிரிந்து சென்று வேறு ஒருவன்தனைக் கூட வேண்டும் என்பார்’. இதனைப் ‘பொய்மைக் காதல்’ என்கிறார் மகாகவி.
விலங்குகள் திருமணம் செய்து கொள்வதும் இல்லை. தம் குழந்தைகளுக்குத் திருமணம் நடத்தி வைப்பதும் இல்லை. சகோதர உறவுகளுக்குள்கூட அவைகளாகவே இனவிருத்தி செய்து கொள்ளும். அதனால் உண்டாகும் உடற்குறை பற்றியோ, நோய்த் திறம் குறித்தோ கவலை இல்லை.
ஆணும் பெண்ணும் அற்ற இடை இனத்தவர் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் வெற்றுப் பாலியல் தொடர்புகள் குறித்து ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் ஆண்-ஆண், பெண்-பெண் ஓரினச் சேர்க்கை என்பது விபரீதம்தான். மேல் நாடுகளில் இத்தகைய ஓரினச் சேர்கையாளர்கள், இரட்டைத் தன்மையாளர் மற்றும் இடைபட்ட பாலியல் சார்ந்தோர் சேர்த்து ஆராய்ச்சி நடக்கிறது. மொழி, மத, இனச் சிறுபான்மைச் சமுதாயம் மாதிரி “லெஸ்பியன்-கே-பைசெக்சுவல்-டரான்ஸ்ஜெண்டர்’ சமுதாயம். ஆங்கிலச் சுருக்கம்-“எல்.ஜி.பி.டி.’
அமெரிக்காவில் இந்த சமுதாயத்தினர் 90 லட்சம் பேர். அந்நாட்டு ஜனத்தொகையில் கிட்டத்தட்ட 3.2 சதவீதம். ஆனால் ஓரினச் சேர்க்கையாளர்கள் 190 லட்சமாம். அதிலும் 256 லட்சம் பேருக்கு அத்தகைய ஓரின உறவில் விருப்பம் அதிகமாம்.
இதையே இன்று இந்தியாவிலும் பிரதி எடுத்துக்கொண்டு வீதிகளில் இறங்கி விட்டோம். ஓரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமாம். கேட்டால் வளர்ந்த நாடுகளான “அமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்’ என்று கோஷம் எழுப்புகிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற “கலாசார’ முன்னேற்றம் அடைந்த நாடுகளில் இந்த ஆண்-பெண் இடை இனம் பெருகி வருகிறதாம். அதிலும் அமெரிக்க வயோதிகர்களில் பத்தில் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளராம். இதற்காக அவர்கள் வெட்கப்படவில்லை.
திருமணத்தைப் பொருத்தவரை, பெற்றோர் விரும்பி நடத்தி வைக்கும் சம்பிரதாயத் திருமணங்கள், விரும்பாமலே நடக்கும் சச்சரவுத் திருமணங்கள், பெரியவர்கள் அறியாமலே நடக்கும் கள்ளத் திருமணங்கள் – இப்படி பல ரகம்.
திருமணம் செய்யாமலே கூடி வாழ்வதற்கு இந்தியாவில் சிலர் முதலில் சட்டத்திருத்தம் கேட்டார்கள். இன்றைக்கு சம்பிரதாயமாக திருமணமே செய்ய இயலாதவர்கள் தாங்கள் செய்து வரும் நடத்தைக்கு அரசு அங்கீகாரம் கோருகிறார்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சியுற்ற மேல் நாடுகள் இந்திய வாழ்வுமுறையை நோக்கி மாறிவரும் இந்தத் தருணத்தில் நாம் அந்த நாட்டு அவலத்திற்கு டிக்கெட் எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி இருக்கிறது கதை?
By நெல்லை சு. முத்து
நன்றி: தினமணி 04 ஜனவரி 2014