அல்-குர்ஆன் கூறும் பூமி தட்டையானதா…?!
உலகம் உருண்டை என்று சொல்வதற்குத்தான் அல் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது.
விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.
எனினும் குர்ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்புவது வழக்கம்.
அதன் அடிப்படையில் சில வசனங்களை மேற்கோள் காட்டி பூமி தட்டை என குர்-ஆன் கூறுவதாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் தான் இவை:
அல்பகரா(2) வசனம்:22 ,
அர்-ராத்(13) வசனம்:3 ,
அல்-ஹிஜ்ர்(15) வசனம்:19 ,
தாஹா(20) வசனம்:53 ,
அல்-ஸூக்ருஃப்(43) வசனம்:10 ,
காஃப்(50) வசனம்:7 ,
அத்தாரியாத்(51) வசனம்:48 ,
அர்-ரஹ்மான்(55) வசனம்10 ,
நூஹ்(71) வசனம்:19 ,
அந்நபவு(78) வசனம்:6;
அந்நாஸிஆத்(79) வசனம்:30;
அல்-இன்ஷிகாக்(84) வசனம்:3 .
குர்-ஆனில் மேற்கண்ட வசனங்களில் பூமி குறித்து கூறும்போது பூமியை விரிப்பாக அமைத்தாகவே வருகிறது. இவ்வசனங்கள் அறிவியலுக்கு முரண்படுகிறதா? ஏன் அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான்.
முதலாவதாக,பொதுவாக ஏனைய வசனங்கள் போலவே இவ்வசனங்களிலும் அல்லாஹ் தன் வல்லமையே குறிப்பிடுவதற்காகவும் அவனின் அத்தாட்சிக்காவும் இவ்வாக்கிய அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏனெனில் மேற்கண்ட வசனங்களில்…
உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)
அவனே பூமியை விரித்து…-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (13:3)
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். (15:19)
இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். (51:48)
மேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.
அடுத்து பயன்பாட்டிற்காக.,
மனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்
இன்னும், பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். (55:10)
“(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (43:10)
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (71:19)
“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (71:20)
”…அவனே பூமியை விரித்தான்.” (79:30)
அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். (79:31)
ஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது. இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.
ஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.
ஆக, விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
– Gulam
உலகம் உருண்டை என்று சொல்வதற்குத்தான் அல் குர்ஆனில் ஆதாரம் இருக்கிறது.
ஒரு மிகப்பெரிய கோளத்தின் மேல் எதையும் விரிக்க முடியாதா என்ன?!
படித்து சிந்திக்க வேண்டிய வசனங்கள் இவை:
37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்! கீழ்திசைகளின் இறைவன்.
55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
70:40 எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
பூமி தட்டை என்று சொல்பவர்களை எல்லாம் கூப்பிட்டு அவர்களை ஒரு மெகா சைஸ் உலக வரைபடைத்தை விரித்து அதில் ஏறி நிற்க வைத்து அவர்களின் கைகளை கிழக்கு நோக்கி ஒன்றையும் மேற்கு நோக்கி ஒன்றையும் விரிக்க வைத்தால், (பூமி தட்டையாக இருந்தால்) ஒரே ஒரு கிழக்கும் ஒரே ஒரு மேற்கும்தான் பொதுவாய் கிடைக்கும்.
ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு கோள வடிவ ‘குளோபில்’ பலர் ஏறி நிற்க வைத்து தங்கள் கைகளை கிழக்கு நோக்கி ஒன்றும் மேற்கு நோக்கி ஒன்றுமாய் விரித்தால், ஒவ்வொருவர் விரிக்கும் திசைகள் பல காட்டும். (a lot of tangents from a sphere is possible). இருவர் நின்றால் இரு கிழக்கும் இரு மேற்கும், பலர் நின்றால் பல கிழக்கும் பல மேற்கும் காட்டும்.
இதிலிருந்து பூமி உருண்டை வடிவம் என இவ்வசனங்களிலிருந்து இவர்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லையா சகோதரரே?
மாறாக, உலகம் தட்டை வடிவத்தினாலானது என்று அல்குர்ஆனில் ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லையே?
– முஹம்மத் ஆஷிக்