உறவுக்கு கைகொடுப்போம்
இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.
தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.
முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்கள் நடந்தாலும், துக்க காரியங்கள் நடந்தாலும் வண்டி கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் சென்ற காலம் உண்டு. ஆனால், இப்போது ஒருவர் காலமாகிவிட்ட தகவல் கிடைத்தால் “ஆர்ஐபி’ (ரெஸ்ட் இன் பீஸ்) என்று குறுந்தகவல் அனுப்புவதைப் பார்க்கிறோம். பிறந்த நாள் விழா குறித்த தகவல் கிடைத்தால் பலர் தேடிப்பிடித்து “பொம்மை’, “பூங்கொத்து’ படங்களை குறுந்தகவல் செய்தியில் இணைத்து வாழ்த்து அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இது தொழில்நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.
உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. இதனால், உறவு, நட்பு வலுவிழந்து விடுகிறது. இது நாளடைவில் தொலைந்தும்விடும்.
தனி மரம் தோப்பாக முடியாது. மனிதனுக்கு உறவுகள் மிகவும் அவசியம். உற்றார், உறவினர்கள் இல்லாமல் வாழ்வு இல்லையே. அப்படிப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் உண்மையானவர்களாக இருந்தால்தானே மனிதனின் வாழ்வு செழுமை பெறும்.
உறவில் வாழும் போது நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியம். நல்லதொரு முன்மாதிரியைக் கொண்டிருக்காததால்தானே இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகளை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.
மேலும், உடன் வாழ்வோர்களின் உறவும் சரிவர இல்லாமல் போவதாலும், நல்ல முன்மாதிரிகள் கிடைக்காமல் இளைஞர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகிறது. இதனால், ஒட்டு மொத்த சமுதாயமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.
இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…!
தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்றுதானே அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’, அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒற்வை பாட்டி’ என்கிறோம். அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்றுதானே உலகம் அழைக்கிறது. அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம். பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம். இவ்வாறுதான் கற்காலத்திலும், அண்மைக் காலங்களிலும் உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.
எனவே, உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்போம். உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்துவோம்.
By எம். சடகோபன்
நன்றி: தினமணி