விதி! மாற்றமா ஏமாற்றமா?
அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை கடவுள் நமக்கு வழங்க வேண்டும் ..
நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,
இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து….
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக…
“உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே….!” என்ற மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.
(நபியே!) நீர் கூறும்; “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.” (அல்குர்ஆன் 3:29)
எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?
அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.
இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல.
ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார், அஃதில்லாமல் தமது வாழ்வாதார தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?
இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான்.
அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ…? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?
ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது
எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 9:115)
முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்.,
ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கவுமே எல்லாம் இறை நாட்டம் எனும் விதி அங்கு அவசியமாகிறது.,
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 57:23)
ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை., ஏனெனில்
“…மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை.” (அல்குர்ஆன் 53:39)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்