தூயோனின் தூதரகம்..!
படைத்தவனை வணங்குவதற்காக
படைப்பினங்கள் ஒன்றுகூடும்
பயிற்சி பாசறை!
அல்லாஹ்வின் பெயர்தனை –
ஐவேளை தினம் கூறி
அனைவரையும் வரவேற்கும்
அருளால் அலங்கரிக்கப்பட்ட
ஆன்மிக ஆபரணம்…
இபாதத்தோடு இணக்கத்தையும்
சலாத்தோடு சகிப்புத்தன்மையும்
மனித மனங்களில்
இறுகக் கட்டும்
இறைவனின் இல்லம்…!
இங்கு,
தீண்டாமையையும்
தீண்டுவோர் இல்லை
மொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க
தம் மௌனத்தால் சாதித்தது
மறை ஓதும் மாளிகை.
ஏற்றத்தாழ்வுகள்
எங்கே? – என
எவரையும்
கேட்க வைக்கும்
இஸ்லாத்தின் அத்தாட்சி.,
ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
பணம் கொண்டவனும்
தினம் உழைப்பவனும்
வாழ்வில் தேரியவனும்
வாழ்வை தேடுபவனும்
ஆகாய விமான ஓட்டியும்
அன்றாட காட்சியும்…
அருகருகே தொழ வைக்கிறது –
தூர தேசத்திலும்…
சகோதரத்துவத்தை எழ செய்கிறது
வணக்கத்தோடு
வாழ்வியல் வெற்றிக்கும்
வழிக்காட்டும்
வசந்தங்களின் கூடாரம்
மார்க்கத்தை முன்னிருத்தி
மற்றவை பிற -என
மனித நல்லெண்ணங்களுக்கு
மாசற்ற வர்ணம் பூசும்
மனிதநேய ஆலயம்
அல்லும் -பகலும்
அனைத்துக்காகவும்
அலைந்து திரியும்
அற்ப மனிதர்களுக்கு
அல்லாஹ்வின் நினைவை
அதிகம் ஊட்டி
அழகிய ஆதாயத்தை
அன்றாடம் தரும்
அருளாளனின் சின்னம்..!
உள்ளே ஏதுமில்லையென்றாலும்
வெளியே வரும்போது
மனது நிறைய
நம்பிக்கையும், நன்மைகளையும்
கொடுக்கும்
தூயோனின் தூதரகம்..!
சமுகத்தில் ஓரு சிலரை
முன்னிலைப்படுத்தும்
அரங்கங்களுக்கு மத்தியில்
ஓர் சமுகத்தையே
கண்ணியப்படுத்தும்
கருணை தளம்…
வல்லோன் சொல் கேட்டு
வாக்களித்ததை நிறைவேற்ற..
விரையும் எவருக்கும்
வரையறையற்ற
இலாபத்தினை மட்டுமே தரும்
வாழ்வியல் வர்த்தக மையம்…