தன்னம்பிக்கை தரும் நீச்சல்
[ ஒவ்வொருவரும் நீச்சல் பழகி இருக்கவேண்டியது அவசியமே! கிராமப்புற பகுதியில் உள்ளவர்கள், அங்கு உள்ள குளம், குட்டையில் குளிக்கும் போது இயற்கையாகவே அவர்களுக்கு நீச்சல் அடிக்கும் பழக்கம் ஏற்படுகின்றது. நகர்ப்புற மக்களுக்கு அதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது இல்லை.
வசதி படைத்தவர்கள் எங்கேயாவது கட்டண நீச்சல் குளத்தில் பணம் கட்டி பழகி கொள்கின்றார்கள், பொதுவாய் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளில், பாதிப்புகளில் எப்படி நம்மை காப்பாற்றி கொள்ள முயலுகின்றமோ, அதேபோல் நீர்நிலைகளில் குளிக்கும்போது, முழ்கும் நிலை ஏற்பட்டால் அவர்களாகவே இரண்டு கைகளையும் முன்புறம் தூக்கி போட்டு, தூக்கி போட்டு நீச்சல் அடிக்க முயலவேண்டும்.
ஆரம்ப கல்வியில் இதையும் ஒரு பாடமாய் கொண்டு கற்பிப்பது பயனை தரும், ஆட்சியாளர்கள், கல்வியார்கள் சிந்திக்க வேண்டும், மனித உயிர் விலை மதிப்பில்லாதது, அதனை ஒவ்வொருவரும் உணர்ந்து தனது பிள்ளைகளுக்கு நீச்சல் கற்பிக்க வேண்டும் .-சைல்ஸ் அகமது]
தன்னம்பிக்கை தரும் நீச்சல்
அவர் மிகப் பெரிய மேதை. பலதும் கற்றறிந்தவர். ஆன்மிக உலகிலும் ஞானி என்று சொல்லத்தக்கவர். அவர் ஒரு நாள் மிகப் பெரிய ஆற்றைக் கடக்க பரிசலில் சென்றார். பரிசலில் பரிசல் ஓட்டுபவன் மட்டும் இருந்தான்.
அந்த மேதை, தனது மேதாவித்தனத்தைக் காட்ட ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார். பரிசல்காரன் அவரைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவனது அக்கறையெல்லாம் சுழன்று செல்லும் பரிசலை அக்கரைக்குக் கொண்டு செல்வதிலேயே இருந்தது.
அந்தப் பெரிய மனிதருக்கு பரிசல்காரன் மீது ஒருவித ஆத்திரமும் அதே நேரத்தில் பச்சாதாபமும் ஏற்பட்டது. வாழ்க்கை முழுவதும் பரிசல் ஓட்டி சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்திக்கொண்டு கொஞ்சம் கூட பொது அறிவில்லாமல் ஆன்மிகத்தைப் பற்றியே சிந்திக்காத இவனுடைய வாழ்க்கையே வீணாகப் போகிறதே என்று உள்ளூர வருந்தவும் செய்தார்.
திடீரென வானிலையில் மாறுதல். கருமேகங்கள் திரண்டு காற்றுடன் மழை பொழிய ஆரம்பித்தது. ஆற்றில் தாறுமாறான நீரோட்டம். பரிசல் வெகுவாக தள்ளாடியது. அப்போதும் பரிசல்காரன் முன்பைவிட கவனமாக பரிசலை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பதிலேயே கவனமாக இருந்தான். பெரியவருக்கு இப்போது பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. தாம் பிழைப்போமா என்ற அச்சம் அவருக்குள் பெருகியது.
திடீரென கடுள்மான காற்று வீசியபோது பயத்தில் தனது இடத்திலிருந்து விலகி பரிசல்காரன் பக்கம் தாவினார். பரிசல் நிலைகுலைந்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. காற்று சூறாவளியானது. ஆற்று நீர் கடல் நீர் போல ஆவேசம் கொண்டு பொங்கி பெருக்கெடுத்து ஓடியது.
சற்று நேரத்தில் பரிசல்காரன் நீந்தி போராடி கரையில் ஏறிக்கொண்டிருந்தான். எல்லாம் கற்ற இந்தப் பெரியவர் அவனைப் பார்த்தவாறே நீரில் மூழ்கிக்கொண்டிருந்தார். காரணம்? இவருக்கு நீச்சல் தெரியாது. எல்லாம் தெரிந்து என்ன பயன்? நீச்சல் தெரியாததால் வாழ்க்கையே போயிற்று!
நமது நாட்டில் நீச்சல் தெரியாததால் அநேகம் பேர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உயிரிழப்புகள்தான் இதில் அதிகம். வாரஇறுதி நாள்கள், விடுமுறை தினங்களில் ஆற்றில், குளத்தில், கடலில் உற்சாகமாக குளிக்கச் சென்று ஆழந்தெரியாமலும் நீச்சல் அறியாமலும் உயிரிழக்கும் சிறார்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அண்மையில்கூட பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் ஆழியாற்றில் 18 வயது கல்லூரி மாணவரும், கோவை மதுக்கரையில் கல்லுக்குழி நீரில் 16 வயது பள்ளி மாணவரும் நீரில் மூழ்கி இறந்தனர். நீச்சல் தெரியாததே இந்த மரணங்களுக்குக் காரணம்.
சென்னை மெரினா கடலில் கடந்த ஓராண்டில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 2012இல் கடலில் மூழ்கி 21 பேர் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 95 சதவீதத்தினர் இளைஞர்கள் என்பது மிகவும் துயரத்தைத் தரக்கூடியது.
இப்படி அகால மரணத்தைச் சந்திக்கும் இளைஞர்களது வாழ்க்கைக் கனவுகள் மட்டுமின்றி அவர்களை பெற்று வளர்த்த பெற்றோர்களின் கனவும் எதிர்காலமும் கூட காற்றில் கரையும் கற்பூரமாகிவிடுகிறதே.
ஆடு, மாடு, நாய் போன்ற வீட்டு பிராணிகளும், யானை, புலி, சிறுத்தை போன்ற காட்டு மிருகங்களும் அநாயாசமாக நீந்துகின்றன. அவைகளுக்கு யாரும் நீந்தக் கற்றுத் தருவதில்லை. இப்படி இருக்கையில் ஆறறிவு படைத்த மனிதன் நீந்தத் தெரியாமல் உயிர் விடுவது எவ்வளவு அபத்தமானது!
இளம் பிராயத்தினருக்கு நீச்சல் கற்றுத்தரப்படவேண்டியது அவசியம். இதை பள்ளிக்கூட அளவிலேயே கட்டாயமாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் விளையாட்டுக்கும் உடற்பயிற்சிக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதாது. நீச்சலையும் கட்டாயமாக்க வேண்டும். ஏனெனில் நீச்சலே மிகச் சிறந்த உடற்பயிற்சி தான். இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
நீச்சலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் வழங்க வேண்டும். நீச்சல் தெரியாத மாணவனே எந்த கல்வி வளாகத்திலும் இல்லை என்ற நிலை ஏற்பட வேண்டும்.
நீச்சல் தெரிந்த ஒருவர் மழை, வெள்ளம் போன்ற ஆபத்துக் காலங்களில், தான் மட்டுமின்றி, தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்ற இயலும். அத்துடன் நீச்சல் பழகும்போதே தன்னம்பிக்கையும் பெருகும். தன்னம்பிக்கை கொண்ட மனித சமுதாயம்தானே இன்றைய தேவை!
By ரா. ராஜசேகர்
தினமணி, டிசம்பர் 27, 2013