முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை!
முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்!
1. “…..முஃமின்களைக் காப்பாற்றுவது நம்மீது கடமை”. (10:103)
2. ”…முஃமின்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான்” (22:38)
3. “….முஃமின்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை”. (30:47)
4. “….தைரியத்தை இழக்காதீர்கள்; கவலைப் படாதீர்கள்! முஃமின்களாய் இருப்பின் நீங்களே மேலோங்குபவர்கள்”. (3:139)
5. “முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாய் ஆக்கியது போல் உங்களில் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிபவர்களை பூமிக்கு ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், அவர்களுக்கென அவன் பொருந்தியுள்ள மார்க்கத்தில் அவர்களை உறுதிப் படுத்துவதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அமைதியானதாய் மாற்றுவதாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் எனக்கு எவரையும் இணை வைக்காமல் எனக்கே அடிபவணிவார்கள். இதன் பின்னர் மாறு செய்வோரே பாவிகள்” (24:55)
6. “அல்லாஹ் வாக்குறுதி மீறவே மாட்டான்” (3:9,194, 13:31, 39:20)
7. “…நீர் எவ்வளவுதான் விரும்பினாலும் மனிதர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்வதாக இல்லை.” (12:103)
8. “அவர்களில் அநேகர் இணை வைப்பவர்களாய் இருக்கிற நிலையில் அல்லாமல் அல்லாஹ்வை நம்புபவர்களாய் இல்லை”. (12:106)
இந்த குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் அவற்றின் சத்தும் சாரமும் உள்ளத்தில் இறங்கும் வரை படித்து விளங்குகிறவர்கள், அல்லாஹ் முஸ்லிம்களைக் காப்பாற்றுவது, பாதுகாப்பது, உதவி செய்வது இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை என்பது உறுதியாகத் தெரிவதையும் காரணம் இன்றைய முஸ்லிம்களில் மிகமிகப் பெரும்பான்மையினர் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாகவும், ஈமான் கொண்டவர்களும் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை என்பதையும் உறுதியாக உணர முடியும்.
முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை என்று அல்லாஹ் அல்குர்ஆன் 12:106-ல் கூறுகிறான் அல்லவா? அதைத் தெளிவாக விளங்க முற்படுவோம். முதலில் இணை என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். 10:18, 39:3 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கிடையில் தரகர்களாக இறந்தவர்களையோ, உயிரோடிருப்பவர்களையோ புகுத்துவதுதான் கொடிய இணை வைப்பாகும் என்பதை உணர முடியும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதராக இருந்ததாலும், வஹியின் தொடர்புடனும், அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் இருந்ததாலும், குர்ஆனை நடைமுறையில் வாழ்ந்து காட்டும் பொறுப்பிலிருந்ததாலும் அவர்களின் நடைமுறையான சுன்னாவை எடுத்து நடப்பது மார்க்கத்திற்கு உட்பட்டதாகும். (பார்க்க : 2:213, 16:44,64, 5:48, 53:2,3,4) மேலும் அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பின்பற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தும் எண்ணற்ற வசனங்களைப் பார்க்க முடிகிறது.
அதே சமயம் அல்லாஹ்வின் இறுதித் தூதருக்குப் பின்னால் எவரையும், பாதுகாவலர்களாகவோ, வழி காட்டியாகவோ, நேர்வழி நடப்பவராகவோ நம்பிப் பின்பற்றுவதை அல்லாஹ் 2:186, 7:3, 33:36, 18:102-106, 59:7 இறைவாக்குகளில் கடுமையாகக் கண்டிக்கிறான்.
இந்த அளவு அல்லாஹ் தெளிவுபடுத்தியும் இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி ஏதாவதொரு வகையில் கலீஃபா என்றோ, நபி தோழர் என்றோ, தாபியி என்றோ, இமாம் என்றோ, அவுலியா என்றோ, சாதாத் என்றோ, அகாபிரீன் என்றோ, மவ்லவி என்றோ, மவ்லானா என்றோ, அரபி கற்ற மேதை என்றோ மனிதர்களில் இறந்தவர்களையோ, உயிரோடிருப்பவர்களையோ தங்களின் வழிகாட்டிகளாக ஏற்று நடக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ் 12:106 இறைவாக்கில் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களே!
ஒ! ஷிர்க் செய்பவர்களே, தவ்பா செய்து மீளாவிட்டால் 32:13, 11:118,119 இறை வாக்குகள் கூறுவது போல் நாளை நரகை நிரப்புபவர்களே. இந்த ஒட்டுமொத்த மவ்லவிகளும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதாலும், அதனால் இயற்கையாக அவர்களிடம் காணப்படும் ஆலிம் என்ற பெருமையாலும் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் நரகை நோக்கி நடை போடுகிறவர் களாக இருக்கிறார்கள். இந்த 7:146 இறைவாக்கை மீண்டும் மீண்டும் படித்து உணர்வு பெறுங்கள்.
“நியாயமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை எனது கட்டளைகளை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் அனைத்து அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தவறான வழியைக் கண்டால் அதனை (நேர்)வழி என எடுத்துக் கொள்வார்கள்.” (அல்குர்ஆன் 7:146)
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஒரே காரணத்தால் 36:21 இறைவாக்குக் கூறுவது போல் நேர்வழி தவறி கோணல் வழிகளில் செல்வதால் தங்களை மவ்லவி, ஆலிம், அல்லாமா, மவ்லானா, ஹழரத் எனப் பெத்தப் பெயர்களால் பெருமை கொள்ளும் இந்த மவ்லவிகளின் இழி நிலையை எல்லாம் வல்ல இறைவன் இந்த அளவு பட்டவர்த்தனமாக, நேரடியாகக் கூறி இருந்தும் கண்ணை மூடிக்கொண்டு, அறுபடும் இடத்திற்குத் திமுதிமுவென கசாப்புக் கடைகாரர் பின்னால் செல்லும் செம்மறி ஆட்டு மந்தைப் போல் செல்லும் பெருவாரி முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நிலையில் இருக்கிறார்களா? இல்லையா? 12:106 இறைவாக்கில் அல்லாஹ் கூறுவது உண்மையா? இல்லையா?
எப்படி இந்துக்கள் கற்சிலைகளை இறைவனுக்கும் தங்களுக்கும் இடையில் புகுத்துகிறார்களோ; கிறித்தவர்கள் ஈசா அலைஹிஸ்ஸலாம், மதகுருமார்கள், துறவிகள் போன்றோரை புகுத்துகிறார்களோ; அது போல் முஸ்லிம்களில் ஒரு சாரார் இறந்து போனவர்களை அவுலியாக்கள் என்ற பெயரால் இறைவனுக்கும் தங்களுக்கும் இடையில் தரகர்களாகப் புகுத்துகிறார்கள்,
பிரிதொரு சாரார் முன் சென்றோரை இமாம்கள் என்ற பெயரால் புகுத்துகிறார்கள், பிரிதொரு சாரார் ஸலஃபிகள் என்ற பெயரால் ஆக முன் சென்றோரைப் புகுத்துகிறார்கள், சமீபத்தில் தோன்றிய ததஜ வினர் பீ.ஜை. என்ற தனி மனிதரை இடைத்தரகராகப் புகுத்துகிறார்கள்.
ஆக மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், ஹழரத்மார்கள் போன்ற பெத்தப் பெயரால் பெருமை பேசும் மதகுருமார்களை அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இடைத் தரகர்களாகப் புகுத்தி அவர்களின் வழிகெட்ட கோணல் போதனைகளை தெய்வ வாக்காகக் கொண்டு செயல்படுவதன் மூலம் 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் நரகை நிரப்ப அதை நோக்கி நடைபோடுகிறார்கள். விரல் விட்டு எண்ணும் அளவில் மிகமிகச் சொற்பமானவர்களே, இம்மவ்லவிகளின் 7:146 இறைவாக்குக் கூறும் இழிநிலையை விளங்கி அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, 3:103 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடி பணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படியும், இறுதித் தூதரின் நடைமுறைப்படி யும் (சுன்னா) செயல்படுகின்றனர்.
இந்தச் சொற்பமானவர்களால் இவ்வுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், பெருங்கோண்ட மக்களை நேர்வழிக்கு அல்லாஹ் வின் நாட்டமில்லாமல் கொண்டு வர முடியாவிட்டாலும், நிரந்தரமான மறு உலக வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றுப் பெரும் வாழ்வு வாழ்வார்கள், சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
இந்திய முஸ்லிம்கள் இறைவனின் இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைகள்படி நடக்காமல், மத வியாபாரிகளான மவ்லவிகளையும், அரசியல் வியாபாரிகளான முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் கண்மூடிப் பின்பற்றியதால் பெருங்கேடாக இந்தியா, பாகிஸ்தான் எனப் பிளவுபட்டது. அதனால் ஏற்பட்ட பெருங்கலவரங்களில் பல்லாயிரம் முஸ்லிம்கள் உயிர் இழந்ததோடு, பல்லாயிரம் முஸ்லிம் பெண்கள் கற்பிழந்ததோடு, பல்லாயிரம் கோடி பொருள் இழப்பும் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட வேதனைகள் இன்னும் தொடர்கிறது. முஸ்லிம்கள் பாகிஸ்தானிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. இந்தியாவிலும் நிம்மதியாக வாழ முடியவில்லை. பெரும் துன்பம் துயரங்களுடன் இந்தியாவில் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்நாளைக் கழிக்கின்றனர்.
அன்று நாட்டுப் பிரிவினை முஸ்லிம்களின் எதிர் காலத்தை மிகவும் பாதிக்கும் என்பதை அபுல்கலாம் ஆசாத் போன்ற வெகு சிலரே உணர்ந்து கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் சொல் அம்பலம் ஏறவில்லை. ஈமானை இழந்து இன உணர்வுக்கு ஆளாகி இம்மத வியாபாரிகள், அரசியல் வியாபாரிகள் பின்னால் கச்சையைக் கட்டிக் கொண்டு நின்றவர்கள் தெற்கே கன்யாகுமரியிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை பெரும் திரளாகக் கைகோர்த்து நின்றனர். அதன் தீய விளைவுகளை இன்றளவும் அனுபவித்து வருகின்றனர்.
இவை போதாதென்று அதே மதவியாபாரி களும், அரசியல் வியாபாரிகளும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் ஈமானுடைய உணர்வை இழந்து இன உணர்வுக்கு ஆளாகி காவி வெறியர்களுடன் மல்லுக்கு நின்று வெறுப்பை வளர்த்து, காவி வெறியினரை ஆட்சியில் அமர்த்தி பாபர் மஸ்ஜிதை இடிபட வைத்தார்கள். அன்று ஹுதைபியா உடன் படிக்கையை முன்மாதிரியாகக் காட்டி பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் விட்டுக்கொடுங்கள் என்று கூறிய ஓரிருவரின் கூற்று அம்பலம் ஏறவில்லை. அப்படிக் கூறியவர்களை ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என அவதூறு பரப்பி 49:14 இறைவாக்குக் கூறுவது போல் ஈமான் உள்ளத்தில் நுழையாத பெயர் தாங்கி முஸ்லம்களுக்கு கொம்பு சீவி விட்டு இன வெறி கொள்ள வைத்தனர். இங்கும் மதவியாபாரிகள், அரசியல் வியாபாரிகளின் தவறான வழிகாட்ட லையே இன உணர்வு மிக்கப் பெருங்கொண்ட முஸ்லிம்கள் சரியென ஏற்றுப் பின்பற்றினர்.
பாபர் மஸ்ஜிதுக்காக போராடுபவர்களில் எத்தனைப் பேர் ஐங்காலத் தொழுகைகளை அதன் அதன் நேரத்தில் பேணித் தொழுபவர்கள் என்று கணக்கெடுத்தால் வேதனையே மிஞ்சும். 19:59 இறைவாக்கில் அல்லாஹ் “”அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள், மன இச்சையைப் பின்பற்றினார் கள், அவர்கள் கேட்டையேச் சந்திப்பார்கள்” என்று முன்னறிவிப்புச் செய்துள்ளது இன்று நடக்கிறது.
அதனால் பாமர் மஸ்ஜித் இடத்தின் பெறுமதியை விட ஆயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்தையும், பல்லாயிரம் முஸ்லிம்களின் உயிரையும், பெண்களின் கற்பையும் இழந்ததுடன், நூற்றுக் கணக்கானோரின் இளமையை வெஞ்சிறையில் பாழாக்கவும், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊன முற்று வாடவும் வழி வகை செய்துள்ளனர். அதே சமயம் முஸ்லிம் சமூகத்தின் இப்படிப்பட்ட பேரிழப்புக்கு மாறாக இம்மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை வைத்து மறுமையை நட்டப்படுத்திக் கொண்டாலும், இவ்வுலகில் பெருத்த லாபத்தையே அடைந்துள்ளனர். அல்லாஹ் அல்குர்ஆன் 2:200 இறைவாக் கில் கூறுவது போல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறைவாகவே கொடுத்து விட்டான்.
ஆனால் அவர்களை நம்பி இன உணர்வுக்கு ஆட்பட்டு அவர்களின் பின்னால் கண்மூடிச் சென்ற வர்கள் பேரிழப்பிற்கும், பெரு நட்டத்திற்கும், ஆளாகி தங்கள் கைகளால் தேடிக் கொண்டதையே (பார்க்க: 3:182, 4:62, 8:51, 30:41, 42:30) அனுபவித்து வருகின்றனர். இம்மையில் மட்டுமல்ல நாளை மறுமையில் இதை விட மிகமிகக் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. (பார்க்க: 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29,43:36-45)
அல்குர்ஆன் 6:153 வசனம் கூறுவது போல் ஒரே நேர்வழி நடந்து இவ்வுலகிலும் மன அமைதியுடனும், சந்தோசத்துடனும் வாழ்ந்து நாளை மறுமையிலும் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கலோக பெருவாழ்வு வாழ விரும்பும் மக்களே, எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையில் எந்த மவ்லவியையும், ஆலிமையும், இமாமையும், ஸலஃபியையும் இடத்தரகராகப் புகுத்தாமல், நேரடியாக குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடித்து அவற்றின் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருக்க முன் வாருங்கள்.
அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்துப் பிரியாமல் ஓரணியில் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபடாதவரை முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எதிர்காலமில்லை.
– இப்னு ஹத்தாது
source: http://annajaath.com/?p=6772