பெண் வீட்டார் செலவு – ஒரு பார்வை
எதுவெல்லாம் சமூகத்தில் வழமையாக செய்யப்பட்டு அல்லது நம்பப்பட்டு வருகிறதோ அவையெல்லாம் சமூகத்தினால் ஒரு வகையில் நிர்பந்திக்கப்படும் காரியங்கள் என புரியலாம்.
திருமண நாளன்று முழு செலவையும் பெண் வீட்டார் ஏற்றெடுப்பதும் அவர்கள் சார்பிலேயே விருந்து வைப்பதும் கூட சமூகத்தில் வழமையாகிப்போன ஒன்று.
இது வழமையாகி போய் விட்டமையால் தான், அவர்களாக விரும்பி அதை செய்தால் கூட நாம் அதை கண்டிக்கிறோம், அங்கீகரிக்க முடியாது என்கிறோம்.
திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது, இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த தேதியில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மேற்கொண்டு எதையும் பேசாமல் விட்டு விட்டார்கள் என்றால், திருமணத்திற்கென மண்டபம் பிடிப்பது, மணமக்கள் ஆடை அலங்காரங்கள், இன்னபிற ஆடம்பர செலவுகளை செய்வது, திருமண நாளன்று வைக்கப்படும் விருந்து என அனைத்துமே இயற்கையாகவே (default ஆகவே) மணமகள் குடும்பத்தாரின் தலையில் தான் சுமத்தப்படும்.
அதாவது, எதையுமே பேசவில்லையென்றால் பெண் வீட்டார் தான் செலவு செய்ய வேண்டும் என்றும், ஆண் வீட்டார் செலவு செய்வார்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மாத்திரம் தான் அது ஆண் வீட்டார் கடமை என்றும் ஆகிறது என்று சொன்னால், இங்கே பெண் வீட்டார் மீது சுமத்தப்படும் விருந்து, செலவுகள் என்பது நம் சமூகம் அவர்கள் மீது சுமத்திய கட்டாயக்கடமை என்று புரிகிறது.
தம்மீது சுமத்தப்படும் இந்த கட்டாய சுமையை பலரும் சிரமப்பட்டு சுமப்பார்கள், சிலரோ அதை விரும்பி சுமப்பார்கள். அவர்கள் சிரமப்பட்டு செய்தால் அவ்வாறு சிரமப்பட வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையென்று ஆகும், அவர்கள் விரும்பி செய்தால், அது கடமை என்பதால் விரும்பி செய்கிறார்கள் என்று தான் ஆகும்.
சமூக அந்தஸ்து, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்கிற பார்வை, சமுதாயத்தின் உந்துதல் என பல காரிணிகளால் தூண்டப்படும் பெண்ணின் தகப்பனார் தம்மீது கடமையாகிப்போன காரியத்தை கூட விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தான் வருவார்.
பெண்ணின் தகப்பனார் செலவு செய்வது சமூகத்தில் பெருமைமிக்க காரியமாக இன்றும் கருதப்படுவதால் தான் அதை அவர் விரும்பி செய்கிறாரே தவிர, பெண் வீட்டு விருந்து என்பது ஒரு கேவலம் என்கிற கண்ணோட்டத்திற்கு இந்த சமூகம் மாறி விடும் போது அந்த கேவலமான நிலையையும் தாண்டி எந்த பெண்ணின் தந்தையும் விரும்பி கொடுக்க முன்வர மாட்டார். அப்போது அவரது விருப்பத்தை விட சமூகம் தம்மை கேவலமாக பார்க்குமே என்கிற அச்சம் தான் அவருக்கு பிரதானமாக தெரியும்.
ஆக, விரும்பி தான் கொடுக்கிறார்கள் என்கிற வாதம், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகத் தான் இருக்குமேயொழிய, இதில் நடுநிலை பார்வை சற்றும் இல்லை.
நாம் ஏற்கனவே சொன்னது போல, இயற்கையான அமைப்பு என்பது ஆண் வீட்டார் விருந்து என்றும், குறிப்பிட்டுப்பேசினால் மட்டும் தான் அது பெண் வீட்டாரின் செலவு என்றும் என்றைக்கு இந்த சமூகத்தில் மாறுதல் பெறுகிறதோ அப்போது, பெண்ணின் தகப்பனார், இதை நான் விரும்பி செய்கிறேன் என்று சொல்லட்டும், நாம் ஏற்போம் !!
சமூகம் மாற்றம் காணாதவரை விரும்பி கொடுத்தலும் மறைமுக வரதட்சணை தான் என்பதே உண்மை !!
அடுத்ததாக, இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
மணமகன் தான் திருமண விருந்து வைக்க வேண்டும் என்கிற அடிப்படையை சிந்திக்கையில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அவ்வாறான விருந்துக்கு தான் மக்கள் அழைக்கப்படவும் செய்தனர்.
திருமணம் என்பது ஐந்து நிமிடத்தில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம். அதை செய்வதற்கு என நபி காலத்தில் எவரையும் எந்த சஹாபியும் அழைத்ததாக சான்றுகள் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த திருமணங்களில் கூட, நிக்காஹ் செய்வதற்கு என எந்த தோழரையும் அழைத்து உடன் வைத்திருக்கவில்லை.
அவர்கள் அழைத்ததெல்லாம், அழைக்க சொன்னதெல்லாம் திருமணத்தை ஒட்டிய வலிமாவுக்கு தான்.
ஆக, திருமணத்தை நடத்தி, அதில் பெண் வீட்டார் சார்பில் விருந்தும் இடுவார்கள் எனில், அது ஒரு சமூக தீமை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான நாளில் மக்களுக்கு அழைப்பு கொடுப்பதற்கு கூட மார்க்கத்தில் ஆதாரமில்லை !
sourve: http://nashidahmed.blogspot.in/2013/12/blog-post_15.html