இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்
வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.
நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.
அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் – யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு – வல்லுறவு கொண்டு விட்டால் – மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் – வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ – அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு – வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.
மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.
மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது – பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் – பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் – பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் – மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை.
மேற்கத்திய உலகம் – சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது – பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் – அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே – பெண்விடுதலை என்கிறார்கள். ‘கலை’ மற்றும் ‘கலாச்சாரம்’ என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.
அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.
உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1
990 ஆம் ஆண்டில் – அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு – 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் ‘தீவிரமாக’ வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.
அமெரிக்காவில் இஸ்லாமிய ‘ஹிஜாப்’ முறை
நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும்.
மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.
இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.
இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் – ஐரோப்பாவாக இருக்கட்டும் – அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ – அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் – கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.
-டாக்டர். ஜாகிர் நாயக்