எதிரிகள் கொடுமை இழைக்கும்போது
பொறுமைகாக்க அறிவுரை வழங்கிய
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கப்பாப் பின் அல்-அரத்து ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: ‘(இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைத்த கொடுமை குறித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாங்கள் முறையிட்டோம். அப்பொழுது அவர்கள், கஅபாவின் நிழலில், தங்களது சால்வையைத் தலையணையாக வைத்துக்கொண்டு (ஓய்வாக) சாய்ந்திருந்தார்கள்.
நாங்கள் சொன்னோம்: ‘எங்களுக்காக (அல்லாஹ்விடம்) தாங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?’
அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னிருந்த சமுதாயத்தினரின் நிலைமை எவ்வாறு இருந்ததெனில், அவர்களில் ஒருவர் (இறைவன் மீது விசுவாசம் கொண்டதற்காக) பிடிக்கப்படுவார். அவருக்காகப் பூமியில் குழி தோண்டப்பட்டு அதில் அவர் நிறுத்தப்படுவார். பிறகு ரம்பம் தருவிக்கப்பட்டு அதை அவரது தலையில் வைத்து அறுத்து இரண்டு துண்டுகளாகப் பிளக்கப்படுவார். மேலும் (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளைக் கொண்டு ஒருவரது மேனி கோதப்பட்டு அவரது சதையின் உட்பகுதி பிய்க்கப்பட்டு எலும்புவரை அது சென்றடையும்! அப்படியெல்லாம் செய்வது அவரை அவரது இறைமார்க்கத்தில் இருந்து பிறழச் செய்திடாது.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் இந்த மார்க்கத்தை நிச்சயம் வெற்றிபெறச் செய்வான். எந்த அளவுக்கெனில், ஒரு பயணி (யமன் தேசத்து) ஸன்ஆவில் இருந்து ஹளரமௌத் என்ற ஊர் வரை நடைபயணமாகச் செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது அவரது ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறுயாருக்கும் அவர் அஞ்ச வேண்டியதிருக்காது! ஆயினும் நீங்கள்தாம் (பொறுமை காக்காமல்) அவசரப்படுகிறீர்கள்!’ (நூல்: புகாரி)
மற்றோர் அறிவிப்பில்: அப்பொழுது அவர்கள் சால்வையைத் தலைக்கு வைத்து (ஓய்வாகச்) சாய்ந்திருந்தார்கள். இறைவனுக்கு இணைவைத்து வணங்குவோரிடம் இருந்து கடும் துன்பங்களை நாங்கள் சந்தித்து வந்தோம் என உள்ளது.
இஸ்லாமியப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் மீது நிராகரிப்பாளர்கள் இழைத்த அநீதிகளும் கொடுமைகளும் அளவிட முடியாதவை! அவை தாங்கிக்கொள்ள முடியாத அளவு கடுமையாகவும் கொடுமையாகவும் இருந்தன! அதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தோழர்கள் பலதடவைகள் முறையிட்டு, அதற்கு நபியவர்கள் ஆறுதல் அளித்த நிகழ்ச்சிகள் பல! அவற்றுள் ஒன்றுதான் இது.
கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முறையிட்டபொழுது, முந்தைய காலத்தில் இறைவிசுவாசிகள் சந்தித்த – இதனினும் கொடுமையான சில துன்பங்களை எடுத்துக் கூறித் தம் தோழர்களின் உள்ளங்களைத் தேற்றுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!
அந்தோ! எத்துணை பயங்கரம்! கேட்டாலே குலைநடுங்க வைக்கக்கூடிய கொடுமைகள்! பூமியில் குழிகள் தோண்டி அவற்றில் அந்த இறைவிசுவாசிகளை நிறுத்தி ரம்பத்தால் இருதுண்டுகளாக அறுத்து வதை செய்திருக்கிறார்கள். இதேபோல் இரும்புச் சீப்புகளைப் பழுக்கக் காய்ச்சி அவற்றை அவர்களின் மேனியில் பாய்ச்சி சதை வேறு எலும்பு வேறாய்ப் பிய்த்துப் பிராண்டியிருக்கிறார்கள்! அந்த மக்களின் உள்ளங்களிலிருந்து ஈமான் எனும் விசுவாசத்தைப் பறித்திட வேண்டும் எனும் வெறியுடன் இவ்வாறெல்லாம் கொடுமை செய்தார்கள்! ஆயினும் அவர்கள் எதிர்பார்த்தது நிறைவேறியதா என்றால் அதுதான் இல்லை! அந்த மக்கள் தம்முடைய கொள்கையில் எஃகு போன்ற உறுதியுடன் நிலைத்திருந்தார்களே தவிர, எள்ளவும் பின்வாங்கவில்லை!
இவ்வாறு தம் தோழர்களுக்குப் பொறுமையூட்டிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் இந்த மார்க்கத்தை நிச்சயம் வெற்றியடையச் செய்வான்.’ என்று கூறி எதிர் காலத்தில் இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை நல்குவான் என்று முன்னறிவிப்பும் செய்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எத்துணை உறுதியுடன் சொல்கிறார்கள் பாருங்கள்! அதுவும் எந்தச் சூழ்நிலையில்? முஸ்லிம்கள் மிகவும் பலவீனப்பட்டிருந்த – நிராகரிப்பாளர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த சூழ்நிலையில்!
ஆனால் என்னே ஆச்சரியம், பாருங்கள்! எதிரிகள் கடுமையாகத் துன்புறுத்திக் கொண்டிருந்த -அதனை எதிர்க்கவோ தடுத்து நிறுத்தவோ எந்த சக்தியும் இல்லாதிருந்த – ஆதரவற்ற சூழ்நிலையில் நபியவர்கள் முன்னறிவிப்பு செய்ததுபோலவே படிப்படியாக சூழ்நிலைகள் மாற்றமடைந்து எல்லாம் சாதகமாக நடந்தேறின! ஆம்! நபியவர்களும் முஸ்லிம்களும் முன்னெடுத்துச் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரப் பணிக்கு மாபெரும் வெற்றியை அல்லாஹ் அளித்தான்!
‘ஒருபயணி (யமன் தேசத்து) ஸன்ஆவில் இருந்து ஹளரமௌத் என்ற ஊர் வரை நடைபயணமாகச் செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது அவரது ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறு யாருக்கும் அவர் அஞ்ச வேண்டியதிருக்காது!’ என்று நபியவர்கள் கூறினார்களே அதுபோன்று – இஸ்லாம் வெற்றி பெற்று அதன் வழிகாட்டல்கள் அனைத்தும் மக்களின் வாழ்வில் மலர்ந்தபொழுது மக்கள் அச்சமற்ற, அமைதியான சூழ்நிலையைக் கண்டார்கள். அவர்களது வாழ்வில் அது ஒரு வசந்தகாலமாய் மலர்ந்தது! நபிமொழிகளில் சொல்லப்பட்டது போன்று ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது!
இன்றும்கூட, உலகை வழிநடத்திச் செல்லும் அதிகாரம் இஸ்லாத்தின் கையில் கிடைக்கும் காலங்களில் – கிடைக்கும் பகுதிகளில் சட்டம் ஒழுங்கைச் சீராகப் பராமரிப்பதும் மக்களின் வாழ்வில் நீதியையும் அமைதியையும் நிம்மதியையும் நிலைநாட்டுவதுமே இஸ்லாமிய ஆட்சியாளர்களின் – இந்த இஸ்லாமியச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறப்பாகவும் அடையாளமாகவும் திகழ்வதைக் காணலாம்!
ஆக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த இதுபோன்ற முன்னறிவிப்புகள் யாவும் அவர்கள் உண்மையான இறைத்தூதர்தாம், ரஸூல்தாம் என்பதற்கு அல்லாஹ் வழங்கிய தெளிவான சான்றுகளாகத் திகழ்கின்றன.
இந்நபிமொழி – எதிரிகளால் இழைக்கப்படும் இதுபோன்ற துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வது கடமை என்பதற்கு ஆதாரமாகும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது மெய்யான முதுமொழி ஆகும்!
அல்லாஹ், இவ்வுலகில் பல்வேறு வகையில் விசுவாசிகளைச் சோதிக்கிறான். அவற்றுள் ஒன்றுதான் நிராகரிப்பாளர்கள் மூலம் ஏற்படும் சோதனையும்! அவர்கள் இறைவிசுவாசிகளுடன் கடுமையான பகைமைப் போக்கை மேற்கொண்டு அவர்களைக் கொலை செய்யவும் துணிவார்கள். முற்காலத்து நிராகரிப்பாளர்கள் அன்றைய நபிமார்களையே கொலை செய்யவில்லையா?
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்! இதோ! யூத சமுதாயம், தங்களிடம் வருகை தந்த எத்தனையோ நபிமார்களை மிகவும் மூர்க்கத்தனமாக கொலை செய்துள்ளதே! நபிமார்கள் என்போரின் உயர் அந்தஸ்தை நாமெல்லாம் அறிவோம். அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மக்கள் – மனிதருள் மாணிக்கங்கள், இறை விசுவாசிகள் அனைவரினும் ஏன், இறைவழிப் போராளிகள் – அழைப்பாளர்கள் அனைவரை விடவும் சிறந்தவர்கள். அவர்களுக்கே இத்தகைய எதிர்ப்பும் சோதனைகளும் ஏற்பட்டதுண்டென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
எனவே முஸ்லிம்களுக்கு என்றைக்கும் பொறுமையே மிகமிக அவசியம். துன்பங்களைக் கண்டு துவளவோ பதற்றமடையவோ கூப்பாடு போடவோ கூடாது. மாறாக எஃகு போன்ற உறுதியுடன் இமயம்போல் நிமிர்ந்து நிற்க வேண்டும். இறுதி வெற்றி இறை பக்தர்களுக்கே என்பதில் எள்ளவும் ஐயமில்லை. நிச்சமாக அல்லாஹ்வின் உதவி பொறுமையாளர்களுத்தான்!
துன்பங்களைச் சகித்துக்கொண்டு தொடர்ந்து பொறுமையைக் கடைப்பிடித்தால் – ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் தூரநோக்குடனான திட்டங்கள் தீட்டியும் செயல்பட்டால் இலட்சியத்தை எளிதில் அடையலாம். ஆனால் தலைமையில்லாத அல்லது தலைமைக்குக் கீழ்ப்படியாத- தன்னிச்சையான செயல்பாடுகள் எவ்விதப் பயனும் அளிக்காது. இதேபோல் உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் காரியமாற்றும் சுயநலப் போக்கும் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும்.
சத்தியத்திற்கு எதிராகச் செயல்படுவோர் எத்துணை உறுதியான கட்டுக்கோப்புடன் திட்டங்கள் தீட்டிச் செயல்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள்! ஆனால் அதற்கு எதிரணியில் என்ன நடக்கிறது? எதனையும் மேலோட்டமாகச் சிந்தித்துச் செயல்படுபவர்கள்தாம் இங்கு அதிகம். எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள். எப்பொழுதும் எல்லா விவகாரங்களிலும் எதிர்மறையான -வெறுப்பான அணுகு முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்! எதிர்மறை அணுகு முறையால் எதையாவது இவர்கள் சாதிக்கிறார்களா என்றால் எதுவும் இல்லை! மட்டுமல்ல, சிலபொழுது இப்படிப்பட்டவர்கள் செய்யும் சிறுதவறு கூட அவர்களுடைய எல்லா முயற்சிகளையும் பாழாக்கி விடுகிறது! (அவர்கள் ஏதாவது உருப்படியான உழைப்புகள் – முயற்சிகள் செய்திருந்தால்!)
ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் வெற்றியையும் இலட்சியமாகக் கொண்ட இறைவிசுவாசிகள் உறுதியான பொறுமையை மேற்கொள்வார்கள். நிதானமாகச் சிந்தித்து தூரநோக்குடனான திட்டங்கள் தீட்டிச் செயல்படுவார்கள். இவ்வாறு செயல்படுவதன் மூலம் எதிரிகளின் சதித் திட்டங்களை வீழ்த்துவதுடன் அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் நீர்த்துப் போகவும் செய்திடலாம்!
நல்லோர்களுக்கு – நன்னெறியின் பக்கம் மக்களை அழைப்பவர்களுக்கு கேடு வரவேண்டும். எப்படியாவது அவர்களை வீழ்திட வேண்டும் என்பதுதான் எதிரிகளின் எதிர்பார்ப்பு! அதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்காகவே சூழ்ச்சி வலைகள் பின்னுகிறார்கள்! ஆத்திர மூட்டும் வகையிலான காரியங்களை செய்கிறார்கள். உணர்ச்சிகளைக் காயப்படுத்தும் சொற்கணைகளை சுழற்றிச் சுழற்றி வீசுகிறார்கள். இறைவிசுவாசிகள் கோபப்பட வேண்டும். அவர்களிடையே உணர்ச்சிக் கொந்தழிப்பு ஏற்பட வேண்டுமென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்!
தூரநோக்குடன் சிந்தித்தால் எதிரிகளின் இத்தகைய விஷமத்தனமான சூழ்ச்சியினை எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்! ஆனால் அவசர புத்தியுடன் அணுகினால்- பேரும் புகழும் சில அரசியல் ஆதாயமும் கிடைத்தால்போதும் என்கிற சுயநலக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டால் இதயம் குருடாகி விடும்! சிந்தனை செயலிழந்து விடும். அப்படிப்பட்டவர்களுக்கு எதுவும் புலப்படாது.,
மட்டுமல்ல எடுத்ததற்கெல்லாம் ஆத்திரப்பட்டு அவசர கோலத்தில் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியாது. அதன் எதிர்விளைவையும் கவனிக்க வேண்டும். அவசர கோலத்தில் ஏதாவது செய்துவிட்டால் அதைச் சாக்காகக்கொண்டு நம்மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டும் திடீர் தாக்குதல் தொடுத்தும் நம்மை வென்றெடுக்கத் தயாராக இருகிறார்கள் எதிரிகள்! நம் சமுதாய மக்களின் சொத்துகளுக்குப் பெருத்த நாசத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்! இதற்கு இடமளிக்காத வகையில் செயல்படுவதே புத்திசாலித்தனம்!
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முற்காலத்தில் வாழ்ந்த இறைவிசுவாசிகள் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளைச் சுட்டிக்காட்டி ஆறுதலூட்டிப் பொறுமை காக்குமாறு போதிக்கிறார்கள் என்றால் அதன் பொருள், தீமைகளைக் கண்டு மௌனமாக இருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் – பேசாமல் எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, தீயோரின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும்தான். ஆனால் மேலே சொன்னது போன்று – அதற்குரிய முறையில் அது அமைந்திட வேண்டும். நிதானமும் பொறுமையும் நீடித்த முயற்சியும் உழைப்பும் மிகமிகத் தேவை! வெற்றிக்கான பாதை தூரமானது. லட்சியப் பயணம் கரடுமுரடானது. அதிலும் சோதனைப்படலம் இப்பொழுதுதான் தொடக்கம் என்றிருந்தால் மிகுந்த பொறுமை அவசியத்திலும் அவசியம் என்பதை மறந்திடலாகாது!
அறிவிப்பாளர் அறிமுகம் – கப்பாப் பின் அல் – அரத்து ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்
கப்பாப் பின் அல்-அரத்து ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முதன்முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முன்னணியினரில் குறிப்பிடத்தக்கவர்கள். ஆம்! ஆறாவது நபராக அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவர்கள் இணைந்தார்கள்! அன்று முதல் எதிரிகளின் சீண்டல்களின் படலம் அவர்களையும் விட்டுவைக்கவில்லை! பத்று உள்ளிட்ட எல்லா யுத்தங்களிலும் கலந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றார்கள்! பின்னாட்களில் கடுமையாக நோய்வாய்ப்பட்டு கூஃபா நகரில் குடியேறிய கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கேயே ஹிஜ்ரி 37 ம் ஆண்டு மரணம் அடைந்தார்கள்! அன்னாரின் மூலம் 32 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!
ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும் ஈமானை இழக்காதீர்கள்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய ஓர் அடியாருக்கு நலன் நாடினால் அவனுக்கு (அவனுடைய பாவங்களின்) தண்டனையை இவ்வுலகிலேயே விரைவாகக் கொடுத்து விடுகிறான். மேலும் அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குத் தீங்கை நாடினால் அவனது பாவத்திற்குரிய தண்டனையை (உலகில்) அவனை விட்டும் தடுத்துக் கொள்கிறான். அந்தப் பாவத்தைச் சுமந்துகொண்டே மறுமை நாளினை திடுமென அவனை சந்திப்பதற்காக வேண்டி!
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கூலியை அதிகப்படுத்துவது சோதனையின் அதிகரிப்புடன் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தினரை நேசிக்கிறான் எனில் அவர்களைச் சோதனைக்கு உள்ளாக்குகிறான். எவர் அதில் மனதிருப்தி கொள்கிறாரோ அவருக்கு (இறைவனின்) திருப்பொருத்தம் உண்டு. எவர் அதிருப்தி அடைகிறாரோ அவருக்கு (இறைவனின்) அதிருப்தியே உண்டு. (நூல்: திர்மிதி, இது ஹஸன் தரத்திலானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)
source: http://islamkural.com/