மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள்.
உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ஏற்படும் மச்சங்கள் மற்றும் நிறமாற் றங்களை வைத்தே நோயாளியின் நோயை மிக எளிதாக கணிக்க முடியும்.
ஆம்! பல மச்சங்கள் நோயின் அறிகுறியே! மச்சங்களை கிள்ளியெடுத்து மைக்ராஸ் கோப்பின் அடியில் வைத்து `எபிடொமிஸ்’ என்றும், `மெலனோசைட்’ என்றும் கூறி புற்றுநோயாகவும் இருக்கலாம் என்று ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பயமுறுத்துவது உண்டு! மச்சங்கள் உருவாவது பல சமயங்களில் உடல் உறுப்புகளின் நோயை வெளிக்காட்டும் இயற்கையின் அபாய அறிவிப்பே ஆகும்.
படத்தில் உள்ள 1-ம்புள்ளி பெருங்குடல் சக்தி நாளத்தின் கடைசி புள்ளியாகும். இந்த இடத்தில் மச்சம், மரு உள்ளவர்களை பார்த்து உங்களுக்கு சைனஸ், மலச்சிக்கல் உள்ளதா? என கேட்டுப் பாருங்கள். ஆம் என அதிசயித்துப் போவார்கள். கண்ணின் அருகிலுள்ள மச்சம் சிறுநீர்த்தாரையில் நோயிருப்பதை சுட்டிக் காட்டும்.
நுரையீரல் சக்தி ரேகையின் ஆரம்பப் புள்ளியில் மச்சமோ, நிறமாற்றமோ கொண்டவர்களுக்கு (இவர்களுக்கு விரலால் அழுத்தினால் வலிக்கும்) ஆஸ்துமா இருப்பது கண்கூடு. நடுமார்பில் மச்சமோ, தோலில் சிவப்பு நிறபடை போன்றோ காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.
கல்லீரல் சக்தி ஓட்டத்தின் கடைசிப் புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு நாட்பட்ட வைரஸ் தாக்குதல், சிரோசிஸ் போன்றவை இருக்க சந்தர்ப்பம் உண்டு. அதற்கு நேர் கீழே பித்தப் பையின் 21-வது புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு `ஸ்கேன்’ பார்க்காமலேயே பித்தப்பையில் கற்கள் உருவாகி வருவதையும், இயக்க குறைவையும் கூறிவிடலாம்.
சிறிது கீழேயுள்ள கல்லீரலின் 13-வது புள்ளியிலுள்ள மச்சம் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோயை நமக்கு பறைசாற்றுகிறது. பக்கவாட்டில் உள்ள பித்தப் பையின் 24-வது புள்ளியின் மச்சம் சிறுநீரக சக்திரேகையின் தடையை நமக்கு உணர்த்துகிறது. வயிற்றின் தொப்புளுக்கும், மார்புக்கும் இடைப்பட்ட 14-வது புள்ளியில் காணப்படும் மச்சம் இதயநோயின் அறிகுறியாகும்.
(எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மச்சக்காரர்) அதற்கு கீழே இரண்டு அங்குல இடைவெளியில் மச்சமிருப்பவர்களுக்கு வயிற்று உபாதைகளான அஜீரணம், வாயு, அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. தொப்புளுக்கு இரண்டு அங்குலங்கள் இடைவெளியில் பக்கவாட்டில் உள்ள வயிற்று சக்திநாள 25-வது புள்ளிகளின் மச்சமானது பெருங்குடல் நோய்களை அறிவிக்கும் மணியோசையாகும்.
தொப்புளுக்கு நேர் கீழே (மச்சம் இருப்பின்) முக்குழி வெப்பப்பாதையில் ஏற்பட்ட குறைபாட்டையும், சிறுகுடல் குறைபாட்டையும், சிறு நீர்ப்பையின் செயலிழப்பையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும். உடலின் பின்பகுதியில் தோளின் மேடான பகுதியில் பித்தபையின் 21-வது புள்ளியில் காணப்படும் மச்சம் தைராய்டு சுரப்பியின் நோயையும், பெண்களுக்கான சமனற்ற ஹார்மோன் இயக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.
முதுகிலுள்ள சிறுநீர்ப்பைக்கான சக்தி நாளங்களிலுள்ள புள்ளிகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். மகாபாரதப் போரில் பீஷ்மாச்சாரியாரின் இறப்பை தவிர்க்க இப்புள்ளிகளே தூண்டி விடப்பட்டது. அக்குபங்சரின் அப்போதைய பெயர் `சுகிசிகிட்சா’ இதை எளிமைப்படுத்தவே அம்புப் படுக்கை என வர்ணிக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள அகுபஞ்சர் பல்கலைக் கழகத்தில் நாங்கள் சூட்டிய பீஷ்மர் பாயிண்ட்ஸ் என்ற பெயர் இன்றும் இப்புள்ளிகளுக்கு நிலைத்திருக்கிறது. பீஷ்மரை தெரியாத ஐரோப்பிய மாணவர்களும் இப்பெயரை உச்சரிக்கின்றனர்.
கழுத்து எலும்புக்கு கீழே 1 அங்குலம் பக்கவாட்டிலுள்ள 11-வது புள்ளியின் மச்சம் காணப்பட்ட ஒரு நட்சத்திர ஓட்டலின் வரவேற்பாளரிடம் தங்களுக்கு மூட்டுவலி பிரச்சினை உள்ளதா என விசாரிக்க அவரோ ஆச்சரியத்துடன் தமக்கு 7 ஆண்டுகளாக ஆர்த்ரைடிஸ், மூட்டுக்கு மூட்டு வீக்கம் வலியெடுப்பதாகவும், ஸ்டீராய்டு, மருந்து உட்கொண்டு வருவதாகவும் ஒப்புக்கொண்டு உங்களுக்கு ஜோசியம் தெரியுமா என வியந்தார்.
அதற்கு நேர்கீழே 13-வது புள்ளியில் காணப்படும் மச்சம் நுரையீரலின் சக்தி குறைவை காட்டுகிறது. அதற்கு கீழுள்ள மச்சங்கள் முறையே இதயஉறை, இதயம், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், வயிறு, முக்குழி வெப்பம், சிறு நீரகம், பெருங்குடல், சிறுகுடல்,சிறுநீர்ப்பை போன்ற உறுப்புக்களின் `காலக்கண்ணாடி’ ஆகும்.
இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், சம்பந்தப்பட்ட புள்ளிகளின் உட்புறம் சம்பந்தப்பட்ட உறுப்புகள் அமைந்திருப்பதாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெறும் கண்களால் கண்டுணரப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்த இந்திய-சீன பாரம்பரிய விஞ்ஞானத்தை டிவைன் மெடிசன் என்றால் அது மிகையாகாது.
பக்த கோடிகள் காலகாலமாக நேர்த்திக் கடனாக தேர் இழுப்பது இப்புள்ளிகளை தூண்டிவிடத்தான் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? நோய்க்குறியீடான இந்த மச்சங்கள் நிலையானவைகளா? அல்ல. அந்நோயின் தீவிரம் குறைந்த பின்பு நாளடைவில் மறைந்து விடுகிறது.`சாமுத்ரிகா லட்சணம்’ என்ற நூலிலும் இதை சார்ந்தே மச்சங்களின் பலன்கள் கணித்து சொல்லப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் அடையாளத்திற்காக எழுதப்பட்ட மச்சங்கள், தழும்புகளை போல் அல்லாது நாளடைவில் மறைந்து போவதும் உண்டுதானே? காது மடலில் ஏற்படும் சிறு மச்சங்கள் மற்றும் நிறமாற்றங்களை கூர்ந்து ஆராய்ந்தால் உடல் நோய்களை துள்ளியமாக கணிக்க இயலும்.
கடந்த ஆண்டு ஒரு திருமண விழாவில் என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபல சர்ஜனுடன் அமர்ந்திருந்தபோது எதேச்சையாக அவரது காதில் உணவுக் குழலுக்கான புள்ளியில் காணப்பட்ட மச்சத்தை கவனித்து தங்களுக்கு உணவுக்குழல் நோயுள்ளதா என விசாரித்தபோது, மிகவும் ஆச்சரியத்துடன் ஆமாம் என ஒப்புக் கொண்டார்.
கடந்த 6 வருடங்களாக ஹியாட்டஸ் ஹெர்னியாவால் அவதிப்படுவதாகவும் அவ்வப்போது பல்வேறு மாத்திரைகளால் கட்டுப்படுத்தி வருவதாகவும் ஒப்புக்கொண்டார். நாங்கள் எக்ஸ்-ரே, ஸ்கேன், எண்டோஸ்கோபி என பல படிகளாக கடந்தே இந்நோயை கண்டுபிடிப்போம். தாங்களோ வெறும் கண்ணகளால் கேள்வியேதும் கேட்காமலேயே கண்டுபிடித்து விட்டீர்களே என்றார்.
ஆம்! நாங்கள் பயின்ற இந்த மருத்துவத்தில் நோயை கண்டு பிடித்தல் என்பதும் மிக எளிதானது. அதனால்தானோ என்னவோ தங்களை போன்ற வல்லுனர்கள் இதை உதாசீனப்படுத்துகிறீர்கள் என்றபோது இக்கருத்தை ஒப்புக்கொண்டு, “ஆமாம், இவ்வளவு எளிதாக டயோக்னைஸ் பண்ணுகிறீர்களே. உங்கள் வைத்திய முறையும் எளிதானதா?” என வினவினார்.
நான் அவரது வலக்கையை பிடித்து உள்ளங்கையில் உணவுக் குழலை பிரதிபலிக்கும் புள்ளியில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். `ஆ’வென கையை இழுத்துக் கொண்டார். வலியுள்ள அந்த இடம் உங்கள் நோயை பிரதிபலிக்கிறது. அதே இடத்தை தினமும் காலை, மாலை சாப்பிடுவதற்கு அரைமணி முன் (அவரது பாணி) 3 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்திவாருங்கள். உங்களது நாட்பட்ட நோய் குணமாகும் என விவரித்தேன்.
அவரோ “என்ன சைக்காலஜியா?” என பெரிதாக சிரித்தார். “அல்ல இது ரெஃலக்ஸாலஜி’ இரண்டுவாரம் சிகிச்சைக்கு பிறகு எனக்கு போன் செய்யுங்கள்” என்று விசிட்டிங் கார்டை கொடுத்தேன். சரியாக ஒன்பதாவது நாள், அவரது போன், ஆச்சரியத்துடன் நன்றி தெரிவித்தும், தனது உபாதைகள் 80 சதவீதம் நீங்கியுள்ளதாகவும், தமது ஊரில் நடைபெற உள்ள ஒரு மருத்துவ கருத்தரங்கிற்கு என்னை பேச வருமாறும் அழைத்தார்.
நான் அவரிடம் சரி வருகிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. நீங்கள் உங்களது நோய் நீங்கிய உண்மையை மேடையிலேயே ஒத்துக்கொள்ள வேண்டும் என்றேன். எஸ்.டி.டி.யில் 1 நிமிடம் மவுனம். பின்பு ஒருவாறு தயங்கி சரி என்றார். அதன் பின்பு இன்றைய தேதி வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. உண்மையை ஒத்துக்கொள்வதில் உள்ள தயக்கம் நியாயமற்றது.
கண்களை பக்கவாட்டில் மறைத்துக் கொண்டு கரடுமுரடான பாதையில் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு நல்ல சாலைகள் கண்களுக்கு தெரிவது இல்லை அல்லவா? மனிதநேய தத்துவத்தை அனைத்து துறை மருத்துவர்களும் மதித்து செயலாற்றினால் நம் சமுதாயம் ஆரோக்கியமடையும் அல்லவா? நம் உடலிலுள்ள இயற்கையான சுய சார்பு நிலை ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை காப்பாற்றுகிறது.