சோதனைகளில் சாதனை இதுவே நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போதனை
இன்றைய அவசர கால கட்டத்தில் உலகில் உள்ள அனைவராலும் விரும்பப்படும் ஒரே கருப்பொருள் வெற்றி.
ஏனோ தெரியவில்லை வெற்றி பெற்றவன் தான் மனிதன் என்றெல்லாம் பெசுபவருமுண்டு.
ஆனால், இதை அடைவதற்கு முயற்சி செய்யும் அனைவராலும் இதை பெற முடிவதில்லை.
காரணம் இதை அடைவதற்கு அதன் விலையை யாரும் முழுமையாக கொடுப்பதில்லை.
இன்னும் சிலர் அதன் விலை என்ன்ன என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
வெற்றியின் விலை என்ன? அதை எங்கே எப்படி எவ்வளவு எப்போது கொடுக்க வேண்டும் என்பதை முழுமையாக தெளிவாக தெரிந்து கொடுத்து உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 99 சதவிகித மக்களால் அறியப்பட்ட ஒரு மாமனிதரின் வாழ்க்கையும் நடைமுறை பழக்கமும் இன்றும் உலகம் முழுவதும் ஆராயப்பட்டும் அமல்படுத்தப்பட்டும் வருகிறது. அந்த மாமனிதர்தான் தியாகச்செம்மல் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அம்மனிதப்புனிதரின் குறிக்கோள், அவர் எதிர்பார்த்த வெற்றி இறையன்பு அதற்காக அவர் கொடுத்த விலைகள் ஏராளம்.
உண்மையை எடுத்துரைத்தபோது பெற்றோரால் துரத்தப்பட்டார்.அந்த உண்மைக்காக தான் குடும்பத்தையே விலையாக கொடுத்தார்கள்.
மூட பழக்கவழக்கங்களை ஒழிக்க நாடியபோது மக்களால் துரத்தப்பட்டார். அப்புரட்சிக்காக தன் சமூக மக்களை விலையாகத்தந்தார்.
தன் பணியைத் தொடர்ந்ததால் கயவர்களால் நெருப்பில் போடப்பட்டபோது தான் இன்னுயிரையும் விலையாக தந்திடத்துணிந்தார்.
இப்படி தன் உயிர், பொருள், ஆவி, மனைவி, மக்கள், சொந்தபந்தம், பிறந்த மண்ணையும் தன் வெற்றியின் இலட்சியமான இறை பொருத்தத்திற்கு விலையாக கொடுத்தார். வெற்றியையும் அடைந்தார்கள்.
அந்த வெற்றி நாயகரின் தியாக வரலாற்றின் இரத்தின சுருக்கம் இதுதான். உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்ததின் விளைவால் ஏற்பட்ட எல்லா சோதனைகளையும் இன்முகத்தோடு சகித்து சாதனை படைத்த அவருக்கு பல்லாண்டு கழித்து தவமிருந்து பெற்றெடுத்த பாலகனையும் ,ஈன்றெடுத்த தாயையும் மனித சஞ்சாரமற்ற பாலைவனக்காட்டில் விடு என்ற இறைக்கட்டளை பிறந்தபோது சட்டென அதை நிறைவேற்றினார்கள். அந்த தாயும் சேயும் செய்த தியாகத்தின் பிரதிபலன் அந்த பாலைவனம் தீனின் சோலைவனமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது இன்றும்.
பாசப்பிணைப்பில் வளர்ந்த அந்த பாலகனை படைத்தவனுக்கு அறுத்து பலியிடு என்ற இறைகட்டளை வந்த போது மனைவி மகனின் ஒத்துழைப்போடு அதை நிறைவேற்ற முற்படும்போது இடையே ஏற்பட்ட தடைகளை (ஷைத்தான்கள்) தவிடுபொடியாக்கி தகர்த்தெறிந்து பாலகனின் பிஞ்சுக் கழுத்தில் கத்தியை முழு பலத்துடன் அழுத்தி அறுக்க முற்பட்டபோது (இன்ன ஹாதா லஹுவல் பலாவுள் முபீன். வ ப{f}தைனாஹு பி திப்ஹின் அழீம்) இப்ராஹீமே இது தங்களுக்கு வந்த தெளிவான ஒரு சோதனையாகும். (அதை சாதனையாக்கிவிட்டீர்கள்). அந்த மகனுக்கு பகரமாக இந்த ஆட்டை பலி கொடுங்கள் என்ற திருவசனம் இறங்கியது .
இந்த தியாகத்தீபங்கள் சுடர் விடும் படிப்பினைகள் பலப்பல.ஏதோ துறைக்கோ, குறிப்பிட்ட சமூகத்திற்கோ அல்ல மாறாக முழு மனித சமூகத்திற்கும் சேர்த்து கூறும் படிப்பினைகள் இவை.
அவைகளில் வட்டுருக்கமாக சில…
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது.
அதற்காக எதையும் இழக்க தயாராகுவது .
அதற்காக தான் குடும்பத்தை தயாராக்குவது .
தடை கற்களை வெற்றிப்படியாக்குவது.
பொது நலம் ஒன்றையே இலட்சியமாக்குவது.
s.முஹம்மது ஜுபைர் சிராஜி