சுவனத்துத்தடாகம் ஹவ்ளுல் கவ்ஸரின் வர்ணனைகள்
ஹவ்ளுல் கவ்ஸரைப் பற்றி விவரங்கள் ஹதீஸ்களில் நமக்குக் கிடைக்கிறது.
தேனை விட இனிப்பானது. பொதுவாக இயற்கையான தண்ணீர் இனிப்பாக இருக்கவே செய்யாது. இனிக்க வேண்டுமெனில் சீனி சேர்க்க வேண்டும். உப்பு குறைவாக இருக்கிற அல்லது உப்பே இல்லாத தண்ணீரை வேண்டுமானால் இனிப்பானது சுவையானது என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, மற்றபடி எந்தத் தண்ணீரிலும் இனிப்பு இருக்காது.
“(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் “அல்கவ்ஸர்’ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) “அதன்’ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) “அய்லா’ நகர(ம் வரையிலான தூர)த்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை.
ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 416,4609 4255)
நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக்கையானது), மேகமோ, நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும். யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்து சேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது.
அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சம அளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்த) “அம்மானு’க்கும் “அய்லா’வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட மதுரமானது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4608)
ஹவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரின் சுவை தேனை விட இனிமையாக இருக்கும். எனவே கவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரை நாம் உலகில் குடிக்கிற தண்ணீரைப் போன்று நினைத்து விடாமல், கவ்ளுல் கவ்ஸரின் தண்ணீரில் இனிப்பை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான் என்று நம்ப வேண்டும். பாலை விட வெண்மையானது தண்ணீருக்கு எந்த நிறமும் கிடையாது. நிறமாற்றத்திற்கு சரியான எடுத்துக் காட்டு, உதாரணம் சொல்வதாக இருந்தால் அதற்குத் தண்ணீரைத்தான் சொல்வோம். அப்படியெனில் தண்ணீரின் நிறம் என்பது அதில் கலக்கின்ற பொருளின் தன்மையையும் வண்ணத்தையும் பொருத்துத்தான் ஏற்படும். களிமண் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருந்தால் சிவப்பு நிறமாக இருக்கும்.
சர்பத்தைக் கலக்கினால் அதன் கலருக்குத் தகுந்தவாறு மாறிவிடும். டீ தூளை கலந்தால் டீ தூளின் நிறத்துக்கு தண்ணீர் மாறிவிடும். எனவே தண்ணீரில் எதைக் கலக்கிறோமோ அதற்குத் தகுந்த வகையில் தனது நிறத்தைப் பிரதிபலிக்கும். அதேபோன்று எதுவும் கலக்காத தண்ணீருக்கு எந்த நிறமும் கிடையாது. கவ்ளுல் கவ்ஸர் தண்ணீர் கண்ணாடி போன்று இருக்கும். தண்ணீருக்குக் கீழுள்ளவைகளெல்லாம் தெரியும் என நினைத்துவிடக் கூடாது.
ஹவ்ளுல் கவ்ஸரைப் பொருத்தவரை அதன் நிறம் வெண்மையாக இருக்கும். அதுவும் பாலை விடவும் வெண்மையாக வெள்ளை வெளேறென இருக்கும். இன்னும் சில அறிவிப்புகளில் பனிக் கட்டியை விடவும் வெண்மையானது என பதிவு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க: முஸ்லிம் 416)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
(“அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6579)
இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையின் மூலம் பெறப்படுகிற நறுமணங்களிலேயே சிறந்தது கஸ்தூரி மணம்தான். கஸ்தூரியின் மணம் அதிகமான நாட்களுக்கு இருக்கும். உணவும் பானமும் உள்ளத்தை ஈர்க்க வேண்டுமால் நல்ல சுவை மட்டும் இருந்தால் போதாது. மாறாக அதன் நிறமும் விரும்பத் தக்கதாக இருக்க வேண்டும். அதன் மனமும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும். இம்மூன்று அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்றால்தான் அதிகமாக ஈர்க்கும் என்பதால் ஹவ்லுல் கவ்ஸர் நீரில் இம்முன்று அம்சங்களையும் அல்லாஹ் அமைத்துள்ளான். கவ்ஸர் தடாகத்தின் நீளம், ஒரு மாத காலத்தில் எவ்வளவு தூரம் பயணம் செய்வோமோ அவ்வளவு தொலைவு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தியில் ஒரு மாதப் பயணத் தொலைவு என்றுள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு நாளின் பயணத் தொலைவைத் தெரிந்தாக வேண்டும். இன்றைய காலத்தில் ஒரு நாளின் பயணத் தொலைவு என்றால் பல மாதிரி இருக்கிறது. பறக்கிற விமானத்தின் மூலம் பல ஆயிரம் கி. மீட்டரைக் கடக்க முடியும். தரையில் செல்கிற வாகனமாக இருந்தால் ஆயிரம் கி.மீட்டராவது சென்று விடமுடியும். இதை வைத்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. அப்படியெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இதை எப்படி புரிந்து சொன்னார்களோ அந்த அளவின் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்.
ஒரு நாள் பயணம் என்பது, ஒரு மனிதன் தன் கால்களால் நடக்கிற அளவு அல்லது ஒட்டகத்தில் ஏறி பயணம் செய்கிற அளவைத்தான் குறிக்கும். ஏனெனில் நபிகள் நாயகம் காலத்தில் சைக்கிளோ இருசக்கர நான்கு சக்கர வாகனங்களோ பறக்கும் வாகனங்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பயணம் செல்வது என்றால், பயணத்தை ஆரம்பத்ததிலிருந்து நிற்காமல் போய்க் கொண்டே இருப்பது என நினைத்துவிடக் கூடாது.
பயணத்திலேயே அவனது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடுகிற நேரத்தில் சாப்பிட வேண்டும். குடிக்கிற நேரத்தில் குடிக்க வேண்டும். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்க வேண்டும். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும். இவைகளுக்கான நேரத்தை ஒரு நாள் நேரத்தில் கழித்துவிட்டு மீத நேரத்தில் ஒரு மனிதன் எவ்வளவு நேரம் பயணிப்பானோ அவ்வளவு தூரம்தான் ஒரு நாளின் தூரமாகும்.
அன்றைய காலத்தில் ஒரு மனிதனின் ஒரு நாள் பயணத் தொலைவு இன்றை நாளின் மைல் கணக்கின்படி 30 மைல் தூரமாகும். அதாவது ஒரு நாளில் 8 மணி நேரத்தை தூக்கத்திற்கு பயன்படுத்தலாம். இன்னும் 8 மணி நேரத்தை சாப்பாடு, நிழலாடுவது, குடிப்பு வகைக்காக, ஓய்வு போன்றவைகளுக்கு ஒதுக்கலாம். மீதமுள்ள 8 மணி நேரத்தை நடப்பதற்குப் பயன்படுத்துவதுதான் சராசரியான பயணநேரமாகும். இப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 30 மைல் தூரம் ஒரு மனிதனால் நடக்க முடியும் என்பதுதான் ஒரு நாளின் பயணத் தொலைவாகும். இன்றைக்கும் கூட ஒரு மனிதனால் முப்பது மைல் தூரம் நடக்க முடியும்.
ஆக ஒரு நாளின் பயணத் தொலைவு 30 மைல் என்றால், ஒரு மாதத்தின் பயணத் தொலைவு கணக்கின் படி 900 மைல்களாகும். அப்படியெனில் கவ்ளுல் கவ்ஸரின் நீளம், 900 மைல் கொண்டதாகும். நபிகள் நாயகம் அவர்கள் அந்த நீளத்தின் அளவைச் சொன்னதைப் போன்றுதான் அதன் அகலத்தின் அளவையும் குறிப்பிட்டார்கள்.
அதாவது நீளம் எவ்வளவு தூரமோ அதைப் போன்ற அளவு அகலமும் கொண்டதாகும். இவ்வளவு பரப்பளவு கொண்ட நீர் தடாகத்தில் பல கோடிக்கணக்கான, இலட்சக் கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில் பருகுவதற்கு வாய்ப்புகள் இல்லை என எவராலும் சொல்லவே முடியாது.
அல்லாஹ் போதுமானவன்.
உரை : பி.ஜைனுல் ஆபிதீன் எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்