சீரழியாமல் சீராகு!
[ சூப்பர் ஹிட் பாடல்களில் பத்து பாடல்கள் மனனம் செய்தால் சூப்பர் சொர்க்கம் கிடைக்கும் என்று யாராவது கூறியுள்ளார்களா?
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மூலம் சொத்து சேர்கிறோம் புத்தி கலங்கி போகும் அந்த மறுமைக்காக எதை சேர்த்தோம்?
நம் பிள்ளைகள் சினிமா பாடல்களை மனனமாக பாடினால் அதை பெருமையாக சொல்லி சொல்லி மகிழ்கிறோமே? அதற்கு தோதுவாக டான்ஸ் ஆடினாலோ கேட்கவே வேண்டாம் நாம் அந்தரத்தில் பறப்பது போன்று ஆனந்தமடைகிறோமே? இது கேவலம் இல்லையா?]
அன்பு உள்ளங்களே! இன்று சமூக ஆரோக்கியத்தை கெடுத்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அநேக தீமைகள், தவறுகளாக விளங்கிக் கொள்ளப்படுவதை விட அதுதான் வாழ்வின் அமைதிக்கு காரணம் என்று கருதப்படுகிறது, இந்த சிந்தனை விஷத்தை அருமருந்தாக கருதுவதற்கு சமமானதாகும்.
மலத்தை மணம் கமழும் சந்தனமாகவும், அக்னியை ஆபரணங்களாகவும், உயிர் பறிக்கும் விஷப்பாம்பை வெற்றி மாலையாகவும், கல்லிப்பாலை கசாயமாகவும், உடைந்த கண்ணாடி துண்டுகளை வைரங்களாகவும் ஆக்கிக்கொண்டு வடிகட்டிய முட்டாள்தனத்தோடு வாழ்பவர்களை அறிவாளிகள் என்று சொல்வோமா? அல்லது அறிவிலிகள் என்று சொல்வோமா?
வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணி வெற்றி மிதப்போடு வாழும் பல பேர், மரணம் வருபோதுதான் தனது தோல்வியை உணருகிறார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ
(மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்பாகவே உங்கள் இறைவனின் பக்கம் திரும்பி அவனுக்கு முற்றிலும் வழிபட்டு விடுங்கள்! (அல்குர்ஆன் 39:54)
அல்லாஹ்வின் இந்த கட்டளை நமது வாழ்வை சீர்படுத்த தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது. ஆனால் இதற்கு செவி தாழ்த்துபவர் யார்?
அன்பானவர்களே! சமூகம் இன்று அமைதி இழந்து வாழ காரணம் நமக்குள் உருவாகி விட்ட அதிகமான தீமைகள், இந்த தீமைகள் பல காரணங்களால் உண்டாகலாம் ஆனால் இந்த தீமைகள் அதிகமாக “டி.வி”யின் மூலமே உண்டாகின்றன என்றால் அது மிகையல்ல.
ஒரு காலத்தில் நம் வீடுகள் குர்ஆன் ஓதப்படும் மதரஸாக்களாக தெரிந்தன ஆனால் இன்று இருபத்தி நான்கு மணி நேர சினிமா தியேட்டர்களாக ஆகி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
கலிமா ஓதி தொட்டில் ஆட்டும் காலம் மலை ஏறிப்போய் கேடு கெட்ட சினிமா பாடல்களை பாடி தாலாட்டும் தரம் கெட்ட கலாச்சாரம் அரங்கேறி விட்டது.
இந்த அருள்மறை அன்றைய கற்கால காட்டரபிகளையும் சொர்க்கத்து மலர்களாக மாற்றியது ஆனால் இன்று இந்த டெலிவிஷன் நல்ல குடும்பத்து மலர்களையும் நரக கொள்ளிகளாக மாற்றி விடுகின்றன.
கட்டுக்கோப்போடு வாழும் கண்ணியமான பெண்களை கற்பனை உலகில் சிறகடித்து பறக்க வைத்து கட்டுப்பாட்டை மீறுவதற்கு கற்றுக்கொடுக்கிறது.
குடும்ப குத்து விளக்குகளாகிய தாய்மார்களை கொழுந்து விட்டு எரியும் நரகமாக ஆக்கி குடும்ப நிம்மதியை கரியாக்கி விடுகிறது.
சீரியல்களில் மூழ்கி போனதால் சின்னஞ்சிறிய குழந்தை பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியாமல் நாள் முழுதும் தேடிய செய்தி நம் தாய்மார்களின் உச்சகட்ட பொடுபோக்கை காட்டுகிரதல்லவா?
தொலைக்காட்சியின் முன் குடும்பமே வாய் பிளந்து அமர்ந்திருக்க விருந்தாளியை போல் ஹாயாக உள்ளே நுழைந்த திருடன் அனைத்தையும் அள்ளிச்சென்றதையும் அறியாது அனாச்சாரத்தில் ஐக்கியமாகிப்போன அம்மாமார்களின் அவலத்தை எங்கே சென்று சொல்வது?
இறை பக்தைகளாக வாழ வேண்டியவர்களை நிறை பைத்தியங்களாக மாற்றியது எது? சீர்கெடுக்கும் சீரியல்கள் அல்லவா?
அது மட்டுமா? நமது அன்பு செல்வங்களாகிய பிள்ளைகளை பேடிகளாக, பொருக்கிகளாக, கேடிகளாக, குடிகாரர்களாக, ஆக்கிபொறுப்பற்ற போக்கிரிகளாக சமூகத்தில் உலாவ விட்ட உலக மகா சேவை பெட்டகம் இந்த தொல்லைக்காட்சி பெட்டியல்லவா?
அன்பு உள்ளங்களே! இந்த அவலங்கள் அனைத்தயும் அழித்து குடும்பத்தில் குதூகலத்தையும் சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் சங்கையான பிள்ளைச்செல்வங்களையும் இவ்வுலகில் நமக்கு தந்து மறு உலகிலும் நம் ஈடேற்றத்திற்கு காரணியாக இருப்பது எது தெரியுமா?
அதுதான் அகிலம் சிறக்க வந்த அருள் மறை அல்லாஹ் நமக்களித்த உயர் மறை அல் குர்ஆன் மஜீத்,
உலகில் நாம் பெற்றுள்ள கோடிக்கணக்கான செல்வங்களை விட அற்புத செல்வம் இந்த குர்ஆன்தான். இதை நான் சொல்லவில்லை அன்பர்களே!அகிலங்களை படைத்து இரட்சிக்கும் பேரரசன் அல்லாஹ் சொல்கிறான்.
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இந்த குர்ஆன் வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 10:58)
நல்வழி காட்ட வந்த நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் மொழியை பாருங்கள்!
இந்த ஹதீஸ் சஹீஹ் முஸ்லிமில் வந்துள்ளது:
اقْرَؤوا الْقُرْآنَ , فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا لأَصْحَابِهِ
(முஃமின்களே!) குர்ஆனை ஓதுங்கள்! அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்காக பரிந்து பேசும்.
மற்றொரு நபி மொழியில்:
الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ
குர்ஆனும் நோன்பும் மறுமையில் அடியானுக்காக பரிந்துரை செய்யும். என்று வந்துள்ளது. (நூல்: அஹ்மத்)
அது மட்டுமா?
குர்ஆனை ஓதி அதை பாதுகாத்து அது ஹலாலாக்கியதை ஹலாலாகவும் அது ஹராமாக்கியதை தவிர்ந்து கொண்டும் வாழ்ந்த மனிதனை அல்லாஹ் சுவனத்தில் நுழைய வைப்பது மட்டுமில்லாமல் நரகம் விதியாகிய பத்து மனிதர்களை அவரது பரிந்துரையின் பேரில் சுவனத்திற்கு அழைத்து செல்லும் அனுமதியை அல்லாஹ் வழங்குவான்.என்று அண்ணல் எங்கள் ஆருயிர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள். (நூல்: இப்னு மாஜா, திர்மிதி)
அன்பு தாய்மார்களே! நெஞ்சின் மீது கை வைத்து சொல்லுங்கள்! நம்மில் எத்தனை பேர் இந்த சிபாரிசுக்கு தகுதி பெற்றுள்ளோம்? நம் பிள்ளைகளில் எத்தனை பேரை நம்மை சுவனத்திற்கு அழைத்து செல்லும் தகுதியில் வளர்த்துள்ளோம்?
நம் பிள்ளைகள் சினிமா பாடல்களை மனனமாக பாடினால் அதை பெருமையாக சொல்லி சொல்லி மகிழ்கிறோமே? அதற்கு தோதுவாக டான்ஸ் ஆடினாலோ கேட்கவே வேண்டாம் நாம் அந்தரத்தில் பறப்பது போன்று ஆனந்தமடைகிறோமே? இது கேவலம் இல்லையா?
சூப்பர் ஹிட் பாடல்களில் பத்து பாடல்கள் மனனம் செய்தால் சூப்பர் சொர்க்கம் கிடைக்கும் என்று யாராவது கூறியுள்ளார்களா?
ஆனால் அறிந்து கொள்ளுங்கள்!
அண்ணல் நபியின் அமுத வாக்கு ஒன்று: மறுமையில் குர்ஆன் உடையவரை நோக்கி ஒதுவாயாக! உலகில் நீ அழகு பட ஓதியதை போல இப்போதும் ஓதுவாயாக! எங்கே சென்று ஓதுவதை நீ நிருத்துவாயோ அங்குதான் உனது அந்தஸ்து உள்ளது என்று அல்லாஹ் கூறுவான். (நூல்:திர்மிதி)
இதன் பொருள் என்ன தெரியுமா? பத்து ஆயத் என்றால் பத்து அந்தஸ்து.. நூறு ஆயத் மனனம் செய்தால் நூறு அந்தஸ்து என்று நாம் மனனம் செய்துள்ள குர்ஆன் வசனங்களை கொண்டுதான் நம் பதவிகள் நிர்ணயம் செய்யப்படும்,
அன்பான பெரியார்களே!இந்த சூழ்நிலையில் நமது அந்தஸ்து என்ன?ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
குர்ஆனை கற்று அதன் படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒளிமிக்க கிரீடம் அணிவக்கப்படும் அதன் ஒளி நமது வீட்டுக்குள் சூரியன் வந்தால் எப்படி இருக்குமோ அவ்வாறு பிரகாசிக்கும் என்று பூமான் நபி போதித்தது நம் காதுகளில் ஏன் விழவில்லை?
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை மூலம் சொத்து சேர்கிறோம் புத்தி கலங்கி போகும் அந்த மறுமைக்காக எதை சேர்த்தோம்?
அன்பர்களே! எந்த வீட்டில் அருள் மறை ஓதப்படுமோ அங்கு அல்லாஹ்வின் அமைதி இறங்கும் அருள் மிகும் மலக்குகள் அங்கு கூடி விடுவர் என்பது நபி மொழி,இன்று நம் வீடுகளில் அமைதி உண்டா? இல்லை அருள்தான் உண்டா? ஏன் இல்லை என்றைக்காவது சிந்தித்தோமா?
உயிர் போகும் நேரம் தொலைவில் இல்லை, நம் கையில் எடுக்கும் உணவு வாயை அடையும் முன் மரணம் வந்து விடலாம். ஒரு ஸலாம் கொடுத்து மறு ஸலாம் கொடுக்கும் முன் இறப்பு நம்மை இராய்ஞ்சி சென்று விடலாம்.
மனைவியிடம் தண்ணீர் கேட்டவர் அது வருவதற்குள் மாரடைப்பில் இறந்தார், புதுமண தம்பதிகளை ஏற்றி சென்ற வேன் புளிய மரத்தில் மோதி அதே இடத்தில் அனைவரும் மாண்டனர், என்பன போன்ற செய்திகள் ஊசலாடும் நம் உறுதியற்ற வாழ்வின் இலட்சனத்தையல்லவா சொல்கிறது, அதன் மூலம் பாடம் படிப்பது எப்போது?
அன்பு உள்ளங்களே! சமூகத்தை சீரழித்து நம் அமைதியை உருக்குலைத்து நம் வாழ்வை நிலை குலைய செய்யும் டெலிவிஷன்களை மூட்டைக்கட்டி அவற்றுக்கு மூடு விழா நடத்துவோம், அன்பு அமைதி அருள் ஆனந்தம் அழகிய நடத்தைகளை அள்ளி தரும் அருள் மறை குர்ஆனை தூசி தட்டி எடுத்து தினமும் அதனை ஓதி தூய வழியில் நடை போடுவோம்,
யா அல்லாஹ்!
குர்ஆனின் மூலம் எங்களின் வாழ்வை ஒளி பெறச்செய்!
எங்களின் குணங்களை அழகாக்கி வை!
அதைக்கொண்டு நரக விடுதலையைத் தா!
அந்த மறை மூலம் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச்செய்!
இந்த குர்ஆனை இம்மையிலும் மறுமையிலும் எங்களின் உற்ற தோழனாக்கி வைப்பாயாக!
பிரஹ்மத்திக்க யா அர்ஹமர்ராஹிமீன்! வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
source: http://zubairsiraji.com/?p=764