ஒன்றா, இரண்டா எடுத்துச்சொல்ல!
சில கொலை வழக்குகள். கொள்ளை வழக்குகள். கடத்தல் வழக்கு. உளவு பார்த்ததாகச் சொல்லி ஒரு வழக்கு. பத்தாத குறைக்கு சிறு திருட்டு வழக்குகள். பொதுச் சொத்துகளைச் சேதம் பண்ணியதாகச் சொல்லி ஒரு வழக்கு. சிறை உடைப்பு வழக்கு. இன்னும் எதாவது மிச்சம் இருக்கிறதா? ஆம். ‘ரேப் கேஸ்’ மட்டும் இல்லை. அது மோர்ஸி செய்த புண்ணியம்.
எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்ஸி இப்போது ஜெயிலில் இருக்கிறார். அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாளாகச் சிறை வாசம்தான். போதுமான அளவுக்கு வழக்குகள் போடப்பட்டுவிட்டாலும், ராணுவ அரசாங்கம் இன்னும் மோர்ஸி மீது கலர் கலராக வழக்கு ஜோடித்துப் போட்டுக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கேஸாக கோர்ட்டுக்கு வந்து வாய்தாவில் போகிறது.
உலகிலேயே மிக அதிக பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையானது மோர்ஸியின்மீது எழுதப்பட்டுக் கொண்டிருப்பதுதான் என்று சொல்கிறார்கள். யாரும் படித்துப் பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிக்கப் போவதில்லை. அவ்வாறே அதன் இலக்கிய மதிப்பைக் கணக்கிட்டு மேன் புக்கரோ நோபல் பரிசோ கொடுக்கப் போவதுமில்லை. நடக்க விருப்பது ஒன்றுதான். மோர்ஸிக்கு மரண தண்டனை. வழக்குகள், விசாரணைகள், வாய்தாக்கள் எல்லாமே ஒரு மேல்பூச்சு.
முஹம்மது மோர்ஸி, எகிப்து வரலாற்றில் ஒரு சாதனையாளர். அந்நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே அதிபர். ஜூன் 2012 முதல் ஜூலை 2013 வரையிலான ஒரு வருஷ காலம் அவருக்கு அந்தப் பதவி பாக்கியம் இருந்தது. அதுவே ஜாஸ்தி என்று சொல்லி ராணுவம் ஒரு புரட்சி செய்து அவரைத் தூக்கிக் கடாசிவிட்டது.
மோர்ஸி உலக உத்தமரா, இந்தப் பதவிப் பறிப்பு நியாயமானதா என்பதல்ல விஷயம். ஜனநாயகத்துக்கு எகிப்து ஒரு வருஷ வாழ்க்கை கொடுத்ததே முக்கியம்.
அவருக்கு பாலஸ்தீன் விடுதலை இயக்க மான ஹமாஸுடன் மிக நல்ல சிநேகிதம் இருந்தது. காஸாவில் ஹமாஸ் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி கணக்கு வழக்கில்லாமல் அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். அவ்வண்ணமே லெபனானின் ஹெஸ்புல்லா வுடனும் மோர்ஸிக்கு நல்லுறவு உண்டு. இந்த இரு இயக்கங்களுக்கும் பாலூற்றி வளர்த்தால் பின்னாளில் தமக்கொரு சிக்கல் வரும்போது சகாயமாயிருப்பார்கள் என்பது மோர்ஸியின் கணக்கு.
ஹோஸ்னி முபாரக்கின் பதவி நீக்கத்துக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, அதில் நின்று, வென்று ஆட்சிக்கு வந்தவரானாலும், பதவிக்கு வந்த உடனேயே தனக்கு வானளாவிய அதிகாரங்கள் வழங்கிக்கொண்டவர்.
மோர்ஸியையும் அவரது சகாக்கள் சுமார் நூறு பேரையும் பிடித்து உள்ளே தள்ளியது ராணுவம். விதவிதமான வழக்குகள். அனைத்தும் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா ஆட்களோடு சேர்ந்து மோர்ஸி சிறை உடைப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டார் என்பதுதான் இப்போது வேகமெடுத்திருக்கும் வழக்கின் சாராம்சம்.
இதனைக் காட்டிலும் ஒரு பயங்கரமான வழக்கு பூதம் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது. அது, ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் மோர்ஸி எகிப்திய உளவாளியாகவே வேலை பார்த்தார் என்பது! நிரூபிக்கப்பட்டால், மரணம் தவிர மற்றொன்றில்லை.
பிறக்கவிருக்கும் 2014ல் உலகம் கேள்வியுறவிருக்கும் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு மோர்ஸிக்கு வழங்கப்படுவதாகவே இருக்கும் என்று தெரிகிறது.
-பா ராகவன்,
source:http://tamil.thehindu.com/world