இஸ்லாமிய நாகரிகம் பற்றிய சொல்வெட்டு
இஸ்லாமிய நாகரிகம் (الحضارة الاسلامية)இந்த உலகில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் செழித்தோங்கியதையும், இந்த காலகட்டங்களில் இஸ்லாமிய அரசு வல்லரசாக விளங்கியதையும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். இருளில் மூழ்கியிருந்த ஐரோப்பாவிற்கு அறிவு வெளிச்சத்தை கொடையாக வழங்கிய மாண்பினை திட்டமிட்டு மறைத்து, முஸ்லிம்களின் மீது வெறுப்புணர்வை உமிழ மேற்குலகு எவ்வளவு முயற்சித்தாலும், உண்மைகள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன.
Hewlett-Packard நிறுவனத்தின்(hp) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான கார்லி ஃபியோரினா, 2001-ஆம் ஆண்டு,செப்டம்பர் 26 அன்று அமெரிக்காவிலுள்ள மின்னியபோலிஸ் என்ற இடத்தில் “தொழில்நுட்பம், தொழில் மற்றும் நம் வாழ்க்கை முறை-அடுத்து என்ன”? (Technology, Business and our way of life: What’s Next) என்ற தலைப்பில் ஆற்றிய உரையில், இஸ்லாமிய நாகரிகத்தின் உன்னத நிலையையும் முஸ்லிம்கள் இவ்வுலகிற்கு வழங்கிய ஒப்பற்ற அறிவியல் சேவையையும் நினைவு கூர்ந்தார்.அவர் ஆற்றிய உரையின் சிறுபகுதி இங்கே தரப்பட்டுள்ளது.
“இந்த உலகத்தின் ஒப்பற்ற தலைசிறந்த நாகரிகம் ஒரு காலத்தில் இருந்தது. கண்டங்களையும் கடல்களையும் தாண்டி பரவியிருந்த ஒரு மிகச்சிறந்த அரசை அதனால் உருவாக்க முடிந்தது. பல்வேறு மத நம்பிக்கைக் கொண்ட பல்வேறு இனத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் அதன் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தனர்.அதன் மொழிகளில் ஒன்று, பல நூற்றுக்கணக்கான தேச மக்களை இணைக்கும் சர்வதேச மொழியாக உருவாகியுள்ளது. அதன் இராணுவம் பல நாட்டு மக்களை உள்ளடக்கியதாக இருந்தது.இதற்கு முன் எப்போதும் அறிந்திடாத அமைதியையும் வளர்ச்சியையும் அதன் இராணுவ பாதுகாப்பு அளித்தது. இலத்தீன் அமெரிக்கா முதல் சீனா வரை நெடுகிலும் அதன் வணிகம் பரவியிருந்தது.
அந்த நாகரிகம் புதுப்புது கண்டுபிடிப்புக்களால் வலுவூட்டப்பட்டது. புவிஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்கக்கூடிய வானுயர்ந்த கட்டிடங்களை அதன் கலை வல்லுநர்கள் வடிவமைத்தனர்.கணினி உருவாக அடிப்படையாய் இருந்த அல்-ஜீப்ராவையும் அல்-காரிதத்தையும் அதன் கணித வல்லுநர்கள் உருவாக்கினர். மனித உடலை ஆராய்ந்து, நோய்களுக்கான புதிய மருந்துகளை அதன் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.அதன் வானியல் நிபுணர்கள் அண்டங்களை உற்றுநோக்கி, நட்சத்திரங்களுக்கு பெயரிட்டு, விண்வெளிப் பயணத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் வித்திட்டனர்.
வீரம், அன்பு, அற்புதம் சம்பந்தமாக ஆயிரக்கணக்கான படைப்புகளை அதன் எழுத்தாளர்கள் உருவாக்கினர்.அதன் புலவர்கள், அவர்களுடைய முன்னோர்கள் அன்பைப் பற்றி எழுத பயந்தபோதும், அவர்கள் எழுதினார்கள். பல்வேறு சிந்தனைகளை ஏற்க மற்ற தேசங்கள் பயந்தபோதும், இந்நாகரிகம் அவைகளுக்கு உயிரூட்டம் அளித்தது.
நவீன மேற்கத்திய நாகரிகம் இது போன்ற பண்புகளைக் கொண்டிருந்தாலும், நான் பேசக்கூடிய நாகரிகம் கி.பி. 800 முதல் கி.பி. 1600 வரை, உஸ்மானிய பேரரசையும், பாக்தாத், டமஸ்கஸ், கெய்ரோ போன்ற அரசவைகளையும், சிறப்பு வாய்ந்த சுலைமான் போன்ற ஆட்சியாளர்களையும் உள்ளடக்கிய இஸ்லாமிய உலகமாகும். இந்த மாற்று நாகரிகத்திற்கு நன்றி கடன்பட்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை யென்றாலும், அதன் நன்கொடைகள் நமது பண்பாட்டின் அங்கமாகவே திகழ்கின்றன. அரபு கணித மேதைகளின் பங்களிப்பு இல்லாமல் தற்போதைய தொழில்நுட்ப உலகம் உருவாகியிருக்க முடியாது.
சுலைமான் போன்ற தலைவர்கள்(கலீஃபாக்கள்), நம்முடைய சகிப்புத்தன்மைக்கும், சமூக தலைமைத்துவத்திற்கும் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்.மேலும் சில பாடங்களையும் இவர்மூலம் நாம் அநேகமாய் கற்றுக்கொள்ளலாம். அது வெறுமனே வம்சா வழிமுறைத் தலைமைத்துவமாக இல்லாமல்,தகுதி அடிப்படையிலானதாக இருந்தது.கிறிஸ்தவர்கள்,முஸ்லிம்கள், யூதர்கள் உள்ளடக்கிய பல்வேறு சமுதாய மக்களின் திறமைகள் முழுவதையும் பயன்படுத்திய தலைமையாக அது இருந்தது.
கலாச்சாரத்தையும்,ஸ்திரத்தன்மையையும்,ஒற்றுமையையும்,வீரத்தையும் ஊட்டிவளர்த்த இந்த ஒளிமயமான தலைமைத்துவம், 800 ஆண்டுகள் புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கும், வளர்ச்சிகளுக்கும் வழி வகுத்தது.நம் காலத்தைப் போன்ற இருள் நிறைந்த காலத்தில், இது போன்ற உயர்வை விரும்பும் சமுதாயங்களையும் நிறுவனங்களையும் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும். முன்னெப்போதையும் விட, தலைமைத்துவத்தின் முக்கிய பண்புகளான தைரியத்தின் மீதும் தனிமனித ஒழுக்கத்தின் மீதும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இத்துடன் நம் உரையாடலை ஆரம்பம் செய்வதோடு, தலைமைத்துவத்தை(leadership)பற்றி நாம் எல்லோரும் என்னென்ன கருத்துக்களைக் கொண்டுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்வோம்…………..”
Source:-http://www.hp.com/hpinfo/execteam/speeches/fiorina/minnesota01.html