காதல்… காதல்… காதல்…
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல என்றும்
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு என்றும்,
“அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்” என்றும்,
அதுவும் “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும்
“அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,
“அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்” என்றும்,
அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக- இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும்,
பிறகு வேறொருவரிடமும் காதல் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும்,
மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமோ, மோகமோ, விரகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.
மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப் படுத்தியும் வரப்படுகின்றது.
இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா?
ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா?
பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது…
சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்?
அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா?
அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு, கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம்.
இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்…
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால், இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா?
விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துறவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே, மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?.