தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மனித அறிவு -மனு நீதி
மனிதன் பெற்றுள்ள அறிவு மிகமிக அற்பமானது என்று இறைவாக்கு பனூ இஸ்ராயீல்: 17:85 கூறுகிறது. ஆம்! தன்னை ஈன்றெடுத்த தாயையோ, தந்தையையோ சுயமாக அறிந்து கொள்ள முடியாத, அடுத்த வினாடி தனக்கு என்ன நடக்கும் என்பதையே அறிய முடியாத அற்பமான அறிவைத்தான் மனிதன் பெற்றிருக்கிறான். அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐம் புலன்களும் அற்பமானவையே!
குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கேட்க முடியாத, பார்க்க முடியாத, நுகர முடியாத, தொட்டறிய முடியாத, சுவைக்க முடியாத ஐம்புலன்களைக் கொண்டவனே மனிதன். கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களும் எல்லைக்குட்பட்டவையே.
இப்படிப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு அவை மூலம் பெறும் அறிவைக் கொண்டு அகிலங்களை அளக்க முற்படுவது விவேகமான செயலா? இல்லவே இல்லை! நகைக் கடையில் இருக்கும் 500 கிராம் நிறுக்கும் தராசில் 50000000 டன் நிறுக்க முற்படுவது போன்ற மிகமிக அறிவீனமான செயலே அது!
மனித அறிவைக் கொண்டு மட்டும் அமைக்கப்பட்டச் சட்டங்களே நாடு காடாகி வர வழி வகுக்கின்றன. இன்று நாட்டில் மனிதர்கள் வாழவில்லை. இரண்டு கால் மிருகங்களே பெருத்துக் காணப்படுகின்றன. இல்லை! மிருகங்களைவிட கேடு கெட்ட மிருகங்கள் மனித உருவில் உலா வருகின்றன. ஆம்! இறுதி வாழ்க்கை நெறி நூல் அல் அஃராஃப் : 7:179 இறைவாக்குக் கூறுவது போல் மிருகங்களை விட கேடுகெட்டவர்களே மனிதர்கள் என்ற பெயரில் வாழ்கின்றனர்.
எந்த மிருகமாவது ஓரினப் புணர்ச்சியிலும், வன்புணர்ச்சியிலும் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? தன் பெண் இனத்தைக் கடித்துக் குதறி, இன உறுப்பில் இரும்புத் தடியைச் செலுத்தி இன்பம் கண்ட மிருகம் உண்டா? அப்படியானால் மிருகங்களை விட கேடு கெட்ட நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டு விட்டது என்பதில் சந்தேகமுண்டா?
மனிதன் மிருக நிலைக்குத் தள்ளப்பட்டக் காரணம் என்ன? இவனைப் போன்று அற்ப அறிவு படைத்த ரஷ்யன் உருவாக்கிய ஒரு நவீன கருவியை இயக்க அந்த ரஷ்யன் அளித்த வழி காட்டு நூலையும் (User Manual) ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்ட பொறியாளர் (Engineer) வழி காட்டலையுமே மனிதன் ஏற்கிறான். ரஷ்யன் தயாரித்தக் கருவிக்கு அமெரிக்கனின் வழி காட்டு நூலையோ, பொறியாளரையோ ஏற்பதில்லை.
அதேபோல் அமெரிக்கன் தயாரித்த ஒரு நவீன கருவிக்கு ரஷ்யனின் வழிகாட்டு நூலையோ, பொறியாளரையோ ஏற்பதில்லை. எவன் கருவியை உருவாக்கினானோ அவனது வழி காட்டு நூலையும், அவன் அனுப்பும் பொறியாளரையும் மட்டுமே ஏற்று அந்தக் கருவியை இயக்க வேண்டும். அப்போதுதான் அக்கருவி செம்மையாகச் செயல்படும் என்பதைத் திட்டமாக அறிந்து செயல்படும் அற்ப அறிவுள்ள மனிதன், அதுவும் அக்கருவியை இவனே உருவாக்கும் தகுதியுள்ள மனிதன், கருவியைத் தயாரித்த அவனைப் போல் அற்ப அறிவு படைத்த மனித வழிகாட்டலை ஏற்று அதன்படி நடக்கிறான்.
அதற்கு மாறாக இறைவன் படைத்த மனிதக் கருவி, மனிதனால் மனிதக் கருவியைத் தயாரிக்க முடியவே முடியாது. இந்த நிலையில் மனிதக் கருவியை இயக்க அக்கருவியைப் படைத்த இறைவனின் வழிகாட்டல் நூலையும், அந்தக் கருவியை இயக்கிக் காட்ட இறைவனே அனுப்பிய பொறியாளராகிய அவனது தூதரையும் நிராகரித்துவிட்டு, சுயமாக ஆளாளுக்கு அவர்களின் அற்ப அறிவில் பட்டதைக் கொண்டு அதாவது மனுநீதி கொண்டு செயல் படுவதே ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகத்தை விடக் கேடுகெட்ட நிலைக்கு ஆளாக நேரிட்டுள்ளது.
இணை துணை தேவை எதுவும் இல்லாத தன்னந்தனியனான அகிலங்கள் அனைத்தையும் கட்டி ஆளும் ஓரிறைவனை மறுக்கும் நாத்திகர்களும், அந்த இறைவன் மனிதனுக்குச் சோதனையாகப் படைத்துள்ள ஷைத்தானுக்கு அடி பணிந்து நடப்பதுதான் ஆச்சரியம். இல்லை என்றால் அவர்களின் ஐயறிவு கொண்டு மட்டும் பெறும் பகுத்தறிவுக்கும், மனசாட்சிக்கும் விரோதமாக ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடுவார்களா? இன்று தமிழகம் மதுவில் தள்ளாடுவதற்கும், மது, மாது, சூது, குடி, கூத்து, கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம், வன்புணர்ச்சி என அனைத்து வகை சீரழிவுகளையும் போதிக்கும் சின்னத்திரை, வெள்ளித் திரைகளே காரணகர்த்தாவாக இருப்பதற்கும் நாத்திகர்களும், பொய்க் கடவுள்களை வணங்கி வழிபடும் மதவாதிகளும் முழுக்க முழுக்கக் காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்.
பேரறிவு கொண்ட ஓரிறைவனின் வழிகாட்டலை நிராகரித்து அற்ப அறிவு படைத்த மனிதர்களின் வழிகாட்டல்படி நடப்பதாலேயே எண்ணற்ற மதங்கள், இஸங்கள், பிளவுகள், பிரிவுகள், ஜாதிகள், கட்சிகள், அமைப்புகள், கழகங்கள், இத்யாதி, இத்யாதி தோன்றி கலகங்களை விளைவித்து வருகின்றன. மனித வர்க்கம் சீரழிந்துச் சின்னாப் பின்னப்பட்டு வருகிறது. மனிதன் மிருகத்தை விடக் கேடு கெட்ட வாழ்க்கை வாழ நேரிட்டுவிட்டது.
சமீபகால ஒழுக்கக் கேடுகள், வன்கொடுமைகள், லஞ்சலாவண்யங்கள் போன்றவை குறித்து ஊடகங்களில் வாதப் பிரதிவாதகங்கள் சூடு பறக்கின்றன; அவற்றை உற்று நோக்குபவர்கள், அவரவர்கள் சார்ந்திருக்கக் கூடிய மதங்கள், இஸங்கள், கொள்கை கோட்பாடுகள், கட்சிகள், அமைப்புகள் அடிப்படையில் தங்கள் நிலையை நியாயப்படுத்தித் தங்களின் வாதப் பிரதி வாதங்களை எடுத்து வைப்பதை அறிய முடிகிறது.
உதாரணமாக சினிமா நடிகர்களோ, நடிகைகளோ, தயாரிப்பாளர்களோ, சினிமாவினால் தான் மக்கள் சீரழிகிறார்கள் என்பதை மறுத்தே தங்கள் வாதங்களை வைப்பார்கள். மது விற்ப னையாளர்களும், குடிகாரர்களும் குடியினால் தான் தனக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை மறுத்தே வாதமிடுவார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் ஆணும் பெண்ணும் சம்மதித்து கலவியில் ஈடுபடுவது குற்றமில்லை என்றே வாதிடுவார்கள்; விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண், ஆணுறை அணிந்து ஈடுபடும் போது கொடிய எய்ட்ஸ் நோயிலிருந்து விடுபடலாம் என நியாயப்படுத்துவார்கள்.
இப்படி அவரவர்கள் ஈடுபடும் தீய செயல்களையும், அவரவர்கள் சார்ந்திருக்கும் மதம், இனம், இஸம், ஜாதி, கட்சி, கொள்கை, கோட்பாடு, மொழி, இனம், மாநிலம், நாடு போன்றவற்றை நியாயப்படுத்தியே தங்கள் வாதங்களை எடுத்து வைப்பதை அவதானிக்கலாம்.
இரு நாடுகளிடையே சண்டை நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சண்டைக்குக் காரணம் தனது நாடுதான் என்பதை உறுதியாகத் தெரிந்த ஓர் உண்மையாளன் அதைப் பகிரங்கமாக அறிவித்தால் என்ன நடக்கும்? அவன் தேசத்துரோகி என இழிவுபடுத்தப்படுவான். தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கவும் படலாம். தனது நாடு எவ்வளவு பெரிய தீச்செயலில் ஈடுபட்டாலும் அதை நியாயப்படுத்திப் பேசுவதே தேச விசுவாசம் என நம்பப்படுகிறது.
ஆனால் இறைவனின் வழிகாட்டல் என்ன சொல்கிறது தெரியுமா? இதோ படித்துப் பாருங்கள்.
”இறை நம்பிக்கையாளர்களே உங்களுக்கோ, (உங்கள்) பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினர்களுக்கோ பாதகமாய் இருப்பினும், நீதியில் நிலைத்திருப்பவர்களாகவும், இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாய் இருப்பினும், ஏழைகளாய் இருப்பினும் சரியே! இறைவன் அவ்விருவருக்கும் பொறுப்பாளன். எனவே, நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். மேலும், நீங்கள் மாற்றிக் கூறினாலும் புறக்கணித்தாலும் நீங்கள் செய் வதை இறைவன் நன்கறிந்தவனாய் இருக்கிறான்”. (அன்னிசா:4:135,5:8)
(மேலும் பார்க்க: 4:58, 6:152, 16:90, 57:25)
நீதி நியாயத்தைப் பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசாதவர்கள் இருக்கிறார்களா? ஆத்திகனும் பேசுகிறான், நாத்திகனும் பேசுகிறான். ஆனால் செயலில் நீதி நியாயத்தை எத்தனை பேர் நிலை நாட்டுகிறார்கள். அவர்களது பகுத்தறிவும், மனசாட்சியும் ஒப்புக் கொண்டுள்ளபடி நீதி நியாயத்தை நிலை நாட்டாதது ஏன்? எந்தச் சக்தி அவர்களை நீதிக்குப் புறம்பாக, நியாயத்தைப் புறக்கணித்துச் செயல்படச் செய்கிறது? ஆம்! அவர்களை ஆட் டிப் படைக்கும் அவர்களின் மனோ இச்சையாகிய ஷைத்தான்தான் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?
ஆம்! மனித குல விரோதியான ஷைத்தானுக்கு அடிபணிந்து ஷைத்தானின் வசீகர, மாய வலையில் சிக்கியே பெருங்கொண்ட மக்கள் இப்படிப்பட்ட ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இறைவன் கொடுத்த நேர்வழி விட்டு, அற்ப மனித அறிவில் தோன்றும் கோணல் வழிகளை (மனுநீதி) நேர்வழியாகக் காட்டும் மனித ஷைத்தான்களான (தாஃகூத்) மதகுருமார்களிடமும், அரசியல் குருமார்களிடமும் சிக்கிச் சீரழிகிறார்கள். இந்த மதகுருமார்களும், அரசியல் குருமார்களும் தங்களின் சுயநலம், அற்பமான உலகியல் ஆதாயம் காரணமாகத் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அசகாய சூரர்களாக இருக்கிறார்கள். ஆம்! பெருங்கொண்ட மக்களைத் தங்களின் வசீகர, சூன்யப் பேச்சால் மதிமயக்கி அவர்களின் செல்வங்களைக் கொள்ளை அடிப்பதோடு, அப் பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளி நரகை நிரப்ப ஷைத்தானுக்குத் துணை போகும் அசகாய சூரர்கள் என்பதில் ஐயமுண்டா?
மத, அரசியல் இடைத்தரகர்களின் மயக்குப் பேச்சில் மயங்காமல், அவர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து நேரடியாக இறைவனின் வழிகாட்டலைப் பற்றிப் பிடிப்பவர்களே இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்கள். இதையே இறைவழிகாட்டல் நூல் 3:102,103, 7:3 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
இப்போது இறைவன் ஏற்கும் நடைமுறையிலிருக்கும் வழிகாட்டல் நூல் எது என்பதில் ஐய முண்டாகலாம். காரணம் மக்களிடையே இறை வழிகாட்டல் நூல்களாக-வேதங்களாக இந்துக்களிடமிருக்கும் நான்கு வேதங்கள், யூதர்களிடமிருக்கும் தோரா, கிறித்தவர்களிடமிருக்கும் பைபிள் இப்படி ஒவ்வொரு மதங்களிலும் தனித்தனி வேதப் புத்தகங்கள் இருக்கின்றனவே இவற்றில் எதை இறைவன் கொடுத்த நேர்வழி நூலாக ஏற்பது என்ற சந்தேகம் எழலாம். இது நியாயமான சந்தேகமே!
இந்த வேதங்கள் அனைத்தும் முன்னர் இறைவனால் அருளப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமானவையாக இருந்ததால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவுமில்லை. அவ்வேதங்கள் அவற்றின் மூல மொழிகளிலும் இப்போது இல்லை. அம்மூல மொழிகள் இன்று பேச்சு வழக்கிலும் இல்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?
நமது இந்திய நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் புழக்கத்தில் இருந்த கரன்சி நோட்டுக்கள் இன்று செல்லுபடியாகுமா? இன்று புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்கும், பழைய கரன்சி நோட்டுக்கும் பல வகைகளில் ஒற்றுமை தெரிந்தாலும், அவற்றைச் சுட்டிக் காட்டி பழைய நோட்டை செல்லுபடியாக்க முடியுமா? முடியாதே! அற்பமான மனித அறிவினால் தயாரிக்கப்பட்ட பழைய கரன்சி நோட்டும் இன்று செல்லுபடியாகாது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மனிதக் கற்பனையால் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தில் இதுவரை எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. பழைய சட்டங்கள் இன்று செல்லுபடியாகா என்பதை மனித அறிவு ஒப்புக் கொள்கிறது.
அதேபோல் இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டு நூல்கள் மனிதர்களின் கற்பனைகள் நுழைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தச் சாத்திய மற்ற வேதாந்தங்கள் நிறைந்த வேதங்கள் (மனு நீதி) ஆகி விட்டன. இறைவனாலும் அவை செல்லாதவை ஆக்கப்பட்டுவிட்டன. இறைவனால் இறுதியில் பூமியின் மத்திய பாகமான அரபு நாட்டில் அங்கு மக்கள் பேசும் அரபு மொழியில் இறக்கப்பட்ட இறுதி வழிகாட்டு நூல் குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப் பட்டதோடு, மூல அரபு மொழியும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பேச்சு வழக்கிலும் இருந்து வருகிறது. இவ்வாழ்க்கை வழிகாட்டும் நெறிநூல் உலகம் அழியும் வரை மனிதக் கரம் பட்டு மாசு படாமல் அதாவது வேதாந்தங்கள் நிறைந்த வேதமாகாமல், இறைவனே அதனைப் பாதுகாத்து வருவதாக 15:9 இறைவாக்கு உத்திரவாதம் அளிக்கிறது.
இறுதி இறைத் தூதரைப் பற்றியும், இறுதி நெறிநூலைப் பற்றியும் முன்னைய நெறிநூல்களாக இருந்து வேதங்களாகத் திரிக்கப்பட்டவற்றிலும் முன் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. எனவே மனித குலம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் இம்மத, அரசியல் குருமார்களின் வசீகர சூன்ய உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக இறுதி வழிகாட்டு நெறிநூல் குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போதனைகள் படி நடந்தால் மட்டுமே ஈருலகிலும் ஈடேற முடியும். அறிவு ஜீவிகளே முறையாகச் சிந்தியுங்கள். வெற்றி பெற முன் வாருங்கள்.
source: http://annajaath.com/?p=6265