பாட்னா குண்டுவெடிப்பு: மங்களூரில் கைது செய்யப்பட்ட ஆயிஷா பானு குற்றவாளி இல்லை: என்.ஐ.ஏ.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிகழ்ந்த பாட்னா குண்டுவெடிப்புக்கும் ஹவாலா பண பட்டுவாடாவுக்கும் தொடர்பு இருப்பதாக பீகார் போலீஸ் கூறுவது தவறு என்று தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ) கூறியுள்ளது.
குண்டுவெடிப்புக்கு பணம் உள்ளூரிலேயே திரட்டப்பட்டுள்ளது என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. பாட்னா குண்டுவெடிப்புக்காக சில இடைத்தரகர்கள் மூலம் பணம் கிடைத்ததாக பீகார் போலீஸ் கூறியிருந்தது. இது தொடர்பாக மங்களூர், பீகாரில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
பணம் பட்டுவாடா தொடர்பாக மங்களூரைச் சார்ந்த ஆயிஷா பானு, அவருடைய கணவர் சுபைர் ஆகியோரை நவம்பர் 13 ஆம் தேதியும், சூரல்பாடியைச் சார்ந்த முஸ்தாக் அஹ்மது, குட்டார் மடக்காவைச் சார்ந்த முஹம்மது ஆசிஃப் ஆகியோர் நவம்பர் 25 ஆம் தேதியும் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கும், குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களுக்குமிடையே பாலமாக செயல்பட்டவர் ஆயிஷா பானு என்று குற்றம் சாட்டப்பட்டது. சில ஊடகங்களும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஊதிப் பெருக்கின. ஆனால், 1.5 கோடி ஹவாலா பணம் பட்டுவாடாவுக்கும் பாட்னா குண்டுவெடிப்பிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று என்.ஐ.ஏ தற்போது தெளிவுப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை குண்டுவெடிப்புடன் தொடர்புபடுத்த எவ்வித ஆதாரமும் இல்லை என்று என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
பீகாரைச் சார்ந்த கோபால் குமார் கோயல், பவன்குமார், விகாஸ் குமார், கணேஷ்குமார் ஆகியோரையும் பீகார் போலீஸ் இவ்வழக்கில் கைது செய்தது.
ஆயிஷா பானு தொடர்பாக வெளியான செய்தியில் ஹிந்துவாக இருந்த ஆயிஷா பானு, முஸ்லிமாக மதம் மாறி ஒரு முஸ்லிம் இளைஞரை திருமணம் முடித்தார் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள், ஹிந்து இளம்பெண்களை கவர்ந்து திருமணம் செய்து தீவிரவாத பணிகளுக்கு உபயோகிக்கும் லவ் ஜிஹாதின் உதாரணம் என்று கூறி ஹிந்துத்துவா அமைப்புகளான பஜ்ரங்தளமும், விசுவ ஹிந்துபரிஷத்தும் அறிக்கை வெளியிட்டிருந்தன.
பரபரப்புக்காக பொய்ச்செய்தியை ஊதி பெரிதாக்கி உண்மையை மறைப்பதற்கு துணை போகும் அத்தனை ஊடகங்களின்மீதும் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தால் காவல்துரையின் பொன்னான நேரம் இதுபோல் வீண்விரயம் ஆகாது. எடுப்பார்களா…?!