Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா?

Posted on December 16, 2013 by admin

சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா?

டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் சில பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடந்தன. அவற்றுள் ஒன்றை ஒருங்கிணைத்தவரான சவ்யா, “இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களைவிடச் சென்னைதான் பெண்களுக்குப் பாதுகாப்பானது. காவல் துறையினர் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மற்ற நகரங்களும் சென்னையைப் பின்பற்ற வேண்டும்” என்றார். சவ்யாவின் கருத்தை வேறு சிலரும் ஆமோதித்தார்கள். சென்னை, உண்மையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்தானா, பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன?

இந்தக் கேள்விக்கான பதில்கள் பல விதங்களிலும் வேறுபடுகின்றன. “இப்போது சென்னையில் பெண்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. தெருவில் சாதாரணமாக ஒரு பெண் நடந்து போனாலே கிண்டல் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். தனியாக இரவு நேரங்களில் சற்றுத் தாமதமாக ஒரு பெண் சாலையில் நடந்து போகும்போது இது அதிகமாக இருக்கிறது” என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான நிர்மலா கொற்றவை. என்றாலும் ஒப்பீட்டளவில் சென்னை பாதுகாப்பானதுதான் என்றும் இவர் கருதுகிறார்.

இங்கே கட்டுப்பாடுகளும் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது என்று சொல்லும் அவர், “கலாச்சார மாற்றங்கள் பெரிய அளவில் இங்கே உருவாகிவிடவில்லை. பாரம்பரிய கலா சாரம் இன்னமும் இருக்கிறது. அதனாலேயே பெண்கள் மிக அதிகமாக வெளி இடங்களில் நடமாடுவது இங்கு இல்லை. அங்கெல்லாம் ஆண்களுக்கு நிகரான பழக்க வழக்கங்கள் பெண்களிடமும் காணப்படுகிறது. இதனால் தவறான புரிதலுக்கும் தவறுகள் நேர்வதற்கும் நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அங்கே லேட் நைட் லைஃப் மிக இயல்பாகிக் கொண்டுவருகிறது” என்கிறார் அவர்.

அப்படியானால் பழமைவாதச் சிந்தனைகள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பானவை என்று எடுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. “இல்லை. அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. எங்கே பணம் அதிகமாகப் புழங்குகிறதோ, அங்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் உண்டாகின்றன, அந்த மாற்றங்கள் தவறுகளுக்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மற்ற மெட்ரோ நகரங்களைப் போல் சென்னையும் மாறிய பிறகுதான் அவற்றோடு சென்னையை ஒப்பிட முடியும். இங்கு பணப் புழக்கமும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பொது இடங்களில் புழங்க நேர்வதும் மற்ற மெட்ரோ நகரங்களுக்குச் சமமாக உயர்ந்த பின் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான் சென்னை உணமையிலேயே பாதுகாப்பானது தானா என்பதை அலச முடியும்” என்கிறார் நிர்ம்லா.

நிகழும் சம்பவங்களின் எண்ணிக்கையை வைத்துப் பாதுகாப்பை வரையறுக்க முடியாது என்பதைப் பெண்ணியவாதியும் கவிஞரும் பத்திரிகையாளருமான கவிதா முரளீதரன் வலியுறுத்துகிறார். “டெல்லி, மும்பை அளவுக்குக் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடப்பதில்லை என்று வைத்துக் கொண்டாலும் பாலியல வன்முறைகள் சென்னையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன” என்கிறார். “அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் எங்கும் பதிவாவதில்லை. பாதிக்கப்படும் பெண்கள் பலர் நடவடிக்கை எடுக்கத் துணிவதில்லை. சில துணிச்சலான பெண்கள் காவல்துறையை அணுகினாலும் நிவாரணம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். போட்டால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் மிகக் கொடுமையான நிகழ்வுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சூழல் நீடிக்கும்வரை சென்னை, பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்தானா என்ற கேள்விக்குச் சரியான விடையளிக்க முடியாது” என்கிறார் கவிதா.

பாதுகாப்பு பற்றிப் பெரிய புகார்களோ குலை நடுங்கவைக்கும் அச்சமோ சென்னையில் உள்ள பெண்களிடத்தில் இல்லை (பார்க்க: அனுபவங்கள், பார்வைகள்). ஆனால் சென்னை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் குரல்களில் எச்சரிக்கை உணர்வு தொனிக்கிறது. சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துவதில் தெரியும் அழுத்தம் கவனிக்கத்தக்கது. அது சென்னையின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையை அசைக்கக்கூடியது.

தில்லி, மும்பை போன்ற நகரங்களில் நடக்கும் சம்பவங்கள் இங்கே நடக்காமல் இருக்கலாம். அல்லது அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். இங்குள்ள பொதுவான சூழலும் போக்கும் ஆண்களின் வக்கிரங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் இசைவாக இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பல்வேறு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கையில் ஒப்பீட்டளவில் சென்னை பாதுகாப்பானதுதான் என்று சொல்ல லாம். ஆனால் ‘ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது’ என்பது பாதுகாப்புக்குப் பெரிய உத்தரவாதம் எதையும் அளித்து விடவில்லை. “பெண்களில் 60 % பேர் சென்னை பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மீதி 40 % பேரைப் பற்றிய பெரிய கேள்வி எழுகிறது. அந்த 40 %இல் நீங்களும் நானும் இருக்கலாமல்லவா?”” என்று பணிக்குச் செல்லும் சென்னைப் பெண் ஸ்ரீ கேட்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

“பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை அடிப்படை மாற்றங்களால்தான் கட்டமைக்க முடியும். ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றம் வேண்டும். தந்தைவழிச் சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்த பெண்கள் இப்போதுதான் வெளியே வரத் தொடங்கியிருக்கி றார்கள். இதைச் சரியான முறையில் எதிர்கொள்ள வும் கையாளவும் வேண்டும். பொது இடங்களில் பெண்களுக்கான வெளியை வழங்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதைக் கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும்” என்று கவிதா சொல்வதில்தான் தீர்வு அடங்கியிருக்கிறது. பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வைகளைச் சிறு வயதிலிருந்தே வீட்டிலும் பள்ளியிலும் சீரமைக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.

 

-எஸ். கோபாலகிருஷ்ணன்

source: http://nammachennai.in/

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb