o குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு: டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. டெல்லியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கங்களை கைப்பற்றி 2–வது இடம் பிடித்து அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கட்சி வருகிற 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி 26 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக 19 மாவட்டங்களில் கட்சியின் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த சுக்தேவ் படேல் கூறியுள்ளார்.
o அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும்: இந்தியாவின் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே அதற்குள் தேர்தல் நடத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். இதுவரை அனைத்து தேர்தல்களும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதே போல தேர்தல் நடத்தி முடிக்கப்படும். எனவே, அதன்படி 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி விட்டது. பாராளுமன்ற தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மார்ச் மாதம் இடையில் தொடங்கப்படும். இந்த தேர்தல் 5 முதல் 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 1–ந் தேதிக்குள் 16–வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு விடும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.
o வங்காளதேச ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: வங்காளதேசத்தில் 1971–ம் ஆண்டில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்த சிலர் அட்டூழியங்களில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான ஒரு வழக்கில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் அப்துல் காதர் மொல்லா என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்துல் காதர் மொல்லா போரின்போது இனப்படுகொலை செய்ததாகவும், பெண்களை கற்பழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்காளதேசத்தில் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது நடைபெற்ற கலவரத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
o வியத்நாமில் போதைப்பொருள் கடத்திய 4 பெண்கள் உள்பட, 5 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
“”லாவோஸ் நாட்டிலிருந்து வியத்நாமிற்கு 89 கிலோ ஹெராயினை கடத்த முற்பட்ட 6 பேர் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் என்கே மாகாண நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்” என்று வியத்நாமிலிருந்து வெளிவரும் “தான் நீன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளை, 2011ஆம் ஆண்டு முதல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் விஷ ஊசி போட்டு கொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் பட்டியலில் 700 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
o விண்வெளி ஆராய்ச்சிக்காக இரண்டாவது முறையாக குரங்கை அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் ஹசன் ரெற்ஹானி, தனது இணையதள பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: ஈரான் அரசு தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் சுதந்திரமாக ஈடுபட விரும்புகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னோட்டமாக, ஜனவரி மாதத்தில் முதல் முறையாக விண்கலம் மூலம் மனித குரங்கு அனுப்பப்பட்டது. அந்த குரங்கானது பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தினர். இருந்தபோதிலும் அந்த ஆராய்ச்சியால் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்நிலையில் இரண்டாவது விண்கலத்தில், திரவ எரிபொருளை பயன்படுத்தி ஈரான் அரசு முதல்முறையாக விண்கலத்தை ஏவியுள்ளது. இந்த விண்கலத்தில் தற்போது இரண்டாவது குரங்குனை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.