சஹாபாக்களா? சூஃபிகளா? – எப்படிப்பட்டவர்கள் வேண்டும் நமக்கு?
உளத்தூய்மை (தஸ்கியா) குறித்து நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் போய்விட்டதற்கு வரலாற்றுக் காரணம் ஒன்று இருக்கின்றது. அதனை இப்போது அலசுவோம்.
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி என்பதை நாம் அறிவோம். அது போல இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கமும் ஆகும். இதில் எந்த விதமான “தீவிரப் போக்குக்கும்” இடமே இல்லை! நமது சமுதாயத்துக்குப் பெயரே “நடுநிலைச் சமுதாயம்” தான்!
தனி மனித வாழ்வுக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையே சமநிலை! வணக்க வழிபாடுகளுக்கும், மனிதனின் இன்ன பிற கடமைகளுக்கும் இடையே சமநிலை! அறிவுக்கும் உளத்தூய்மைக்கும் இடையே சமநிலை, நம்பிக்கைக்கும் செயல்பாடுகளுக்கும் இடையே சமநிலை, உலக வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இடையே சமநிலை – இவ்வாறு மனித வாழ்வின் எந்த இரண்டு பகுதிகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கிடையே சமநிலையைக் கொண்ட மார்க்கத்தையே வல்லோன் அல்லாஹு தஆலா நமக்கு ஒரு அருட்கொடையாக வழங்கியிருக்கின்றான்.
அதன் செயல் வடிவமாக அண்ணலார் அவர்களே ஒரு அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்து எடுத்துக்காட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். அது போலவே தனது தோழர்கள் சற்றே நடுநிலை மீறி நடக்கும்போது அவர்களை நடுநிலைக்குக் கொண்டு வந்து வழிகாட்டியும் இருக்கின்றார்கள்.
புதிதாகத் திருமணம் முடித்த நபித்தோழர்! இரவெல்லாம் வணக்கம்; பகலெல்லாம் நோன்பு என்ற நிலையை அவர் தேர்ந்தெடுக்க – அது தன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது திருத்தியிருக்கின்றார்கள் நபியவர்கள்.
இன்னும் சொல்லப்போனால் நபியவர்களின் நேரடிப் பயிற்சியில் உருவாக்கப்பட்ட அந்த முதல் தலைமுறை வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நடுநிலை பேணியிருக்கின்றார்கள்.
“இரவில் அவர்கள் தொழுவதைப் பார்த்தால் – இவ்வுலகத்தில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லையோ என்பது போல் தோன்றுமாம்; பகலில் அவர்கள் குதிரையேறிப் போர்க்களம் கண்டால், அவர்களுக்கு போர்க்களம் ஒன்றைத் தவிர வேறு எதிலும் கவனம் இல்லையோ என்பது போல் தோன்றுமாம்.”
அந்த நபித்தோழர்கள் – அறிவுக்கும் முக்கியம் தந்தார்கள்; உளத்தூய்மைக்கும் அதே அளவு முக்கியம் தந்தார்கள். அண்ணலாருக்குப் பின் வந்த நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திலும் இந்த நிலை தொடர்ந்தது,
போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பும்போது ஹள்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உளத்தூய்மையின் அவசியம் குறித்து எச்சரிக்காமல் அனுப்புவதே இல்லை! அந்தப் போர்வீரர்களின் வரலாறுகளைப் படித்தாலே இது புரியும். கண்களில் கண்ணீர் வடியும்!
எதிரிகளின் கோட்டைக்குள் நுழைவதற்கு ஒரே வழி – சாக்கடை வழி தான்; அதனுள் புகுந்து – கோட்டையின் வாசலை உட்பக்கமாகத் திறந்து விட முஸ்லிம்கள் உள்ளே நுழைந்து கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். அந்த சாதனையை நிகழ்த்தியது யார் என்று தேடினால் – அவர் தன்னை மறைத்துக் கொண்டு விடுகிறார்!
சகோதரனுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு தான் பட்டினி கிடப்பார்! வெளியே சொல்ல மாட்டார்.
அங்கே மனிதப் புனிதர்களையே நாம் காண்கிறோம்!!
ஆனால் – நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் காலத்திற்குப் பிறகு – இஸ்லாமிய உலகில் மன்னராட்சி நிலைபெற்றதனால் – பல தீமைகளை முஸ்லிம் சமுகம் சந்தித்திட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கலீஃபாக்கள் காலத்தில் மக்களின் மார்க்கக்கல்வி மற்றும் உளத்தூய்மை, அவர்களுடைய குணநலன்கள் மற்றும் மனித உறவுகள் அனைத்திலும் ஆட்சியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்!
ஆனால் மன்னராட்சி நிலைபெற்றதன் பின்னர் – தனி மனித வளர்ச்சியில் – பெரும்பாலான மன்னர்கள் சிறிது கூட கவனம் செலுத்திடவில்லை! ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் போன்ற ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர!
ஆட்சியாளர்கள் செய்திடத் தவறி விட்ட இந்த அரும்பணியை அன்றைய அறிஞர் பெருமக்கள் எடுத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றின் இந்தப் பகுதியில் (கிலாஃபத்துக்குப் பின்னர்) – இமாம்கள் (வழிகாட்டுபவர்கள்), முஜ்தஹித்கள் (ஆராய்ச்சியாளர்கள்), முஜத்தித்கள் (சீர்திருத்தவாதிகள்), தலை சிறந்த ஆலிம்கள் (அறிஞர்கள்) – இவர்களெல்லாம் முஸ்லிம்களின் அறிவு மற்றும் தஸ்கியாவிலே மிகுந்த கவனம் செலுத்தி மக்கள் தூய்மையான இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு அயராது பாடுபட்டார்கள்.
ஆனால் – அதனைத் தொடர்ந்த கால கட்டங்களில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டன!
மார்க்கக்கல்வி ஆராய்ச்சி (இஜ்திஹாத்) மூடி வைக்கப்பட்டு ஒருவரைக் கண்ணை மூடிப் பின்பற்றும் நிலை (தக்லீத்) ஏற்பட்டது!
மன்னர்கள் வானளாவப் புகழப்பட்டார்கள். உலக விரும்பி உலமாக்கள் (world seeking ulema) – மன்னர்களுக்குத் “தகுந்த” இஸ்லாத்தை மக்களிடம் பரப்பினார்கள்.
பிற தத்துவங்களின் பால் ஈர்க்கப்பட்டு – அந்தத் தத்துவங்களுக்குத் தோதுவாக குர்ஆனையும் நபி மொழிகளையும் விளக்கம் செய்திடும் “அறிஞர்கள்” தோன்றினார்கள்!
இறந்து விட்ட முன்னோர் வழிபாடு முஸ்லிம் சமுகத்தில் நுழைந்தது.
முஸ்லிம்களை சீர்திருத்துகிறேன் பேர்வழி என்று உள்ளே நுழைந்தது சூஃபியிஸம்!
சூஃபியிஸத்தின் முதல் நோக்கமே – மனித உள்ளங்களைத் தூய்மைப் படுத்துவது தான் என்று முழங்கப்பட்டது!
சூஃபியிஸத்தின் “மொழியே” வேறு! உளத்தூய்மைக்கு இவர்கள் கண்டு பிடித்த புதிதான சொற்கள் நம்மை வேற்று வழிகளுக்குள் தள்ளி விடக்கூடியவை!
வஹ்தத்துல் உஜூத் என்பார்கள்! இறைவன் ஒருவனே! அவனே அனைத்தையும் படைத்தவன் எனும் தூய வழிகாட்டுதலை ஓரங்கட்டி – “உள்ளமையெல்லாம் ஒன்றே ஒன்று தான்” என்ற “அத்வைதக்” கொள்கை இது!
இறைவனை நெருங்கிட – நான்கு படித்தரங்கள் உள்ளன என்பார்கள்; அவை – ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிஃபத் என்பார்கள்; இவை அண்ணலார் நமக்குச் சொல்லித் தராதவையாகும்.
முஸ்லிம்களின் பிந்தைய வரலாற்றில் – இந்த சூஃபியிஸம் – நிலை பெற்று – அதனால் இஸ்லாத்துக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் (damages) எண்ணிலடங்கா!
கொள்கை இப்படி என்றால் – இந்த சூஃபியிஸத்தினால் வார்த்தெடுக்கப் பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாக விளங்கினார்கள் தெரியுமா?
சான்றுக்கு இரண்டே இரண்டு:
ஒரு சூஃபி மகானைப் பார்க்க ஒருவர் சென்றாராம்; அந்த சூஃபி வசித்து வந்த தெருவுக்குள் நுழைந்து அவர் வீடு எங்கே என்று விசாரித்தாராம்; ஒருவர் சொன்னாராம்: இதோ ஒரு சிறிய நீரொடை ஓடிக் கொண்டிருக்கிறதல்லவா; இந்த நீரோடை வழியே சென்று இது எங்கே முடிவடைகிறதோ அதுவே அந்த சூஃபியின் வீடு என்றாராம். அவர் அந்த வீட்டை சரியாக அடையாளம் கண்டு பிடித்து சூஃபியைச் சந்தித்தாராம்.
அது என்ன நீரோடை? அந்த சூஃபி தனது பாவங்களை நினைத்து நினைத்து அழுது கொண்டே இருந்தாராம்; அது தான் அவருடைய தாடியில் இருந்து வழிந்து வீட்டிற்குக் கீழே கொட்டி தெருவில் ஒரு நீரோடை போல் ஓடிக் கொண்டிருந்ததாம்!
இன்னொரு சூஃபியைச் சந்தித்தாராம் ஒருவர்; தங்களிடம் பயிற்சி பெற வந்துள்ளேன் என்றாராம்; உலகிலேயே மிக மோசமான பண்டம் எதுவோ அதனைக் கொண்டு வா என்றாராம் சூஃபி. வந்தவர் புறப்பட்டுச் சென்று மிக மோசமான பண்டம் எதுவாக இருக்கும் என்று ஆழமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாராம்; அது என்ன தெரியுமா? மனிதனின் மலம்! – ஐடியா தோன்றியவுடன் உடனே மனித மலத்தைக் கொஞ்சம் எடுத்துச் செல்லலாம் என்று அருகில் கிடந்த மலத்தை எடுத்திட முனைந்தாராம்; உடனே மலம் கேட்டதாம் = ஏன் என்னைப்போய் எடுக்கிறாய்?
என் சூஃபி உலகிலேயே மிக மோசமான பண்டம் ஒன்றைக் கொண்டு வரச் சொன்னார்; அது நீ தான் என்று நான் நினைக்கிறேன்! எனவே தான் உன்னை எடுத்துச் செல்ல விரும்புகிறேன் என்றாராம் அவர்; உடனே அந்த மலம் சொன்னதாம்; சில மணி நேரங்களுக்கு முன் நான் இனிப்புப் பலகாரமாகத் தான் இருந்தேன்; உன்னைப் போல் ஒருவன் என்னைத் தின்றதனால் தானே எனக்கு இந்த நிலை ஏற்பட்டது; எனவே நீதான் என்னை விட மிக மோசமானவன் என்று! பொட்டில் அறைந்தாற்போல் அவர் உணர்ந்து கொண்டாராம்! உடனே அந்த சூஃபியிடம் சென்று – உலகிலேயே தானே மிக மோசமான பண்டம்! என்று தான் உணர்ந்து விட்டதாகத் தெரிவித்ததும் – இப்போது தான் நீ என்னிடம் பயிற்சி பெறுவதற்கு தகுதி வந்திருக்கின்றது என்றாராம் அந்த சூஃபி!
ஆமாம் சகோதரர்களே!
சூஃபியிஸம் இப்படிப்பட்டவர்களைத் தான் உருவாக்கும்!
இவர்கள் நிஜ மனிதர்களாக நமக்குத் தெரியவில்லை!
ஆனால் குர் ஆனும், நபிமொழிகளும் உருவாக்கிய நிஜ மனிதர் ஒருவரைப் பாருங்கள்:
உமைர் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நபித்தோழர். சிரியாவின் ஹிம்ஸ் பகுதிக்கு கவர்னராக விளங்கியவர். கவர்னர் பொறுப்பிலிருந்து விலகிய பின் தன் கிராமத்தில் எளிமையானதொரு வாழ்க்கையை நடத்தி வருபவர். அவரது நிலையைப்பற்றி அறிந்து வர ஹாரித் என்பவரை அனுப்பி வைக்கிறார் கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
ஹாரிதிடம், “உமைர் வசிக்கும் ஊருக்குச் செல்லவும். நீர் ஒரு பயணி என்று கூறி அவருடன் தங்கவும். அவர் சொகுசாய் வாழ்கிறார் என்று தெரிந்தால் ஏதும் பேசாமல் என்னிடம் திரும்புங்கள். ஆனால் அவர் வறுமையில் இருந்தால், இந்தாருங்கள் தீனார், அவருக்கு அளியுங்கள்” என்று ஒரு பையில் நூறு தீனார்களை அளித்தார்.
உமைரின் வீட்டில் மூன்று நாள் விருந்தினராகத் தங்கினார் ஹாரித். ஒவ்வொரு நாள் மாலையும் விருந்தினருக்கு உணவளித்தார் உமைர். உணவு என்றால் வாற்கோதுமை ரொட்டி. அவ்வளவுதான். மற்றபடி இறைச்சி, குழம்பு என்று எதுவும் இல்லை.
மூன்றாம் நாள். அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் ஹாரிதிடம் உரையாடும்போது, “நீர் உமைருக்கும் அவருடைய மனைவிக்கும் பெரும் சிரமம் அளித்துவிட்டீர் தெரியுமா? அவர்கள் தினமும் உண்ணும் உணவு அந்த ரொட்டி மட்டுமே. அதையும் விருந்தினரான உமக்குத் தந்துவிட்டு அவர்கள் தங்களின் பசியைப் பொறுத்துக் கொண்டுள்ளனர். நீர் மேலும் சிலநாள் இவ்வூரில் தங்க வேண்டியிருந்தால் தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து விடுவீராக” என்று அழைப்பு விடுத்தார்.
ஹாரிதுக்கு உமைரின் நிலை நன்கு புரிந்துபோனது. தம்மிடம் அளிக்கப்பட்டிருந்த தீனார்கள் அடங்கிய பையை உமைரிடம் அளித்தார்.
“எதற்கு இது?” என்று கேட்டார் உமைர்.
“அமீருல் மூஃமினீன் இதைத் தங்களிடம் அளிக்கும்படிச் சொல்லித் தந்தார்.”
“இதை அவரிடமே திருப்பித் தந்துவிடுங்கள். என் சார்பாய் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ தெரிவியுங்கள். உமைருக்கு இதன் தேவை இல்லை என்று தெரிவித்துவிடுங்கள்.”
உள்ளிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த உமைரின் மனைவி குறுக்கிட்டார்.
“அதைப் பெற்றுக்கொள்ளுங்கள் உமைர். உமக்குத் தேவையெனில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லையெனில் தேவையுள்ள வறியவர்கள் இவ்வூரில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கலாம்.”
இதைச் செவியுற்ற ஹாரித் பணப் பையை அங்கேயே வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டார். அந்த தீனார்களை சிறு பைகளில் பங்கிட்டுப் பிரித்தார் உமைர். ஏழைகளுக்கும், ஜிஹாதுக்குச் சென்று உயிர்த் தியாகி ஆகிப்போனவர்களின் பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்தளித்துவிட்டு, பிறகுதான் இரவுத் தூக்கமே.
மதீனா திரும்பிய ஹாரிதிடம் விசாரித்தார் உமர். “அங்கு என்ன கண்டுவந்தீர் ஹாரித்?”
“அமீருல் மூஃமினீன். உமைர் மிகவும் வறுமையில், கடின வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்துவருகிறார்.”
“அவரிடம் பணம் அளித்தீரா?”
“ஆம்.”
“அதை அவர் என்ன செய்தார்?”
“எனக்குத் தெரியாது. ஆனால் அதிலிருந்து தமக்கென ஒரு திர்ஹமைக்கூட அவர் எடுத்திருக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.”
உமைருக்குக் கடிதம் எழுதினார் உமர். “இக் கடிதம் கிடைத்து, படித்து முடித்ததும் உடனே வந்து என்னைச் சந்திக்கவும்.”
மதீனாவுக்கு வந்து கலீஃபா உமரைச் சந்தித்தார் உமைர் இப்னு ஸஅத். முகமன்கூறி வரவேற்று தம் அருகே அவரை அமர்த்திக் கொண்டார் உமர்.
“பணத்தை என்ன செய்தீர் உமைர்?”
“அமீருல் மூஃமினீன்! அதைத் தாங்கள் எனக்கென அளித்துவிட்டபின் அதைப்பற்றி தங்களுக்கென்ன கவலை?”
“அதை நீர் என்ன செய்தீர் என்பதை நான் அறிய விரும்புகிறேன் உமைர்” என்று வற்புறுத்தினார் உமர்.
“செல்வமோ, சந்ததியோ எனக்கு யாதொரு உதவியும் புரிய இயலாத நாள் ஒன்று வருமே, அப்பொழுது அந்தப் பணம் எனக்கு உதவட்டும் என்று ஏற்பாடு செய்துவைத்துவிட்டேன்” என்றார் உமைர்.
கண்கள் கலங்கிப்போனார் உமர். “தமக்கெனத் தேவைகள் இருந்தும் தம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிப்பார்களே அத்தகையவர்களில் நீர் ஒருவர் என்று நான் சாட்சியம் பகர்கிறேன் உமைர்.”
ஒட்டகம் சுமக்கும் பொதியளவு உணவுப் பொருட்களும், இரண்டு மேலங்கியும் உமைருக்கு அளிக்கும்படி கட்டளையிட்டார் உமர்.
“அமீருல் மூஃமினீன்! எங்களுக்கு இந்த உணவின் தேவை இல்லை” என்று அதையும் மறுத்தார் உமைர். “நான் கிளம்பும்போது என் குடும்பத்தினருக்காக இரண்டு ஸாஉ வாற்கோதுமையை அளித்து வந்திருக்கிறேன். அதை நாங்கள் உண்டு முடிக்கும்போது, அல்லாஹ் எங்களுக்கு மேற்கொண்டு் படி அளப்பான். ஆனால் இந்த இரண்டு அங்கிஸ அதை மட்டும் என் மனைவிக்காக எடுத்துக் கொள்கிறேன். ஏனெனில் அவளது உடை மிகவும் கிழிந்து அவளது உடலை முழுமையாகப் போர்த்தும் நிலையிலும் அது இல்லை.”
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு வெகு சில காலத்திற்குள் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் உமைர் இப்னு ஸஅத் ரலியல்லாஹு அன்ஹு!
கவனித்தீர்களா வித்தியாசத்தை!
சூஃபியிசக் கொள்கைகளையும், அக்கொள்கை உருவாக்கிடும் மனிதர்களையும் ஆய்வு செய்திட்ட நேர்மை மிக்க மார்க்க அறிஞர்கள் – உளத்தூய்மைக்கு திருக்குர் ஆனும் நபி வழியும் காட்டுகின்ற வழிகாட்டுதல்களே போதுமானவை என்று அதன் அடிப்படையில் மக்களுக்கு போதனை செய்திடத் தொடங்கினார்கள். நூல்களை எழுதிக் குவித்தார்கள்.
எனினும் இந்த சூஃபியிஸத்தைத் தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்.
மற்றொரு புறத்தில் தூய்மையான உளத்தூய்மையின் பக்கம் மக்களை அழைத்திடும் அறிஞர் பெருமக்களும் இன்றைய உலகில் இருக்கின்றார்கள்!
மூன்றாவது ஒரு பிரிவினரும் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள். இந்த “உளத்தூய்மை” சமாச்சாரங்களெல்லாம் அளவுக்கு மீறிப் பெரிது படுத்தப்பட்டு விட்டது! அது தேவையில்லை! என்று நினைக்கின்றார்கள் அவர்கள்.
பெரும்பாலான இன்றைய இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் இது பொருந்தும்!
நாம் முன்னமே சொன்னது போல அறிவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உளத்தூய்மைக்கு அளிக்கப்படாவிட்டால் அது நடுநிலையை இழந்து விடும் (imbalance)! அதன் விளைவுகளைத் தான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டோம். இந்த நடுநிலை பேணப்படாததால் தான் – இறையச்சம் மிகுந்த சகோதரர்களை நாம் அதிகம் காண முடிவதில்லை!
source: http://www.thegardenacademy.in