கொள்கை மட்டும் போதாது! தொழுகையும் வேண்டும்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள் செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம் கொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால் அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்?
தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க, அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
ஒரு தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, ”மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொழுத்த கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1040 )
இந்த ஹதீஸ் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனென்றால் மக்கள் பள்ளிக்கு வராததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கோபப்பட்டு இந்த வார்த்தையைக் கூறினார்கள்.
இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு மார்க்கம் வழங்கியுள்ள சலுகையைத் தவறாக விளங்கிக் கொண்டு சிலர் ஜமாஅத் நடக்கும் போது கலந்து கொள்ளாமல் தனி ஜமாஅத்தாகப் பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஏதோ ஒரு முக்கிய வேலையினால் தொழுகை தவறி விடும் போது இரண்டாவது ஜமாஅத் ஏற்படுத்துவது தவறில்லை.
சரியான காரணம் இருக்க வேண்டும். முடிந்த அளவு முதல் ஜமாஅத்துடன் தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தான் அனுமதி உள்ளது. ஆனால் இன்றைக்கு எந்த வித சரியான காரணமும் இல்லாமல் சோம்பறித்தனத்தினால் இரண்டாவது ஜமாஅத் தொழ வைக்கப்படுகிறது. ஒரு ஏகத்துவவாதிக்கு இது அழகல்ல. தொழுகையில் பிந்துவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தோழர்கள் (முதல் வரிசையை விட்டு) பிந்துவதைப் பார்த்தார்கள். எனவே அவர்களிடத்தில், ”முந்தி வந்து என்னைப் பின்தொடர்ந்து தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின் தொடரட்டும். ஒரு கூட்டம் (முதல் வரிசையை விட்டும்) பிந்திக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அல்லாஹ் அவர்களை (தன் அருளிலிருந்து) பின் தள்ளி விடுவான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 662)
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளைக் கேட்ட சில நாட்கள் நாம் முறையாகத் தொழுவோம். பின்பு பழையபடி தொழுகைகளை விட ஆரம்பித்து விடுவோம். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் வணக்கமே அல்லாஹ்விற்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , நூல்: புகாரி 43)
ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வருவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில், ”இறைவா! நீ இந்த மனிதர் மீது அருள் புரிவாயாக! உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக! என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 647)
ஜமாஅத்துடன் தொழுதால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ஒருவர் உளூவை முழுமையாகச் செய்து விட்டு கடமையான தொழுகைக்காக நடந்து சென்று மக்களுடன் அதைத் தொழுதால் அல்லது ஜமாஅத்துடன் அதைத் தொழுதால் அல்லது பள்ளிவாசலில் அதைத் தொழுதால் அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். (அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு , நூல்: முஸ்லிம் 341)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் இமாமுடன் தொழக் காத்து இருக்கிறாரோ அவர் (தனியாகத்) தொழுது விட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1064)
தொழுகையை அதற்கான நேரத்தில் தொழ வேண்டும்
அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர்கள் ஒரு தொழுகையைக் கூட விடாமல் தொழுது விடுவார்கள். ஆனால் அதற்குரிய நேரத்தில் தொழுவதை விட்டு விடுகிறார்கள். தொழுவது அல்லாஹ்விற்குப் பிடித்த வணக்கமாக எப்போது ஆகுமென்றால் அதற்குரிய நேரங்களில் தொழும் போது தான்.
”அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?” என்று நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட போது, ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 527)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், ”தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள் அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றவிடாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். ”(அப்போது) என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ”தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான தொழுகையாக அமையும்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம் 1027)
இரவுத் தொழுகை
இரவுத் தொழுகை ரமலான் மாதத்திற்கு மட்டும் உரியது என்று சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகள் தான் தொழுதார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே இரவுத் தொழுகை என்பது ரமலானில் மாத்திரம் செய்கின்ற வணக்கம் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் இரவில் இதைத் தொழ வேண்டும். இந்தச் சட்டத்தை விளங்கியவர்கள் கூட இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் சிறந்தவராக மாறுகிறார்.
”அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1158)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். ஆனாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் குறை வைக்கவில்லை. அதிகமான ரக்அத்துக்களை நீண்ட நேரத்தில் தொழுது நமக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.
இன்றைக்கு இளைஞர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இரவு நேரங்களில் வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு பொன்னான நேரங்களை வீணடித்து விடுகிறார்கள். கடமையான தொழுகைகளுக்கு அடுத்து சிறந்த தொழுகையாக இருக்கக்கூடிய இந்த இரவுத் தொழுகையில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.
”கடமையான தொழுகைக்குப் பின்பு சிறந்த தொழுகையாக இருப்பது இரவுத் தொழுகையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1982)
சில சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது, ”நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள். (அறிவிப்பவர்: முகீரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1130)
தொழுவதால் கிடைக்கும் நன்மைகள்
இஸ்லாம் ஒன்றை வலியுறுத்திச் சொல்லும் போது அதை நிறைவேற்றாமல் விட்டால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிடும். அதே நேரத்தில் அதை முறையாக நிறைவேற்றினால் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடும். தொழுகையை விடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். அதை முறையாக நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இனி பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சுத்தம் ஈமானில் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் (என்று கூறுவது நன்மை) தராசை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் (ஆகியவற்றைக் கூறுவதால் கிடைக்கும் நன்மை) வானங்கள் மற்றும் பூமிக்கு இடையில் இருப்பவற்றை நிரப்பிவிடும். தொழுகை ஒளியாகும். தர்மம் ஆதாரமாகும். (அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு , நூல்: முஸ்லிம் 328)
இந்த ஹதீஸில் தொழுகையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. மறுமை நாளில் இருள் சூழ்ந்திருக்கும் போது நாம் முறையாக இந்த உலகத்தில் தொழுகையைக் கடைப்பிடித்திருந்தால் அந்தத் தொழுகை நமக்கு வெளிச்சமாக வந்து உதவும். தொழுகையைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் போது அது மானக்கேடான மற்றும் அருவருக்கத்தக்க செயல்களிலிருந்து தடுக்கிறது என்று கூறுகிறான். தொழுகை தீய வழியில் செல்லவிடாமல் தடுத்து நல்ல வழியில் செலுத்தும் என்ற கருத்தும் ஒளி என்று சொல்லப் பட்டதிலிருந்து விளங்குகின்றது.
”அல்லாஹ் தனக்குக் கட்டளையிட்டவாறு ஒருவர் உளூவை பூரணமாகச் செய்தால் கடமையான தொழுகைகளுக்கு இடையில் (அவர் செய்த சிறுபாவங்களுக்கு) பரிகாரமாக (அந்தக்) கடமையான தொழுகைகள் ஆகி விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 339)
ஒரு நாளைக்கு நாம் செய்யக்கூடிய நன்மைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பாவங்களை எண்ண முடியாது. அந்த அளவுக்கு அதிகமான பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்தப் பாவங்கள் மறுமையில் நமக்குப் பெரும் சுமையாக வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் நம்முடைய தொழுகைகளின் மூலம் இவைகளை அழித்து விடுகிறான். தொழவில்லை என்று சொன்னால் தொழாத பாவத்துடன் இந்தப் பாவங்களும் இணைந்து கொண்டு நம்மைப் பாடுபடுத்திவிடும். தொழுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான ஒரு உதாரணத்தைக் கூறியுள்ளார்கள். மேலும் இதை அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்தும் அறியலாம்.
”உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள்” என்று தோழர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ”அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது” என நபித்தோழர்கள் கூறினர். ”இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 528)
ஒரு மனிதர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ”பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும்” (11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ”அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா?” என்று கேட்டார். அதற்கு, ”என் சமுதாயம் முழுமைக்கும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 526)
சொல்லப்பட்ட செய்திகளைக் கவனத்தில் வைத்து தொழுகையை முறையாகப் பேணுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக!
”Jazaakallaahu khairan” வெளிச்சம்