முஸ்லிம் சமுதாயமும் முந்தைய சமுதாயங்களும்
நூருல் அமீன், அல்அய்ன்
”அன்றியும் இது விணான வார்த்தைகளை கொண்டது அல்ல”. (அல்குர்ஆன் 87:14)
அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், அருளிய வேதத்தில் எந்த ஒன்றையும் வீணாகவும் மனித சமுதாயத்திற்கு உபயோகம் இல்லாத எதையும் கூறவில்லை. குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களும் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி மனித குலத்திற்கு முழுவதற்கும் வழிகாட்டுகின்றது.
அல்லாஹ் அருள் மறையில் வானம், அதில் உள்ளவைகள், பூமி, அதில் உள்ளவைகள் அதில் உள்ள படைப்பினங்கள். இவற்றை எல்லாம் எடுத்துக் கூறி தனது ஆற்றலையும் வல்லமையையும் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறான்.
திருமறை குர்ஆனில் விஞ்ஞானம், இலக்கியம், சொல் அழகு அடுக்குத் தொடர் என்று மனித குலத்திற்கு வழிகாட்டும் வான்மறையாக பல்வேறு சிறப்புக்களை குர்ஆன் பெற்றிருக்கிறது. தேவையான அளவிற்கு குர்ஆன் முந்தைய சமுதாயங்களைப் பற்றியும் அவர்களின் வரலாறுகளைப் பற்றியும் தெளிவாக எடுத்து கூறும் ஒரே வேத நூலாக திகழ்கின்றது.
அல்லாஹ் திருமறை குர்ஆனில் நமக்கு முன்னால் வாழ்ந்த அனைத்து சமுதாயங்களை பற்றியும் கூறவில்லை. நமக்கு முன்னால் எத்தனையோ சமுதாயங்கள் வாழ்ந்து இருக்கின்றன. அல்லாஹ் குர்ஆனில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இறை தூதர்களை அனுப்பியதாக கூறுகின்றான். இந்த நபிமார்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காகவும் வேதத்தினை தெளிவுபடுத்தி நடைமுறைப்படுத்தி காட்டுவதற்காகவும் அனுப்பி வைத்தான்.
ஒரு சில சமுதாயங்களுக்கு வேண்டுமானால் இரண்டு நபிமார்களை அல்லாஹ் அனுப்பி வைத்திருக்கலாம். உதாரணமாக பனி இஸ்ரவேலர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சகோதரர் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அனுப்பியதாக குர்ஆனில் நாம் பார்க்கின்றோம்.
இன்னும் சில சமுதாயங்கள் இதற்கு அதிகமான நபிமார்களை பெற்றிருக்க கூடும். ஆக நமக்கு முன்னால் எத்தனையோ சமுதாயங்கள் வாழ்ந்திருந்தாலும் கூட ஒரு சில சமுதாயங்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதன் நோக்கம் எந்த சமுதாயங்களின் வாழ்க்கை வழிமுறைகள் பின்னால் வரக் கூடிய சமுதாயங்களுக்கு படிப்பினையாகவும் பாடமாகவும் இருக்கின்றதோ அதை மட்டும் சுட்டிக் காட்டுகிறான்.
உதாரணமாக ஆது சமுதாயத்தைப் பற்றியும் ஸமூது சமுதாயத்தைப் பற்றியும், மத்யன் நகர வாசிகளைப் பற்றியும் இன்னும் பல சமுதாயங்களைப் பற்றியும் குறிப்பிட்டு முந்தைய சமுதாயங்கள் நன்மையான காரியங்கள் செய்திருந்தால் அல்லாஹ்விற்கு விருப்பமான, அல்லாஹ்வின் திருப்தியினை பெறக் கூடிய செயல்களை செய்திருந்தால் பின்னால் வரக் கூடிய செயல்களை செய்திருந்தால் பின்னால் வரக் கூடிய சமுதாயமும் அந்த செயலினை செய்து சுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு குர்ஆனில் கூறுகிறான்.
முந்தைய சமுதாயங்கள் நன்மையற்ற தீமையான காரியங்களைச் செய்திருந்தால் அல்லாஹ்விற்கு விருப்பமற்ற அல்லாஹ்வின் அதிருப்தியினை பெறக் கூடிய செயல்களைச் செய்திருந்தால் அந்த தீய செயல்களிலிருந்து விடுபட்டு நரகத்திலிருந்து பின்னால் வரக்கூடிய சமுதாயம் தங்களைக் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று திருமறையில் அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கிறான்.
இந்த கட்டுரையின் நோக்கமே முந்தைய சமுதாயங்களோடு இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினை ஒப்பிட்டு காட்டுவதுதான்.
முந்தைய சமுதாயங்களைப் பொருத்தவரை இஸ்லாத்தின் அடிப்படையில் அவர்களை மூன்று பிரிவினர்களாக பிரிக்கலாம். முதல் பிரிவினர் அந்த அந்த கால கட்டத்தில் அனுப்பப்ட்ட நபிமார்களை ஈமான்கொண்டு வேதத்தை மெய்ப்படுத்தி தூதர்கள் போதித்த கொள்கையினை ஏற்று முஸ்லிமாக வாழ்ந்தார்கள்.
மற்றொரு பிரிவினர்; அந்த அந்த காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களை ஈமான் கொள்ளாது வேத கட்டளைகளை நிராகரித்து இறைத்தூதர் சொன்ன கட்டளைகளை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாமல் சில சமுதாயத்தவர்கள் இறைத்தூதர்களை கொலையும் செய்து அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்ப்பதையே தங்களது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டிருந்த காஃபிர்கள்.
மூன்றாம் பிரிவினர்; அந்த அந்த காலகட்டத்தில் அனுப்பப்பட்ட நபிமார்களை ஈமான் கொண்ட நபிமார்கள் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து, நபிமார்களின் மறைவிற்கு பின்னால் வேதத்தின் பல பகுதிகளை மறைத்து வேத வரிகளை (வசனங்களை) அதற்குரிய இடத்தில் இருந்து மாற்றி மனித கருநத்துக்களை இணைத்து அல்லாஹ்வின் கோபத்தையும், சாபத்தையும் பெற்றுக் கொண்டவர்களே வேதம் கொடுக்கப்பட்டவர்கள்.
இம்மூன்று வகையினருடன் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினை எந்த சமுதாயத்துடன் ஒப்பிட்டு காட்டுவது? முந்தைய முஸ்லிம் சமுதாயங்களோடு இப்பொழுது வாழ்ந்து கொண்டி ருக்கும் முஸ்லிம் சமுதயாத்தினை ஒப்பிட்டு எழுத வேண்டியதுதானே. இதில் என்ன சிந்திக்க வேண்டி இருக்கின்றது? என்று தோன்றலாம். முஸ்லிம் என்ற பெயர்தான் எஞ்சி இருக்கின்றதே ஒழிய மற்றவைகள் ஒன்றும் முந்தைய முஸ்லிம் சமுதாயங்களோடு ஒப்பிட்டு எழுதும் அளவிற்கு ஒன்றும் இல்லை. இன்றுள்ள முஸ்லிம் சமுதாயத்தின் நடைமுறைகள், செயல் பாடுகள், சுபாவங்கள், வாழ்க்கை வழிமுறைகள் எல்லாம் முந்தைய வேதம் கொடுக்கப்பட்டவர்களுடனும், இறை நிராகரிப்பவர்களுடனும் ஒப்பிட்டு காட்டும் அளவிற்கு இந்த சமுதாயத்தின் அவல நிலை இருக்கிறது.
உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். அல்லாஹ் யூதர்களைப் பற்றி 2:78 வசனத்தில் கூறுகின்றான். அவர்கள் கட்டுக் கதைகளை அறிந்து வைத்திருக்கின்றார்களே தவிர, வேதத்தினை அறிந்து வைத்திருக்கின்றார்களே தவிர, வேதத்தினை அறிந்து வைத்திருக்க வில்லை. இந்த வசனத்தை வைத்துக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தின் பரிதாப நிலையினை சற்று சிந்தித்து பாருங்கள்.
யூதர்கள் வேண்டுமானால் வேதத்தினை தெரிந்து கொள்ளாமல் கட்டுக்தைகளையும், கற்பனை கதைகளையும் தெரிந்து வைத்திருப்பதற்கு காரணம், அவர்களுடைய வேதம் அல்லாஹ் அருள் செய்தது போன்று இல்லை. அவர்களின் முன்னவர் களால் வேதத்தின் பல பகுதிகள் அவர்களுக்கு மறக்கடிக்கப்ப்டு விட்டன. வேதத்தின் பல வசனங்களை அதற்குரிய இடத்திலிருந்து மாற்றி விட்டார்கள். எனவே அவர்களே கட்டுக் கதைகளை தயார் செய்து, பின்னர் இது அல்லாஹ்விடம் இருந்து வந்தது என்று மிகப் பெரிய பொய்யினையும் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
குர்ஆனின் நிலை அதுவல்ல. 1400 வருடங்களுக்கு மேல் ஆகியும் எந்த மாற்றத்திற்கும் இடம் இல்லாமல் இதை இறக்கி அருளிய வல்ல ரஹ்மானே இதனை கியாம நாள் வரை காப்பாற்றுவதற்காக பொறுப்பேற்று இருக்கின்றான. இப்படி ஒரு உயர்ந்த வேதத்தினை பெற்றுள்ள முஸ்லிம் சமுதாயம், வேதத்தை அறிந்து கொள்ளாமல் யூதர்களைப் போன்று கட்டுக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் அறிந்து வைத்திருப்பதை நாம் இன்று பார்த்து வருகின்றோம். இன இழிவு நீங்க இஸ்லாம்தான் ஒரே வழி. உலக ஒற்றுமைக்கு இஸ்லாம்தான் ஒரே வழி. இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம். மாமனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத மற்ற அறிஞர்கள் தலைவர்கள் எல்லாம் இஸ்லாத்தைப் புகழ்கின்றார்கள்.
குர்ஆன், ஹதீஸ் இவைதான் மார்க்கம் என்ற உண்மையினை உணராத ஒரு முஸ்லிம், குர்ஆனைப் பற்றியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய வாழ்வைப் பற்றியும் அறிந்து வைத்திருக்காத ஒரு முஸ்லிம், அப்படி என்ன இஸ்லாத்தில் புனிதம் இருக்கின்றது? பிற சமயத்தவர்கள் சொல்வதைப் போன்று இஸ்லாம் என்று சொல்லி, கதைகளை தானே சொல்கின்றார்கள் என்று நினைக்க கூடிய அளவிற்கு 100 மசாலா, விறகு வெட்டியார் கிஸ்ஸா, திருமுடி இறக்கிய ஹதீஸ் அவ்லியாக்களின் வாழ்க்கை வரலாறு, இறைத்தூதர்களினை பற்றி கற்பனையில் எழுதப்பட்ட கஸசுல் அன்பியா என்று எத்தனையோ கட்டுக் கதைகளை உருவாக்கி இஸ்லாம் என்று சொல்லி வருவதைப் பார்த்து வருகின்றோம்.
நாகூர் ஆண்டவர் கப்பலைக் காப்பாற்றினார்கள்.முஹயதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்கள் இஸ்ராயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூடையில் இருந்த ரூகை பிடிங்கி ஒரு பையனுக்கு ரூகை கொடுத்தார்கள் இறந்தவர்களைப் பேசவைத்தார்கள். ஜெய்லானி அவர்களால் ஒரு திருடன் திருந்தினான். மக்காவில் ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது கியாமநாள் கூடிய விரைவில் வருகின்றது என்று அறிவித்தார்கள்.
ஒரு ஊரில் கப்ருஸ்தானில் ஒருவர் அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இறந்த அவரை அடக்கம் செய்வதற்காக குழியின் அருகே கொண்டு சென்றார்கள். குழி இடம் கொடுக்கவில்லை அந்த குழியில் தேளும், பாம்பும், நெருப்பும் இருந்தது. எங்கு குழி தோண்டினாலும் இந்த நிலை நீடித்தது. இப்படி எந்த பள்ளியைப் பார்த்தாலும் ஆப்பிள் கதை முதற்கொண்டு ஆரஞ்சி கதை வரை சொல்லி வருவதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் பாதையில் மக்களை அழைக்கின்றோம். மக்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்கின்றோம் என்று சொல்லக் கூடிய தப்லீக் சகோதரர்களும் குர்ஆன், ஹதீஸ் தமிழ் மொழி பெயர்ப்புகள் இருந்தும், குர்ஆனையும் ஹதீஸ் நூல்களையும் எடுத்து படிக்காமல், மக்கள் மத்தியில் வாசித்து காண்பிக்காமல் ஜக்கரியா சாகீப் அவர்கள் எழுதிய அமல்களின் சிறப்பு, தப்லீக் தஃலீம் தொகுப்பு போன்ற நூல்களினை படித்து வருவதைப் பார்க்கின்றோம். அதில் உள்ள குர்ஆன் வசனங்களையும், நபிமொழி களையும் ம றுக்கவில்லை. மற்றவைகள் அனைத்தும் மனித் இயற்கைக்கு மாற்றமான, சிந்தனையாளர்கள் எல்லாம் இஸ்லாத்தைத் தவறாக புரிந்து கொள்ள கூடிய அளவிற்கு, கட்டுக் கதைகளும், கற்பனை கதைகளும் அதில் மலிந்து கிடப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
மனித இயற்கைக்கு மாற்றமாக எந்த ஒன்றையும் இஸ்லாம் ஒரு காலமும் போதிக்கவில்லை. அல்லாஹ் மார்க்கத்தை இலகுவாக்கி வைத்திருப்பதாக திருமறையில் கூறுகின்றான். இஸ்லாத்தின் நிலை இப்படி இருக்க, அவர் இத்தனை நாள் ஒளூவோடு இருந்தார். இன்னொரு பெரியார் ஒரே நாளில் இத்தனை குர்ஆன் ஓதி முடித்தார். அந்த யஇய்கு ஒரு நாளில் இத்தனை ஆயிரம் ரகாஅத் தொழுது முடித்தார். சொல்லப்படுகின்றது. கூறப்படுகின்றது. அவருக்கு அசரீரிகேட்டது. இவருக்கு பேரொளி கேட்டது. நாங்கள் சவ்த் ஆப்பிரிக்கா போவதற்கு முன்பே, சவ்த் ஆப்பிரக்காவில் உள்ளவர்களுக்கு நாங்கள் வருவது போன்று கனவில் காட்சியளிக்கப்பட்டது.
ஒரு ஊருக்கு அந்த ஜமாஅத் போனதிலிருந்து தான் அந்த ஊரில் மழை பெய்கின்றதாம். சவ்த் ஆப்பிரிக்கா போகும் போது காட்டின் வழியாகத்தான் போக முடியுமாம். அப்படி போகும் போது அமீர் திடீர் என்று கட்டளை பிறப்பித்து இங்கே இரண்டு ரகாஅத் நபில் தொழவேண்டும் என்று சொன்னாராம். இந்த ஜமாஅத்தினை அழைத்து போகும் டாக்ஸி ஓட்டுனர் மாற்று மதத்தவர்(கிறித்துவர்) என்ன சொல்கின்றீர்கள். இது மிருகங்கள் நிறைந்த பகுதி. இங்கே இறங்கி நீங்கள் தொழுகை நடத்துவதா? என்று கேட்டாராம்.
அமீர் டாக்ஸி ஓட்டுநரை கட்டாயப்படுத்தி வண்டியை நிறுத்தி, ஓட்டுனர் தவிர அனைவரும் அவர்களை சூழ்ந்து சிறிது தூரம் தள்ளியே நின்று கொண்டதாம். இதை பார்த்த ஓட்டுனர் இஸ்லாத்தை தழுவினாராம். இது ஆரியர்கள் கொண்டு வந்த கற்பனை கதைகளை எல்லாம் மிஞ்சி விட்டது. அற்புதங்களை காட்டி மக்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவில்லை என்று முஸ்லிம் அல்லாத குமரிஅனந்தன் கூட சமரசத்தில் கட்டுரை எழுதி உள்ளார். அன்று வாழ்ந்த நபிகளார் அவர்களை அற்புதங்கள் செய்து நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன்; வஹீயின் மூலம் இறக்கி வைக்கப்படுகின்றதே இந்த குர்ஆன் ஒன்றே அவர்களுக்கு போதாதா என்று கேட்கின்றான்.
குர்ஆனை மாற்று மதத்தவருக்கு கொடுத்தேன். குர்ஆனை மாற்று மதத்தவருக்கு கொடுத்தேன். அவர் அதனை படித்துப் பார்த்து விட்டு இஸ்லாத்திற்கு வந்தார் என்று சொல்வதில் தான் ஒரு முஸ்லிமிற்கு பெருமை அற்புதங்களிலேயே மிக பெரிய அற்புதம்; அதை விட்டு விட்டு நம்பவே முடியாத கட்டுக் கதைகளை எல்லாம் இஸ்லாம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதைக் கேட்டு கொண்டே இருக்கிறோம். அதற்காக தப்லீக் சகோதர்களைக குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. இந்த கட்டுரையினை எழுதுகின்ற நானும் தப்லீக்கில் இருந்ததுண்டு.
நான் தப்லீக்கில் சென்றபோது அவர்கள் கூறிய சிலவற்றை இங்கு எழுதி உள்ளேன். அவர்கள் நன்மையினை மட்டும் ஏவுகின்றார்கள். அல்லாஹ் தடுக்க சொல்கின்ற தீமையினை தடுப்பதில்லை. இஸ்லாத்தின் அடிப்படை எதுவோ அதனைப் புறக்கணித்து விட்டு மனித கற்பனைகளால் எழுதப்பட்ட புத்தங்களை எல்லாம வேத அந்தஸ்து கொடுத்து படித்து வருகின்றார்கள். இது மார்க்க பிரச்சாரம் செய்பவருடைய நிலை.
இஸ்லாத்தைப் போதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தமிழக அரபி கல்லூரிகளின் நிலையும் இது தான். இஸ்லாத்தின் அடிப்படையைச் சொல்லிக் கொடுக்காமல் யூதர்களும், கிறித்தவர்களும் எவ்வாறு தமது கைகளால் எழுதி வைத்து கொண்டு பின்னர் இது கர்த்தர் இடம் இருந்து வந்தது என்று கதையினை அவிழ்த்து விடுகின்றார்களோ அதே போன்று கன்னியமிக்க இமாம்களின் பெயரால் இவர்களாகவே சில நூற்றாண்டு களுக்கு முன்னால் எழுதப்பட்ட பிக்ஹு நூல்களையும், கட்டுக் கதைகளையும மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் வரும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள். எந்த ஒரு நபியின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அல்லாஹ்தான் முந்தைய நபிமார்களைப் பற்றி அறிவித்து கொடுக்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலையே இப்படி இருக்கும் போது – நபிமார்களைப் பற்றி அறிவித்து கொடுக்கிறான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நிலையே இப்படி இருக்கும்போது – நபிமார்களின் பெயரால் அல்லாஹ் குர்ஆனில் கூறாத- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறாதவைகளை எல்லாம் மண்டு சம்சு என்பவர் தானாக கற்பனை செய்து -ஒரு கற்பனை காவியமாய் நபிமார்கள் வரலாறு என்ற பெயரில் அரங்கேற்றி உள்ளார். இதனை மதரஸாவின் பயிலும் அனைத்து ஆலிம்களும் படித்து அவர்கள் ஏறும் அனைத்து குத்பா மேடைகளிலும் மண்டு சம்சுவின் ஆகாச புளுகை மொழிகின்றார்கள். இப்படி குத்பா மேடைகளிலும் கதைகள். அல்லாஹ்வின பாதையில் மக்களை அழைக்கின்றோம் என்று சொல்பவர்களிடத்திலும் கதைகள். இஸ்லாத்தைப் போதக்கின்ற கல்லூரிகளிலும் கதைகள். இப்படியாக நமது முஸ்லிம் சமுதாயத்தின் நிலைகள், யூத சமுதாயத்தை ஒத்து இருக்கின்றதா இல்லையா என்பதை முஸ்லிம் சமுதாயத்தவர்களாகிய நாம் சந்தித்து பார்க்கக் கடமைபட்டு இருக்கின்றோம்.
முஸ்லிம் பொதுமக்கள் இஸ்லாத்தின் பெயரால் கட்டுக் கதைகளையும், கற்பனை கதைகளையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா? என்றால் இல்லை. மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்கு முன்பே மதரஸாவிற்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒரு முறையான ஒரு கல்வியே இல்லை. மார்க்க இதழ்களை வாங்கின்றார்கள். 40 நாள் நான்கு மாதம் என்று தப்லீக் செல்கின்றார்கள். மார்க்கத்தை அறிந்துக் கொண்டு மார்க்க அறிஞனாக திகழவேண்டும் என்ற ஆர்வத்தில் கல்லூரிக்குச் செல்கிறார்கள்.
இப்படி முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் எங்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் சிலவைகள் நீங்கலாக அதிகமானவைகள் கதைகள். திருமறை குர்ஆனைப் படிக்க தூண்ட வேண்டிய ஆலிம் பெருமக்கள் இது உங்களுக்கு புரியாது. இதற்கு 64 கலைகள் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். இந்த பொய் பிரச்சாரத்தைச் செய்யும் ஆலிம்கள் சிந்திக்க கடமைபட்டு உள்ளார்கள். இனி உருவாகக் கூடிய இளைய சமுதாயம் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், சிந்திக்கக் கூடியவர்களாகவும் உருவாகி வருகிறார்கள்.
நான் சிறுவனாக இருக்கும் போது வெற்றிலைப் பாக்குத் தின்னாதே; கோழி முட்டும் என்று சொல்லி பயம் காட்டுவார்கள். நான் சிறுவனாக இருக்கும்போது கேட்ட அந்த வார்த்தையினை இன்றுள்ள சிறுவர்களிடத்தில் சொன்னால் கோழிக்கு எங்கே கொம்பு இருக்கின்றது? என்று நம்மைப் பார்த்துக் கேள்விக் கேட்கும் சிந்தனை மிக்கவர்களாய் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ் இவை இரண்டு மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் முஸ்லிம் சகோதர்கள் அனைவர்களும் நமது சமுதாயத்தை குர்ஆன், ஹதீஸ் தமிழாக்கத்தைப் படிப்பதற்குத தூண்ட வேண்டும். இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள கதைகளைக் களைய முயற்சி செய்யவேண்டும். இதில் நாம் கவனக் குறைவாக இருந்தோம் என்று சொன்னால் வரக் கூடிய இளைய சமுதாயம் இஸ்லாத்தைத் தவறாக புரிந்துக் கொண்டு இஸ்லாத்தை முஸ்லிம்களே விமர்ச்சிக்க முற்பட்டாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை.
அப்படித்தான் முஸ்லிம் பெயர்தாங்கிகளான சல்மன் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் போன்றோர் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொண்டு விமர்சித்துள்ளார்கள். இஸ்லாத்தின பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இட்டுக் கட்டப்பட்ட கற்பனைகளையும், கதைகளையும் களைவதில் நாம் ஆர்வம் குன்றி இருந்தோம் என்றால் இன்னும் பல சல்மன் ருஷ்டிகளும், தஸ்லீமா நஸ்ரீன்களும் வந்துகொண்டே இருப்பார்கள். அல்லாஹ்(ஜல்) இந்த இழிவிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைக் காப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
source: http://annajaath.com/?p=4771