…இடிப்பது …தடுப்பது – இரண்டும் குற்றமே!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து போராடும் சகோதரர்கள் போராட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்பதை ஞாபகப்படுத்துவதே நமது நோக்கம்.
அந்த ஒரு நாளை மட்டும் பாப்ரி மஸ்ஜிது மீட்டெடுப்புக்காக போராடும் நாம் அதைவிட மிக மிக முக்கியமான பல விஷயங்களை மீட்டெடுக்க வேண்டிய உள்ளது.
ஆம்! உண்மையாகவே அல்லாஹ்வுக்காக நாம் இப்போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் அதைவிட முக்கியமான ஒரு விஷயத்துக்காக போராட வேண்டியது அதனிலும் முக்கியம்.
நபிவழியில் தொழுபவர்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் கொடூரமான காட்டுமிராண்டித்தனம் இன்னும் சில ஊர்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
பள்ளிவாசலை இடிப்பது எவ்வாறு குற்றமோ அதுபோல் பள்ளிவாசலுக்குள் நபிவழியில் தொழுவதை தடுப்பதும் குற்றமே.
“ஒரு முஃமினின் உயிர் மானம் மரியாதை கஃபத்துல்லாஹ்வை விட உயர்வானது” என்று ஒரு முஃமினின் அந்தஸ்தை, அல்லாஹ்வின் புனிதமிக்க இறையில்லத்தைவிட உயர்வானது என்று பகர்ந்தார்களே அந்த உத்தம தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்! அதனை நாம் முழுக்க முழுக்க உதாசீனப்படுத்திவிட்டு அதற்கு எதிர் திசையில் பயணித்ததால் வெற்றி கிட்டுமா? அல்லது அல்லாஹ்வின் கோபப் பார்வையிலிருந்து தான் தப்ப முடியுமா?
இந்த சமுதாயம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து ஒற்றுமையாக செயல்படாதவரை அல்லாஹ் ஒருபோதும் வெற்றிக்கணியை அவர்களுக்கு அளிக்க மாட்டான் என்று தெரிந்திருந்தும் நேரத்தையும் காலத்தையும் வீண் விரயம் செய்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
முஸ்லிம்களுக்கு உண்மையான கண்ணியமும் வெற்றியும் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் முதலில் ஒருவருக்கொருவர் குறை சொல்லித்திரிவதையும், ஒருவர் மற்றவரின் கண்ணியத்தை சீர்குலைப்பதில் காட்டும் வெறித்தனமன செயல்பாடுகளையும் விட்டு நீங்கி இருக்காதவரை இதுபோன்ற போராட்டங்களால் பாப்ரி மஸ்ஜிதை மட்டுமல்ல, நமது கண்ணியத்தையும், அச்சமின்றி வாழும் சுதந்திரத்தையும் கூட மீட்டெடுக்க முடியாது.
ஆம்! மிக உறுதியாக சொல்லலாம் ஒரு முஸ்லிம் மற்ற சக முஸ்லிமின் உயிருக்கும், கண்ணியத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும் காலமெல்லாம் அவர்களால் எந்த மஸ்ஜிதின் துரும்பை கூட மீட்டெடுக்க முடியாது. காரணம்….. “ஒரு முஃமினின் உயிர் மானம் மரியாதை கஃபத்துல்லாஹ்வை விட உயர்வானது”
அல்லாஹ் முஸ்லிம்களின் உள்ளங்களை சீர்படுத்துவானாக, முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் தவ்ஃபீக் செய்வானாக.
– எம்.ஏ.முஹம்மது அலீ