அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மிகப்பெரும் பரிசு அல்குர்ஆன்
H.சைய்யது நிஜாமுல்லாஹ், சேலம்.
புனித குர்ஆன் அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மிகப் பெரும் பரிசாகும். எல்லா ஞானங்களும் யாரிடம் தோன்றி யாரிடம் முடிவு அடைகின்றதோ அந்த அருளாளன் இடமிருந்து வந்ததால் அலர்குர்ஆன் ஞானம் நிரம்பியுள்ளதாக இருக்கிறது. மனிதனுடைய பிரச்சனைகள் வாழ்க்கையின் எத்தகைய நிலையில் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கு அழகிய தீர்வுகளை குர்ஆன் அளிக்கிறது. மேலும் வாழ்வியல் சிக்கல்களை எதார்த்தமாக அணுகுவதோடு தலை சிறந்த தீர்வுகளை சத்திய கண்ணோட்டத்துடன் அணுகி அது குறைகளை தீர்க்கிறது.
இணையில்லாத அதன் அமைப்பும், பாங்கும், போதனைகளை அளிக்கும் அழகும் படிப்பவர்களை பரவசப்படுத்துவதாகும். கடந்த கால வரலாறுகளை விவரிப்பதனால் தலைச்சிறந்த வரலாற்று நூலாகவும், அழகிய சொற்றொடர் அமைப்புகளால் மேன்மையான இலக்கிய நூலாகவும், எந்த தவறும் இல்லாததால் இலக்கண சுத்தமான இலக்கண நூலாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி அறிவியல் விபரங்களை அள்ளித் தருதுவதில் விஞ்ஞானிகளே பிரமித்துப் போகும் அளவிற்கு முதல் தரமான அறிவியல் சான்றாகவும், வானவியல் நூலாகவும் விளங்குகிறது.
திருமண சட்டங்கள், வாரிசு சட்டங்கள், விவாகரத்து சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், அவற்றிற்கான தண்டனைகள், அபராதங்க்ள ஆகியவற்றை தெள்ளத தெளிவாக குறிப்பதில் நிகரில்லா சட்ட நூலாகவும் இருக்கிறது.
மக்கள் மனதில் ஊசலாடும் எண்ணங்கள், கருத்துக்கள், படைத்தவனைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் அவர்களுடைய எண்ணற்ற கேள்விகளுக்கு தக்க பதில்களை அளித்து அவர்களை உளவியல் ரீதியாக அணுகி தீர்ப்பதால்,ஒப்பில்லா உளவியல் நூலாகத் திகழ்கிறது. மருத்துவ நூலாகவும் சத்தியத்தை மட்டும் போதிப்பதால் சத்திய போதனையாக அல்குர்ஆன் மட்டுமே இருக்கிறது. மனித சமுதாயத்தின் எந்த ஒரு பாகத்தையும். வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும் புனித குர்ஆன் தொடாமல் விட்டதாக, சொல்லாமல் விட்டதாக யாரேனும் நிரூபிக்க இயலுமா? 1400 ஆண்டுகளாக முயற்சி செய்து முயற்சி செய்து அறிவுலகம் களைத்துப் போய், அல்குர்ஆன்! இதற்கு நிகரான புத்தகமே இல்லை! என்று கூறி ஸ்தம்பித்து நிற்கிறது.
இதன் ஓசை நயத்திலும், அழகிய ரீங்காரத்திலும் உலகப் புகழ்ப் பெற்ற பாடகர்கள், ‘கேட் ஸ்டீவன்கள்” சொக்கிப் போய் ‘யூசுஃபுல் இஸ்லாமாக” மாறி ஓதி, ஒதி இன்புற்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.
அறிவியல் கூறும் குர்ஆன்.வரலாறு கூறும் குர்ஆன்,சட்டங்களை கூறும் குர்ஆன் என்று கூறுவதைவிட மனித குலத்தை உய்விக்க ஒரே வழி குர்ஆன் கூறும் வழி என்ற சொல்லிவிடலாம்.
குர்ஆன் கூறும் ஞானம் அளவிடற்கரியது. நன்மை தீமைகளை அது பிரித்தறிவிக்கிறது. நேர்வழி எது வழிகேடு எது என்பதை அறிவார்ந்த வாதங்களோடு எடுத்துரைக்கிறது. படிக்க படிக்க அறிவை ஊற்றெடுக்க உதவுகிது. படிப்பினைகளை கொடுத்து சிந்தனையை தட்டி எழுப்பி இதயங்களை வேகங் கொள்ள வைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனி ஒரு மனிதராக சத்தியப் பயணத்தை இவ்வுலகில் துவங்கிய போது அவர்களது ஒரே ஆற்றலாக இந்த குர்ஆன் விளங்கியது. சத்தியப்பாதையில் யார் யார் பயணம் மேற்கொள்கின்றாரோ அவர்களனைவருக்கும் இன்றும் என்றும் குர்ஆன் ஒரு மிகப் பெரிய ஆயுதமாக விளங்குகிறது; இன்னும் விளங்கும்.
உலகத்தின் மிகமிகப் பின்தங்கிய பாகத்தில் இருட்டில், அறியாமையில் ஆழ்ந்திருந்த, மோசமான நிலையில் மூழ்கியிருந்த சமுதாயத்தை அல்லாஹ்வின் வார்த்தைகளான இந்த குர்ஆன் கொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகிற்கே உலகம் அழியும் வரை நேர் வழிகாட்டக்கூடிய சுமதாயமமாக மாற்றிக் காட்டினார்கள்.
இந்த குர்ஆன் எங்கே தங்கள் இருதங்களை ஊடுருவி விடுமோ என்று அஞ்சி அறியாமைம தன் காதுகளை பொத்திக் கொண்டு இதன் ஓசையைக் கூட செவிமடுக்காமல் பயந்து ஓடியது.
வாக்குவாதங்கள், வாதத் திறமைகள், சவால்கள் இந்த குர்ஆன் அளித் ஞானத்தின் முன் மங்கிப் போய் அணைந்து போயின. ஏன நாயன் இதை ஆன்மாவாகவும், ஒளியாகவும், நேர் வழியாகவும் குறிப்பிடுகிறான்.
“(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம். (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்றால் நீர் அறிபவராக இருக்கவில்லை.எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்புவோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் (மக்களுக்கு) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்.” (புனித குர்ஆன் 42:52)
மேலும் அல்லாஹுதஆலா கூறுகின்றான்.
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானல், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். (புனித குர்ஆன் 59:21)
புனித குர்ஆன் இறையச்சத்தை அதிகரித்து, இதயங்களை நடுநடுங்க வைத்து, ஆத்மாவை தூய்மைப்படுத்தி, அறிவை நேர்வழியில் செலுத்தி இறுகிப்போன இதயங்களை இளக வைத்து நேர்வழி என்னும் ஒளியைப் பாய்ச்சுகிறது. குர்ஆன் அளித்த இந்த ஞானம் இல்லாவிட்டால்? அந்த நிலையை எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது! இறைவன் எவ்வளவு பெரிய அருளாளன் என்பதற்கு சாட்சியாக அல்லவா புனித குர்ஆன் விளங்குகிறது?
அல்குர்ஆனின் மிக முக்கிய மற்றொரு அம்சம் அதன் பயன்பாட்டு அம்சமாகும். அதன் சட்டங்கள், ஆணைகள், ஏவல்கள், விலக்கல்கள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற மிகமிக எளிதானவை. ஒவ்வொரு அம்சத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடியவை. நடைமுறைக்கு சாத்தியமில்லாத எதையுமே புனித குர்ஆன் கூறவேயில்லை. அது நிறைவேற்ற சொல்லும் நடைமுறைகள் சென்றடைய இயலா வார்த்தை ஜாலங்களால் புனையப்பட்ட இலக்குகள் அல்ல.
மனிதன் யார் என்பதை அவனுக்கு அல்குர்ஆன் உணர்த்துகிறது.என்னவாக அவன் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. கருவிலிருந்து கல்லறை வரை அவனை சபிக்கப்பட்டவனாக, பாவியாக கருதவில்லை. கைவிடப்பட்ட ஆத்மாவாக. நம்பிக்கை இழந்த படைப்பாக அவனை உதறித் தள்ளவில்லை. அவனை விரக்தியடைந்த சொற்களால் தடுமாற விடுவதில்லை.
மாறாக மனிதன் உன்னத படைப்பு என்று கூறுகிறது. அழகிய சிந்திக்கக் கூடிய, கண்ணியமிக்க படைப்பு என்ற விளம்புகிறது. அல்லாஹ்வின் அளப்பருங் கருணையை கொண்டு நன்மாராயங் கூறி அவனை கண்ணியப்படுத்துகிறது.அழகிய அறிவு சார் போதனைகளைக் கூறி அவனை தேற்றி மனோபலத்தை கூட்டுகிறது.
குர்ஆனை எவ்வாறு நடைமுறையில் பின்பற்ற வேண்டும்? அதன் போதனைகளை வாழ்க்கையில் அப்படியே கொணர மிக அழகிய உதாரணம் நபி(ஸல்) அவர்களாகும். அவர்கள் காட்டிய அறநெறியில் குர்ஆனை செயல்படுத்திக் காட்டிய ஸஹாபாக்கள், இன்னும் கண்ணியமிக்க முஸ்லிம்கள் நடைமுறை உதாரணங்களாகும்.
மனித குல நன்மையில் தன் பங்கை குர்ஆன் வகித்த அளவு வேறு எந்தப் புத்தகமோ, அறிவுரையோ நிறைவேற்றவே இல்லை என்பது ஆதாரப்பூர்வமான உண்மையாகும்.
புனித குர்ஆனே ஓர் அற்புதம், அதிசயம்! என்று அறிவுலகம் வியந்து நிற்கிறது. அது ஒரே இறைவனாகிய அல்லாஹ்விற்கும். மனிதனுக்கும் உள்ள தொடர்புகளை விளக்கி கூறுகிறது. தனிப்பட்ட முறையிலும் கூட்டு முறையிலும் மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எளிமையாக்கி கூறுகிறது.
மனிதனுடைய தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கும் வழி எப்படி இருக்க வேண்டும் என்பதை அது கூறுகிறது. மேலும் குர்ஆனை பின்பற்ற கூடிய மக்களை முஸ்லிம்களை அது நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளது.
“….நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்ஸ” (அல்குர்ஆன் 2:143)
இந்த நடுநிலையின் காரணமாக மனித சமுதாயத்திலேயே சிறந்தவர்களாக சிறப்பித்துக் கூறுகிறது.
“மனிதர்களுக்காக தோற்றவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கெர்ளகிறீர்கள்.” (புனித குர்ஆன் 3:110)
புனித குர்ஆனின் ஞானம் மூன்று விதங்களில், கோணங்களில் செயல்படுகிறது. ஒன்று உட்புறமாக செயல்படுகிறது. மனித மனதுகளில் ஆழமாக ஊடுருவிப் பாய்கிறது. அது அல்லாஹ்வின் பால் இருந்து வந்ததாலும் அது அல்லாஹ்வின் பாதை எது என்பதை தெள்ளத தெளிவாக விளக்குவதாலும் ஒரு தனிமனிதனின் இருதயத்தில் வேரிடுகிறது. அல்லாஹ்வின் பெயரால் அல்குர்ஆன் வசனங்கள் குறிப்பிடப்படுவதால் மனிதமனம் ஆத்மார்த்தரீதியாக தன்னை மறு பரிசீலனை செய்து கொண்டு அல்குர்ஆன் ஒளியில் திருத்திக் கொள்கிறது. இந்த உட்புறச் செயல்பாடு வலுவான இறை நம்பிக்கையை அடித்தளமாக கொண்டிருப்பதால் இதன் விளைவுகள் அபரிமிதமானவை. மனித செயல்கள், எண்ணங்கள் அல்லாஹ்வின் கூற்றுக்கு செவிமடுத்து செயல்பட வைக்கின்றன.
அடுத்து வெளிப்புற செயல்பாடுகளாகும். புனித குர்ஆன் போதனைகள் எல்லாதரப்பு மக்களையும் எல்லா இனத்து மக்களையும் வேற்றுமை பாராமல் அரவணைத்து செல்லக் கூடிய வழிகளை காண்பிக்கிறது. தனி ஒரு மனிதனின் வாழ்க்கைப் பிரச்சனைகளில் இருந்து சர்வதேச பிரச்சனைகள் வரை அது தீர்த்து வைக்கிறது.
இன்று உலகில் உள்ள மனித சட்டங்கள். நடைமுறைகள், அறிவியல் ஆய்வுகள் தொடாத எத்தனையோ விஷயங்களை அல்குர்ஆன் சென்றடைந்து அவற்றை தீர்க்கிறது.
மதசார்பற்ற அரசுகள், அவற்றின் சட்டங்கள், இன்ன பிற மதங்கள் அவற்றின் சட்ட திட்ட நடை முறைகள் கண்டே இராத விளிம்புகளை புனித குர்ஆன் தொட்டுக் காட்டுகிறது. மனிதர்களுடைய நடைமுறைகளுக்கு அல்குர்ஆன் இறைவனுடைய அச்சத்தைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் அடிப்படையாக வைத்து போதிப்பதன் மூலம் புதிய பரிணாமத்தை கொடுக்கிறது.
செயல்களின் மூலம் இறைவனின் திருப்தியை பெற வேண்டும் என்று வழிகாட்டுவதன் மூலம், மனிதனின் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை கருத்தூன்ற வைத்து வெளிக் கொணர்கிறது.
மூன்றாவதாக ஒரே இலக்கு நோக்கி மனிதனை ஒரு முகப்படுத்துவதாக இருக்கிறது. இறைவன் ஒரே ஒருவன் என்றும், அவனால் படைக்கப்பட்டு, வாழ்க்கையளிக்கப்பட்டு, மீண்டும் அவனிடமே திரும்ப வேண்டும் என்ற சத்தியத்தை கூறுவதன் மூலம் புனித குர்ஆன் மக்களை ஒரே குறிக்கோளின் பக்கம் ஒருமுகப்படுத்துகிறது.
மனிதன் இறைவனுடைய பிரதிநிதி மட்டுமே. அவனுடைய படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதே. அவன் அனுப்பிய தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதனால் அவன் அல்லாஹ்விற்கே கட்டுப்படுகிறான்.
தன் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் அவன் கணக்குத் தர வேண்டியிருப்பது சத்தியமான உண்மையாகும். இதிலிருந்து அவன் எங்கும் தப்ப இயலாது. இவற்றை போதிப்பதன் மூலம் புனித குர்ஆன் மனித நடைமுறைகளில் உள்ள தவறான ஆசாபாசங்கள். வரம்புகளை மீறல் ஆகியவற்றை ஒழித்து விடுகின்றது.
பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரும் மனித உடலியல் கூறுகளை ஆராய்ந்த அறிவியல் அறிஞர், கடலியல், வானவியல் ஆகியவற்றில் தேர்ந்த விஞ்ஞானி டாக்டர் மாரீஸ் புகைல் அவர்கள் புனித வேதமாம் குர்ஆனைப் பற்றி எழுதிய ஆராய்ச்சி நூலின் இறுதி பாகத்தில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. அவர் எழுதுகிறார்.
(த பைபிள் த குர்ஆன் அன்ட் சைன்ஸ் பக்கம் 251)
“இன்றைய நவீன அறிவியல் உலகத்தின் சான்றுகளுடன் அல்குர்ஆனின் வசனங்கள் முழுமையாக ஒத்து வருகின்றன. விஞ்ஞானத்துடன் தொடர்புடைய கருத்துக்கள் இதில் மிக அழகாக எடுத்துக் காட்டப்படுகின்றன. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எந்த மனிதராலும் இந்த விஷயங்களைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் ஆசிரியர் என்பதை எவராலும் நினைத்துக் கூட பார்க்க இயலாது.
இதில் பிரம்மிக்கதக்க விஷயம் என்னவெனில் 1416 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதர் இந்த நூலை படிக்கும் போது அன்றைய காலகட்ட அறிவியல் முன்னேற்றத்திற்கு மிகச் சரியாகச் பொருந்துவதை நிச்சயம் காண்பார்கள்.
நான் பைபிளை ஆராயும் போது நவீன விஞ்ஞானத்தின் விஷயங்களுக்கு சற்றும் பொருந்தி வராத வசனங்களுக்கு கணக்கே இல்லை. ஆனால் அல்குர்ஆனிலோ ஓர் அணுவளவு தவறினை கூட என்னால் காண இயலவில்லை. புனித குர்ஆனுக்கும், பைபிளுக்கும் மிகப் பெரும் வேற்றுமைகள் உண்டு.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறப்படும் ஹதீஸ்களில் உண்மையானவற்்ற தனியாகவும், பொய்யானவற்றை தனியாகவும், பலவீனமானவை, இடைச்செருகலானவை என்றும் தனித்தனியே பிரித்தெடுத்து மிக்க கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் விஞ்ஞானத்திற்கு மிகச் சரியாக பொருந்தி வருகின்றன.
அல்குர்ஆனுக்கு ஈடு இணையாக எந்த அறிவுரையுமே இல்லை. அல்குர்ஆனின் வசனங்களை நவீன விஞ்ஞான முன்னனேற்றத்தோடு ஒப்பிடுகையில் ஆச்சரியமும் அபரிமிதமான வியப்பும் மேலிடுகிறது. இதில் மனிதர்களின் கையே படவில்லை என்பதற்கு காலத்தை வென்று நிற்கும் இதன் கருத்துக்கள் சாட்சியாகும்.
அதுமட்டுமின்றி இன்று நவீன அறிவியல் உலகத்தின் கண்டுபிடிப்புகளை மக்களின் வழக்கு மொழிகளில் விளக்குவது என்பது நமக்கு ஒரு பெரும் சவாலாக விளங்குகின்றது. ஆனால் புனித குர்ஆனோ மிகமிகச் சரியான வார்த்தைப் பிரயோகங்களினால் எளிதாக விளக்குகிறது. எக்காலத்திற்கும் பொருந்தியும் வருகிறது.
சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் ஆளாக்கும் இரு செயல்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து மக்களை சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் ஆளாக்கும் இரு செயல்கள் என்ன? என்று கேட்க, அதற்கு அவர்கள் “எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காது மரணமாகி விடுகிறாரோ அவர் சுவர்க்கத்திற்கு (ஆளாகி அதில்) புகுந்து விடுவார்.”
எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த நிலையில் மரணமாகி விடுகிறாரோ. அவர் நரகத்திற்கு (ஆளாகி அதில்) புகுந்து விடுவார் என்றார்கள். (ஜாபிருபின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
source: http://annajaath.com/?p=4051