அல்லாஹ் மனிதர்களை எவ்வகையில் சிறப்பினமாக படைத்துள்ளான்?
கேள்வி : அல்லாஹ் குர்ஆனில் மனிதர்களை மற்ற படைப்புகளை விட மிக சிறப்பானப் படைப்பாக படைத்துள்ளதாக சொல்கிறான். இதை சிந்திக்கும் வேளையில் குர்ஆனின் வேறு சில வசனங்களில் ஜின்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் மனிதர்களை விட வல்லமை படைத்தவர்களாக அல்லாஹ் விவரிக்கின்றான்.
வானங்களுக்கு மேலேச் சென்று சொர்க்கத்தில் பேசப்படும் விஷயங்களை செவியேற்று வருகிறார்கள் (தற்சமயம் அவர்கள் அவ்வாறு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவேன்). ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக் கட்டத்தில் உள்ள மனிதர்களாகிய நம்மால் நம்முடைய பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்தையே எட்ட முடிந்துள்ளது.
நாம் இன்னும் கண்டுபிடித்திராத எத்தனையோ பிரபஞ்சங்கள் உள்ளன என்பது தனி விஷயம். விண்வெளி ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்க்கும்போது ஜின்கள் இவ்வாறு வானங்களுக்கு மேல் சென்று வருவது மிகவும் பிரம்மிக்கத்தக்க செயலாகும். இவர்களது பயணத்தோடு ஒப்பிடும்போது நாம் ஜூபிடருக்கோ, மார்ஸூக்கோ போய் வருவது பெரிய காரியமில்லை. (கொலம்பியா என்ற வின்வெளி ஓடத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் மறந்து விடவில்லை).
மேலும் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வரலாறில் அவர்கள் உத்தரவிட்டதும் தெலைதூரத்தில் உள்ள ஒரு மன்னனின் அரியணையை ஒரு ஜின் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொண்டு வந்து அவர்கள் முன்னால் வைத்து விடுவதாக சொல்கிறது. நேரத்தையும், தூரத்தையும் வென்று விடக்கூடிய வல்லமையை அல்லாஹ் ஜின்களுக்கு இவ்வாறு வழங்கியிருக்கும்போது, மனிதர்களை நினைத்துப் பாருங்கள் இது நம்மால் சாத்தியமா என்று! ஆக அல்லாஹ் எதனால் மனிதர்களை சிறப்பான படைப்பு என்று கூறுகிறான்?
இதே போல் நான் மலக்குகளைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறேன். என்னே அற்புதமான படைப்புகள் அவர்கள். நினைத்த மாத்திரத்தில் வானங்களை எல்லாம் கடந்து பூமிக்கு வருகிறார்கள். எந்தத் தடையுமின்றி கப்ருகளுக்கு உள்ளேயிருந்து நேரே சுவர்க்கம் வரை சென்று வருகிறார்கள். பசியோ, தாகமோ, களைப்போ, உறக்கமோ அவர்களுக்கு கிடையாது. நம்மை எடுத்துக் கொண்டால் இந்த பலகீனங்களுக்கெல்லாம் நாம் தினந்தோறும் உள்ளாகிறோம். நோயையோ, மரணத்தையோ நம்மால் தவிர்க்க முடியாது. ஆக நாம் படைப்பினங்களில் சிறந்தவர்கள் என்றால் அல்லாஹ் நம்மை ஜின்களை விடவும், மலக்குகளை விடவும் சக்தி மிக்கவர்களாக அல்லவா படைத்திருக்க வேண்டும்?
அதோடு மட்டுமில்லாமல் ஜின்களையும், மனிதர்களையும் பற்றி வருகின்ற எல்லா வசனங்களிலேயும் அல்லாஹ் ஜின்களைத்தான் முதலில் குறிப்பிட்டுள்ளான்.
இந்த கேள்விகளை எழுப்புகிற அதே சமயத்தில் அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மனிதராக படைத்து அவர்களுக்கு மலக்குகளையும், ஜின்களையும் சுஜூத் செய்யச் சொல்கிறான் என்பதையும், தன்னுடைய நபிமார்களுக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவிகள் செய்வதற்கு மலக்குகளையும், ஜின்களையும் அல்லாஹ் பயன்படுத்தியும் உள்ளான் என்பதையும், இன்னும் நமக்கு தேவையான உதவிகளையும் அல்லாஹ் அவர்களைக் கொண்டே இப்போதும் செய்து வருகிறான் என்பதையும், சுலைமான் நபிக்கு கட்டுபடும்படி ஜின்களை பணித்தான் என்பதையும் உணர்ந்து நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
அல்லாஹ் மனிதர்களை எவ்வகையில் சிறப்பினமாக படைத்துள்ளான் என்பதுதான் எனது கேள்வி?
பதில் : கேள்வியும் நானே.. பதிலும் நானே… என்பது போல மேலே கேள்வியை எழுப்பிவிட்டு அதற்கு நெருக்கமான பதிலை கீழே கொடுத்தும் உள்ளீர்கள். ஆனாலும் விளங்கும் விதமாக இன்னும் கூடுதலாக விளக்குவோம்.
இறைவனின் படைப்பினங்களில் எல்லாவற்றையும் விட மனிதனே சிறந்தப் படைப்பு என்று குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
”ஆதமுடைய சந்ததியை மேன்மைப் படுத்தியுள்ளோம்.” (அல் குர்ஆன் ) என்றும்,
மனிதனை மிக்க அழகான வடிவத்தில் (பகுத்தறிவுத் தோற்றம்) படைத்திருக்கிறோம் (அல் குர்ஆன் 95:4) என்றும் தான் இறைவன் கூறுகிறான்.
இதைத்தான் நீங்கள் எல்லாவற்றையும் விட சிறந்த படைப்பு என்று விளங்கி விட்டீர்கள் போலும். மனிதன் சிறப்பிக்கப்பட்டுள்ளான் என்பது உண்மை ஆனால் ‘எல்லாவற்றையும் விட’ என்பது கிடையாது. ஒரு விதத்தில், ஒரு காரியத்தில், ஒரு நேரத்தில், ஒரு விஷயத்தில் ஒன்று சிறந்து விளங்கினால் அது எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி விட்டது என்று புரிந்துக் கொள்ளக் கூடாது.
நன்மையை தீமையை பிரித்துணரும் அறிவோடு படைக்கப்பட்ட மனிதன், கற்றுணர்ந்து போதிக்கும் தகுதியைப் பெற்றுள்ள மனிதன் ஒரு சந்தர்பத்தில் மலக்குகளுக்கு பாடம் நடத்தியுள்ளான் என்பதால் அவன் எல்லாவிதத்திலும் மலக்குகளை விட சிறந்தவன் என்ற நிலையைப் பெற்றுவிட மாட்டான். மலக்குகளின் வணக்கங்களுக்கும் கீழ்படிதலுக்கும் முன் மனிதர்களின் வணக்கமும் கீழ்படிதலும் ஒன்றுமே கிடையாது. அந்த விஷயத்தில் என்றைக்கும் மலக்குகள் தான் உயர்ந்து நிற்பார்கள்.
கல்வியில் மனிதன் உயர்ந்தவன் – சிறப்பிக்கப்பட்டவன் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவே மலக்குகளுக்கு பாடம் நடத்த சொல்லி மனித அறிவை இறைவன் வெளிபடுத்திக் காட்டினான். அதே கல்வியறிவால் ஜின்களை விட மனிதன் உயர்ந்தே இருக்கிறான். இதற்கு குர்ஆனிலுள்ள ஆதாரத்தைப் பாருங்கள்.
தாவூதுக்கும் சுலைமானுக்கும் நாம் கல்வியை அளித்தோம். (அல் குர்ஆன் 27:15)
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் திரட்டப்பட்டு சுலைமானுக்காக அணிவகுக்கப்பட்டது. (அல் குர்ஆன்: 27:17)
இந்த வசனங்களிலிருந்து கல்வியே இதர படைப்பினங்களை கட்டுபடுத்தும் விதத்தில் மனிதனை சிறப்பித்துள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம். எந்த ஒரு வசனத்திலும் மனிதன் இதர படைப்பிற்கு கட்டுப்பட்டு நடந்தான் என்று கூறப்படவேயில்லை.
கல்வியும், வல்லமையும் எது சிறந்தது?
ஒன்று வல்லமை மிக்கதாக இருப்பதால் மட்டும் அது மனிதனைவிட சிறந்ததாக ஆகிவிட முடியாது. உதாரணமாக மிருகங்களில் யானையை எடுத்துக் கொள்ளுங்கள். இது நூற்றுக்கணக்கான மனிதர்களின் வலிமையை விட பலம் பெற்றதாகும். இதன் உடல் வலிமைக்கு முன் மனிதனின் உடல் வலிமை தூசு என்றாலும் ஒரு யானைப்பாகன் சின்னஞ்சிறு குச்சியை கைகளில் வைத்துக் கொண்டு அத்துனை வலிமை மிக்க யானையை தன் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து விடுகிறான். இங்கு யானையின் உடல் வலிமையை விட மனிதனின் கல்வி – அறிவு வலிமை மிக்க பலம் வாய்ந்ததாகி விடுகிறது.
பறக்கும் திறனிலும் நீந்தும் திறனிலும் பறவைகளும் – மீன்களும் மனிதனைவிட வலிமை மிக்கவைகள் தான். இவற்றால் அது மனிதர்களை விட சிறந்ததாக ஆகிவிடுமா..?
அதே போன்றுதான் ஜின்களும். அதற்கு பறக்கும் வலிமையை இறைவன் கொடுத்துள்ளான் என்பது ஒரு கூடுதல் தகுதிதானே தவிர மனிதனைவிட சிறப்புப் பெறுவதற்குய தகுதியல்ல. மனிதர்களை விட ஜின்களே சிறப்புப் பெற்றவை என்பதை அதன் சக்தியை வைத்து நாம் விளங்கினால் அது மனிதருக்கு கட்டுப்பட்டு நடந்த விதத்திலும் மனிதரே (முஹம்மத்(ஸல்) அவர்களே) அவற்றிற்கு இறைத்தூதராக அனுப்பப்பட்ட விதத்திலும் முரண்பாடுகள் வந்து விடும்.
வானம் வரை பறந்து சென்று ஒட்டுக்கேட்கும் தகுதியை ஜின்கள் பெற்றிருந்தால் இருக்கும் இடத்தில் இருந்துக் கொண்டே வானங்களில் நடப்பவற்றை (விண்கலங்களின் வழியாக) அறியும் சக்தியை மனிதன் பெற்றுள்ளான். ஒரு காரியத்தை அது நடக்கும் இடம் சென்று அறிவது வல்லமையா? அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே அறிவது வல்லமையா?.. இங்கும் மனிதன் தன் அறிவால் ஜின்களைவிட சிறந்துதான் விளங்குகிறான்.
ஆற்றலால் ஜின்கள் சிறந்து விளங்குவதை விட அறிவால் மனிதன் சிறந்து விளங்குவதால் அவன் ஜின்களை விட சிறந்தவனாகத்தான் இருக்க முடியும். (இறைவன் மிக்க அறிந்தவன்)