ராவுத்தர் : ஒரு பார்வை
தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ராவுத்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்து கலாச்சாரத்தை ஒட்டியே ராவுத்தர்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்து-முஸ்லிம்களின் சமய ஒற்றுமை காணப்படுகிறது.
ராவுத்தர் என்பதற்கான ஆவணம் (கல்வெட்டுக்கள்) :
திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலை ‘குதிரை ராவுத்தர்’ என்றும், அம்மண்டபம் ‘குதிரை ராவுத்தர் மண்டபம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு ‘முத்தியாலு ராவுத்தர்’ என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு ராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முஸ்லிமுடைய சமாதியும் சிறியதாக அக்கோயிலினுள்; உள்ளது.
ராவுத்தரை வணங்கும் இந்துக்கள்
ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டத்தில் காகம் என்ற ஊரிலும், பெருந்துறை வட்டத்தில் உள்ள காஞ்சிக்கோயில் என்ற ஊரிலும் கொங்கு வேளாளர்களில் ஒரு பிரிவினரான கண்ண குலத்தார் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு ஊரில் உள்ள கண்ணகுலப் பெருமக்களும் அவ்வூர்களிலிருந்து குடியேறி மற்ற ஊர்களில் வாழும் பலநூற்றுக் கணக்கான குடும்பங்களும் குலதெய்வமாக வணங்கும் சுவாமியின் பெயர் ‘ராவுத்தனசாமி’. ஆண் குழந்தைகளுக்கு ராவுத்தனன் என்றும், பெண் குழந்தைகளுக்கு ராவுத்தமா என்றும் பெயர் வைக்கின்றனர். ராவுத்தனசாமியின் பெயரைக் கேட்டால் ‘டில்லி பட்டாணி துலுக்கர்’ என்று கூறுகிறார்கள். அவர்களுடைய குலமுதல்வருக்கு அவர் உதவி செய்து காப்பாற்றியதால் அவரை குலதெய்வமாக வணங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
துலுக்க கவுண்டர்
ஈரோடு மாவட்டம் கொளாநல்லியில் வாழும் கண்ண குலப் பெருமக்களின் குலதெய்வம் பொன்குழலியம்மன் ஆகும். அம்மன் கோயிலில் அவர்கள் வணங்கும் மற்றொரு தெய்வத்தின் பெயர் துலுக்கனசாமியாகும். பொன்குழலியம்மனை வணங்கும் கண்ண குலத்தார், ‘துலுக்கண கவுண்டர்’ என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர். திருச்செங்கோட்டில் இதே கண்ணகுலத்தார் வழிபடும் பனிமலைக் காவலர் சுவாமி திருக்கோயிலில் ‘பங்கடு சுல்தான்’ என்ற சமாதி உள்ளது. பனிமலைக் காவலர் கோயிலில் பூசை செய்யும் பூசாரியின் பெயர் ஏறருள்முத்து துலுக்கப் பூசாரி ஆகும். (ஆதாரம் : ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்கள், முதல் தொகுதி எண் 43.கொங்குநாடு (1934) தி.சு.முத்துசாமிக் கோனார், பக்கம்-90.)
துலுக்க நாச்சியார்
ஸ்ரீரங்கம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் ஈசானிய மூலையில் அமைந்துள்ள இறைவியை ‘துலுக்க நாச்சியார்’ என்று இன்றும் அழைத்து வருகிறார்கள். இத்தெய்வத்திற்கு முஸ்லிம்களின் உணவு, உடைப் பழக்கத்தையொட்டி ரொட்டி, வெண்ணெய், கைலி (லுங்கி) வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் துலுக்க நாச்சியார்
மதுரை வண்டியூரில் துலுக்க நாச்சியார் பெயரில் கோயில் இருப்பதையும், பெருமாள் உற்சவத்தின் போது, உற்சவ மூர்த்தியான திருமால் துலுக்க நாச்சியார் கோயிலில் தங்கிச் செல்லும் ஐதீகம் நிலவி வருவதையும் கொண்டு ஆய்வு மேற்கொண்டால், ஸ்ரீரங்கம் கோயிலில் இடம் பெற்றிருந்த குந்தவை நாச்சியாரின் செப்பு திருமேனியையே ஸ்ரீரங்கம் பிராமணர்களின் வேண்டுகோளின் பேரில் அங்கிருந்து அப்புறப்படுத்தி சமயபுரம் பகுதியில் வைத்துள்ளது விளங்கும்.
பொருளாதாரத்தில் ராவுத்தர்கள்
தென்மாவட்டங்களில் ராவுத்தரில் பல பிரிவுகள் இருப்பதை காண முடிகிறது. எழுத்துக்காரர், கந்தவெட்டி, நல்லாம்பிள்ளை, தெற்கத்தியார், வடக்கத்தியார் என பல பிரிவுகள் உண்டானதால், அதன் காரணமாக அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இதனால் பீடி சுற்றியும், விவசாய கூலிகளாகவும், தோல்தொழில் செய்பவர்களாகவும், நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் உடல் உழைக்கும் தொழிலாளர்களாகவும், நிரந்தர வாழ்விடமின்றி ஊர் ஊராக சுற்றுபவர்களாகவும், பூட்டு மற்றும் திறவுகோல் தொழில் செய்பவர்களாகவும், சந்தை வியாபாரம், பலாப்பழ வியாபாரம் என மூதாதையர்கள் செய்த தொழிலை பரம்பரையாக செய்து வருகின்றனர்.
ஆனால் பொருளாதார ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ முன்னேறுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் இச்சமூகத்தில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அதே வேளையில் தங்களுடைய நபிமார்கள் செய்த தொழிலை தாங்கள் செய்கிறோம் எனக் கூறி மனதை தேற்றிக்கொள்கின்றனர்.
நபிமார்கள் செய்த தொழில்
ஹஜ்ரத் ஆதம் (அலை) வேளாண்மை மற்றும் நெசவுத்தொழிலும், ஹஜ்ரத் நூஹ் (அலை) தச்சு தொழிலும், ஹஜ்ரத் லூத் (அலை) வேளாண்மை தொழிலும், ஹஜ்ரத் இத்ரீஸ்(அலை) தையல் தொழிலும், ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) ஆடு, மாடு பண்ணைத்தொழிலும், ஹஜ்ரத் சுஐபு (அலை) ஆட்டுப்பண்ணையும், ஹஜ்ரத் இஸ்மாயில் (அலை) ஜவுளி வியாபாரமும், ஹஜ்ரத் தாவுது (அலை) பொற்கொல்லராகவும், ஹஜ்ரத் ஹீத்(அலை) தானிய வியாபாரமும் செய்த நிலையில் தாங்களும் இந்த தொழிலை செய்கின்றோம் என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
குடியிருப்பு
ராவுத்தர்கள் குடியிருப்பு பகுதிகள் ‘பாளையம்’ என அடையாளப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் விஜயநகரப்பேரரசில் 1529க்கும் 1564 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரை மண்டலத்தை விஸ்வநாத நாயக்கர் நிர்வகித்த போது படைமானிய முறையான பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தி மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாக பிரித்தார்.
அப்பாளையங்கள் பின்வருமாறு, பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர், மேல்மாந்தை, ஆற்றங்கரை, கொல்லபட்டி, கோலார்பட்டி, கடம்ப+ர், மணியாச்சி, தலைவன்கோட்டை, நெற்கட்டும்செவல், சொக்கம்பட்டி, ஊத்துமலை, சேத்தூர், சிவகிரி, சிங்கம்பட்டி, அழகாபுரி, ஊர்க்காடு, சுரண்டை, சந்தையூர், எழுமலை, இராசாக்கனூர், கோட்டையர், மருங்காபுரி, மன்னார்கோட்டை, பாவாலி, இலக்கையனூர், முல்லையூர், கடவூர், இடையக்கோட்டை, நிலக்கோட்டை, தேவதாரம், இராமகிரி, கல்போது, கன்னிவாடி, தொட்டப்பநாயக்கனூர், தும்பிச்சிநாயக்கனூர், நத்தம், வெள்ளிக்குன்றம், மலையப்பட்டி, வடகரை, அம்மையநாயக்கனூர், போடி, சக்கந்தி, மதவாளைய+ர், சோசலைப்பட்டி, வீரமலை, பெரியகுளம், குருவிகுளம், அத்திப்பட்டி, இளசை, மதுவார்பட்டி, கோம்பை, கூடலூர், கவுண்டன்பட்டி, குமரவாடி, உதயப்பனூர், கொல்லங்கொண்டான் ஆகிய ஜமீன்கள் ஆகும்.
1803 ஆம் ஆண்டு பாளையங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து ‘ஜமீன்தாரி’ முறையில் மிட்டாக்கள், மிராஸ்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆணைக்குளம், வெள்ளாளன்குளம் ஜமீன்களை ராவுத்தர்கள் ஆண்டுள்ளார்கள். பாளையங்களை நிர்வகித்தவர் பாளையக்காரர் என்றழைக்கப்பட்டனர். ‘பாலாமு’ என்ற தெலுங்கு மொழிச்சொல்லில் இருந்து பாளையம் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தண்டுப்பாளையம் போன்ற ஊர்கள் இன்றளவும் காலத்தின் சுவடாக உள்ளது.
ஆதார நூல்கள்:
1.மறைக்கப்பட்ட வரலாறும், மறைக்கப்படும் உண்மைகளும். அனிஸ்தீன், அகமது நிஸ்மா பதிப்பகம், தேவதானப்பட்டி.
2.மரைக்காயர் ஒர் சமூக ஆய்வு-அகமது மரைக்காயர், சென்னை
3.மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்பட்ட நியாயங்களும், மக்கள் தாரகை, சூலை மாதஇதழ், சென்னை.
படங்கள்:
1.கள்ளக்குறிச்சியில் திரௌபதியம்மன்கோயிலில் உள்ள ராவுத்தர் சாமி
2.திரௌபதியம்மன்கோயில் உள்ளே அமைந்துள்ள ராவுத்தர் சாமியின் கல்லறை
களஆய்வு : இரணியன் & வைகை அனிஷ்
source: http://kulasaisulthan.wordpress.com/
தமிழகத்தில் வழ்ந்த பிரபலமான ஒரு ராவுத்தரைப் பற்றி …
வேறு யாராக இருக்க முடியும் முஹம்மது இஸ்மாயில் ராவுத்தர் அவர்களைவிட! ஆம் அவர் வேறு யாருமல்ல… நமது கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள் தான்
இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர். அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர்.
தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார். இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.
பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார். 1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார்.
1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58 ம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர். இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி.
இவர் 1962 ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான். “காயிதே மில்லத்” இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25 ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31 ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏப்ரல் 4 ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை.
தொடர்ந்து மோசம் அடைந்தது. முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர். அன்றைய தினம் (4.4.1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.
உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து “குர்ஆன்” ஓதினார்கள். நள்ளிரவு 1.15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர். இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.
மறுநாள் (5 ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
முதல் அமைச்சர் கருணாநிதி, காலை 8.25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர். பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார். பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.
தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிஞ் மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் “அல்லாஹ் அக்பர்” என்று குரல் எழுப்பினார்கள். இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.
அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:
“தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.
எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்.”
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள். பாராளுமன்றம் சட்டசபை அனுதாபம் இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல் மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.
டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர்களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.