ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! – சவுதி அரேபியா
சவுதி கல்வித் துறை, வியன்னாவில் இயங்கி வரும் ‘மன்னர் அப்துல்லாஹ் கலாசார மையம்’ இந்த இரண்டும் இணைந்து ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடத் திட்டமானது உலக மதங்களையும், மார்க்கங்களையும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
‘இந்த புதிய முயற்சியானது அனைத்து மதங்களையும் உலக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதன் மூலம் அமைதியும் பொறுமையும் கொண்ட ஒரு வெறுப்பற்ற சிறந்த சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்’ என்கிறார் இளவரசர் ஃபைசல் பின் அப்துல்லா. இவர் சவுதி அரேபியாவின் கல்வி அமைச்சர் ஆவார்.
அவர் மேலும் கூறும் போது ‘மன்னர் அப்துல்லா உலக அமைதிக்காகவும், பல கலாசாரங்களை பேணும் மக்கள் வாழும் நாடுகளில் மக்கள் வன்மத்தை விட்டு அன்பை பேணுவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.’
‘மன்னர் அப்துல்லா ஸ்வீடன் மன்னருடன் இணைந்து 110 நாடுகளில் சில நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதனால் 20 மில்லியன் மக்களுக்கு இந்த செய்தி சென்றடையும். இந்த முயற்சியானது ‘மன்னர் அப்துல்லா தொழில் நுட்ப கல்லூரி’ யில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெத்தாவுக்கு அருகில் உள்ள துவல் என்ற சிற்றூரில் இந்த கல்லூரியானது நடந்து வருகிறது. இக்கல்லூரியில் 7000 மாணவர்கள் என்பது நாடுகளில் இருந்து வந்திருந்து இங்கு தங்கி படிக்கின்றனர். இவர்கள் உலகின் பல்வேறுபட்ட கலாசாரங்களையுடைய மதங்களையும் மார்க்கங்களையும் பின்பற்றக் கூடியவர்கள்.
‘இந்த மாணவர்கள் வெறும் படிப்போடு நின்று விடாமல் ஆராய்ச்சியிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உலக அளவில் வறுமை, உணவு தட்டுப்பாடு, ஆற்றல் பற்றாக் குறை, தண்ணீர் பிரச்னை என்று அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்து இதற்கு என்ன தீர்வு என்பதை மாணவர்கள் சமர்ப்பிக்க வைக்கப்படுகிறார்கள்.’
இது போன்ற ஆய்வுகளானது உலக மதங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை களையும். பல மதத்தவரிடையே பகைமையை உண்டு பண்ணி அதன் மூலம் சிலர் லாபம் அடைவதை இது போன்ற முயற்சிகளால் தடுக்கலாம்.
சென்ற சனிக்கிழமை 500 வெளி நாட்டு மத குருமார்கள் கலந்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது. உலக தலைவர்கள் பலரும் இந்த சீரிய முயற்சியை பாராட்டினர். பாகிஸ்தானின் கல்வி அமைச்சர் பலிகுர் ரஹ்மான், ஆஸ்திரியாவின் கல்வி அமைச்சர் க்ளவ்டியா ஸ்கிமிட் போன்ற முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.
பல நாடுகள் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலம் உலகில் அமைதி நிலவ பாடுபடுகின்றன. அதற்கு மாறாக நமது நாட்டில் தற்போது சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ள ஒரு பெரும் முயற்சியே நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய மக்கள் மிக புத்திசாலிகள். யாரை எங்கு வைப்பது என்பதை நன்றாகவே அறிவர்.
தகவல் உதவி – அரப் நியூஸ்