நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (19)
இந்த சொற்பொழிவில், நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதனுக்கு ஈடேற்றமளிக்கும் விஷயங்களையும், மனிதனை நாசமாக்கும் விஷயங்களையும், ஆத்ம தூய்மைக்கான அடிப்படைகளையும் விளக்கியுள்ளார்கள்.
மக்களே! மூன்று விஷயங்கள் ஈடேற்றமளிக்கக்கூடியவை.
மேலும் மூன்று விஷயங்கள் நாசத்தைத் தருபவை.
இன்னும் மூன்று விஷயங்கள் உங்களின் அந்தஸ்தை (தரஜாக்களை) உயர்த்துவதற்குக் காரணமானமாய் உள்ளவை.
மற்றும் மூன்று விஷயங்கள் பாவ மீட்சிக்கு உதவுபவை ஆகும்.
1. உள்ளும், புறமும் ஒன்றித்த நிலையில் சதாவும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடவுங்கள்.
2. உங்கள் ஏழ்மையிலும், செல்வ நிலையிலும் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்.
3. கோபமான நேரத்திலும், மகிழ்ச்சியாய் இருக்கும்போதும் நியாயமானதையே செய்யுங்கள்!
இம்மூன்றும் ஈடேற்றாம் (நஜாத்) அளிக்கக்கூடியவையாகும். கடுமையான லோபத்தனமும், மனோ இச்சைக்குக் கீழ்படிவதும், வீண் பெருமை அடித்துக்கொள்வதுமாகிய மூன்று விஷயங்கள் நாசத்தைத் தருவனவாகும்.
ஒருவருக்கொருவர் அதிகமாக ‘ஸலாம்’ கூறிக்கொள்வதும், (பசித்தவர்களுக்கு) உணவளைப்பதும், எல்லோரும் தூங்கும்போது நடு இரவில் எழுந்து (தஹஜ்ஜுத்) தொழுவதும், தரஜாக்களை உயர்த்தக்கூடியவை ஆகும். கஷ்டமான நிலையிலும், பரிபூரணமாக ‘ஒளு’ செய்து கொள்வதும், ஜமா அத் தொழுகைக்காக நடந்து செல்வதும், ஒரு நேரத் தொழுகை முடிந்ததும் மறு நேரத்தொழுகையை எதிர்நோக்கி இருப்பதும் ஆகிய மூன்று விஷயங்களும் பாவத்துக்குப் பரிகாரங்களாகும்.
அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நேரத்(கியாமத்)தில் மூன்று (வகையான) மனிதர்கள் அல்லாஹ்வின் அர்ஷின் கீழிருப்பார்கள். இவர்கள் கஷ்டமான நேரத்தில் “ஒளு”வை பரிபூரணமாகச் செய்தவர்களும், இருட்டு நேரத்தில் (தொழுகைக்காக) மஸ்ஜிதை நோக்கிச் சென்றவர்களும், பசித்தவர்களுக்கு உணவளித்தவர்களும் ஆவர்.
கஷ்டங்களையும், வேதனைகளையும் சகித்துக்கொண்டு அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடுபவனை அல்லாஹ்வுத்தஆலா செல்வமின்றியே செல்வனாகவும், படைகளின்றியே வெற்றியாளனாகவும், இனபந்துக்களின்றியே சகாயம் பெறுபவனாகவும் ஆக்குகிறான்.
‘முஹப்பத்து’ தான் மெஞ்ஞான உணர்வு பெறுவதற்கான அஸ்திவாரமாகும். எகீனின் (மெய் விசுவாசம்) உச்சம் அகத் தூய்மைதான். அல்லாஹ்வின் தீர்ப்பை(களா, கத்ர்)ப் பரிபூரணமாக ஏற்பதே உண்மையான ‘தக்வா’வாகும்.
அன்பை மூன்று விஷயங்களால் பரிசோதிக்க வேண்டும். மற்றவர்களின் ஆணை(ஏவல், விலக்கல்))யை விட அல்லாஹ் ரஸூலின் ஆணையையே முதன்மையானதாக மதிக்க வேண்டும். மற்றவர்களைவிட அல்லாஹ் ரஸூலின் தோழர்களையே முதன்மையாக மதிக்க வேண்டும். மற்றவர்களின் திருப்தியைவிட அல்லாஹ் ரஸூலின் திருப்தியையே முதன்மையாக மதிக்க வேண்டும். (இப்னு ஹஜர்)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.