இஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்
A. முஹம்மது அலி, M.A., திருச்சி-4
திருமணம், குடும்ப வாழ்வு, இல்லற இன்பம் போன்றவற்றிற்கு, இஸ்லாம் அளித்திருக்கும் சிறப்பை, வேறு எந்த மதமும் தரவில்லையென்பது யாவரும் அறிந்ததே. “திருமணம் எனது வழிமுறை, திருமணம் புரியாதவன் என்னைச் சார்ந்தவனல்ல.” (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம் : முஸ்லிம், புகாரி)
என்பது ரசூல்(ஸல்) அருள்வாக்கு, செயல்முறை வழியாகும்.
“வாலிய நேயர்களே! உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை வைத்து நிர்வகிக்கும் சக்தியுடையோராயிருப்பின், அவர் மணம் செய்து கொள்வாராக! நிச்சயமாக அது கண்ணுக்குத் திரையாகவும், மர்ம உறுப்பிற்கு அரணாகவும் அமைந்திருக்கிறது. அதற்கு இயலாதவர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். அது அவருக்குத் தடுப்பாகும்.” (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ஆதாரம் : புகாரி, முஸ்லீம்)
குர்ஆனில் அல்லாஹ், “(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணையில்லாவிட்டால், அவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்.” (24:32) என ஆணையிடுகிறான்.
இஸ்லாமிய நண்பர்களே! சிறிது குர்ஆனை நாம் புரட்டுவோமேயானால் திருமணம், தாம்பத்யம், குடும்பவாழ்வு, இல்லறம் போன்றவற்றை அல்லாஹ் விளக்கிக் கூறுவதை நீங்களே காணலாம்.
ஒரு ஆணும், பெண்ணும் தன்னையும், தனது கற்பையும் எங்ஙனம் பாதுகாக்க வேண்டும். (குர்ஆன் 24:31)
எவரெவருக்கு முன் ஒரு பெண் மகள் எந்நிலையில் இருக்கலாம், அதற்கான வரைமுறை என்ன? (24:31)
எவரெவரை திருமணம் புரியலாம், எவரெவர் திருமண பந்தத்திற்கு விலக்கப்பட்டவர்கள் (குர்ஆன் 4:23,24, 24:26)
ஏழைக்குமருகள், விதவை மணச் சிறப்புகள் (24: 32, 33)
ஒரு ஆண் மகன் ஒரே நேரத்தில் எத்தனை மனைவிகளை (பலதாரமணத்தில்) கொள்ளலாம்; அப்போது அவன் கவனிக்க வேண்டிய சட்டதிட்டங்களென்ன? (4:3, 4:139)
குடும்பம் நடத்தும் வீட்டினுள் நுழைவதற்கான விதிமுறைகள் (குர்ஆன் 24:27லிருந்து 29வரை)
கணவன், மனைவி, தாம்பத்யம் எவ்வெப்போது கூடும், கூடாது, அப்போது நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் என்ன? (2:222,223) குடும்ப வாழ்வில் சகிப்புத்தன்மை (64:14)
கணவன், மனைவிக்கிடையில் ஏற்படும் தகராறுகளை தீர்ப்பதில் சமுதாயப் பங்கு, அதற்கு வரைமுறைகள் (4:35,128)
அடங்காத மனைவியை அடக்குவிதம் (4:34)
மனம் ஒவ்வாத கணவன், மனைவிகள் விவாக பந்தத்திலிருந்து விலகும் விதம், அப்போது அனுசரிக்க வேண்டிய கட்டாய வழிமுறைகள் மனைவிக்கு கணவனின் கடமைகள், கணவனுக்கு மனைவியின் கடமைகள் (4:34)
இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்விறை வசனங்களுக்கு இன்னும் விளக்கமூட்டி, பல ஹதீதுகளும் உள்ளன. குறிப்பாக திருமணம், இல்லறம், தாம்பத்யம், குடும்ப வாழ்வு இவைகளை அல்லாஹ் தன் திருமறையில் மூன்று (நிஸா, நூர், தலாக்) பெரும் அத்தியாயங்களிலும், மற்ற பல அத்தியாங்களிலும் விளக்கியுள்ளான்.
பசிக்கு உணவும், தாகத்திற்கு நீரும், சுவாசிக்கக் காற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் போல, இயற்கை உணர்வான உடல்பசிக்கு, பெண்ணின்பம், திருமணம் அவசியம் என்கிறது இஸ்லாம். நவீன மருத்துவத் துறை, இன்றைய மருத்துவ நிபுணர்களும் மணம் புரியாதவர்கள், மணம் புரிந்தவர்களைவிட மந்த புத்தியுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில் ஒரு சிலர் விலக்குப் பெறலாம்), உடல்பசியான மோகத்தை அடக்குபவர்கள், இல்லற வாழ்வில் தோல்வியுற்றவர்கள், மனநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறார்கள். “திருமணம் ஒரு மனிதனை முழுமையாக்குகிறது”. (Marriage makes a man perfect) என்பதும் அனுபவமொழியாகும்.
இதனை நீண்ட காலத்திற்குப் பின் உணர்ந்துள்ளனர் நமது வேதக்கார நண்பர்களான கிறிஸ்தவர்கள். பிரம்மச்சர்யத்தால் சிறப்புப் பெற்று மதக்குருக்களாக உள்ள கிறிஸ்தவ பாதிரியார்கள், இன்று தங்களுக்கு திருமணம் புரிய உரிமை வேண்டுமென கேட்க ஆரம்பித்து விட்டனர். அதற்கென அவர்கள் கூறும் காரணங்கள் எதுவாயினும், உண்மை உணர்வை பகுத்தறிவாளர்கள் புரிய முடியும்.
தினத்தந்தி 13-9-1987 (சென்னை பதிப்பு) பக்கம் 5ல் வந்ததை அப்படியே கீழே தருகிறோம். படித்துப் பாருங்கள்:-
வாஷிங்டன் செப்.13 “திருமணம் செய்ய அனுமதியுங்கள்” என்று போப் ஆண்டவரிடம் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் “பிராட்டஸ்டண்டு” கிறிஸ்தவ பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் போப் ஆண்டவர் “ஜான்பால்” அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்காக சென்றுள்ளார். நேற்று (12-9-1987) அவர் வாஷிங்டன் நகருக்கு சென்றார்.
அங்கு பாதிரியார்களின் சார்பில் “மெக்கனல்டி” என்ற பாதிரியார் போப் ஆண்டவரிடம் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அமெரிக்காவில் 5 கோடியே 20 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். இங்கு மொத்தம் 53,382 பாதிரியார்கள் உள்ளனர். பாதிரியார்களில் பெரும்பாலோர் 56 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
பாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற விதி இருப்பதால் பலர் பாதிரியாராக வர தயங்குகிறார்கள். இதனால் பாதிரியார்களுக்கு கூட தட்டுப்பாடு வரக்கூடும். எனவே பாதிரியார்கள் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இளம் பாதிரியார்கள் பலர் இந்த கருத்தை வரவேற்றுள்ளனர்.
போப் ஆண்டவர் புன்னகையுடன், அந்த மனுவை பெற்றுக் கொண்டார். எனினும் அவர் கோரிக்கைகள் குறித்து சரியான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இச்செய்தியை வைத்து ‘இன்டியன் எக்ஸ்பிரஸ்’, ‘இந்து’ போன்ற பத்திரிகைகள் தலையங்கமாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கிறித்துவ பாதிரியார்கள் தினசரி படித்துவரும் அவர்களது வேத நூல் “பைபிள்” கூறுவதையும் பாருங்கள்:-
“புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு, தன் மனைவியோட இசைந்திருப்பான்: அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24)
நல்லவேளை! நமது இஸ்லாம் தாய், தந்தையை விட அதிகமாக தாரத்திற்கு மதிப்பளிக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதமோ தாய் தந்தை அன்பைவிட தாரத்தின் தாகத்திற்கு முதலிடமளிப்பதைப் பாருங்கள். அது மட்டுமல்ல, புதுமண தம்பதிகள் எந்தளவு இன்பம் அனுபவிக்க வேண்டுமென பைபிள் கூறுவதைக் காணீர்:-
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம் பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம்: அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்த வேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம் பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக. (உபகாமம் 24:5)
இவ்விதம் மணவாழ்வை வாழ்த்தும் வேதநூலை போதிக்கும் குருமார்கள், பாதிரியார்கள் திருமணம் செய்யக் கூடாது என்பது அநீதமல்லவா? அவ்வநீதத்தை எதிர்த்தே இக் கோரிக்கை, இயற்றை நீதியின்படி நியாயமானதே! இதை இயற்கை மார்க்கமாகிய இஸ்லாம், மனித இயல்பை அறிந்தே அழகிய வழிமுறையாக “திருமணத்தை” ஆகுமாக்கியுள்ளது.
source: http://annajaath.com/?p=310