அமைதியின்மைக்கு ஓர் அதிசயமான காரணம்…
பலஸ்தீனில் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப்படும் படுகொலைகளுக்கும் எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் அரங்கேற்றப்படும் மனிதப் படுகொலைகளுக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. பலஸ்தீனில் ஸியோனிஸ்டுகளின் நேரடித் தாக்குதல் இடம்பெறுகிறது. எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் சியோனிஸ்ட்களின் கையாடுகள் இந்த அழிவுத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்
எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலை யாவரும் அறிந்ததே. அங்கு முஸ்லிம்களே முஸ்லிம்களைப் படுகொலை செய்யும் ஒரு பயங்கரமான சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இந்த அவலத்திற்கான காரணத்தைத்தான் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். காரணம் இதுதான்.
இஸ்லாமியவாதிகள் ஆட்சியை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள். அதனால்தான் இந்த அமைதியற்ற சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இது அநாவசியமான ஒன்று. இஸ்லாமியவாதிகள் மக்களுக்கு நல்லவற்றையும் தீயவற்றையும் போதிக்கும் வேலையில் ஈடுபடுவதோடு தங்களது முயற்சிகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் இஸ்லாமிய ஆட்சி, சமூகப் புனர்நிர்மாணம் என்றெல்லாம் அவசியமற்ற கொள்கைகளை முன்வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியதில்லை. அவ்வாறு செய்வதனால்தான் முஸ்லிம்களை முஸ்லிம்களே கொன்றொழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு இஸ்லாமியவாதிகளே முழு முதற் காரணமாகும். அவர்களே இந்த அவலத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள் இல்லாதிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. முஸ்லிம்கள் அமைதியாக வாழ்ந்திருப்பார்கள். கொன்றொழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
இஸ்லாமியவாதிகளின் அறியாமையினால்தான் இந்த அவலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு இன்று முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அவலத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்திருக்கும் எமது சமூகத்தின் சில மேதைகள்(?) மற்றொரு முடிவுக்கும் வந்திருக்கிறார்கள். அந்த முடிவு இவர்கள் கண்டுபிடித்த காரணத்தோடு அவர்களே முரண்படுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனினும், அவர்களுக்கு அது புரியவில்லை. அந்த முடிவு என்ன தெரியுமா?
மேலே கூறப்பட்ட அவலத்திற்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியவாதிகளைத் தீர்த்து கட்டுவதே சரியானது. அவர்களைக் கூண்டோடு கைலாசம் அனுப்பினால்தான் இந்த அவலத்திலிருந்து முஸ்லிம் உலகத்தைப் பாதுகாக்கலாம். அதனால் அவர்களைக் கொன்றொழிப்பவர்கள் நல்லவர்களே! அதற்கு முஸ்லிம் உலகம் உதவி செய்யத்தான் வேண்டும்.
எப்படியிருக்கிறது இவர்களது தீர்ப்பு?!
எந்தப் படுகொலைகள் நடைபெற்றிருக்கக் கூடாது முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது சோகமானது, அவலம் நிறைந்தது என்று இவர்கள் கூறினார்களோ அதே படுகொலைகள் நடக்கத்தான் வேண்டும். அது சரியானதே என்று அவர்கள் தீர்ப்பும் வழங்குகிறார்கள். இந்த அதிசயமான முரண்பாட்டுக்குள் நாங்களே சிக்கியிருக்கிறோம் என்பதை விளங்காதவர்கள்தான் முஸ்லிம் உலகின் இன்றைய அவலங்களுக்கான காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தூரத்தில் கறுப்பாக ஏதோ தென்படுகிறது. அது என்னவாக இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக இருவர் அதனை நோக்கிச் செல்கின்றார்கள். ஒருவர் அது காகம் என்கிறார். மற்றவர் இல்லை அது ஒரு நாய்க்குட்டி போல் இருக்கிறது என்கிறார். நெருங்க நெருங்க அது காகம் என்பது நன்கு விளங்குகிறது. எனினும், “நாய்க்குட்டி” என்று கூறியவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இறுதியில் காகம் பறந்து விடுகிறது. அப்போது “பார்த்தாயா? அது பறந்து விட்டது. இனியும் அதனை “நாய்க்குட்டி” என்று கூறப்போகிறாயா? ” என முன்னயவர் கேட்க, அதற்கு மற்றையவர், “நாய்க்குட்டி” பறந்தாலும் பறந்திருக்குமே தவிர அது காகமல்ல”என்கிறார்.
யதார்த்தங்களை இவ்வாறு பச்சையாகப் புரட்டிப் போடுகின்றவர்களுக்கு விளக்கங்கள் கூறிப் பயனில்லை. முஸ்லிம் உலகின் இன்றைய அவலங்களுக்குக் காரணம் கண்டுபிடித்தவர்களும் அந்த வகையைச் சார்ந்தவர்களே! அவர்களது நிலைப்பாடு, குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் நபிகளாரின் ஸீராவுக்கும் முரணானது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இருப்பினும், இத்தகைய நச்சுக் கருத்துக்களால் பிழையான வழிக்கு திசை திருப்பப்படும் மக்கள் தெளிவு பெற வேண்டும். என்பதற்காக இந்தக் காரணம் தொடர்பில் ஒரு விளக்கத்தைத் தரலாம் என்று நினைக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.
முதலில் இவர்கள் கூறும் அரசியல் அல்லது ஆட்சி பற்றி நோக்குவோம். இஸ்லாமியவாதிகள் அரசியல் செய்ய விளைவதனால்தான் அவலம் ஏற்படுவதாக இவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு கூறுபவர்களுக்கு “அரசியல்” என்றாலே என்னவென்று புரியவில்லை போலிருக்கிறது. தேர்தல் களத்தில் இறங்கி ஜனநாயக மரபுகளுக்கமைய வெளிப் படையாகவும் சுதந்திரமாகவும் தங்களது கருத்துக்களைப் பேசி, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பது இன்றைய உலகின் மரபாகும். இந்த மரபை இன்றைய உலகம் போற்றுகின்றது. அந்த மரபைப் பின்பற்றி ஆட்சி அமைத்தவர்களை உலகம் அங்கீகரிக்கின்றது. காரணம், மக்கள் அபிப்பிராயத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பிரதிபலிக்கின்ற அரசியல் வழிமுறையாக இன்றைய உலகம் அதனைக் கருதுகின்றது.
இத்தகைய வழிமுறையை உலகில் உள்ள அனைவரும் பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம். இஸ்லாமியவாதிகள் மட்டும் இந்த வழிமுறையை பயன்படுத்தக் கூடாது. அதுதான் அவலங்களுக்கு காரணமாக அமைந்த பாரிய தவறு என்று இவர்கள் கூறுகின்றார்கள். எகிப்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது, ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற்றது. பத்தொன்பது கோடி மக்கள் வாழும் எகிப்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தோடு வாக்களித்து சுதந்திரமாக தெரிவுசெய்த அரசு இவர்களது பார்வையில் அவலத்திற்கு வழிவகுத்து விட்டது. இஸ்லாமியவாதிகள் மோசடிகளின்றி, தூய்மையாகவும் நீதியாகவும் மக்களின் விருப்பத்தை செயல்படுத்த முனைந்தததை விரும்பாத முஸ்லிம் வேடமணிந்த அமெரிக்க ஸியோனிஸ சக்திகள் அவர்களிடமிருந்து முறைகேடாக ஆட்சியைப் பறித்ததும் அவர்களை பட்டப் பகலில் பச்சையாக கொன்றொழிப்பதும் இவர்களது பார்வையில் சரி!
இதுதானே இவர்கள் கண்டுபிடித்திருக்கும் காரணத்தின் யதார்த்தம்?! குத்பாக்களில் இத்தகைய அபத்தமான கருத்துக்களைக் கூறுகிறார்கள் சிலர். உண்மையில் இவர்கள் இஸ்லாத்தின் எழுச்சிக்காகத் தொண்டு புரிகின்றவர்களா? அல்லது முஸ்லிம் சமூகத்தினுள் இருந்து கொண்டே அதனை வீழ்த்துவதற்காகத் திரைமறைவில் குழிதோண்டுபவர்களா? என்ற சந்தேகமே எழுகின்றது. இவர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
தூய்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்தல் போன்ற உன்னதமான விழுமியங்கள் கொண்ட அரசியலை வெறுக்கும் இவர்கள் மற்றோர் அரசியலை ஆதரிக்கிறார்கள். இந்த விழுமியங்களுக்கு இடம் தராத… சர்வாதிகாரப் போக்குடைய…. எதிர்காலத்தில் தனக்கு பாதகமாக வந்து விட லாம் எனக் கருதப்படும் விழுமிய அரசியலை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதற்கு முயற்சிக்கின்ற சர்வாதிகாரிகளின் அரசியலை இவர்கள் போற்றிப் புகழ்கின்றனர்.
சபாஷ்! இவர்கள்தான் இஸ்லாத்திற்கு அரிய தொண்டு புரிய வந்தவர்கள்?! இவர்களது இஸ்லாமியத் தொண்டு உலகை எங்கே கொண்டு செல்லும் என்பதை விரிவாக விளக்க வேண்டியதில்லை. எகிப்தும் பலஸ்தீனும் சிரியாவும் அதற்கான சான்றுகள். அங்கெல்லாம் ஏற்பட்டுள்ள அவலத்தைத் தடுக்க வேண்டியவர்கள் அல்லது அவலத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் பழியை அபாண்டமாக இஸ்லாமியவாதிகளின் தலையில் போடுகிறார்கள் என்றால் இவர்களது நீதியைப் பாராட்டத்தான் வேண்டும்!!!
இவர்களது வெளி உலக அரசியல் மட்டுமா இப்படி என்றால் இல்லை. உள் ஊரிலும் இவர்கள் இஸ்லாத்தை விரும்புவோரை அரசியல் முத்திரை குத்தி விமர்சிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். தங்களுக்கு ஒத்துவராதவர்களை அபாண்டமாக பழிசுமத்தி விமர்சிக்கும் அரசியல் பாடத்தை நன்கு கற்றிருப்பதும் ஒரு சூசகமான அரசியல் தந்திரம் தான். அரசியல் என்பது தேர்தலோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. இன்றைய உலகில் அனைவரும் வெவ்வேறு வடிவங்களில் அரசியலை செய்துகொண்டு தானிருக்கிறார்கள்.
தங்களது நலன், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்பவற்றை தக்கவைத்துக் கொள்வதற்காக பிறிதொரு சக்தி வளர்ந்து விடாமல் தட்டி வைத்துக் கொள்வதையே இன்றைய உலகம் அரசியலாகப் பார்க்கின்றது. அந்த அரசியலை அரசியல்வாதிகளும் செய்வார்கள். மார்க்கவாதிகள் என்று தம்மைக் கூறிக் கொள்கின்றவர்களும் செய்வார்கள். சாதாரண ஊர்த் தலைவர்களும் செய்வார்கள். ஓர் அமைப்பினுள்ளேயே அதன் தலைவர்களாக இருப்பவர்கள் பிறர் அந்த இடத்திற்கு வந்து விடாதிருப்பதற்கும் இந்த அரசியலைச் செய்வார்கள்.
வல்லரசுகள் முதல் ஊர்கள் வரை இந்த அரசியலைச் செய்வதில் அனைவரும் கைதேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அரசியலைச் செய்யும்போது இஸ்லாமிய விழுமியங்கள், பண்பாடுகள், உன்னதமான நற்குணங்கள், கருத்துச் சுதந்திரம், அடுத்தவர்களின் சுயமரியாதை, நேர்மை, நீதி என்று எதனையும் பார்ப்பதில்லை. இந்த அரசியலைச் செய்யும்போது குர்ஆனையும் சுன்னாவையும் ஒரு கறுப்புத்துணியால் ஓர் இருட்டறையினுள் மூடி வைத்து விடுகிறார்கள். பள்ளிக்குள் நடப்பவற்றை சரி பிழை பார்ப்பதற்குத் திறக்கப்படும் குர்ஆனும் சுன்னாவும் இந்த அரசியலைச் செய்யும்போது அவர்களால் திறக்கப்படுவதில்லை.
தங்களது அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நலனையும் பாதுகாப்பதற்கு இது போன்ற கீழ்த்தரமான அரசியலை அனைத்து மட்டங்களிலும் செய்வோர்கள்தான் எகிப்திய மக்கள் உன்னதமான ஒரு நோக்கத்திற்காக செய்த நீதியான… நேர்மையான… மோசடிகளற்ற… வெளிப்படைத் தன்மை கொண்ட… சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கின்ற … உலக மரபுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட… அரசியலை விமர்சிக்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இதுவரை உலகம் அறிந்திராத அற்புதமானதொரு செய்தியை முன்வைக்கின்றனர். அந்த செய்தி இதுதான்.
உலகில் இருக்கின்ற தீய சக்திகள் அடாவடித்தனம் புரிவதற்கும் அக்கிரமங்ளை கட்டவிழ்த்து விடுவதற்கும் நல்லவர்கள் நன்மை செய்ய விளைவதே காரணம். எனவே, நல்லவர்கள் உலகில் நன்மை செய்யாதிருக்க வேண்டும். எகிப்தில் நல்லவர்கள் அணி திரண்டு ஒரு நல்லாட்சியை அமைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய விழைந்ததனாலேயே தீய சக்திகள் அங்கு கொடுமை புரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தக் கொடு மைகளுக்கான பொறுப்பை நல்லவர்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, இத்தகைய நல்ல வர்களைக் கொன்றொழிப்பதும் நன்மைதான். காரணம், அவர்கள் நன்மை செய்ய விழைந்ததனால்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
இத்தகையதொரு செய்தியைத்தானே இன்று முஸ்லிம் உலகில் ஏற்பட்டிருக்கின்ற அமைதியின்மைக்கான காரணமாக ஒரு சிலர் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ முஸ்லிம் சமூகத்தில் வளர்க்கின்றவர்களைப் பார்த்து சிலபோது ஷைத்தானும் திகைப்படைவான். ஆஹா! எத்தனை குர்ஆன் வசனங்களுக்கு… நபிகளாரின் நடை முறைகளுக்கு… எதிரானதொரு கருத்து சமூகத்தில் வளர்க்கப்படுகிறது. இப்படியொரு சிந்தனை எனது உள்ளத் தில்கூட வரவில்லையே என ஷைத்தானும் திகைப்படையுமளவு குர்ஆனுக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நடைமுறைகளுக்கும் வெளிப்படையாகவே முரண்படும் ஒரு கருத்தைத்தான் மேற்கூறப்பட்ட செய்தி பிரதிபலிக்கின்றது.
நல்லவர்களை செயலிழக்கச் செய்து தீயவர்களிடம் உலகை ஒப்படைத்து விடுமாறு வலியுறுத்தும் இந்தக் கருத்து இஸ்லாத்தின் பெயரால் இன்று மிம்பர் மேடைகளில் வலியுறுத்தப்படும்போது மகிழ்ச்சியடைபவர்கள் உலகில் யாராக இருக்க முடியும்? அமெரிக்கர்களையும் இஸ்ரவேலர்களையும் தவிர… அவர்களை மகிழ்வூட்டும் பணியில்தான் உண்மையில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லாஹ் இவர்களைப் பாதுகாப்பானாக!
இனி இந்தக் கருத்து எவ்வாறு அல்குர்ஆன் வசனங்களோடும் நபி (ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் நடைமுறைகளோடும் தெளிவாக முரண்படுகிறது என்பதை சிறிது நோக்குவோம்.
அல்லாஹ் அல்குர்ஆனில் தீமைகள் வளர்வதற்கு நல்லவர்களே காரணம் என்பதை அடித்துக் கூறுகிறான். எனினும், இவர்கள் சொல்வது போன்ற பாணியில் அல்ல, இவர்களுக்கு எதிரான பாணியில்! எப்படியென்று நோக் குங்கள்:
“நிராகரிப்பாளர் (ளான இஸ்லாத்தின் எதிரி)கள் ஒருவருக்கொருவர் ஆதரவு தருகின்ற உற்ற நேசர்களாக இருக்கிறார்கள். அதனை நீங்களும் (சிரமேற்கொண்டு) செய்யாவிட் டால் பூமியில் பெரும் அழிவுகளும் குழப்பங்களும் உரு வாகும்.” (8:73)
எதிரிகள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமை, நட்புறவு, நல்லிணக்கம், நேசம், பரஸ்பர ஆதரவு உங்களிடமும் வரவேண்டும். நல்லவர்களே! நீங்கள் அத்தகைய நட்புறவையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாத போதே உலகம் தீமைக்குள் புதையுண்டு போகிறது. குழப்பங்கள் உலகில் மலிந்து விடுகின்றன. ஆக, அக்கிரமம் புரியும் எதிரிகள் இருப்பதனால் உலகில் தீமைகள் வளர்வதில்லை. நல்லவர்கள் மத்தியில் நட்புறவும் நல்லிணக்கமும் இல்லாமல் போகும்போதே உலகில் குழப்பங்களும் தீமைகளும் அதிகரிக்கின்றன.
இந்தக் குர்ஆனியக் கருத்தோடு மேலே கூறப்பட்ட விஷமக்கருத்து எத்தனை பாரிய முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது. இந்தக் குர்ஆனியக் கருத்தின்படி, எகிப்தில் அரங்கேற்றப்பட்டிருக்கும் அக்கிரமங்களுக்குக் காரணம் முஸ்லிம் உலகத்தலைவர்களிடையே நட்புறவும் நல்லிணக்கமும் இல்லாதிருப்பதேயன்றி எகிப்து மக்கள் தங்களது நாட்டுக்கு நல்லாட்சி வேண்டும் என்ற நோக்கத்தில் நன்மை செய்யப்புறப்பட்டதல்ல, இந்த விஷமக் கருத்தைப் பரப்புகின்றவர்கள் கூறுவது போல…
முஸ்லிம் உலக தலைவர்கள் அக்கிரமம் புரியும் எகிப்திய இராணுவத்திற்கு பண உதவி, பக்க பல உதவி அனைத்தையும் வழங்கியதன் பின்னர் இஸ்லாமியவாதிகள்தான் அங்கு நடைபெறும் மனிதப் படுகொலைகளுக்குக் காரணம் என்று கூறுவதற்கு இவர்களது நா கூசவில்லை போலும். பலஸ்தீன் விடயத்திலும் இவர்கள் இப்படித்தான் பேசுகிறார்கள். முஸ்லிம் உலகம் நன்மை செய்வதற்காக ஆதரவோடும் நேசத்தோடும் ஒன்றுசேர்வதற்குப் பதிலாக அக்கிரமம் புரியும் அராஜக இஸ்ரேலுக்கு வசதியாக பலஸ்தீன் எல்லைகளை மூடிவிடுகின்றனர். பின்னர் இஸ்ரேல், பலஸ்தீன் மக்களைத் தாக்குகின்றபோது இஸ்ரேலைக் கண்டிக்காமல், இஸ்ரேலுக்கெதிராக குரல் எழுப்பாமல் மூடப்பட்ட பலஸ்தீனுக்குள் சிறைக் கைதிகளைப் போல் முடக்கப்பட்டிருக்கும் பலஸ்தீன் மக்களை குறை கூறுகின்றார்கள். இந்த நீதியை எந்தக் குர்ஆனிலிருந்து இவர்கள் கற்றார்கள். எந்த நபிவழியில் இதற்கு ஆதாரம் இருப்பதாக கண்டுபிடித்தார்கள் என்பதை இவர்கள் கூற வேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகள் தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து ஒன்றுபடவும் நேசம் பாராட்டவும் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்கள் வாழும் நாடுகளுக்கு “நேச நாடுகள்” என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள். அதே நேரம் இங்கு முஸ்லிம் நாடுகளைப் பார்க்கிறோம்.
90 வருட அடக்குமுறைக்குப் பின் சுதந்திரக் காற்றை சுவாசித்து தனக்கென ஒரு நல்லாட்சியை ஏற்படுத்திக் கொண்ட எகிப்தை முஸ்லிம் உலகம் பகைநாடாகக் கருதி செயல்பட்டிருக்கிறது. இப்போது கூறுங்கள்… குர்ஆனின் கூற்றுப்படி முஸ்லிம் உலகத்தில் குழப்பங்களும் தீமைகளும் அதிகரிக்குமா? எதிரிகளின் உலகத்தில் குழப்பங்களும் தீமைகளும் அதிகரிக்குமா? அதற்கு காரணம் யார்? எகிப்து மக்களா? அல்லது நேசம் பாராட்டி நட்புறவு பேண முடியாத முஸ்லிம் உலகத் தலைவர்களா?
இவ்வாறு இவர்களது கூற்று குர்ஆனின் கூற்றோடு நேர் எதிராக முரண்படுவதைப் பார்க்கின்றோம். குர்ஆனோடு மட்டுமல்ல, நபிகளாரின் நடைமுறை வாழ்வோடும் இவர்கள் முரண்படுகிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நன்மைகளை வளர்ப்பதற்கும் தீமைகளை ஒழிப்பதற்கும் முன்னேறிச் சென்ற பாதையை ஒரு கணம் உற்றுநோக்கினால், இவர்களது கூற்றோடு முரண்படுகின்ற பல வரலாற்றுண்மைகளை அங்கு கண்டு கொள்ளலாம்.
1. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தினுள் முரண்பாடுகளும் பிணக்குகளும் பிளவுகளும் உருவாக இடமளிக்கவில்லை. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நட்புறவையும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையுமே வளர்த்தார்கள். நபிகளாரின் சமூகத்தினுள் அல்லாஹ்வால் பிரகடனம் செய்யப்பட்ட முனாபிக்குகள் இருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது அயராத முயற்சிகளைத் தோல்வியுறச் செய்வதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு எதிராக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர்ப் பிரகடனம் செய்யவில்லை.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது இந்த நடைமுறையை எகிப்து மக்களின் விடயத்தில் முஸ்லிம் உலகத் தலைவர்கள் ஏன் பின்பற்றவில்லை. எகிப்து மக்களுக்கெதிராக அமெரிக்க சார்பு இராணுவத்தைத் தூண்டி அவர்களுக்குப் பண உதவியும் செய்த முஸ்லிம் உலகத் தலைவர்கள் எந்த நபியின் நடை முறையைப் பின் பற்றி அவ்வாறு செய்தார்கள்? முஸ்லிம் உலகத் தலைவர்களுக்கு எகிப்து செய்த அநீதி என்ன? இவர்களது பார்வையில் நல்லாட்சியை விரும்பிய எகிப்து மக்கள் முனாபிக்குகள் என்று வைத்துக் கொண்டாலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முனாபிக்குகளோடு நடந்த முன்மாதிரியை அவர்களால் ஏன் பின்பற்ற முடியாமல் போனது?
அதுமட்டுமல்ல, இலங்கையில் இருப்பவர்கள் சிலர் எகிப்தில் நல்லாட்சியமைக்க விரும்பியவர்களை சாடுகிறார்களே இவர்களுக்கு எகிப்து மக்கள் செய்த அநீதி என்ன? இவர்கள் நபிகளாரின் எந்த முன்மாதிரியை, சுன்னாவைப் பின்பற்றி இவ்வாறு பேசுகிறார்கள்.
நற்செயல்கள் புரிபவர்களையும் நீதியை மேலோங்கச் செய்வதற்காக உழைப்பவர்களையும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை முற்றாக இல்லாமல் செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்பவர்களையும் தன்னலம் பாராது தம்மை அர்ப்பணித்து மக்களின் பிரச் சினைகளைத் தீர்த்துவைப்பவர்களையும் நாட்டின் பிரச் சினைகளைத் தீர்த்து விடுவதன் மூலம் வெளிச் சக்திகளின் தலையீடுகளுக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்பவர்களையும் மனித குலத்தின் எதிரிகள் உலக மாபியாக்களைச் சேர்ந்தவர்கள், ஸியோனிஸ்டுகள் விட்டுவைப்பதில்லை. இத்தகையவர்கள் உலகில் நல்லவர்களின் கை மேலோங்கி விடாமல் தடுத்துக் கொண்டே இருப்பார்கள். முடிந்தால் நல்லவர்களை ஈவிரக்கமின்றி இனத்துடைப்பு செய்துவிடு வார்கள். இன்று எகிப்திலும் சிரியாவிலும் நடப்பது இந்த வகையைச் சார்ந்ததோர் அழிவுதான்.
பலஸ்தீனில் காலத்துக்குக் காலம் அரங்கேற்றப்படும் படுகொலைகளுக்கும் எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் அரங்கேற்றப்படும் மனிதப் படுகொலைகளுக்கும் ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. பலஸ்தீனில் ஸியோனிஸ்டுகளின் நேரடித் தாக்குதல் இடம்பெறுகிறது. எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் சியோனிஸ்ட்களின் கையாடுகள் இந்த அழிவுத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.
இந்த உலக நடப்பைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இந்த நடப்பினால் அநீதிக்குட்பட்டிருப்பவர்கள் யார் என்பதையும் புரிந்துகொள்ள மனம் வரவில்லை. மாறாக, அநீதிக்குட்பட்டிருப்பவர்களே அநீதி நடப்பதற்குக் காரணம் என்றொரு கண்டுபிடிப்பை குத்பாவில் முழங்குகின்றார்கள் எம்மவர்களில் சிலர். அவர்களுக்கு இதில் என்ன நன்மை இருக்கின்றதோ? அல்லாஹ் அறிவான்.
என்னைப் பொறுத்தவரை, எகிப்தில் முஸ்லிம்களால் முஸ்லிம்கள் அழிக்கப்படவில்லை. மனித சமூகத்தின் எதிரிகளால் அநீதியின் காவலர்களால் முஸ்லிம்கள் அழிக்கப்படுகிறார்கள் என்றே கூறுவேன். இது மனித வரலாற்றில் புதியதல்ல. அநீதி மேலோங்கிய காலமெல்லாம் இத்தகைய அழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஈமான் கொண்ட ஒரே குற்றத்திற்காக அகழ்வாசிகள் நெருப்பிலிட்டுப் பொசுக்கப்பட்டார்கள் என அல்குர்ஆன் வரலாறு கூறுகின்றது. அந்த அகழ்வாசிகள் அழிக்கப்பட்டதற்கான காரணம் அவர்களேதான் என்று கூறினால் அது எத்தனை அபத்தமோ அது போன்றதுதான் எகிப்து மக்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுமாகும். அவ்வாறு குற்றம் சுமத்துபவர்கள் தவ்பா செய்ய வேண்டும்.
அல்லாஹ் உலகின் வெற்றி, தோல்விகளை நிரந்தர வெற்றி, தோல்விகளாகப் பார்ப்பதில்லை. ஈமான் கொண்ட அகழ் வாசிகளில் ஒரு பச்சிளம் குழந்தை கூட மிச்சமில்லாமல் அனைவரும் தீயிலிடப்பட்டார்கள். அந்த உலகத் தோல் வியை அல்லாஹ் தனது திருமறையில் மகத்தான வெற்றி என்றே குறிப்பிடுகின்றான். உலகின் வெற்றிகளையும் தோல்விகளையும் அதனதன் நேரத்தில் அல்லாஹ் தீர்மானிப்பான் என்றும் இறுதி வெற்றி அல்லாஹ்விடத்தில் நல்லவர்களுக்கே இருக்கின்றது. அது மட்டுமல்ல, உலகத் தோல்விகள் தன்னகத்தே நன்மைகளையும் சுமந்துதான் வருகின்றன. உஹுதில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அல்லாஹ் இறக்கி வைத்த வசனங்கள் என்ன கூறுகின்றன என்பதைப் பாருங்கள்.
“(முஸ்லிம்களே!) உங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பின் அது போன்ற இழப்பு (எதிரிகளான) அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஈமான் கொண்டவர்கள் யார் என்பதை அல்லாஹ் அறிந்து கொள்வதற்காகவும் உங்களிலிருந்து ஷஹீத்களைத் தெரிவு செய்வதற்காகவும் (இழப்புகள் ஏற்படும்) இத்தகைய நாட்களை மனிதர்களிடையே சுழற்சி முறையில் நாம் கொண்டு வருவோம். (அதன்போது) அநீதியிழைப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். மேலும், (இதன் மூலம்) ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்துகிறான். (அநீதியிழைக்கும்) இறைநிராகரிப்பாளர்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்” (3: 140,141)
இழப்புகள் ஏற்படும் நாட்களில் அல்லாஹ்வின் உன்னதமான நோக்கங்கள் நிறைவேறுகின்றன என்று கூறும் இந்த வசனங்கள் முஸ்லிம் உலகில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அமைதியின்மைக்கான காரணத்தையும் அமைதியின்மையால் ஈமான் கொண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான ஆறுதலையும் அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் அநீதியின் காவலர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அல்லாஹ்வின் பயங்கர வேதனை பற்றிய எச்சரிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.
அமைதியின்மைக்கு அல்லாஹ் கூறுகின்ற காரணம் எங்கே இவர்கள் கண்டுபிடித்துக் கூறும் குர்ஆன், சுன்னாவுக்கு முரணான காரணம் எங்கே?!
இந்த அவதூறு பற்றி நிச்சயம் இவர்கள் வினவப்படுவார்கள்.
-உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/