பெண்கள் தனியாக வெளியில் செல்வது `த்ரில்லிங்’தான்! ஆனால்...
பெண்கள் தனியாகப் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. அவர்களின் தைரியத்தைப் பாராட்டும் அதே நேரம், வெளியூருக்குத் தனியாகச் செல்லும்போது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதற்கான ‘ரோடு’கள் இங்கே! ‘கோடு’களை நீங்களே யோசித்து போட்டுக்கொள்ளுங்கள்!
1 உங்களின் சுற்றுச்சூழல், உங்களை சுற்றியுள்ள நபர்கள் குறித்துக் கவனமாயிருங்கள். அதற்காக எப்போதும் பீதியிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால் மற்றவர்களில் ஒருவர் உங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார் என்றாலோ, திரும்பத் திரும்ப ஒரு முகம் ஆங்காங்கே தோன்றுகிறது என்றாலோ எச்சரிக்கையாகிவிடுங்கள்.
2 முன்பின் தெரியாத இடங்களில் ஒரு பெண் தனது உள்ளுணர்வை நம்புவது நல்லது. குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழி கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒருவர் நட்புமுகம் காட்டுவது நன்மை செய்யவா அல்லது வேறு மாதிரியா என்று உள்ளுக்குள் ஒரு மணி அடிக்கும். `அலர்ட்’ ஆகிவிடுங்கள்.
3 புதிய இடங்களுக்கு செல்கையில் ஒரு வழிகாட்டிக் கையேடு நல்ல துணைவனாக இருக்கும். அந்தப் பகுதியின் தெருக்கள், கலாசாரம் குறித்து முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். தங்குவதற்கு சிறந்த இடம், எங்கே என்ன வாங்கலாம் என்பது போன்ற தகவல்களையும் `கைடு புக்’ தரும்.
4 மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியிலே பயணப்படுங்கள். இது ரொம்ப காலமாக சொல்லப்படுவதுதான். ஆனால் அதிகம் புறக்கணிப்படுவதும் இதுதான். பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள் பாதுகாப்பானவை. அப்போது மக்களோடு மக்களாகக் கலந்துவிடலாம். ஏதாவது உடனடி உதவி தேவை என்றாலும் கிடைக்கும்.
5 சூட்கேஸ் மற்றும் பைகளில் உங்கள் முகவரியை எழுதுகிறீர்கள் என்றால், அது `பளிச்’சென்று தெரியும்படி இருக்க வேண்டாம். அத்துடன், சொந்த வீட்டு முகவரிக்குப் பதிலாக நீங்கள் பணிபுரியும் அலுவலக முகவரியை எழுதிவையுங்கள். புதிய இடத்தில் நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாம். முக்கியமான பொருட்களை ஓட்டல் பாதுகாப்பறையிலேயே விட்டுச் செல்லுங்கள்.
6 நீங்கள் ஒரு இடத்துக்கு முதல்முறையாகப் போகிறீர்கள் என்றால், நன்றாக அலசி ஆராய்ந்தபிறகு ஓட்டலை தேர்வு செய்வது நல்லது. முன்பதிவு செய்துவிடுங்கள். புதிய இடத்தில் போய் தடுமாறுவதை அது தடுக்கும். அங்கே போய் தங்கியபிறகு, பக்கத்திலேயே அதைவிட நல்ல ஓட்டல் இருக்கிறது என்றால் பின்பு மாறிக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்கள் மட்டும் உள்ள ஏரியாவில் ஓட்டலை தேர்வு செய்யாதீர்கள். அவை இரவில் வெறிச்சோடிப் போய்விடும். பரபரப்பான நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதி நல்லது.
7 நீங்கள் செல்லும் இடத்தின் கலாசாரத்துக்குப் பொருந்துமாறு உடையணிவது முக்கியம். நீங்கள் விரும்பிய விதத்தில் உடையணிய உங்களுக்கு உரிமை இருக்கிறதுதான். ஆனால் உள்ளூருடன் ஒத்துப்போகும் வகையில் உடையணிவது, அங்குள்ள மக்களுடன் இயல்பாகப் பழக உங்களுக்கு உதவும். தேவையற்ற கவனம் உங்கள் மீது படிவதையும் தடுக்கும்.
8 சுற்றிப் பார்க்க வெளியே புறப்பட்டுச் செல்லும்முன்பு, குறிப்பிட்ட இடத்தின் வரைபடத்தைப் பார்த்து இடங்களை மனதில் பதித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணி என்று தெரியாமல் இருக்க, கையடக்க வழிகாட்டி ஏட்டைப் பயன்படுத்துங்கள். உள்ளூரில் எந்தெந்தப் பகுதிகள் அபாயமானவை, தவிர்க்க வேண்டியவை என்று நீங்கள் தங்கியிருக்கும் ஓட்டலின் பெண் ஊழியர் ஒருவரிடம் `நைசாக’ கேட்டால் கூறிவிடுவார்.
9 இரவில் வெளியே செல்கிறீர்கள் என்றால் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இரவில் அபாயம் அதிகம். வழிதவறிவிட்டாலும் தங்கும் இடத்துக்குத் திரும்புவது கஷ்டமாகிவிடும்.
10 பெண்கள் தனியாக செல்வது `த்ரில்லிங்’காக இருக்கும்தான். ஆனால் சற்றுத் தொலைதூரமான இடங்களுக்கு செல்கையில் ஒரு துணை இருந்தால் நல்லது. ஏதாவது எதிர்பாராத சூழலில் மாட்டிக்கொண்டால் கூட இரண்டு பேர் என்றால் சமாளிக்கலாமே!
இவ்வளவு பிரச்சனைகள் உண்டு என்பதை கருத்தில் கொண்டுதான், இஸ்லாம் பெண்கள் தனியே வெளியில் செய்வதை அனுமதிக்காததோடு அதற்கான சரியான வழிமுறையாக, துணையாக “மஹரம்” ஒருவரையும் அழைத்துச்செல்லச் சொல்கிறது.