நபியைச் சார்ந்த சமூகமாய்த் திகழ….
முஸ்லிம்களின் விவகாரங்களில் ஒவ்வொரு முஸ்லிமும் தனித் தனியாகக் கவனம் செலுத்துவது சாத்தியமில்லை. அது தனது சக்திக்கப்பாற்பட்ட விடயம் என்றே தனி மனிதன் கருதுவான். பின்னர் அந்தக் கவலையைக் கூட தனி மனிதன் விட்டுவிடுவான். அதற்கு சிறந்த உதாரணம், இன்று எகிப்தில் முஸ்லிம்களுக்கெதிராக அமெரிக்காவின் அடிவருடிகள் கட்டவிழ்த்திருக்கும் அக்கிரமங்களும் படுகொலைகளுமாகும். ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் அழித்து அடக்குமுறைகளுக்கெதிராக குரல் கொடுப்பதற்கு வீதிக்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான நிராயுதபாணிகள் அமெரிக்காவின் பொம்மை இராணுவத்தால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்படுகின்றனர்.
எனினும், ஆஸிய முஸ்லிம்களிடையே அது ஒரு கவலையையோ அதிர்வலையையோ ஏற்படுத்தியமைக்கான அடையாளங்கள் எதனையும் வெளிப்படையாகக் காண முடியவில்லை. இதுதான் தனி மனிதர்களின் நிலை. தனி மனிதர்கள் தங்களது ஒரு விடயமாகக் கருதி இதில் கவனம் செலுத்தமாட்டார்கள். காரணம், இது அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் தனி மனிதர்களால் செலுத்த முடியுமான சிறியளவிலான கவனத்தை இறுதியாகவும் செலுத்தப்பட வேண்டிய பெரிய கவனத்தை முதல் அம்சமாகவும் இங்கே நாம் ஒழுங்குபடுத்திக் கொள்கிறோம்.
“முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தாதவர்கள் எம்மைச் சேர்ந்தவர்களல்லர்” என்ற நபிமொழி கவனம் செலுத்தாத தனி மனிதனையும் எச்சரிக்கின்றது. கவனம் செலுத்தாத சமூகத்தையும் எச்சரிக்கின்றது. குறித்த நபிமொழியில் வந்திருக்கும் (மன்ன) என்ற பிரயோகம் இரண்டையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றமை அரபு மொழி அறிவுள்ளவர்களுக்குத் தெரியும்.
முதலில் சமூகம் என்ற கருத்தில் இதன் விளக்கத்தைப் பார்ப்போம். முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனை இந்த நபிமொழி வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகம் முஸ்லிம் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகள் இல்லாத நிலையில் முஸ்லிம் சமூகத்தினால் முஸ்லிம் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்துவது சாத்தியமில்லை.
முஸ்லிம் சமூக விவகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான ஏற்பாடுகளும் இருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் கூட்டு ஏற்பாடுகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் சமூகம் தனது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி நபியைச் சார்ந்த ஒரு சமூகமாகத் திகழலாம்.
முதலில் இந்த ஏற்பாடுகளுக்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.
உணவு உற்பத்திகளில் ஹலால் ஹராம் வரையறைகளைப் பேணுவதற்கும் அவ்வாறு பேணப்படாத உற்பத்திகளைத் தவிர்ப்பதற்கும் “ஹலால் சான்றிதழ்படுத்தும்” நிறுவனங்கள் உலகில் இயங்கி வருகின்றன. இது முஸ்லிம் சமூக விவகாரம் ஒன்றில் கவனம் செலுத்துவதற்கான ஓர் ஏற்பாடாகும். இந்த ஏற்பாடு இருப்பதனால் தனி மனிதர்கள் தங்களை ஹராமான உற்பத்திகளை உட்கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்கின்றனர்.
மற்றுமோர் ஏற்பாடு, பண நடவடிக்கைகளில் காணப்படுகின்ற ஹராம்களிலிருந்து முஸ்லிம்களுக்கு ஒருவித பாதுகாப்பை வழங்குவது. அதுதான் இஸ்லாமிய வங்கிகள். தற்போதுள்ள இஸ்லாமிய வங்கி முறைமைகளில் இன்னும் மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறுபவர்கள் இருந்த போதிலும், ஒரு முஸ்லிம் சமூக விவகாரத்தைக் கவனிக்கும் ஏற்பாடாக இத்தகைய வங்கிகள் தொழிற்படுவதை மறுக்க முடியாது.
முஸ்லிம் சமூக விவகாரம் ஒன்றைக் கவனிக்கும் மற்றுமோர் ஏற்பாடு மஸ்ஜித்களாகும். முஸ்லிம்கள் தினமும் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றி தமக்கும் தமது இரட்சகனுக்குமிடையிலான உறவைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஏற்பாடு இன்றியமையாததாகும்.
அரபு மத்ரஸாக்கள் மார்க்கக் கல்வியை முஸ்லிம் சமூகத்தில் வளர்க்கின்ற மற்றுமோர் ஏற்பாடாகும். முஸ்லிம் சமூகத்தில் மார்க்க நெறிமுறைகளைப் பிரசாரம் செய்து, பயிற்றுவித்து சன்மார்க்க விழுமியங்களோடு மக்களை வாழச் செய்வதற்கான மற்றுமோர் ஏற்பாடாக இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன.
பிறைக் குழுக்கள், ஸகாத் கமிட்டிகள், ஜனாஸா நலன்புரிச் சங்கங்கள், அஹதிய்யா மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள், பாலர் பாடசாலைகள் என முஸ்லிம் சமூக விவகாரங்களுக் கான பல்வேறு ஏற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் காணப்ப டுகின்றன. இந்த ஏற்பாடுகள் அனைத்திலும் நிவர்த்திக்கப்பட வேண்டிய குறைகள் இருந்தபோதிலும்…. இந்த ஏற்பாடுகளில் காணப்படுகின்ற விளைதிறன் மற்றும் வினைதிறன் என்பன பற்றி பெருமளவு பேசப்படவேண்டிய, விவாதிக்க வேண்டிய குறைகள் இருந்தபோதிலும் இவை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு விவகாரங்க ளைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகள் என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தகைய ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவர்கள் முஸ்லிம் சமூக விவகாரங்களில் கவனம் செலுத்தாத வர்கள் என்ற நபிமொழிக்குள் அடக்கப்படுவர். அவர்கள் நபியைச் சேர்ந்தவர்கள் என்ற அந்தஸ்தைப் பெறுவதும் இதனால் கேள்விக்குறியாகலாம்.
இது இவ்வாறிருக்க, முஸ்லிம் சமூக விவகாரங்கள் இவற்றோடு முடிந்து விட்டதாக முஸ்லிம்கள் கருத முடியாது என்பதனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவற் றிற்கு மேலாலும் முஸ்லிம் சமூக விவகாரங்கள் உண்டு. அவற்றை முஸ்லிம் சமூகம் தமது விவகாரமல்ல என ஒதுக்கி விட முடியாது. அல்லது நாம் அவற்றைக் கவனிக்க வேண்டி யதில்லை அல்லாஹ் கவனித்துக் கொள்வான் என்று முஸ்லிம் சமூகம் அந்த விவகாரங்களை புறம்தள்ளி விட முடியாது. அவற்றைப் புறந்தள்ளினாலோ அல்லது கவனிக்காது விட்டாலோ முஸ்லிம் சமூகம் நபியைச் சார்ந்திருக்கும் சமூகமாக இருக்க முடியாது.
“அல்லாஹ் கவனிப்பான் நாம் கவனிக்க வேண்டிய தில்லை” என்றொரு கருத்து சமூகத்தில் இருப்பதனால் அதற்கு சிறியதொரு விளக்கம் இவ்விடத்தில் சொல்லப்படுவது பொருத்தமாகும் எனக் கருதுகிறேன். “முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தாதவர்கள் எங்களைச் சேர்ந்தவர்களல்லர்” என்ற நபிமொழியே இந்தக் கருத் துக்கு மறுப்பாக இருக்கின்றது. முஸ்லிம்களே! உங்களது விவகாரங்களை முதலில் நீங்கள் கவனியுங்கள். அதன் பிறகு அல்லாஹ் கவனிப்பான் அவ்வாறு கவனிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர் என்று எச்சரிக்கின்றது இந்த நபிமொழி. இதனை சந்தேகத்துக்கிடமில்லாமல் வலியுறுத்துகின்ற மற்றோர் ஆதாரம் பின்வரும் குர்ஆன் வசன மாகும்:
“ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அந்த சமூகத்தின் நிலையை மாற்றப் போவதில்லை.”
அடக்குமுறை, அநீதி, சர்வாதிகாரம் போன்ற அக்கிரமங்களை மாற்றுவதற்காக எகிப்து மக்கள் இன்று அனுபவிக்கின்ற துன்பங்களை சிறிது நோக்குங்கள். அத்தகைய துன்பங்கள் மூலம் நிச்சயம் அந்த மண்ணில் நாளை அல்லாஹ் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவான். அவர்கள் ஆயுதங்களின்றி வெறும் கையோடு அநீதியை மாற்றுவதற்கு நடத்தும் சாத்வீகப் போராட்டத்தில் அல்லாஹ் மாற்றுக் காரணியாக நிச்சயம் தொழிற்படுவான் என்பதை மேற்கூறப்பட்ட வசனம் எமக்குணர்த்துகிறது. இந்தவகையில் “அல்லாஹ் கவனிப்பான் நாம் கவனிக்க வேண்டியதில்லை” என்ற கூற்று இஸ்லாத்தின் அடிப்படைகளுக்குப் பொருந்துவதாக இல்லை. அத்தகைய கூற்றுக்கள் முஸ்லிம் சமூக விவகாரங்களில் அக்கறையில்லாத் தன்மையை வளர்ப்பதற்கும் முஸ்லிம்களை நபியைச் சாராதவர்களாக மாற்றுவதற்குமே உதவும்.
முஸ்லிம் சமூகம் இதுவரை கவனம் செலுத்தாத விடயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் முஸ்லிம் சமூகத்தின் கவனம் குறைவு என்றோ இல்லை என்றோ குறிப்பிட வேண்டும். அத்தகைய விவகாரங்கள் சிலவற்றை உதாரணங்களாக இங்கு நோக்குவோம்.
அவற்றுள் முதன்மையானது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையாகும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இதனை சாதித்து விட்டதாக சிலர் கருதுகின்றனர். சிலர் இதனை சாதிக்க முடியாது சாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகின்றனர். இன்னும் சிலர் வெளிரங்கத்தில் ஒற்றுமையும் அந்தரங்கத்தில் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்களாக செயல்படுகிறார்களோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.
முதலில் ஒற்றுமை என்பது பேச்சல்ல… சொற்பொழிவல்ல… முரண்பட்டவர்கள் ஓரிடத்தில் அமர்வது மட்டுமல்ல… ஒற்றுமைக்கான வழிகாட்டல்களை வழங்குவது மட்டுமல்ல… இவை அனைத்தும் இந்தப் பாதையின் முதல், இரண்டாவது எட்டுக்களாக இருக்கலாம். அந்த எட்டுக்களோடு நின்று விட்டால் ஒற்றுமை வந்துவிடாது. இது ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டிய நீண்ட பயணம் என்பதை உணர வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினர்களிடையேயும் நம்பிக்கைகள், நல்லெண்ணங்கள் வளர்க்கப்பட்டு ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மதிக்கும், கௌர விக்கும், அங்கீகரிக்கும் நிலை உருவாக்கப்படல் வேண்டும். இந்நிலை முரண்பாடுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் மத்தியில்தான் உருவாக்கப்படலாம் அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டதன் பின்னர் அல்ல. அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டதன் பின்னர்தான் ஒற்றுமை வரமுடியும் என்று ஒரு தரப்பினர் கருதினால், அவர்கள் தமது தரப்பில் அனைவரும் இணைந்து ஒன்றுபடுவதில் மட்டுமே ஒற்றுமை இருக்கிறது என்று ஆழமாக விசுவாசிப்பர்.
இத்தகைய நம்பிக்கைகள், நல்லெண்ணங்கள் வளர்க்கப்படுவதற்கு சிலர் ஒரு புதுமையான வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். புன்னகைத்து, ஸலாம் கூறி, கை குலுக்கி, சுகம் விசாரித்து, பொது விவகாரங்களைப் பேசிவிட்டு கலைந்து செல்வதுதான் அவ்வழி. ஒருவரிடம் இருக்கின்ற…. அல்லது ஓர் அமைப்பிலிருக்கின்ற… எந்தக் குறையையும் போதாமையையும் தொட்டுக் கூடப் பார்க்காமல் ஒற்றுமையாக இருப்போம் என்பதே அந்தப் புதுமையான முயற்சி.
ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான முயற்சி இந்தப் பாணியில் நடைபெறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. ஒருவரின் அல்லது ஒரு தரப்பின் போதாமைகளை வெளிப்படுத்தும் அழகிய அற்புதமான மொழி தெரியாதிருப்பது.
2. அத்தகைய மொழியால் வெளிப்படுத்தினாலும் அதனை அங்கீகரித்து அதிலுள்ள நல்லம்சங்களை ஜீரணித்துக் கொள்வதற்குத் தேவையான உயர்ந்த பண்பு நலன்கள் இல்லாதிருப்பது. இத்தகைய குணங்களால் உள்ளங்கள் இணைவது சாத்தியமில்லை. மாறாக, இவற்றிற்கு நேர் எதிரான நற்குணங்களால் உள்ளங்கள் இணைய முடியும் என்பதை அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.
“அழகான வழிகளில் மறுப்புக் கூறுங்கள்…. அப்போது யாருடன் உங்களுக்குப் பகைமை இருந்ததோ அவர் உங்களது உற்ற நண்பனாகி விடுகிறார்.” (41: 34)
இந்த வசனத்தின் முதல் பகுதி அழகிய மொழியை வேண்டி நிற்கிறது. அழகிய மொழி தெரியாவிட்டால் மிக அழகான முறையில் மறுப்புக் கூறவோ தவறுகளை சுட்டிக்காட்டவோ முடியாது. வசனத்தின் இரண்டாம் பகுதி உயர்ந்த பண்பு நலன்களை வேண்டி நிற்கின்றது. உயர்ந்த பண்பு நலன்கள் இல்லாதவர் அழகிய மறுப்புக் கூறுபவ ரோடு ஆத்ம நண்பராக முடியாது.
ஆக, குர்ஆன் கூறும் இந்த வழியில் இணக்கம், ஐக்கியம் நோக்கி முன்னேறுவதே மிகவும் சிறப்பானது.
இந்த வகையில் ஒற்றுமைக்கான ஒரு பாரிய ஏற்பாடு சமூகத்தில் துவக்கப்பட வேண்டும். அதுதான் அழகிய மொழியில் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கான பயிற்சி. இத்தகைய பயிற்சிகளை வழங்கும் பயிற்சி நிலையங்கள் நவீன உலகில் நிறையவே இருக்கின்றன. முஸ்லிம் உலகில் துரதிஷ்டம் அவற்றைக் காணமுடியாதிருக்கிறது. அழகாகப் பேசத் தெரியாத… முரண்படும் சூழ்நிலைகளில் தமது கருத்துக்களை அழகாக முன்வைக்கத் தெரியாத சமூகம் ஒருபோதும் ஒன்றுபடப் போவதில்லை.
அதே நேரம் அழகிய மொழியில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் விமர்சனங்களையும் பெருமனதோடு ஏற்றுக் கொள்ளும் பண்பாட்டுப் பயிற்சியும் பாசறை பாசறையாகத் துவக்கப்படல் வேண்டும். இத்தகைய பாரிய ஏற்பாடுகள் இல்லாது இந்தப் பத்தியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்ற அந்தப் புதுமையான வழியில் ஒற்றுமை ஏற்பட முடியாது.
சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் என்பவற்றோடு கூட்டாக ஒன்றிணைந்து சமூகத்தை சீரியதொரு பாதையில் வழிநடத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் செயல் திட்டங்களையும் தயாரிக்க வேண்டும். அத்திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அனைவரும் களத்தில் ஒன்றிணைந்து வேலை செய்வதற்குப் பொருத்தமான சூழ்நிலைகளைத் தோற்றுவித்தல் வேண்டும்.
இவ்வாறான பாரிய ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதே முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதாகும்.
மேலும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகவாழ்வு, முஸ்லிம் சமூகத்தை பாவங்கள், குற்றச் செயல்களிலிருந்து பாதுகாத்தல், முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகங்கள் பிழையாகப் புரிந்து கொள்ளாத வகையில் அந்தச் சமூகத்தின் வாழ்வியல் ஒழுங்குகளை மீளமைத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளுக்கு சமூகத்தில் பாரிய ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. “முஸ்லிம் களின் விவகாரங்களில் கவனம் செலுத்தாதவர்கள் எம்மைச் சேர்ந்தவர்களல்லர்” என்ற நபிமொழி இது போன்ற விவ காரங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பதை எச்சரிக்கின்றது.
“முஸ்லிம்களது விவகாரங்களைக் கவனித்தல்” என்ற அம்சத்தை பசியில் இருக்கும் பக்கத்து வீட்டைக் கவனித்தல், பிச்சை கேட்டு வரும் மனிதனை விரட்டாமல் அவனது பாத்திரத்தில் சில சில்லறைகளைப் போடுதல் போன்ற விடயங்களோடு மட்டுப்படுத்தி விடக்கூடாது. முஸ்லிம்களின் விவகாரங்கள் மிகவும் பரந்துபட்டவையாகும். அவற்றை தனிமனிதர்களால் கவனிக்க முடியாது. சமூகமும் சமூகத்தின் பொறுப்பாளர்களும்தான் அவற்றைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். அந்த ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போது மேற்க்குறிப்பிட்ட நபி மொழியின் படி இந்த சமூகம் நபியைச் சார்ந்த சமூகமாக இருக்காது.
தனி மனிதர்களுக்கும் முஸ்லிம்களின் விவகாரங்களில் அக்கறை இருக்க வேண்டும். எனினும், அந்த அக்கறையின் எல்லை மிகவும் சுருங்கியதாகவே இருக்கும். ஒரு தனிமனிதன் மற்றுமொரு தனிமனிதன் மீது காட்டும் அக்கறையாகத்தான் அது பெரும்பாலும் இருக்க முடியும். மொத்த சமூகத்திற்காகவும் ஒரு தனிமனிதன் பாரியளவில் எதனையும் செய்ய முடியாது. விதிவிலக்கான ஒரு சில தனிமனிதர்களைத் தவிர, நளீம் ஹாஜியாரை அவ்வாறதொரு தனிமனிதராக அடையாளப்படுத்தலாம். அவர் சமூகத்திற்கு இன்றியமையாத ஒரு முக்கியமான துறையில் தனது சமூகப்பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சமூகத்தின் தலைவர்கள் தங்களைத் தனி மனிதர்களாகக் கருதக்கூடாது. காரணம், அவர்களது கைகளில் சமூகத்தின் எத்தனையோ வளங்கள் இருக்கின்றன.
அவர்களது சமூகத்தின் பாரிய விவகாரங்களில் அக்கறையுடையவர்களாகவும் கவனம் செலுத்தபவர்களாகவும் இருக்க வேண்டும்.
தனிமனிதர்களில் அதிகமானோர் அவ்வாறிருக்க மாட்டார்கள். அவர்கள் அதிகபட்சம் சில தனிமனிதர்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தபவர்களாகவோ அல்லது அதுவும் இல்லாதவர்களாகவோ இருப்பர். அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சமூகவிவகாரங்களில் கவனம் செலுத்துவதாக இருந்தால் அது சமூகத்தின் நலனுக்காக துஆ செய்வது ஒன்றைத் தவிர வேறெதுவுமிருக்காது. அதனையும் கூட்டாக செய்வதாயின் சமூகத்தின் பொறுப்பாளர்கள் அதனை வேண்டிக் கொள்ள வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் சமூகம் அதிலும் கரிசனையற்றதாகவே இருக்கும். எகிப்தில் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் நடத்தும் பயங்கரமான மனிதப் படுகொலைகளுக்கு எதிராக துஆ செய்யும் கரிசனையொன்றை இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் காணவில்லை என்பதை இந்த ரீதியில் நோக்க வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் விவகாரங்களில் அந்தளவுகூட கரிசனையும் கவலையுமற்றுப் போகும் நிலை ஏற்படுவது இந்த உம்மத்தின் உயிர்த்துடிப்பில் வினாக் குறியை எழுப்புகின்றது.
ஆக, முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தும் பாரிய பொறுப்பு சமூகத்தையும் அதன் பொறுப்பாளர்களையுமே சாரும். முஸ்லிம் சமூகத்தை நபியைச் சார்ந்திருக்கும் சமூகமாக மாற்றுவதற்கு அவர்கள் பெரு முயற்சி எடுக்க வேண்டும். சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பணியாற்றி அவற்றில் முஸ்லிம்கள் அனைவரையும் பாரபட்சமின்றிப் பங்கு கொள்ள வைக்கும் முயற்சியிலேயே இது தங்கியுள்ளது.
முஸ்லிம்களின் விவகாரங்களில் கவனம் செலுத்தி நபியைச் சார்ந்த சமூகமாகத் திகழ முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள் முன்வருவார்களாக!
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி
source: http://usthazhajjulakbar.org/