முஹர்ரம் மாதமும் உன்னத மதீனா சமூகமும்
இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மகத்துவமிக்க மாதங்களில் ஒன்றாகும். போர் புரிவதற்கு தடை விதிக்கப்பட்ட நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் உள்ளடங்குகிறது.
“முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் நபித் தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது பலரும் பல மாதங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.” (முஸ்லிம்)
இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற ஸ¤ன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது.
முஹர்ரம் மாத ஆஷ¤ரா நோன்பு
முஹர்ரம் பத்தாம் நாளிலேயே நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதன் காரணமாக முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள்.
முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்து வந்த, ஏவியவற்றில் ஆஷ¤ரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷ¤ரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷ¤ரா நோன்பு நோற்று வந்தார்கள்.
குரைஷிகள் (மக்காவில்) ஆஷ¤ரா நோன்பை நோற்று வந்தார்கள். அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம். விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம் : புகாரி)
இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷ¤ரா நோன்பு என்பதனையும் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷ¤ரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.
பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷ¤ரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இந்நாளில் நோன்பு நோற்பது முன்னைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ஆஷ¤ரா நோன்பு அதற்கு முன்னைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்” (முஸ்லிம்)
முன்னைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் அர்த்தம் சிறு பாவங்களாகும். மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும் என முஹத்திkன்கள் விளக்கம் கூறுகின்றனர்.
முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷ¤ரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்கள்.
ஆஷ¤ரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள். அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொராவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில் முஹர்ரம் புத்தாண்டிற்கு அடிப்படையாக அமைந்த ஹிஜ்ரத் நினைவு கூரத்தக்கது.
ஹிஜ்ரத் நபியவர்களது வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மட்டுமன்றி, மனித வரலாற்றிலேயே ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவித்த மாபெரும் நிகழ்வு. இஸ்லாமிய வரலாற்றில் அது ஒரு திருப்புமுனை. அந்த ஹிஜ்ரத்தோடு முஸ்லிம்கள் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கிறார்கள். நபியவர்களின் மதீனா வாழ்வு ஆரம்பமாகின்றது. அந்த மாற்றம் இஸ்லாமிய சமூக அமைப்புக்கு ஒரு புதிய தெம்பைக் கொடுத்து இஸ்லாமிய சமூகத்தின் கட்டுக்கோப்பை ஸ்திரப்படுத்துகின்றது. மதீனாவில் ஓர் உன்னத சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஹிஜ்ரத் வழியேற்படுத்திக் கொடுத்தது.
அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அkஸ் (நளீமி)
source: http://www.dawahworld.com/