நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?
அ. மார்க்ஸ்
சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது. படேல் இன்னும் சிறந்த பிரதமராக இருந்திருக்க முடியும்” என்பது.
நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல.. ஜனவரி 29, 2004-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணைபோனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியது” என்றது நினைவுக்கு வருகிறது.
இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி, நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது.
படேல், நேரு ஆகிய இருவர் மீதும் காந்திக்கு அன்பு இருந்த போதிலும் அவர் நேருவையே பிரதமர் பதவிக்குத் தேர்வுசெய்தது குறித்து ஜூடித் பிரவுன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இரு காரணங்களைச் சொல்வார்கள். ஒன்று, படேலைக் காட்டிலும் நேரு பன்னாட்டளவில் அறியப்பட்டவர் மட்டுமல்ல; புகழ் பெற்றவரும்கூட. அடுத்து, நேரு பலதரப்பட்ட அரசியல் சமூகங்களுடனும் உரையாடும் தகுதி பெற்றவர் என்பது.
அதாவது பல தரப்பினரையும் கூடுதலாக உள்ளடக்கும் தன்மை பெற்றவர் நேரு. உலக அளவில் புகழ் பெற்ற, பெரிய குடும்பத்தில் பிறந்த நேரு, தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ இந்தியிலோ அச்சிடாமல் சிறுபான்மையினரின் உருது மொழியில் மட்டுமே அச்சிட்டது அவரது இந்த உள்ளடக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தியா சுதந்திரமடைந்த ஆறு மாதத்துக்குள் காந்தி இறந்துபோகிறார். பின்னாளில் ‘ஜனசங்’ ஆக வடிவெடுத்த இன்றைய பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் பலரும் அன்று காங்கிரஸிலும் அரசிலும் பங்கேற்றிருந்தனர். அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலதுசாரிச் சார்புடையவர்கள். ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.
அம்பேத்கருக்கு வாக்களித்தபடி இந்து திருமணச் சட்டம் உள்பட பலவற்றை அவரால் நிறைவேற்ற இயலாமல் இருந்தது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டபோது அது பின்னாளில் மிகப் பெரிய ஆபத்தாக உருப்பெறப்போவது குறித்து நண்பர் ஒருவருக்கு நேரு எழுதிய கடிதம் மனதை உருக்கும். “பந்த்ஜி (உ.பி.முதல்வர்) நினைத்தால் அந்தச் சிலைகளை அங்கிருந்து அகற்றிவிட இயலும். செய்ய மாட்டேன் என்கிறாரே…” என்கிற தொனியில் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கும்.
எனினும் எல்லோரையும் அனுசரித்து, தனது கொள்கையை விடாமல் இந்த நாட்டை மதச்சார்பற்ற திசையில் கொண்டுசென்றது நேருவின் முதல் மகத்தான சாதனை. இந்து திருமணச் சட்ட வரைவில் கையொப்பமிட இயலாது என்று சொன்ன ராஜேந்திர பிரசாதின் கருத்தை மீறி அச்சட்டத்தைப் பிரித்துத் தனித்தனியாகத் தன் காலத்திலேயே நிறைவேற்றவும் செய்தார்.
நேரு உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு முறை ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தத்தம் மாநிலத்தில் எவ்வளவு உயர் பதவிகளை நிரப்பியுள்ளனர், அதில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கியிருந்தார். ம.பி. முதல்வர் சுக்லா, “முஸ்லிம்களில் சிலர் தவறான போக்கைக் கையாளுகின்றனர்” என்று எழுதியபோது, “அப்படி இருந்தால் அதற்குப் பெரும்பான்மைச் சமூகத்தவரான நமக்குத்தான் அதிகப் பொறுப்புள்ளது, சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெரும்பான்மைச் சமூகம் பெற வேண்டும்” என்று பதில் எழுதினார்.
ஒரு திறந்த பன்மைச் சமூகம் என்பதற்கு அப்பால் இங்கு ஜனநாயக விழுமியங்கள் வேர்கொள்வதிலும் நேருவின் பங்கு முக்கியமானது. மொழிவாரி மாநிலம் அமைத்தது, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இங்கு ஆங்கிலம் நீடிக்கும் என உறுதிமொழி அளித்தது, இருநூறாண்டு கால காலனிய ஆட்சியில் சீரழிந்திருந்த தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது முதலான அம்சங்களிலும் நேருவின் தொலைநோக்குப் பார்வைகள் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன. அரசுத் திட்டமிடலின் கீழ் இயங்கும் தொழிற்துறையின் மூலமாகத்தான் அடித்தள மக்கள் பயன் பெறுவார்கள் என்கிற வகையில் அவர் சோவியத் ரஷ்யாவின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளை நமது சூழலுக்குத் தக வடிவமைத்தார்.
கார்பரேட்டுகளின் வேட்பாளரான மோடி போன்றோரால் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் மொழிவாரி மாநிலங்களையும் நடைமுறைப்படுத்திய நேருவை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? “குறித்துக்கொள்ளுங்கள் இந்தியாவுக்கு ஆபத்து கம்யூனிஸ்டுளால் வரப்போவதில்லை. வலதுசாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அது வரப்போகிறது… பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானதுஸ” என்றெல்லாம் சொன்ன நேருவை மோடிகள் எதிர்ப்பதில் என்ன வியப்பு?
மோடி பேச்சின் இரண்டாவது அம்சம் படேலை ஓர் இந்துத்துவவாதியாகச் சுவீகரித்துக்கொள்வது. படேலை நேரு அளவுக்குப் பன்மைத்தன்மையைப் போற்றுபவராக ஏற்க இயலாதபோதும் அவரை இந்துத்துவச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது.
ஆர்.எஸ்.எஸ். மீது படேலுக்கு ஓர் அனுதாபம் இருந்தபோதும், அவ்வமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்கிற நேருவின் கருத்தை அவர் ஏற்காதபோதும், இந்துத்துவச் சக்திகளின் வழிமுறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக காந்தி கொலையை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக இந்துத்துவவாதிகள் படேலிடம் இரக்கத்தை எதிர்பார்த்தபோது அவரது பதில்கள் இப்படி அமைந்தன:
“(இந்துத்துவவாதிகளின்) பேச்சுகள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக உள்ளன. இந்துக்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அமைப்பாக்குவதற்காகவும் இப்படி விஷத்தைப் பரப்ப வேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்க வேண்டியதாயிற்று… காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்…” இவை படேல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கருக்கு எழுதிய கடித வாசகங்கள் (செப் 11, 1948).
டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், “பாசிஸத்துக்குக் காரணமாகக் கூடிய ரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கைக்கொண்டுள்ளது” என்று இவர்களை பாசிஸ்ட்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
தன்னைச் சின்ன சர்தார் என்று அழைத்துக்கொள்ளும் மோடிக்கு, படேலின் இறுதிச் சடங்கில் நேரு கலந்துகொண்ட செய்தி தெரியாததுபோலவே இவையும் தெரியாது போலும்!
– அ. மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் – தொடர்புக்கு: professormarx@gmail.com
source: http://tamil.thehindu.com/
நேருவைக் குறை கூற மோடிக்கு என்ன யோக்கியதை?
இரண்டாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்து, இரண்டு லட்சம் பேர்களை அகதிகளாக்கிய கொடிய நபர் மோடிக்கு, மதச் சார்பின்மையின் வடிவமாகத் திகழ்ந்த நேருவைக் குறை கூற என்ன யோக்கியதை? எவ்வளவு திமிர்?
மனைவி கமலா மரணப் படுக்கையில் இருக்கையில் கடைசி முறையாகப் பார்க்க இந்தியா வந்த நேரு, இத்தாலியில் அடுத்த விமானத்தைப் பிடிக்கச் சில மணி நேரங்கள் விமான நிலையத்தில் காக்க வேண்டி இருந்தது.
நேரு காத்திருப்பதை அறிந்த முசோலினி, ஒரு சில நிமிடங்கள் வந்து உரையாட ஆள் அனுப்பிக் கெஞ்சினான். ஒரு அற்புதமான ஜனநாயகவாதியாகிய நேரு அந்த பாசிஸ்டைச் சந்திக்க மறுத்தார். இறுதி வரை செல்லவில்லை.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் சை நிறுவியவர்களில் ஒருவனான டாக்டர் மூஞ்சே, இத்தாலி சென்று, முசோலினியிடம் வழிந்து, “உங்கள் மாதிரியில்தான் ஆர்.எஸ்.எஸ்சை அமைத்துள்ளோம்” எனச் சொல்லி வந்தான்.
தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இத்தாலி மற்றும் ஜெர்மானிய பாசிஸ்டுகளுக்கும் தொடர்பிருந்தது. பாசிச அறிக்கைகளையும், கட்டுரைகளையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபை அமைப்புகள் மொழி பெயர்த்து வெளியிட்டன.
காந்தியைக் கொலை செய்த இந்தக் கும்பலின் வழி வந்த நரேந்திர மோடிதான் நேற்று அகமதாபாத்தில், முசோலினியைச் சந்திக்க மறுத்த நேருவைக் குறை
கூறிய நபர்.
உலக அளவில் புகழ் பெற்றிருந்த, ஒரு பெருங் குடும்பத்தில் பிறந்திருந்த நேரு, தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அச்ச்சிடாமல் சிறுபான்மையினரின் மொழியான உருதில் மட்டுமே அச்சிட்ட வரலாறை நாம் மறந்து விட இயலுமா?
source: http://tamil.thehindu.com/opiniom/