கால் சென்டர் ஒப்பந்த முறை வணிகம் ஒரு பார்வை!
சென்னையில் செயல்படும் கால் சென்டர்கள் எண்ணிக்கை 375.
சென்னையில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 3417
வியர்வைத் துளியின் உள்ளே வெற்றியிருக்கிறது. வீட்டுச் சுவர்களுக்குள் பொருளிருக்கிறது. வேறென்ன வேண்டும் கூட்டுக் குரல்கள் ஒலிக்கின்றன.
காணும் காட்சி யுகச் சுகப் பொருட்களை ஈட்ட ஓடும் கூட்டம். தாமும் அவற்றைப் பெற்றுவிடத் துடித்து பின் தொடர்ந்து ஓடும் மக்கள். ஒரு இயந்திரத்தை விடவும் நேர்த்தியாக மனிதர்களை உருவாக்கி மகிழும் சமூகம். வாங்கிடும் ஊதியம் வங்கியில் நிரம்புகிறது. வீங்கிடும் செல்வ நிலை வெட்கமின்றி காட்டுகின்றது.
எழுகின்ற சூரியனையும் துலாக்கோலில் நிறுத்தும் விஞ்ஞானம். மண் குவித்து நந்நீரிட்டு வளர்த்தாலும் கண்காணிக்காத மரக்கன்று மாட்டின் மலக்குடலை அடையும். மரம்போல் இளைய சமூகம் எதையும் அறியாது எதற்கோ தம்மைப் பலியாக்கிக் கொண்டிருக்கிறது.
எப்போது காலைப் பொழுது விடிந்தது தெரியாது! நடுப்பகல் பார்த்து பல வருடங்கள்! நாட்டில் என்ன நடக்கிறது தேவையில்லை. மூன்று புறப் பலகைத் தடுப்பும், கணினியின் முன்பும், விரல் சொடுக்கிலும் முழு வாழ்வும் பயணிக்கிறது.
இப்படி ஓர் உலகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பணம், ஆடம்பரம், சொகுசு வாழ்வு, மற்றவர்கள் குறித்த கவலையில்லா தன்மையுடன் கட்டமைக்கப்படும் மனிதர்கள். கைகளுக்குள் அடங்காத பணக்கூடை தேடுதலில் நகரும் நாட்கள். ‘‘பிஸ்னஸ் ப்ராஸஸ் அவுட்சோர்ஸிங்’’ ஒப்பந்த முறையில் வெளி வணிகப் பணி நிறைவேற்றுதல். கால் சென்டர்களை சுருக்கமாக BPO என்றழைக்கின்றனர்.
இங்கு மொழியாளுமை உள்ளோருக்கு குரல் வழிப் பணிகளும், மொழியாளுமையல்லாதோர்க்கு குரல் வழியற்ற பணிகளும் இரண்டும் உள்ள செமிவாய்ஸ் முறையும் இருக்கின்றன. அழைக்கின்றன.
சென்னையில் செயல்படும் கால் சென்டர்கள் எண்ணிக்கை 375.
சென்னையில் செயல்படும் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 3417.
ஐ.டி. நிறுவனங்களின் ஆரம்பக்கட்டமாக கால் சென்டர்கள் விளங்குகின்றன. ப்ளஸ் டூ முடித்து கல்லூரி செல்வது போல்தான் கால்சென்டருக்கும் ஐ.டிக்குமான தொடர்பு.
BPO தவிர KPO எனப்படும் நுண்ணறிவாளர் பணி. LPO எனப்படும் சட்டம் சார்ந்த ஆவணப்பணி.MT எனப்படும் மருத்துவம் டிரான்ஸ்கிரிப்ஷன் நகல்கள் உருவாக்குதல் பணிகளுக்குரிய நிறுவனங்கள் சென்னையில் 577 அமைந்துள்ளன. இரவுப் பணி, பகல் பணி என சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர்.
நுகர்வோர், ஹெல்த்கேர், இன்சூரன்ஸ், டிரான்ஸ்போர்ட் இன்னும் பல துறைகளுக்காக நம்நாட்டிலிருந்தபடியே அந்நிய நாட்டவரின் வேலைகளை முடித்துத் தருவது கால் சென்டர் பணி. பூமி சூழற்சிப்படி நமக்கு பகல் என்றால் பல நாடுகளுக்கு இரவாகவிருக்கும். அவர்களுக்கு பகல், நமக்கு இரவு. இதன் காரணமாக நம் நாட்டு இளைய சமூகம் அவர்களுக்காக இங்கு இரவு முழுவதும் விழித்திருந்து உழைக்கின்றது.
இளநிலைப் பட்டதாரிகள். அபாய கட்ட எல்லைக் கோட்டில் நின்று தாண்டியவர்கள். உயர்நிலைப் பள்ளியுடன் முற்றுப்புள்ளி வைத்தோர்க்கு கால் சென்டர்கள் பணி தருகின்றன. சென்னையின் பெரிய கல்லூரியில் இளநிலைக் கல்வி பயின்ற முன்னேறிய வகுப்பின மாணவனுக்கு பிரபல கால் சென்டர் நிறுவனம் தரும் ஊதியம் மாதம் எட்டாயிரம் ரூபாய். பணி நேரம் காலை 11 மணியிலிருந்து இரவு 12 மணி வரை. 13 மணி நேரம். 2லு ஆண்டுகள் பணி செய்தாலும் பணி முன்னேற்றம், ஊதிய உயர்வு இல்லை.
எத்தனை ஆயிரங்கள் ஊதியம் பெற்றாலும் இரவுப் பணியாளரை மணமுடிக்க பெண் சமூகம் விரும்புவதில்லை. உலகத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் கற்கால அடிமை வாழ்வுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சுயமாக சிந்திக்க இயலாது. பகல் தூங்கி மாலை எழுதல், பணிக்குச் செல்லுதல், வீடு திரும்புதல் சுழற்சியாக வாழ்வு நகர்கிறது.
உடல் அமைப்புச் செயல்பாடு மாறுகிறது. காலப்போக்கில் இவர்கள் வாழ்வு செல்லரித்தலாக வீழும். பணம் மட்டுமே வாழ்வல்ல. வாழ்தலுக்கான நோக்கம் அவசியம், நம் மன்னர்களுக்கு அந்நிய நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள் இரவு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி காவல் காத்தனர். பங்கா (விசிறி) அசைத்தனர் என்று சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. இன்று தலைகீழாக மாறி நமது தேச இளைய சமூகம் அந்நிய நாட்டவர்க்கு சாமரம் வீசும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது.
சேற்றில் நெளியும் புழுக்களல்ல நாம். சுதந்திரமாகப் பறக்கும் தும்பியின் கால்களிலும் கடுதாசி கட்டி களிப்புறும் உலகம். வழக்கு வந்தால் வழக்குரைஞருக்கு மகிழ்ச்சி. வழக்கு வேண்டாம் என்றால் வாதிக்கு மகிழ்ச்சி. கால் சென்டர் பணியாளர்களின் கண்களுக்குள் கலக்கம் தெரிகிறது. துளிர்க்காத கண்ணீர் நோயற்ற வலிகளை உணர்த்துகின்றது. நாட்டின் நரம்புகள் இளைய சமூகம்! ரத்தம் தடைப்பட்ட நரம்புகளானால் பயனேது? சிந்திப்போம்.
– அமீர்கான், முஸ்லிம் முரசு அக்டோபர் 2013
source: http://jahangeer.in/?paged=4