சவுதி நிதாக்கத் சட்ட அதிர்வலைகள்!
சவுதி அரேபியா! வரலாற்று பாரம்பரியமிக்க ஒரு பழமையான நாடு. சமீபத்தில் ஒட்டு மொத்த உலகின் பார்வையையும், குறிப்பாக மீடியாக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளது இந்த நாடு. காரணம் அது நடைமுறைப்படுத்த துடிக்கும் நிதாக்கத் சட்டமாகும். இச்சட்டம் பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. சட்டம் என்ன கூறுகின்றது?
அனைத்துப் பணிகளிலும் பத்து சதவிகிதம் உள்நாட்டு மக்களே இருக்க வேண்டும் என்பதே அச்சட்டம். இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 27 மில்லியன்.
இதில் 16 மில்லியன் மக்கள் நாட்டு குடிமக்கள். வெளிநாட்டிலிருந்து தங்களை பதிவு செய்துக் கொண்ட மக்களின் எண்ணிக்கை 9 மில்லியன்.
இதை கடந்து சுமார் 20 லட்சம் மக்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூறுகின்றன. (பி.பி.சி)
சட்டவிரோதமாக சவுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற ஆணையை சவுதி பிறப்பித்து.
கடந்த 7 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு ஜுலை 3-2013 இறுதி கெடுவை அறிவித்தது சவுதி.
ஆனால் நிர்வாக ரீதியாக பெரும் நெருக்கடி நீடித்ததாலும் 15 சதவிகிதங்களுக்கு குறைவாகவே பணிகள் முடிந்திருந்ததாலும் காலகெடுவை நீடிக்க வேண்டிய நிலை சவுதி நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. அடுத்த காலகெடுவை சவுதி நிர்வாகம் அறிவித்தது நவம்பர் 3, 2013.
புதிய நிர்வாக ஆண்டான முஹர்ரம் 1435 முதல் நாள் முதல் சவுதி அரசின் தேடுதல் பணி தொடங்கும் என்று அறிவிப்புகள் தொடர்ந்து வந்தவண்ணமிருந்தன.
காலகெடு நீடிக்கப்படுமா..? படாதா…? போன்ற மனக்குழப்பங்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. மாறுபாடான – வதந்திக்கு நிகரான – பதிவுகள் மக்களை இன்னும் பயமுறுத்தியது.
நவம்பர் 4, 2013 எவ்வித காலகெடுவும் நீடிக்கப்படாமல் முறையற்ற வெளிநாட்டவர்களை கைது செய்யும் படலம் துவங்கியது. அரப் நியுஸ் செய்திப்படி முதல் நாள் கிட்டத்தட்ட 5000 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜித்தாவில் மட்டும் 4000 நபர்களும், இதர பல பகுதிகளில் 1000 நபர்கள் வரை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதினா, லைலா அஃப்லாஜ், அல்பாஹா, ஹஃப்ரல்பாதின் போன்ற பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடப்பதாகத் தெரிகின்றது. சவுதியின் தலைநகரான ரியாத் நிலவரம் குறித்த செய்திகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. ஆனாலும் மிக பரப்பரப்பாக இருக்கும் பத்ஹா வெறிச்சோடி கிடக்கின்றது.
சுமார் ஐந்து லட்சம் வீடுகளை சோதனையிட முறைப்படுத்தியுள்ளதாகவும், முறையாக தங்குமிடத்திற்கான ஆட்கள் மட்டும் அங்கு தங்கியுள்ளார்களாஸ? என்ற சோதனையே முதலில் துவங்கும் என்றும் அதிகாரி்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகத்தின் பெண் ஆய்வாளர்களை வைத்து வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட செய்தியை அந்த அமைச்சக அதிகாரிகள் அழுத்தமாக மறுத்துள்ளனர்.
கடுமையான தொழில் மற்றும் வர்த்தக நெருக்கடியை ஒரே நாளில் சந்தித்துள்ளது சவுதி அரேபியா. பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திறக்கப்பட்ட வணிக நிறுவனங்களும் பிஸினஸ் இல்லாமல் காலியாக கிடக்கின்றன.
சவுதி அரேபியாவின் முக்கிய உணவாக கருதப்படும் குப்ஸ் என்ற ரொட்டி வகை உணவை தயாரிக்கும் பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. பால் போன்ற அன்றாடத் தேவையை நிறைவேற்ற முடியாத சூழல் தற்போது நிலவுவதால் கடுமையான விலைவாசி ஏற்றம் ஏற்படும் அபாயத்தையும் மக்கள் உணர்ந்துள்ளனர். வினியோகத்திற்கு ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் இத்தகைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் இங்கு சிந்திக்க வேண்டிய ஒன்று.
இப்படியான ஒரு நெருக்கடியை ஒரே நாளில் இந்த நாடு சந்திக்கும் வேலையில் நிக்காத் சட்டத்தின் நெருக்கடியை எதிர்த்து இந்தோனேஷியவை சேர்ந்த ஆண்களும், பெண்களும் உள்ளிருப்பு போராட்டம் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய செய்தியையும் அரபுநியுஸ் வெளியிட்டுள்ளது.
எங்களின் பணி ஆவனங்களை முறைப்படுத்திக் கொள்ள போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தோனேஷிய மக்கள் அதை வெளிப்படையாக பத்திரிக்கை செய்தியில் அறிவித்துள்ளனர்.
சவுதி நாட்டையே ஒரு நெருக்கடிக்குள் தள்ளியுள்ள இந்த நிக்காத் சட்டமும், அதை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் வெளிநாட்டவர்களை கடுமையாக பாதித்துள்ளன. முறையான ஆவனங்களை சமர்பித்து இக்காமாவிற்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைவில்லாதது. பல்வேறு பெரிய நிறுவனங்களின் பணியாளர்களுக்கே இதுவரை இக்காமா கிடைக்காத நிலையும் தொடர்கின்றது. இக்காமா இல்லாவிட்டாலும் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களின் எழுத்து ஆவனம் பணியாளர்களிடம் இருக்க வேண்டும். (Thanks to GN.)
சவூதி அரசின் நடவடிக்கைகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் தான். இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.அந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தவர்கள் இவர்கள். பெரும் அந்நிய செலவானிகளை ஈட்டித் தந்த இம்மக்களுக்கு இந்திய மத்திய மாநில அரசுகள் மறுவாழ்வுக்காக என்ன செய்ய காத்திருக்கின்றன இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
அந்த வகையில் அதிகமான வளைகுடா தொழிலாளர்களை கொண்ட கேரளா மாநிலம் வளைகுடா நாடுகளில், குறிப்பாக சவூதியில் அதிகளவில் வசிக்கும் மலையாள நாட்டவர், சவூதி அரசின் நிதாக்கத் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டோர் நாடு திரும்ப விரும்பினால், அவர்களுக்குரிய விமானக் கட்டணத்தை மாநில அரசே ஏற்கும் என்று அமைச்சர் கே சி ஜோசஃப் அறிவித்துள்ளார். தாயகம் திரும்பக் கருதும் கேரளத்தவர் சவூதியிலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினால், மாநில அரசு சார்பில் அவருக்கு விமானச் சீட்டு கிடைக்கும் என்றும், இவ்வாறு கேரளம் திரும்பும் தாய்நாட்டு அன்னியர்களுக்கு மறுவாழ்வுக்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது வரவேற்க்கத்தக்கது.
ஆக்கம்: http://valaiyukam.blogspot.com/2013/11/blog-post.html