நன்மை பயக்கும் நபிமொழி
o “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய மானங்களை யாரிடம் மறைக்க வேண்டும்? யாரிடம் மறைக்க வேண்டியதில்லை?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “உன்னுடைய மனைவி அல்லது உனது அடிமைப் பெண்கள் ஆகியோரிடத்தில் தவிர மற்றவரிடம் உனது மானத்தை மறைத்துக் கொள்” என்று சொன்னார்கள்.
“ஒரு மனிதர் இன்னொரு மனிதருடன் இருக்கும் போது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முடிந்த அளவுக்கு மற்றொருவர் (உன்) மானத்தை பார்க்காதவாறு நடந்து கொள்” என்றார்கள்.
“ஒருவர் தனியாக இருக்கும் போது?” என்று நான் கேட்டதற்கு, “அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகவும் தகுதியானவன்” என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு அன்ஹு நூல்: திர்மிதி 2693)
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்தார்கள்.
”அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா (ரளியல்லாஹு அன்ஹா) தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு …அல்லது உணவு… அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார்.
அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 3820)
o ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்:
“கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரில் வேறெவரின் மீதும் நான் ரோஷம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.
என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணம் புரிந்துகொள்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார். மேலும், முத்துமாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்குக் கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும் படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அவர்களின் இறைவன் கட்டளையிட்டிருந்தான். இன்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிதளவை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழியரிடையே அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்”. (நூல்: புகாரி 6004, தொகுதி: 6, நூல்: 78)
o “ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே (அதைச் செயல்படுத்தா விட்டாலும்) அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, ( அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் பதிவு செய்கிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6491
o இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற(ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான்.
அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி) வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், “(சொல்லிக் கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான்.
பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டு வைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான். இதை ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5419)