[ பார்த்தொழுகும் மனோபாவம் ஆழ வேரூன்றிய இந்தியர்களிடையே, ஆங்கிலேயக் கல்வி முறை எத்தகைய பின்விளைவுகளை உருவாக்கும் என்கிற அபாயத்தை அம்பேத்கரைவிடவும் காந்தியே முழுமையாக உணர்ந்திருந்தார்.
காந்தி சொன்னார், “வெளிநாட்டுப் பயிற்றுமொழி நம் குழந்தைகளை அந்நியர்கள் ஆக்குகிறது. இன்றைய கல்விமுறையின் மிகப் பெரிய கொடுமை இது.
எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நம் இளைஞர்களுக்குப் பிறநாட்டு மொழிவழியாகப் பயிற்சி அளிப்பதை உடனே தடுத்து நிறுத்துவேன்;
நமது ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உடனடியாகத் தாய்மொழியில் பாடம் நடத்துமாறும் இல்லையெனில், வேலையிலிருந்து நீக்குமாறும் உத்தரவிடுவேன்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார் காந்தி.
இந்தியாவின் தலைசிறந்த இரு மானுட வியலாளர்கள் காந்தியும் அம்பேத்கரும். ஆனால், இன்று வரை இவர்கள் இருவரையும் சரியான விமர்சனங்களுடன் ஏற்பவர்கள் அரிது. காந்தியை ஏற்பவர்கள் அம்பேத்கரை நிராகரிப்பார்கள். அம்பேத்கரை ஏற்பவர்கள் காந்தியை நிராகரிப்பார்கள். ஒரு மத்திய நிலையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. இதுவும் காலனிய அடிமை மனோபாவம்தான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பழக்கப்பட்ட மனோபாவம்.
தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது; அரசாங்கமோ தமிழன்னைக்குச் சிலை அமைக்கத் திட்டமிடுகிறது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல. எனில், நம்முடைய சிந்தனைகள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன, எதை இலக்காக நோக்கிச் செல்கின்றன…]
கைப்பிள்ளை இந்தியா!.
சமஸ்
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார், “இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
நான் சொன்னேன், “இந்திய ஊடகங்களை ஆங்கில ஊடகங்கள், பிராந்திய ஊடகங்கள் என்று தனித்தனியே பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர, பொதுவாக நம்முடைய ஊடகங்கள் காப்பி ஊடகங்கள். நம்முடைய ஆங்கில ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களை காப்பியடிக்கின்றன; பிராந்திய ஊடகங்கள் ஆங்கில ஊடகங்களை காப்பியடிக்கின்றன.”
மேலோட்டமாக இது சாதாரணமான விஷய மாகத் தெரியலாம். அப்படி அல்ல. ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற – மேற்கத்திய மன்னராட்சிக் கால – ராபர்ட் கார்லைல் சிந்தனையேகூட மேலோட்டமானதுதான். என்னைக் கேட்டால், ஊடகங்கள்தான் நவீன சமூகத்தின் எதிர்காலத்தைக் கல்வித் துறையோடு சேர்ந்து கட்டியமைக்கும் கொத்தனார்கள் என்று சொல்வேன்.
எங்கிருந்து வருகிறது பார்வை?
இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு பார்வை இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்கு மன்மோகன் சிங்கைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மோடியைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். மம்தாவைப் பற்றி ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்துகளைத் தாண்டி பொதுவில் – நம் அனைவர் மத்தியிலும் – ஒரு கருத்து இருக்கிறது. மன்மோகன் சிங் எதையும் வேகமாகச் செய்ய மாட்டார் என்று நம்புகிறோம்; மோடி ஒரு காரியக்காரர் என்று நினைக்கிறோம்; மம்தாவைக் கோபக்காரராகவும் பார்க்கிறோம்.
நம்மிடம் இந்தப் பொதுவான பார்வையை உருவாக்கியது யார்? யோசித்துப்பாருங்கள். மன்மோகன் சிங்கையோ சன்னி லியோனையோ நம்மில் எத்தனை பேருக்கு நேரடியாகத் தெரியும்? எந்த அடிப்படையில் நாம் அவர்களைத் தீர்மானிக்கிறோம்? இந்தத் தீர்மானங்கள் மன்மோகன் சிங்கின் எதிர்காலத்தையோ, மோடியின் எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றால், இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது யார்?
சந்தேகமே வேண்டாம். ஜனநாயகத்தில் ஊடகங்கள் அவ்வளவு சக்தி பெற்றிருக்கின்றன. கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் சமூகத்தின் போக்கையே தீர்மானிக்கின்றன. ஆனால், ஒரு சமூகத்தின் பார்வையை உருவாக்கும் ஊடகங்கள் ஒரு நாட்டில், காலனிய இரவல் சிந்தனையோடும் பார்வையோடும்தான் காலம் தள்ளுகின்றன என்றால், அந்தச் சமூகத்தின் – நாட்டின் பார்வையும் சிந்தனையும் எப்படி இருக்கும்?
நீங்கள் யோசித்துப்பாருங்கள். ஏன் நம்முடைய ஊடகங்களில் அமெரிக்க – பிரித்தானிய செய்திகள் அன்றாடம் (அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இடம்பிடிக்கின்றன? ஏன் நமக்கு ஐரோப்பியச் சூழல் தெரியும் அளவுக்கு, அருகில் இருக்கும் சீனாவின் சூழலோ மியான்மரின் சூழலோ தெரியவில்லை? கடற்கரையிலோ சுற்றுலாத்தலங்களிலோ ஒரு வெள்ளைக்கார அமெரிக்கர் வழிகேட்டால், பம்மி பவ்யமாகப் பதில் சொல்லும் நாம், ஏன் ஒரு கருப்பின ஆப்பிரிக்கரைப் பார்த்தால் மலினமாக நினைக்கிறோம்?
நம்முடைய அரசும் ஆங்கில ஊடகங்களும் நாமும் இன்னமும் ஏன் – ஆங்கிலேயர்கள் தவறாக அழைத்ததுபோலவே – தூத்துக்குடியை டூட்டுகொரின் என்றும் சேலத்தை சலேம் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்? ஆங்கிலம் தெரியாதவர்களை – அவர்கள் தத்தமது துறைகளில் எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் – ஒருபடி கீழே இறக்கியே பார்க்கிறோமே ஏன்? முக்கியமாக, ஆங்கிலத்தில் எழுதும்போதோ பேசும்போதோ ஒரு வார்த்தை தவறாகிவிட்டாலும் கூனிக்குறுகும் நமக்கு நம்முடைய தாய்மொழியில் சேர்ந்தாற்போல், பத்து வரிகள் பிழையின்றி எழுதத் தெரியாதது கூச்சம் தராதது ஏன்?
இவை எல்லாவற்றுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உண்டு. வரலாற்றுத் தொடர்பு. திட்டமிட்ட வரலாற்றுத் தொடர்பு. எது இந்தியர்களுக்குச் சிறந்தது?
இந்தியச் சிந்தனையியல் அமைப்பையே மாற்றி அமைத்த மெக்காலே, இந்தியாவில் ஆங்கிலக் கல்விமுறை ஏன் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நியாயங்களை வில்லியம் பெண்டிங் பிரபுவுக்குப் பட்டியலிடும், 2.2.1835 தேதிய கல்வி அறிக்கையில் கூறுகிறார், “நாம் ஆங்கில அடிப்படையிலான கல்விமுறைக்கு இந்தியர்களை மாற்றும்போது, ஆங்கிலம் படித்தவர்கள் வர்க்கரீதியாகப் படிநிலையில் மேலே வருவார்கள். அவர்கள் ரத்தத்திலும் பழுப்பு நிறத் தோலிலும் இந்தியர்களாக இருப்பார்கள். ஆனால், உள்ளே அவர்களுடைய ரசனை, கருத்து, சிந்தனை, கொள்கை, அறவியல் எல்லாமே ஆங்கிலேயர்களை ஒட்டியதாக இருக்கும்.”
இதன் அர்த்தம் இந்தியர்களை ஆங்கிலேயர்களாக மாற்றுவது அல்ல. ஆங்கிலேய அடிமை மனமாக நம்முடைய மனங்களை மாற்றி அமைப்பது. ஆங்கிலேயர்கள் எதை விரும்புகிறார்களோ, அதுவே உலகத்துக்கும் நல்லது; ஆங்கிலேயர்கள் எதைச் சிந்திக்கிறார்களோ, அதுவே உலகத்துக்கும் நல்லது; ஆங்கிலேயர்கள் எதைச் செய்கிறார்களோ, அதுவே உலகத்துக்கும் நல்லது என்று இந்திய ஆன்மாவை நம்ப வைப்பது.
மெக்காலே எதை நினைத்தாரோ அதைச் சாதித்தார். இன்றுவரை இந்தியா அப்படித்தான் சிந்திக்கிறது. தன்னுடைய பல நூற்றாண்டு சிந்தனை வளங்களை மறந்து இந்தியா யோசிக்கிறது. ஆங்கிலேய ஆட்சி இங்கு ஏற்படுத்திய மோசமான விளைவு இதுதான். அவர்கள் மகத்தான வெற்றிபெற்ற இடமும் இதுதான். ஆங்கிலேயர்களுக்கு எது சிறந்ததோ, அதுவே உலகத்துக்குச் சிறந்தது.
அறிவுசார் இந்தியாவின் மிகப் பெரிய சாபக்கேடு என்று இதை நினைக்கிறேன் – காப்பியடிப்பது. மேற்கத்திய பார்வையை அடியொற்றிச் சிந்திப்பது. அதாவது, சிந்தனை ஊழல்.
பார்ப்பனர்கள் x பார்ப்பன எதிரிகள்
இந்தியாவில் ஆங்கிலம் பல்கிப் பரவியதற்குப் பார்ப்பனர்கள் ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களின் சிந்தனையையும் வேகமாகச் சுவீகரித்துக்கொண்டது ஒரு முக்கியமான காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. உண்மை என்னவென்றால், பார்ப்பனர்கள் மட்டும் அல்ல, பார்ப்பன எதிர்ப்பாளர்களும் ஆங்கிலேயச் சிந்தனையை ஆக்ரோஷமாக ஆரத் தழுவினார்கள் என்பதுதான்.
“அடிமைத் தனமா, தீண்டாமையா எது கொடுமை என்றால், தீண்டாமைதான். அடிமைத்தனத்தில் கல்வி, நன்னடத்தை, கலாச்சாரம், செல்வம் ஆகியவை யாவது கிடைக்கும் வாய்ப்புண்டு. ஆனால், தீண்டாமையோ இவற்றில் ஒன்றைக்கூடத் தராது. ஆகையால், சர்ச்சைக்கே இடம் இல்லாமல், அடிமைத்தனமானது தீண்டாமையைக் காட்டிலும் நூறு மடங்கு மேலானது என்று சொல்வேன்” என்றார் அம்பேத்கர்.
“ஆங்கிலம்தான் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழி. உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும்கூட ஆங்கிலத்தி லேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள். தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழி யுங்கள்” என்றார் பெரியார். ஓர் அடிமைத்தனத்துக்கு மாற்று இன்னோர் அடிமைத்தனமா என்ற கேள்வி இன்று வரை எழுப்பப்படவில்லை.
பார்த்தொழுகும் மனோபாவம்
இந்தியச் சூழலில், பார்த்தொழுகும் மனோபாவத்தைப் பற்றி மிக ஆழமாகச் சிந்தித்தவர் அம்பேத்கர். பிரெஞ்சு சமூக உளவியலாளரான கேப்ரியல் டார்டேவின் பார்த்தொழுகும் மனோபாவம் தொடர்பான மூன்று விதிகளைக் குறிப்பிடும் அம்பேத்கர், மேலிருப்பவர்களைப் பார்த்துக் கீழிருப்பவர்கள் அப்படியே தங்கள் போக்கை அமைத்துக்கொள்ளும் இந்த மனோபாவத்தை ‘பார்த்தொழுகும் தொற்றுநோய்’(infection of imitation) என்று கடுமையாகக் குறிப்பிடுகிறார். ‘‘இந்தியாவில் சாதிகள் உருவாக்கத்துக்கு, இந்தியர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்த, பார்த்தொழுகும் மனோபாவமே முக்கியமான காரணமாக இருந்தது” என்று சொல்கிறார் அம்பேத்கர்.
ஆனால், பார்த்தொழுகும் மனோபாவம் ஆழ வேரூன்றிய இந்தியர்களிடையே, ஆங்கிலேயக் கல்வி முறை எத்தகைய பின்விளைவுகளை உரு வாக்கும் என்கிற அபாயத்தை அம்பேத்கரைவிடவும் காந்தியே முழுமையாக உணர்ந்திருந்தார். காந்தி சொன்னார், “வெளிநாட்டுப் பயிற்றுமொழி நம் குழந்தைகளை அந்நியர்கள் ஆக்குகிறது.
இன்றைய கல்விமுறையின் மிகப் பெரிய கொடுமை இது. எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நம் இளைஞர்களுக்குப் பிறநாட்டு மொழிவழியாகப் பயிற்சி அளிப்பதை உடனே தடுத்து நிறுத்துவேன்; நமது ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உடனடியாகத் தாய்மொழியில் பாடம் நடத்துமாறும் இல்லையெனில், வேலையிலிருந்து நீக்குமாறும் உத்தரவிடுவேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார் காந்தி.
இந்தியாவின் தலைசிறந்த இரு மானுட வியலாளர்கள் காந்தியும் அம்பேத்கரும். ஆனால், இன்று வரை இவர்கள் இருவரையும் சரியான விமர்சனங்களுடன் ஏற்பவர்கள் அரிது. காந்தியை ஏற்பவர்கள் அம்பேத்கரை நிராகரிப்பார்கள். அம்பேத்கரை ஏற்பவர்கள் காந்தியை நிராகரிப்பார்கள். ஒரு மத்திய நிலையில் இருந்து சிந்திக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. இதுவும் காலனிய அடிமை மனோபாவம்தான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பழக்கப்பட்ட மனோபாவம்.
உளவியல்ரீதியாகப் பார்க்கும்போது, இந்திய மனம் காலனிய அடிமை மனோபாவமாக மாறியதில் ஆங்கிலக் கல்விக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. பிரித்தானிய அரசுக்கு – கிழக்கிந்திய கம்பெனிக்கு – அவர்களுடைய வேலைக்கு – ஏற்ற திறன் மிக்க ஆட்களைத் தயார்செய்வதே கல்விமுறையின் முக்கிய நோக்கமாகக் கருதினார்கள் ஆங்கிலேயர்கள். இன்றைக்கு இந்திய மனதில் அதுதான் ஆழ வேரூன்றியிருக்கிறது. நம்முடைய சமூகத்தில், எதை உயர்ந்த வேலை என்று நாம் குறிப்பிடுகிறோம்?
எது அதிக சம்பளம் தருமோ, அதுவே நமக்கு உயர்ந்த வேலை. எதை உயர்ந்த படிப்பாக நாம் கருதுகிறோம்? எது உயர்ந்த சம்பளத்தைத் தரும் வேலையை வாங்கித்தருமோ அதுவே உயர்ந்த படிப்பு. உடைத்துச் சொல்ல வேண்டும் என்றால், கல்வி என்பது பிழைப்புக்கான கருவி. மொழியைப் பற்றியும் இப்படியான பார்வையே நம்மை வழிநடத்துகிறது. உதாரணமாக, ஒருவரைப் பார்த்து, “ஆங்கிலம் அவருக்கு சரளம்” என்று சொல்கிறோம் என்றால், எந்த அடிப்படையில் சொல்கிறோம்?
ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான். அதாவது, மொழி என்பது தொடர்புக்கான கருவி. அவ்வளவுதான். அது நம்முடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைத் தேடி அடைய உதவும் திறவுகோல் என்ற பார்வை நம்மிடம் இல்லை. முக்கியமாக, தாய்மொழியைப் புறக்கணிக்கும்போது நம்முடைய பல நூற்றாண்டு வரலாற்றுப் பொக்கிஷங்களை நாம் இழக்கிறோம் என்ற பார்வை நம்மிடம் இல்லை.
ஊடகங்கள் மேலே; கல்வித் துறை கீழே
இந்தப் பார்வை உருவாக்கும் சிந்தனைக் கட்டுமானத்தின் உச்சத்தில் ஊடகங்கள் இருக்கின்றன என்றால், அஸ்திவாரத்தில் கல்வித் துறை இருக்கிறது; கீழிருந்து மேலாக கல்வித் துறையும் மேலிருந்து கீழாக ஊடகங்களும் நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்கிறன காப்பியடிக்கவும் மேற்குலகை அடியொற்றித் தொழவும்.
தமிழ்நாட்டில் தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது; அரசாங்கமோ தமிழன்னைக்குச் சிலை அமைக்கத் திட்டமிடுகிறது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைப் போல. எனில், நம்முடைய சிந்தனைகள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன, எதை இலக்காக நோக்கிச் செல்கின்றன… புரிகிறதா?